தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
عِلْمُ التَّصَوُّفِ لَيْسَ هُوَ اللَّقْلَقَةَ بِاللِّسَانِ، وَإِنَّمَا هُوَ أَذْوَاقٌ وَوِجْدَانٌ، وَلَا يُؤْخَذُ مِنَ الْأَوْرَاقِ، وَإِنَّمَا يُؤْخَذُ مِنْ أَهْلِ الْأَذْوَاقِ، وَلَيْسَ يُنَالُ بِالْقِيْلِ وَالْقَالِ، وَإِنَّمَا يُؤْخَذُ مِنْ خِدْمَةِ الرِّجَالِ، وَصُحْبَةِ أَهْلِ الْكَمَالِ، وَاللهِ مَا أَفْلَحَ مَنْ أَفْلَحَ إِلَّا بِصُحْبَةِ مَنْ أَفْلَحَ، (أحمد بن عجيبة، إيقاظ الهمم فى شرح الحكم)
தமிழாக்கம்:
“ஸூபிஸம்” என்பது நாவால் வளவளவென்று கதைப்பதல்ல. நாவால் உளறுவதல்ல. அது சில அனுபவங்களும், ருசித்த இன்பங்களுமாகும். அது தாள்களிலிருந்து பெற முடியாது. சுவைத்து ருசி கண்டவர்களிடமிருந்து பெற வேண்டியது. அவன் சொன்னான் அல்லது யாரோ சொன்னான் என்று பெறப்படுவதல்ல. அது மகான்களுக்குப் பணி செய்வதன் மூலமும், ஞானத்தில் நிறைவு பெற்றவர்களை நட்பு வைப்பதன் மூலமும் பெறப்படக் கூடியதாகும். இறைவன் மீது சத்தியமாக எவர்களெல்லாம் வெற்றி பெற்றார்களோ அவர்கள் அனைவரும் வெற்றி பெற்றோரை நட்புக் கொண்டதினால்தான் வெற்றி பெற்றார்கள்.
ஸூபிஸ ஞானக் கலை ஏனைய கலைகள் போலன்று. அது ஒரு வித்தியாசமான கலையாகும். அக்கலையில் காற் பதித்தவர்களுக்கே அதன் அற்புதங்கள் தெரியும். மன நிம்மதி தேடியோடும் வெள்ளைக் காரர்கள் ஸூபிஸம் என்றால் எதையும் இழந்து அதைப் பெற பின்வாங்கமாட்டார்கள். கடல் கடந்தும், மலை ஏறியும் கற்றுக் கொள்வார்கள்.
இஸ்லாமிய இறைஞானிகளால் அறபு மொழியில் எழுதப்பட்ட பல நூல்கள் வெள்ளையர்களால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.
ஸூபிஸத்தில் மன நிம்மதி.
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
அல்லாஹ்வை நினைப்பதன் மூலம் உள்ளங்கள் சாந்தி பெறுகின்றன. (திருக்குர்ஆன் 13-28)
அல்லாஹ்வை நினைப்பதால் மனச் சாந்தியும், நிம்மதியும் எவ்வாறு ஏற்படும்? இதைத் தெரிந்து கொள்வதில்தான் இதன் கருப்பொருளின் இரகசியம் புரியும். அந்தக் கருப் பொருள்தான் “வஹ்ததுல் வுஜூத்” எனும் “எல்லாம் அவனே” என்ற தத்துவமாகும்.
அல்லாஹ்வை நினைப்பதால் மன நிம்மதி – மனச் சாந்தி எவ்வாறு ஏற்படுமென்பதை தெரிந்து கொள்வோம். அல்லாஹ் சொல்கிறான் என்பதால் அதை நாம் ஏற்றுக் கொள்வோம். ஆயினுமதை அனுபவ ரீதியில் உணர்ந்தால் மட்டுமே மன நிம்மதி ஏற்படும்.
முபாறக் தனது நண்பன் முனாஸ் என்பவனுக்கு ஓர் இலட்சம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். கடன் கொடுத்த முனாஸ் முபாறக் இடம் வந்து நாளை பத்தாம் திகதி. கடன் தர வேண்டிய நாளாகும். நாளையும் வழமை போல் என்னை ஏமாற்ற முடியாது. நீ ஏமாற்றினால் நீ உயிருடன் இருக்கமாட்டாய். இதோ பார் என்று தனது இடுப்பிலிருந்த கைத் துப்பாக்கியை எடுத்துக் காட்டி விட்டுப் போய் விட்டான்.
முபாறக் அன்றாடம் கூலித் தொழில் செய்து காலம் கழிப்பவன். ஓர் இலட்சம் ரூபாய் மீதம் பிடித்து கடனைக் கொடுப்பதாயினும் குறைந்தது மூன்று மாதங்களாவது அவனுக்குத் தேவைப்படும். ஆயினும் கடன் கொடுத்த முனாஸ் மறுநாள் துப்பாக்கியுடன் வந்து விடுவான். செய்வதறியாது அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருக்கையில் பாதையால் ஓர் ஆலிம் – மார்க்க அறிஞன் நடந்து செல்வதைக் கண்ட முபாறக் அவரை அணுகி தனது தேவையை அவரிடம் கூறி தனக்கு உதவி செய்யுமாறு கேட்டான்.
ஆலிம் அவர்களோ பணம் தருவதற்கு நான் வழியில்லாதவன் எனினும் ஓர் ஆலோசனை கூறுகிறேன். அதன்படி நீ செயல்பட்டால் அல்லாஹ் உன் தேவையை நிறைவேற்றி வைப்பான் என்று கூறி
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
அல்லாஹ்வை நினைப்பதன் மூலம் உள்ளங்கள் சாந்தி பெறும் என்ற திரு மறை வசனத்தை அவனுக்கு விளக்கி வைத்து இன்றிரவு விடியும் வரை அல்லாஹ்வை நினைத்துக் கொண்டிரு என்று வழிகாட்டினார்.
முபாறக் அன்றிரவு உறங்காமலிருந்து விடியும் வரை அல்லாஹ் அல்லாஹ் என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஒன்றுமே நடக்கவில்லை. என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டு பள்ளிவாயலில் சாய்ந்து கொண்டிருந்தான். தன்னையறியாமலேயே உறங்கிவிட்டான் முபாறக்.
யாரோ ஒருவர் அவனைக் காலால் தட்டி எழுப்பியது போல் உணர்ந்து கண்ணைத் திறந்தான் முபாறக். முனாஸ் துப்பாக்கியுடன் நின்றிருந்தான். பணம் வை. இன்றேல் கழுத்துப் பறக்கும் என்றான்.
முபாறக் தனது கஷ்டங்களை அவனிடம் கூறி மீண்டும் ஒரு தவணை பெற்றுக் கொண்டான்.
மறுநாள் முபாறக் ஓர் ஆலிம் – மார்க்க அறிஞரை சந்தித்து தனது கடன் தொல்லை நீங்குவதற்கும், மன அமைதி பெறுவதற்கும் வழி சொல்லுமாறு கேட்டான். அவர் ஏற்கனவே ஓர் ஆலிம் சொன்னது போன்றே சொன்னார். அல்லாஹ்வை நினைப்பதால் மனச் சாந்தி கிடைக்கும் என்று கூறினார்.
முபாறக் அவ்வாறே செய்தான். பல நாட்கள் செய்தான். பயன் கிடைக்கவில்லை. முன்னர் அமைதிக்கு வழி காட்டிய இரு ஆலிம்களும் சொன்னதை ஒரு பக்கம் வைத்து விட்டு “தஸவ்வுப்” ஸூபிஸ வழி வாழும் ஒரு மகானை அணுகி அவரிடம் கடன் தொல்லை நீங்குவதற்கும், மன நிம்மதி கிடைப்பதற்கும் வழி சொல்லித் தருமாறு கேட்டான். அவரும் முந்தின இருவரும் சொன்னது போன்றே சொல்லிக் கொடுத்தார்.
முபாறக் அவரிடம் முன்னர் இரு ஆலிம்கள் சொல்லிக் கொடுத்த கதையைக் கூறி வேறு வழி சொல்லித் தாருங்கள் என்றான்.
அந்த ஸூபிஸ ஆலிம் அவர்கள், அல்லாஹ்வை நீ எவ்வாறு நினைத்தாய்? என்று கேட்டார். அதற்கவன் அல்லாஹ் அல்லாஹ் என்று என் மனதில் நான் நினைத்தேன் என்றான். அதற்கு அந்த ஸூபீ ஆலிம், அல்லாஹ்வை அவ்வாறு நினைப்பதால் மன நிம்மதியேற்படாது. கவலையும் நீங்காது. நான் சொல்வது போல் நினைத்துப் பார் என்றார்.
அதாவது நீ உன்னை அல்லாஹ் என்று நினைத்துப் பார். மன நிம்மதி தானாக காலடிக்கு வரும் என்றார். ஸூபிஸ வழிதான் கைகொடுக்குமென்று சிந்தித்தவனாக வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து தன்னை அல்லாஹ்வாக எண்ணி அல்லாஹ் அல்லாஹ் என்று நினைத்தான். கவலைகள் மறந்தன. கஷ்டங்கள் ஓடி ஒழிந்தன. கடன் கொடுத்த முனாஸ் இவனின் கால்பிடித்து கடனை ஹலால் சொல்லிவிட்டுச் சென்றான்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் وَاذْكُرْ رَبَّكَ إِذَا نَسِيتَ உனது இரட்சகனை நீ நினைத்துக் கொள். நீ மறந்தால் என்று கூறியுள்ளான். (திருக்குர்ஆன் 18-24)
இத்திரு வசனத்தில் “உத்குர்” நீ நினைத்துக் கொள் என்ற சொல்லின் “மப்ஊல்” ஆக – அதாவது நினைப்பக்கடும் பொருளாக “றப்பக” என்ற சொல் வந்துள்ளது. அதாவது உனது “றப்பை” இரட்சகனை நினைத்துக் கொள் என்று பொருள் வரும்.
இதன் பின்னால் إِذَا نَسِيْتَ நீ மறந்தால் என்று ஒரு சொல்லும் வந்துள்ளது. இந்தச் சொல்லுக்கு ஒரு “மப்ஊல்” வரவேண்டும். ஆனால் அது வரவில்லை. அது வரவில்லையானால் நீ எதை மறந்தால் என்ற விளக்கத்திற்கு வழியில்லாமற் போய் விடும். பொருள் பொருந்தவுமாட்டாது.
எனவே, “நஸீத்த” நீ மறந்தால் என்ற பொருளுக்குரிய இச் சொல்லின் பின்னால் ஒரு சொல் வரவேண்டும். அதுவே “நஸீத்த” என்ற சொல்லின் “மப்ஊல்” ஆகும்.
இத்திரு வசனத்தில் அது கூறப்பட வில்லையாதலால் அது எது என்ற கேள்விக்கு விடை காண வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதற்கு விடை கண்டால்தான் பொருள் பொருத்தமாகும்.
அல்லாஹ் திரு வசனத்தில் அதற்கான விடையை – “மப்ஊல்” என்பதைக் கூறவில்லையாதலால் நாமே அது இவ்வாறுதான் இருக்க வேண்டுமென்று முடிவு செய்ய வேண்டும்.
நாம் இவ்விடத்தில் “நஸீத்த” என்ற சொல்லின் “மப்ஊல்” ஆக எதை அமைக்க வேண்டுமென்பதில் ஆய்வாளர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டு.
சிலர் அதன் “மப்ஊல்” رَبَّكَ உனது இரட்சகனை என்றிருக்கும் என்று சொல்வர். இவ்வாறு சொல்வோர் நீரின் மேல் நீச்சலடிப்பவர்களாவர். இவர்களின் இந்த விளக்கம் புத்திக்குப் பொருத்தமற்றதாகும். தூக்கி எறியப்பட வேண்டியதுமாகும்.
ஏனெனில் மறந்தது மறந்ததுதான். அதை நினைக்க முடியாது.
اَلْمَنْسِيُّ مَنْسِيٌّ لَا يَتَصَوَّرُ ذِكْرُهُ
மறந்து போனது மறந்து போனதேயாகும். அதை நினைக்க முடியாது. மறக்காமல் இருப்பதையே நினைக்க முடியும். இதுவே சாத்தியமானதாகும்.
ஆகையால் உனது இரட்சகனான அல்லாஹ்வை நீ நினைத்துக் கொள். நீ உன்னை மறந்தால் என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது إِذَا نَسِيْتَ நீ மறந்தால் என்ற வசனத்தின் பின்னால் உன்னை என்ற பொருளுக்குரிய نَفْسَكَ என்ற சொல்லை முன்னால் வந்த “நஸீத்த” என்ற சொல்லின் “மப்ஊல்” ஆக அமைத்தால் பொருளும் பொருந்தும். தத்துவமும் சரியாகும்.
அதாவது நீ உன்னை மறந்தால் உனது இரட்சகனான அல்லாஹ்வை நினைத்துக் கொள் என்று பொருள் வந்து விடும். “அல்லாஹ்வை மறந்தால் அல்லாஹ்வை நினைத்துக் கொள்” என்று பொருள் கூறுதல் எந்த வகையிலும் பொருந்தாது.
ஒருவன் தன்னை மறந்தால் மட்டும்தான் தனது இறைவனை நினைக்க முடியும்.
இதனால்தான் கிழக்கில் அட்டாளைச்சேனை எனும் ஊரில் சமாதி கொண்டிருக்கின்ற காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட காமில் வலீ அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “மஹ்பூபு மனோன்மணிக் கீதம்” எனும் நூலில்
“தன்னை மறந்து தவத்திலிருக்கையில்
மின்னலைப் போலெங்கும் விளங்கிடுமே!
சொல்லரிதாகிய சுகவாரியானதில்
சொக்கியிருந்திடுவாய் சுதனே!”
என்று கூறியுள்ளார்கள்.
இந்த மகானிடமே எனது தந்தை மர்ஹூம் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அவர்கள் தங்களின் இளம் வயதில் “பைஅத்” ஞான தீட்சை பெற்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்கண்ட மகான் அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கிழக்கில் “கிரான்குளம்” என்ற தமிழ் கிராமத்தில் “கல்வத்” இருந்த காலத்தில் சுமார் 1950ம் ஆண்டளவில் நான் அவர்களை நேரில் பார்த்துள்ளேன் என்பதும், அவர்களின் அருட் கரத்தால் என் தலையை தடவியுள்ளார்கள் என்பதும் இங்கு குறிப்பிடற்குரியவையாகும்.
மர்ஹூம் மகான் வெள்ளி ஆலிம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் உயிரோடிருந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை இங்கு குறிப்பிடாமலிருக்க என்னால் முடியவில்லை. சுருக்கமாக எழுதுகிறேன்.
பொதுச் செயலாளர் அவர்கள் தரீகாவின் ஷெய்குமார்களில் எவரும் “எல்லாம் அவனே” என்று சொன்னதில்லை என்ற கூற்று பொய்யானதென்பதை இந்த மகானின் பின்வரும் பாடல்கள் மூலம் நிறுவுகிறேன்.
اسكت أيّها السكرتير قبل أن تسقط فى أوحال الشّرك والضلالة، واطلب لك شيخا يُربِّيك ويُجلسك على سرير العينيّة