Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்அலீ அவர்களுடன் நான் பேசவில்லை அல்லாஹ்தான் பேசினான்!

அலீ அவர்களுடன் நான் பேசவில்லை அல்லாஹ்தான் பேசினான்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

عَنْ جَابِرٍ، قَالَ: لَمَّا كَانَ يَوْمُ غَزْوَةِ الطَّائِفِ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ مَلِيًّا مِنَ النَّهَارِ، فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: يَا رَسُولَ اللهِ لَقَدْ طَالَتْ مُنَاجَاتُكَ عَلِيًّا مُنْذُ الْيَوْمِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَنَا انْتَجَيْتُهُ وَلَكِنَّ اللهُ انْتَجَاهُ» (سنن الترمذي – 3726، السنة لأبي عاصم – 1321، المُعجم الكبير للطبراني 1756، مناقب عليّ لابن المغازلي 164)
“தாயிப்” போர் ஆரம்ப நாளான போது பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் அன்றுப் பகல் முழுவதும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஸெய்யிதுனா அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்லாஹ்வின் திருத் தூதரே! இன்று முழு நாளும் அலீ அவர்களுடன் நீண்ட நேரம் நீங்கள் பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று கூறினார்கள். அதற்கு பதில் கூறிய பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், அலீ அவர்களுடன் நான் பேசிக் கொண்டிருக்கவில்லை. ஆயினும் அல்லாஹ்தான் அவரோடு – அலீயோடு பேசிக் கொண்டிருந்தான் என்று பதில் கூறினார்கள்.

இந்த உரையாடல் நிகழ்வு ஏழு வயதுக்குட்பட்ட சிறார்கள் கூடி விளையாடிய நிகழ்வு போன்றதல்ல. அவ்வாறிருந்தால் இது பற்றி நாம் கணக்கெடுக்கத் தேவையுமில்லை. கருத்திற் கொள்ளத் தேவையுமில்லை.

ஆயினும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட மூவரில் ஒருவர் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள். மற்ற இருவரும் பெருமானார் அவர்களின் “குலபாஉ”கள் ஆவர். இஸ்லாமின் பிரதான மூன்று தூண்கள் கலந்து கொண்ட நிகழ்வாகும் இந்த நிகழ்வு.

இந்த நபீ மொழி ஸுனனுத் துர்முதீ 3726லும், அஸ்ஸுன்னது லிப்னி ஆஸிம் 1321 லும், அல்முஃஜமுல் கபீர் லித்தபறானீ 1756லும், மனாகிபு அலீ லிப்னில் மஙாஸிலீ 164லும் பதிவாகியுள்ளது.

தாயிப் போர் நாளன்று நபீ தோழர்கள் போருக்கு ஆயித்தமாக இருந்த வேளை பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களை மட்டும் அழைத்துக் கொண்டு ஒரு பக்கம் சென்று அன்று முழு நாளும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஸெய்யிதுனா அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமானார் அவர்களை அணுகி

يَا رَسُولَ اللهِ لَقَدْ طَالَتْ مُنَاجَاتُكَ عَلِيًّا مُنْذُ الْيَوْمِ،
அல்லாஹ்வின் திருத் தூதரே! இன்று முழு நாளும் அலீ அவர்களுடன்தானே பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று கூறினார்கள். அதற்கு நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், அலீயோடு நான் பேசவில்லை. எனினும் அல்லாஹ்தான் அலீயோடு பேசினான் என்று தெளிவாகச் சொன்னார்கள்.

நடந்தது என்ன? அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் எதார்த்தத்தில் பேசியவர்கள் அண்ணலெம் பெருமான் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்தான். இதில் சந்தேகமே இல்லை. உண்மையும் இதுதான்.

ஆயினும் அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமானாரிடம் இன்று நீண்ட நேரம் அலீ அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தீர்களே நாயகமே என்று சொன்ன பிறகுதான் பெருமானார் அவர்கள் அலீ உடன் நான் பேசவில்லை, அல்லாஹ்தான் பேசினான் என்று அருளினார்கள்.

நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பொய் சொன்னார்களா? இல்லை. இல்லவே இல்லை. அவர்கள் வாழ்வில் பொய் சொன்னதே இல்லை. அவ்வாறு சொன்னதற்கு வரலாறே கிடையாது.

எனவே, பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களை அல்லாஹ் என்று சொன்னது நூறு வீதம் சரியானதென்றே கொள்ள வேண்டும்.

“வஹ்ததுல் வுஜூத்” கருத்து திருக்குர்ஆனுக்கும், திரு நபீயின் நிறை மொழிகளுக்கும் முரணானதாயிருந்தால் பெருமானார் அவ்வாறு சொல்லியிருப்பார்களா?

ஒரு சமயம் நபீகளார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நபீ தோழர்களிற் சிலரை அழைத்து நான் உங்களுடன் “பைஅத்” செய்ய விரும்புகிறேன் என்று கூறினார்கள். தோழர்கள் முண்டியடித்துக் கொண்டு பெருமானாரை நெருங்கினார்கள்.

பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் வலக் கரத்தை நீட்டிக் கொடுக்க நபீ தோழர்கள் தமது கைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினார்கள். பலரின் கைகளுக்கு மேல் நபீகளாரின் கையிருக்கும் நிலையில் ஒப்பந்தம் செய்தார்கள். “பைஅத்” செய்தார்கள்.

அவ்வேளை வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வரும் திரு வசனத்தை அல்லாஹ்விடமிருந்து அண்ணலார் அவர்களுக்கு கொடுத்தார்கள். அத்திரு வசனம் இதோ!

إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ اللَّهَ يَدُ اللَّهِ فَوْقَ أَيْدِيهِمْ
நபீயே! உங்களிடம் “ஒப்பந்தம் செய்பவர்கள் அல்லாஹ்விடமே ஒப்பந்தம் செய்கின்றனர். அல்லாஹ்வின் கை அவர்களின் கைகளுக்கு மேல் உள்ளது” என்று கூறினான். (திருக்குர்ஆன்: 48-10)

இந்த நிகழ்வின் போது தோழர்களின் கைகள் கீழும், பெருமானார் அவர்களின் கை மேலும் இருந்தன. அதாவது தோழர்களின் கைகளுக்கு மேல் இருந்த கை பெருமானாரின் கை மட்டும்தான்.

இத்திரு வசனம் பின்வருமாறுதான் வந்திருக்க வேண்டும்.
إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَكَ يَدُ النَّبِيِّ فَوْقَ أَيْدِيهِمْ
அல்லது
إِنَّ الَّذِينَ يُبَايِعُونَكَ إِنَّمَا يُبَايِعُونَ مُحَمَّدًا يَدُ النَّبِيِّ فَوْقَ أَيْدِيهِمْ
நபீயே! உங்களிடம் ஒப்பந்தம் செய்பவர்கள் உங்களிடம்தான் ஒப்பந்தம் செய்கிறார்கள். நபீ அவர்களின் கை அவர்களின் – தோழர்களின் கைகளுக்கு மேல் உள்ளது. இவ்வாறுதான் திரு வசனம் அமைந்திருக்க வேண்டும். உண்மையும் இதுவே!

இந்த வசனத்தில் إِنَّمَا يُبَايِعُوْنَكَ என்று வராமல் إِنَّمَا يُبَايِعُوْنَ اللهَ அல்லாஹ்விடமே ஒப்பந்தம் செய்கிறார்கள் என்று வந்துள்ளது. முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வுக்கு வேறானவர்களாயிருந்தால் இவ்வசனம் அவ்வாறு வந்திருக்குமா? “முஹம்மத்” என்ற சொல் வர வேண்டிய இடத்தில் “அல்லாஹ்” என்ற சொல் கூறப்பட்டிருப்பது அல்லாஹ் முஹம்மத் அவர்களுக்கு வேறானவனில்லை என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாகக் காட்டிக் கொண்டிருக்கும் நிலையில் சற்றும் சிந்திக்காமல் அல்லாஹ் வேறு, படைப்பு அவனுக்கு வோறானதென்று விடாப்பிடியாக நிற்பது அறிவுடைமையல்ல. வாசக நேயர்கள் இவ்விடத்தில் சற்று நின்று சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு சமயம் நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை எதிரிகள் சூழ்ந்து அவர்களைத் தாக்குவதற்காக காத்து நின்றனர். இதையறிந்த கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஒரு பிடி மண் எடுத்து எதிரிகளை நோக்கி எறிந்தார்கள். எதிரிகள் அனைவரும் தமது பார்வையிழந்து ஒழித்தோட வழி தெரியாமல் தடுமாறி நின்றனர்.

அவ்வேளை வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மூலம் பின்வரும் திரு வசனத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான். திரு வசனம் இதோ!

فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَكِنَّ اللَّهَ قَتَلَهُمْ وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى وَلِيُبْلِيَ الْمُؤْمِنِينَ مِنْهُ بَلَاءً حَسَنًا إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ

விசுவாசிகளே! பத்றுப் போரில் எதிரிகளாகிய “காபிர்”களை நீங்கள் கொல்லவில்லை. எனினும் அல்லாஹ்தான் அவர்களைக் கொன்றான். நபீயே! விரோதிகள் மீது நீங்கள் மண்ணை எறிந்த போது அதனை நீங்கள் எறியவில்லை. எனினும் அல்லாஹ்தான் எறிந்தான். அதன் மூலம் அழகான முறையில் விசுவாசிகளுக்கு அருட்கொடையை நல்குவதற்காக இவ்வாறு அல்லாஹ் செய்தான். நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கிறவன். நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 08-17)

“பத்ர்” போரின் போது எதிரிகளான “காபிர்”களைக் கொன்று குவித்தவர்கள் நபீ தோழர்களேயாவர். இதில் எவருக்கும் சந்தேகமே இல்லை. எதார்த்தம் நபீ தோழர்கள் கொன்றார்கள் என்பதேயாகும். உண்மையும், எதார்த்தமும் இவ்வாறிருக்கும் நிலையில் அல்லாஹ் உண்மைக்குப் புறம்பாக

فَلَمْ تَقْتُلُوهُمْ وَلَكِنَّ اللَّهَ قَتَلَهُمْ

நபீ தோழர்களே! நீங்கள் அவர்களைக் கொலை செய்யவில்லை, எனினும் அல்லாஹ்தான் அவர்களைக் கொலை செய்தான் என்று கூறியுள்ளான்.

இதேபோல் “பத்ர்” போரின் போது “காபிர்”களான எதிரிகளை நோக்கி மண் எறிந்து அவர்களின் பார்வைகளை இல்லாமற் செய்தது நபீ பெருமானாயிருக்கும் நிலையில் நீங்கள் மண் எறியவில்லை. எனினும் அல்லாஹ்தான் மண் எறிந்தான் என்று எதார்த்தத்திற்கு முரணாக அல்லாஹ் கூறியுள்ளான்.

அதாவது நபீ தோழர்களின் உருவத்தில் அல்லாஹ்தான் எதிரிகளைக் கொன்றவன் என்றும், நபீ பெருமானின் உருவத்தில் மண் எறிந்தவன் என்றும் கூறியுள்ளான்.

இவ்விரு விடயங்களும் மிக ஆழமாக ஆராயப்பட வேண்டிய விடயங்களாகும். இதைச் சரியாக விளங்குவதாயின் “வஹ்ததுல் வுஜூத்” தலைப்புக்குள் சென்றுதான் விளங்க வேண்டும்.

இலங்கையிலுள்ள அனைத்து அறபுக் கல்லூரிகளினதும் அதிபர்கள், “உஸ்தாத்”மார் அனைவரினதும் கவனத்திற்கு,

தற்போது இலங்கை நாட்டில் மார்க்க அறிஞர்களிடம் பேசும் பொருளாக இருப்பது ஸூபிஸ ஞானம் கூறும் “வஹ்ததுல் வுஜூத்” சிந்தனையேயாகும்.

இந்த சிந்தனை பொய் என்றும், பிழை என்றும், திருக்குர்ஆனிலும், நபீ மொழிகளிலும் இதற்கு ஆதாரமில்லை என்றும் இன்று இலங்கை நாட்டில் அமுலில் இருக்கின்ற “தரீகா”க்களில் எந்த ஒரு “தரீகா”வும் கூறாத சிந்தனை என்றும், “தரீகா”க்களை தாபித்த மகான்களில் எவரும் கூறாததென்றும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அவர்கள் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இவர் பிரசித்தி பெற்ற ஓர் அமைப்பின் பொதுச் செயலாளராக இருக்கும் நிலையில் இவ்வாறு அறிக்கை விட்டிருப்பதன் மூலம் இவர் இஸ்லாம் பற்றியும், இஸ்லாமிய தத்துவம் பற்றியும், ஆன்மிகம் பற்றியும், ஆன்மிக விளக்கம் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர் என்பது விளங்குகிறது. இவர் எனது பார்வையில் கிணற்றுத் தவளையாகவே இருக்கிறார்.

இவர் ஈடேற்றம் பெறுவதாயின் தனது தற்போதைய பதவியைத் துறந்து பாலர் வகுப்பலிருந்து இறைஞானம் கற்றுக் கொள்ள வேண்டும். இவர் போன்றவர்களே “பத்வா” வழங்கிய குழுவினருமாவர். இவர்களும் இறைஞானம் பாலர் வகுப்பலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இன்றேல் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் எந்தப் பதவி வகிப்பதற்கும் இவர்கள் தகுதியில்லாதவர்களேயாவர்.

“எல்லாம் அவனே” என்ற தத்துவம் திருக்குர்ஆனிலுமில்லை. நபீ மொழிகளிலுமில்லை, “தரீகா”க்கள் கூறவுமில்லை, ஷெய்குமார்கள் சொல்லவுமில்லை என்று கூறும் பொதுச் செயலாளருக்கு ஆதாரங்களை அடுக்கித் தர நாம் எப்போதும் தயார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments