Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்மனிதர்களில் நான்கு வகையினர் உளர்!

மனிதர்களில் நான்கு வகையினர் உளர்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

1. رَجُلٌ يَدْرِيْ أَنَّهُ يَدْرِيْ
2. رَجُلٌ يَدْرِيْ أَنَّهُ لَا يَدْرِيْ
3. رَجُلٌ لَا يَدْرِيْ أَنَّهُ يَدْرِيْ
4. رَجُلٌ لَا يَدْرِيْ أَنَّهُ لَا يَدْرِيْ

01. ஒருவன். அறிவும் புத்தியுமுள்ளவன். தான் அறிவுள்ளவனும், புத்தியுள்ளவனும் என்பதும் அவனுக்குத் தெரியும்.

02. ஒருவன். அவனுக்கு அறிவுமில்லை. புத்தியுமில்லை. ஆயினுமவனுக்கு தான் அறிவில்லாதவனும், புத்தியில்லாதவனும் என்பது அவனுக்குத் தெரியும்.

03. ஒருவன். அவனுக்கு அறிவும், புத்தியும் உண்டு. ஆயினுமவனுக்கு தனக்கு அறிவும், புத்தியும் உண்டு என்பது தெரியாது.

04. ஒருவன். அவனுக்கு அறிவுமில்லை, புத்தியுமில்லை. தனக்கு இரண்டுமில்லை என்பதும் அவனுக்குத் தெரியாது.

இவர்களில் முதலாமவர் மிகச் சிறந்தவர். அவருக்கு அறிவு உண்டு. புத்தியும் உண்டு. இவர் நட்புக்கும் பொருத்தமானவர். மற்றெல்லாப் பணிகளுக்கும் பொருத்தமானவர். இவரை அணைத்து வைத்திருப்பதால் நண்மைதான் கிடைக்குமேயன்றி தீமை ஏற்படாது. இவரை எப்பணிக்கும் நியமிக்கலாம். இத்தகைய ஒருவனைத் தேடியே எடுக்க வேண்டும். இத்தகையோர் மிக அரிது.

இவரை அடுத்தவர் இரண்டாமவராவார். அதாவது அவருக்கு அறிவுமில்லை, புத்தியுமில்லை. ஆயினும் தனக்கு அறிவுமில்லை, புத்தியுமில்லை என்பது அவருக்குத் தெரியும்.

இவரை இரண்டாம் இடத்திலேயே வைக்க வேண்டும். இவரை முதலாமவர் போல் நினைத்து எதையும், எந்தப் பொறுப்பையும் கொடுக்கலாகாது. ஆயினும் இவர் தனக்குத் தெரியாதென்பதைத் தெரிந்தவராயிருப்பதால் ஓரளவு கவனத்தோடும், நிதானத்தோடும் செய்வார். ஆயினுமிவருக்கு மேற்பார்வை அவசியமாகும்.

இவரை அடுத்தவர் மூன்றாமவராவார். இவர் யாரெனில் தனக்குத் தெரியுமென்பது அவருக்குத் தெரியாதவர். இவருக்கு மூன்றாமிடம்தான். ஆயினும் நாலாமவரை விட இவர் சிறந்தவர்தான். முந்தின இருவரையும் விடவும் தரம் குறைந்தவர்தான்.

இவரை அடுத்தவர் நாலாம் நபராவார். இவருக்கு அறிவுமில்லை, புத்தியுமில்லை. தனக்கு எதுவும் தெரியாதென்பது கூட அவருக்குத் தெரியாது. இவர் எந்த ஒரு வேலைக்கும் பொருத்தமற்றவராவார். இவரிடம் எந்த வேலையும் பொறுப்பாக கொடுக்க முடியாது. இவன் முழு மடையன். இவருடன் மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். இவர் சபைக்கு “லாயிக்” அற்றவர். இவர் ஒன்றுமே புரியாதவர். இவரை எந்த ஒரு பணிக்கும் அமர்த்தக் கூடாது. இவர்தான் மூளைக்கும், வாய்க்கும் தொடர்பில்லாதவர்.

மேற்கண்ட நான்கு வகையினரையும் அறிந்து கொண்ட பொது மக்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், சிந்தனையாளர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.

ஒருவர் தன்னை “ஸுன்னீ” என்று சொல்கிறார். அதேபோல் வலீமார் பக்தன் என்றும் சொல்கிறார். ஆயினுமவர் “வஹ்ததுல் வுஜூத்” என்றால் என்னவென்று கூடத் தெரியாத வெறும் வெங்காயம். இறைஞானத்திற்கும், தனக்கும் எத் தொடர்பும் இல்லாதவர்.

ஆயினும் நாஹூர் நாயகம் ஷாஹுல் ஹமீத் பாதுஷா அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை அறிந்தவர்களும், ஏற்றுக் கொண்டவர்களும் என்பது அவருக்குத் தெரியும். ஏனெனில் அவர் அவர்களின் “மவ்லித்” ஓதும்போது اَلْمُتَيَقِّنُ بِوَحْدَةِ الْوُجُوْدِ “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை நம்பினவர்கள் என்ற வசனத்தை வாசித்தவரும், வாசிப்பவருமாவார். தனக்கு “வஹ்ததுல் வுஜூத்” விளக்கம் தெரியாது போனாலும் ஷாஹுல் ஹமீத் பாதுஷா அவர்கள் அதை ஏற்றுக் கொண்டவர்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.

இவரின் ஊரிலுள்ள பள்ளிவாயல் ஒன்றில் வருடத்தில் ஒரு முறை நாஹூர் நாயகமவர்களின் நினைவு தின நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடபெறுவது வழக்கம். அதில் அவரும் கலந்து கொள்வார்.

ஒரு நாள் அங்கு நடைபெறுகின்ற பாதுஷா நாயகமவர்களின் நிகழ்வில் ஷாஹுல் ஹமீத் பாதுஷா எந்த வஹ்ததுல் வுஜூத் ஞானத்தை நம்பி அதைத் தனது கொள்கையாக கொண்டிருந்தார்களோ அதே கொள்கையுள்ள பாதுஷா அவர்களின் அடிமையொருவர் அந் நிகழ்வின் நடத்துனர்களின் அழைப்பின் பேரில் அங்கு சென்று அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

இதையறிந்த அவர் தனக்கு அங்கு வந்து கலந்து கொண்ட அடிமை “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசுகிறவர் என்ற காரணத்தாலும், தனக்கு அவர் மீதுள்ள பொறாமையினாலும் பாதுஷா நாயகமவர்களின் அந்த நிகழ்வை பகிஷ்கரித்தார். அது மட்டுமல்ல. தனக்கு ஆதரவானவர்களையும் அங்கு செல்ல வேண்டாமென்று தடுத்துவிட்டார்.

“வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை ஏற்றுக் கொண்ட பாதுஷா நாயகமவர்களின் நிகழ்வில் கலந்து சிறப்பித்து வந்த இவர் அந்த கொள்கையை பேசுபவர் கலந்து கொண்டதால் அந்த நிகழ்வைப் புறக்கணிப்பதும், பகிஷ்கரிப்பதும் எந்த வகையில் நியாயமாகும்?

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சொல்வது போல் “வஹ்ததுல் வுஜூத்” “குப்ர்” ஆனதாயும், “ஷிர்க்” ஆனதாயுமிருந்தால் இந்த மகான் பொதுவாக அந்த நிகழ்விலேயே கலந்து சிறப்பித்து வந்திருக்க கூடாது.

இது காலவரை தன்னை பாதுஷா நாயகமவர்களின் பக்தன் என்று ஊர் மக்களினால் மதிக்கப்பட வேண்டுமென்பதற்காக நடித்து வந்த இவரின் நடிப்பு அம்பலமாகிவிட்டது. இவரின் கொள்கைப் படி “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் “குப்ர்” ஆகவும், “ஷிர்க்” ஆகவுமிருந்தால் அதை மனதுள் மறைத்து பொது மக்களின் நன்மதிப்பை பெற வேண்டுமென்பதற்காக “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் கிரீடம் பாதுஷா நாயகமவர்களின் பக்தன் போல் நடித்தது உண்மையான பக்தர்களின் பார்வையில் உள்ளத்தில் “குப்ர்” ஐ மறைத்து வெளியில் “ஈமான்”ஐ காட்டும் “சிந்தீக்” என்றே கணிக்கப்படுவார்.

“வஹ்ததுல் வுஜூத்” பிழை என்றால் அதை எவர் சொன்னாலும் பிழையென்றுதான் இவர் முடிவு செய்திருக்க வேண்டும்.

இந்த மகானை மேலே சொன்ன நான்கு வகை மனிதர்களில் எத்தனையாம் இலக்க மனிதராக இவரைக் கணிக்கலாம்? இதுவே எனது கேள்வி.

உலமாஉகள் சொல்வது போல் பொதுவாக “வஹ்ததுல் வுஜூத்” பிழையென்றால் அதை ஏற்றுக் கொண்டவர் எவராயினும் அவரையும் பிழையென்றே கூற வேண்டும். இதுவே நியதி. இவரின் இலக்கம் என்ன?

RELATED ARTICLES

Most Popular

Recent Comments