தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
நீங்கள் “எல்லாம் அவனே” என்று ஒரு தத்துவம் எதிலுமில்லை என்று முகக் கவசத்தை மூளையில் போட்டுக் கொண்டு சொல்லிவிட்டீர்கள். உங்களின் கர்வம் உங்களின் மூளையை செயலிழக்கச் செய்து விட்டது.
ஸுப்ஹானல்லாஹ்! உலகில் உங்கள் போல் கர்வம் எனும் சேற்றிலும், சுரியிலும் புதையுண்ட ஒருவர் இருப்பாரா? என்று நான் சந்தேகிக்கிறேன். நீங்கள் கர்வத்தில் முதிர்ச்சி அடைந்திருக்கலாம். ஆனால் இன்னும் நீங்கள் ஸூபிஸ தத்துவத்தைப் புரியவில்லை. அதன் வாடையைக் கூட நுகரவில்லை என்றே சொல்ல வேண்டும். உங்களின் அட்டூழியத்தைப் பார்த்துக் கொண்டு நாங்கள் மௌனிகளாயிருப்பதற்கு நாங்கள் உங்கள் போன்ற சந்தர்ப்பவாதிகள் அல்ல.
நீங்கள் அஷ்ஷெய்குல் அக்பர் முஹயித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் “அல்புதூஹாதுல் மக்கிய்யா”, “புஸூஸுல் ஹிகம்”, 95 வால்யூம்களைக் கொண்ட “தப்ஸீறுல் கபீர்” முதலான நூல்களையும், அஷ் ஷெய்கு அப்துல் கரீம் அல் ஜீலீ அவர்களின் “அல்இன்ஸானுல் காமில்” எனும் நூலையும், அஷ்ஷெய்கு இப்னு அதாயில்லாஹ் அஸ்ஸிக்கந்தரீ அவர்களின் “அல்ஹிகம்” என்ற நூலையும் மனக்கண் திறந்த ஒருவர் மூலம் கற்றுக் கொள்ளுமாறு உங்களுக்கு “வஸிய்யத்” செய்கிறேன்.
இவற்றைக் கற்றுக் கொள்வதுடன் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ அவர்களினதும், “ஸாஹிபுல் ஐனைன்” இப்றாஹீம் தஸூகீ அவர்களினதும், “ஷெய்குல் அறப்” அஷ்ஷெய்கு அஹ்மத் அல்பதவீ அவர்களினதும், அல்குத்பு ஷுஐப் அபூ மத்யன் அல்மக்ரிபீ அவர்களினதும், அல்குத்புஷ் ஷஹீத் அப்துஸ்ஸலாம் இப்னு மஷீஷ் அவர்களினதும் “அஹ்ஸாப்”களையும் படிக்குமாறு உங்களுக்கு “வஸிய்யத்” செய்கிறேன்.
இவற்றை வாசிப்பதோடு மட்டும் நின்று விடாமல் உங்களுடன் இருக்கும் “முப்தீ” மகான்கள் சரி கண்டு தமது “பத்வா”வுக்கு ஆதாரமாக எடுத்துள்ள அஷ்ஷெய்கு முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் அவர்களின் “அத்துஹ்பதுல் முர்ஸலா” எனும் நூலையும் வாசிக்குமாறு உங்களுக்கு “வஸிய்யத்” செய்கிறேன்.
நானோ பெரிய அறிவாளியுமல்ல. அகம் திறந்த ஞானியுமல்ல. எனினும் ஸூபீ மகான்கள் கிள்ளித் தந்த அவர்களின் யாசகத்தைப் பெற்று வாழ்பவன் என்ற வகையில் எனக்கும் சில விடயங்கள் தெரியும். அவ்வளவுதான்.
பொதுச் செயலாளர் அவர்களே!
அல்லாஹ்வின் பேச்சின் ஆழ, நீளத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆயினும் “பத்வா” பணி தொடர்பான ஆட்டோட்டங்களால் மறந்திருப்பீர்கள் என்பாதற்காக நினைவுபடுத்துகிறேன்.
وَلَوْ أَنَّمَا فِي الْأَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلَامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَا نَفِدَتْ كَلِمَاتُ اللَّهِ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
மேலும் நிச்சயமாக பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுதுகோல்களாகவும், கடல் நீர் யாவும் மையாகவுமிருந்து அது தீர்ந்ததற்குப் பின்னர் ஏழு கடல்கள் அதனுடன் மையாக சேர்ந்து கொள்ள அவற்றால் எழுதிக் கொண்டிருந்தாலும் அல்லாஹ்வின் வாக்குகள் எழுதித் தீராது. நிச்சயமாக அல்லாஹ் யாவையும் மிகைத்தவன். தீர்க்கமான அறிவுடையவன். (திருமறை 31-27)
قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا
நபீயே! நீங்கள் கூறுவீராக! என் இரட்சகனின் வாக்கியங்களுக்கு – அதை எழுதுவதற்கு கடல் நீர் யாவும் மையாக இருந்தாலும் எனது இரட்சகனின் வாக்கியங்கள் எழுதி முடிவதற்கு முன்னதாகவே கடல் நீர் முடிந்து செலவாகிவிடும். அது போன்றதை (இன்னொரு தடவையும்) நாம் உதவிக்கு கொண்டு வந்த போதிலும் சரியே! (திருமறை 18-109)
மேற்கண்ட திரு வசனங்களை நீங்கள் சரியாக விளங்கிக் கொண்டால் நீங்கள் அல்லாஹ்வின் அறிவை மட்டுப்படுத்தி நம்பியிருப்பது பிழை என்பது உங்களுக்கு மறையாது. நீங்கள் அவ்வாறு அறிக்கை விட்டது தவறென்று உணர்ந்து அதை வாபஸ் பெறுங்கள்.
அதோடு உங்களின் தலைவர்களுக்கும், முப்தீகளுக்கும் உடனே “பத்வா”வை வாபஸ் பெற்று நாட்டு மக்கள் அனைவரும் நல்லிணக்கம் பெற்று நிம்மதியாக வாழ வழி செய்யுமாறும், இன்றேல் அல்லாஹ் ரோசக் காரன் إِنَّ اللهَ لَأَغْيَرُ என்ற தத்துவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுமாறும் கூறுங்கள்.
اَلدِّيْنُ اَلنَّصِيْحَةُ لِلْأَخِ الْمُسْلِمِ
நான் சீறின் என் சீற்றத்தின் முன்னால் உங்களால் நிற்க முடியாது.
وَللهِ رِجَالٌ لَوْ تَمَلَّكَهُمُ الْحَالُ
مَا كَانَ عَلَيْهِمْ مِنَ الدُّنْيَا مُحَالٌ
அல்லாஹ்வின் அடியார்களிற் சிலர் உளர். அவர்களை ஆன்மிகம் மிகைத்தால் அவர்களுக்கு இவ்வுலகில் எதுவுமே அசாத்தியமாகாது. (எதையும் சாதிப்பர்) – அபூ யஸீத் பிஸ்தாமீ றஹிமஹுல்லாஹ்.
சீறும் சில்லறைகள்!
சீறுங்கள். ஆனால் சிந்தித்துச்
சீறுங்கள். நீதிக்காக மட்டும் சீறுங்கள்!
لَوْ سَرَقَتْ فَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ لَقَطَعْتُ يَدَهَا
முஹம்மத் உடைய மகள் பாதிமா திருடினாலும் அவரின் கரம் துண்டிக்க நான் தயங்கமாட்டேன்.
நீதி என்பது அரசன் ஆண்டி, பணக்காரன், ஏழை, ஸுன்னீ, வஹ்ஹாபீ, முஸ்லிம், காபிர் அனைவருக்கும் ஒன்றேதான். இஸ்லாம் மார்க்கத்தில் பாரபட்சத்திற்கு இடமே இல்லை.
முஸ்லிம் சமுகத்தை நல்வழிப்படுத்த வேண்டிய மார்க்க அறிஞர்களே சத்தியத்தை சாக்கடையில் தூக்கி எறிகிறார்கள் என்றால், ஹலால், ஹறாம் பேணாமல் உழைக்கிறார்கள் என்றால், முஸ்லிம்களை “முர்தத்” என்று மதம் மாற்றி தீர்ப்புச் சொல்கிறார்கள் என்றால், மார்க்கத்தை தவறாகப் புரிந்து கொண்டு சட்டங்கள் இயற்றுகின்றார்கள் என்றால், ஸுன்னிஸத்திற்கும், வஹ்ஹாபிஸத்திற்கும் வேறுபாடு காட்டாமல் சத்தியத்தையும், அசத்தியத்தையும் கலந்து செயல்படுத்துகிறார்கள் என்றால் நாட்டில் நீதியையும், நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் நிலை நாட்டுவது எங்கனம் சாத்தியமாகும்?
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையே முஸ்லிம்களை மதம் மாற்றி அவர்களுக்கிடையில் பிழவையும், பிரச்சினைகளையும் தோற்றுவிக்கிறார்கள் என்றால் இந்நாட்டில் ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவது எங்கனம் சாத்தியமாகும்?
உலமா சபை சத்தியத்தை சாக்கடையில் தூக்கியெறியவில்லையா? இஸ்லாம் மார்க்கத்தின் “றூஹ்” உயிரென்று கருதப்படுகின்ற “தஸவ்வுப்” ஸூபிஸ ஞானம் பேசிய எனக்கும், அதை ஏற்றுக் கொண்ட உலக முஸ்லிம்களுக்கும் “முர்தத்”என்று மதம் மாற்றி “பத்வா” வழங்கிவிட்டு சுமார் 42 ஆண்டுகளாக ஸூபிஸ சமுகத்தின் உரிமைகளைப் பறித்தும், அவர்களை அடக்கியும், ஒடுக்கியும் நடாத்துகிறார்களே இது நீதியா? அநீதியா? இத்தகைய அநீதியைத் தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்புள்ளவர்கள் மௌனிகளாயுள்ளார்களே இது நீதியா? அநீதியா?
ஒருவரின் பேச்சு, அல்லது அவனின் செயல் இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானதென்று கருதப்படுமிடத்து பேசியவனை அல்லது அச் செயலைச் செய்தவனை அழைத்து அவனிடம் நேரில் விளக்கம் பெறாமல் தீர்ப்புக் கூறுதல் நீதியா? அநீதியா?
அன்புக்குரிவர்களே!
இஸ்லாமிய சட்டத்தின் பக்கம் உங்களை அழைத்துச் செல்கிறேன். இஸ்லாமிய “சட்டம்” என்ற தராசைக் கையிலெடுத்து நான் கூறுவதை நிறுத்துப் பார்க்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
نقل الشّيخ أبو طاهر القزويني رحمه الله فى كتابه سراج العقول عن أحمد بن زاهر السَّرخسي اَجَلِّ أصحابِ الشّيخ أبى الحسن الأشعريّ رحمه الله قال (لمّا حضـرتِ الشّيخَ أبا الحسن الوفاةُ فى داري بِبَغْدَادَ، قال لي اِجمعْ أصحابي، فجمعتُهم، فقال لنا ، اِشْهدُوا أنِّيْ لا أقولُ بِتَكْفِيْرِ أحدٍ من أهلِ القِبلة، لِأَنِّيْ رأيتُهم كلَّهم يشيرون إلى معبودٍ واحد، والإسلام يشملُهم ويعمُّهم، (اليواقيت، ج أوّل، ص( 21
அஷ்ஷெய்கு அபூ தாஹிர் அல் கஸ்வீனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “ஸிறாஜுல் உகூல்” எனும் நூலில் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் மிகப் பிரசித்தி பெற்ற தோழர் அஹ்மத் இப்னு சாஹிர் அவர்கள் கூறியுள்ளதாக பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
அஷ்ஷெய்கு அபுல் ஹஸன் அல் அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பக்தாத் நகரிலுள்ள எனது வீட்டுக்கு வந்த போது அவர்களுக்கு மரண வருத்தம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் என்னிடம் எனது தோழர்கள் அனைவரையும் என்னிடம் ஒன்று கூட்டித் தருமாறு கூறினார்கள். நான் ஒன்று கூட்டிக் கொடுத்தேன். அப்போதவர்கள் வந்தவர்களிடம், (நான் முஸ்லிம்களில் பொது மக்களில் எவரையும் “காபிர்” “முர்தத்” என்று சொல்லவில்லை என்பதன் மீது நீங்கள் அனைவரும் சாட்சிகளாக இருந்து கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள் அனைவரும் வணங்குகின்ற இறைவன் ஒருவன்தான் என்று சொல்வதாகவே நான் காண்கிறேன். இஸ்லாம் என்ற சொல் அவர்கள் அனைவரையும் உள்வாங்கிக் கொள்ளும்) என்று கூறினார்கள்.
ஆதாரம்: அல்யவாகீத் வல் ஜவாஹிர், பாகம், 01, பக்கம் 21
ஆசிரியர்: அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ்
இவ்வாறு சொன்ன இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரீ அவர்களேயாவார்கள். இவர்கள் உலகில் வாழும் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைவாதிகள் அனைவராலும் பின்பற்றப்படுகின்ற “அகீதா” கொள்கையுடைய இமாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
“அஹ்லுல் கிப்லத்” கிப்லா உடையோர் என்று முஸ்லிம்கள் மட்டுமே சுட்டிக் காட்டப்படுவர். அவர்களுக்கு மட்டுமே வணக்கத்தின் போது “கிப்லா” அவசியமாகும்.
இமாம் அஷ்அரீ அவர்கள் பயன்படுத்தியுள்ள வசனத்தை அறிவுள்ளோர் சற்று சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் مِنْ عَوَامِّ أَهْلِ الْقِبْلَةِ முஸ்லிம்களில் படிப்பறிவில்லாத பாமரரில் எவரையும் “காபிர்” என்று நான் சொல்லமாட்டேன் என்ற அவர்களின் வசனம் மிக முக்கிய அம்சம் ஒன்றை சுட்டிக் காட்டுகிறது.
அதாவது மத மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சொல்லாயினும், செயலாயினும் அநேகமாக படிக்காவதர்களால்தான் நடைபெறுகின்றன. படித்தவர்களால் நடைபெறுவது மிகக் குறைவு. இதைக் கருத்திற் கொண்டுதான் அவ்வாறு அவர்கள் சொன்னார்கள் போலும்.
இது எமக்கு எதை உணர்த்துகிறதென்றால் படிக்காத பாமரர்களால் இத்தகைய தவறுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களைக் “காபிர்”கள் என்று தீர்ப்புக் கூறுவதாயின் முஸ்லிம்களில் அநேகமானவர்களுக்கு அவ்வாறு தீர்ப்புக் கூற நேரிடலாம் என்பதை தவிர்ப்பதற்காகவே, அந்த வசனத்தைப் பயன்படுத்தினார்கள் போலும்.
ஒரு கொள்கையின் தலைவராக – தாபகராக இருந்த ஒரு மகானே தங்களின் வாழ்வில் ஒரு முஸ்லிமை மதம் மாற்றித் தீர்ப்புக் கூறவில்லையென்றால் அந்த மகானைவிட உலமா சபையின் “பத்வா” குழு சிறந்தவர்களா? இவர்கள் என்னை மட்டும் “முர்தத்” என்று சொல்லவில்லை. “எல்லாம் அவனே” என்ற கொள்கையை ஏற்றுக் கொண்ட உலகில் வாழும் “ஸூபீ” முஸ்லிம்கள் அனைவரையுமே அவ்வாறு கூறிவிட்டார்கள். இவர்களின் இச் செயல் அல்லாஹ் மன்னிக்கமாட்டான் என்ற வகையைச் சேர்ந்த பாவமேயாகும்.
எனவே, “பத்வா” வழங்கிய முப்தீகள் – நீதிவான்கள் பகிரங்கமாக தமது தீர்ப்பை வாபஸ் பெறுவதுடன் பகிரங்கமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பும் கேட்க வேண்டும். இதுவே இஸ்லாமிய “ஷரீஆ” சட்டமாகும்.
“ஷரீஆ”வின் இன்னுமொரு சட்டத்தையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
وفى الصفحة الثالثة والثلاثين بعد المأة، من الجزء الرابع مِن إعانة الطالبين، أَنّ من قال لأخيه المسلم يا كافر! فقد رجع القائل بقوله، فالمعنى أنّ من دعا أخاه المسلم يا كافر! فقد كان الداعي كافرا بقوله إن لم يكن المدعوُّ كافرا، وينبغي للمفتى أن يحتاط فى التكفير ما أمكنه لِعِظَم خَطَرِه وغَلَبَةِ عدم قصده سيّما من العوام، وما زال أئمّتنا على ذلك قديما وحديثا،
“இஆனதுத் தாலிபீன்” எனும் சட்ட நூல் 4ம் பாகம் 133ம் பக்கத்தில் வந்துள்ள சட்டம் பின்வருமாறு பேசுகிறது.
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை “யா காபிர்” காபிரே! என்று அழைத்தானாயின் அவ்வாறு அழைத்தவன் “காபிர்” ஆகிவிட்டான்.
இதன் விபரம் என்னவெனில் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை “யா காபிர்” – காபிரே என்று சொன்னால் – அழைத்தால் அவ்வாறு அழைக்கப்பட்டவன் “காபிர்” ஆக இல்லாத நிலையில் அவ்வாறு அழைத்தவன்தான் “காபிர்” ஆவான்.
எனவே, ஒரு முஸ்லிமை “காபிர்” – “முர்தத்” ஆக்கி வைக்கும் விடயத்தில் “பத்வா” வழங்குவோர் மிகவும் பேணுதலாக நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு முஸ்லிமை “காபிர்” ஆக்கி வைத்தல் என்பது பயங்கர குற்றமாகும். இது மட்டுமல்ல. படிப்பறிவில்லாத சாதாரண மக்களால் ஏற்படுகின்ற சொல், செயல்களுக்கு அவ்வாறு தீர்ப்பு வழங்குவதாயின் பொது மக்களில் அநேகமானவர்களுக்கு அவ்வாறு தீர்ப்புக் கூற வேண்டியேற்படும். இது பெரும் தீய விளைவை ஏற்படுத்தும் வேலையாகும். ஏனெனில் பொது மக்களில் பெரும்பாலானவர்களுக்கு எதனால் மத மாற்றம் ஏற்படும் என்ற விபரம் தெரியாதாகையால் அவர்களால் அத்தகைய செயல் அதிகமாக ஏற்படச் சாத்தியமுண்டு. அவர்களில் ஒவ்வொருவருக்கும் உலமா சபை “முர்தத்” பத்வா வழங்கினால் இன்னும் சில வருடங்களில் உலமா சபையை சேர்ந்தவர்கள் மட்டுமே இந் நாட்டில் முஸ்லிம்களாயிருப்பார்கள்.
முஸ்லிம்களின் சனத் தொகையை குறைப்பதற்கு யஹூதிகள் – யூதர்கள் கண்டுபிடித்த கள்ள வழிதான் “பத்வா” வழங்கும் வழியாகும். அவர்கள் விரித்த கள்ள வலையுமாகும். உலமா சபையின் அறிவற்ற இச் செயல் அவர்களை யஹூதிகள் வலையில் மாட்டி வைத்து விட்டதோ என்று எண்ண வைக்கிறது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
எனவே, ஒரு முஸ்லிமை “முர்தத்” ஆக்கித் தீர்ப்புக் கூறும் விடயத்தில் முன் வாழ்ந்த மார்க்க அறிஞர்களும், மகான்களும் மிகப் பேணுதலாக இருந்து வந்துள்ளார்கள் என்பதை தீர்ப்பு வழங்குவோர் கவனத்திற் கொள்ள வேண்டும்.
புத்தி குறைந்த ஒரு முஸ்லிம் “அல்லாஹ்வும் குல்லாவும்” என்று சொன்னான் என்று வைத்துக் கொள்வோம். இதேபோல் அல்லாஹ்வுக்கு கண் இல்லையா? என்று ஒரு முஸ்லிம் அவனைச் சாடினான் என்று வைத்துக் கொள்வோம், அல்லாஹ் அநீதியாளன் என்று ஒரு முஸ்லிம் தனது அறியாமையால் சொன்னான் என்று வைத்துக் கொள்வோம். இன்னோருக்கு உடனே “முர்தத்” என்று தீர்ப்புக் கூறி முஸ்லிம் சமுகத்திலிருந்து அவர்களை வெளியேற்றினால் நாளடைவில் முஸ்லிம்களின் சனத் தொகை குறைந்து கொண்டே போய்விடும். இத்தகையோருக்கு “முர்தத்” பத்வா வழங்கி முஸ்லிம் சமுகத்திலிருந்து இவர்களை வெளியேற்றி விடாமல் இவர்களுக்கு அறிவுரை வழங்கி இவர்களை உள்வாங்க வேண்டும்.
قال الإمام ابن حجر رحمه الله فى الصفحة التاسعة والتسعين من كتاب ‘ الزواجر ‘، أخرج الشيخان فى جملة حديث ‘ وَمَنْ دَعَا رَجُلًا يا كافر أو قال عَدُوَّ الله، وليس كذلك إلّا حَارَ عليه أي رَجَعَ عليه ما قاله، وفى روايةٍ لهما ‘ من رمى مؤمنا بكفر فهو كَقَتْلِهِ ‘، وهذا وَعِيْدٌ شَدِيْدٌ، هو رُجوعُ الكفرِ عليه أو عَدَاوَةُ الله له، وكونُه كإثم القتل،
இமாம் இப்னு ஹஜர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அஸ்ஸவாஜிர்” எனும் நூல் 99ம் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
பின்வரும் இந்த நபீ மொழி புகாரீ, முஸ்லிம் இரு நூல்களிலும் வந்துள்ள நீண்ட ஹதீதின் ஒரு பகுதியாகும்.
“ஒருவன் இன்னொருவனை “காபிர்” என்றழைத்தால், அல்லது அல்லாஹ்வின் எதிரி என்று சொன்னால், சொல்லப்பட்டவன் அவ்வாறில்லாத நிலையில் சொன்னவன்தான் அவ்வாறு ஆவான் என்று வந்துள்ளது. இன்னும் அவ்விருவரின் அறிவிப்பில் பின்வருமாறும் வந்துள்ளது ஒரு “முஃமின்” விசுவாசியை “காபிர்” என்று சொல்வது அவனைக் கொலை செய்வது போன்றதாகும்.
இந்த நபீ மொழியின் படி ஒருவனைக் “காபிர்” என்று சொல்வதும், அவனை அல்லாஹ்வின் எதிரி என்று சொல்வதும் பெருங்குற்றம் என்றும், ஒரு விசுவாசியை “காபிர்” என்பது அவனைக் கொலை செய்வதற்குச் சமம் என்றும் தெளிவாகின்றது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் “பத்வா” குழுவினர் “தஸவ்வுப்” ஸூபிஸம் பேசிய எனக்கும், நான் கூறிய கருத்தை ஏற்றுக் கொண்ட உலகில் வாழும் பல இலட்சம் ஸூபீகளுக்கும் “முர்தத்” மதம் மாற்றி தீர்ப்பு வழங்கி எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்று கூறியது “ஷரீஆ”வின் வழிப்படியும் பிழைதான். “தரீகா” வழிப்படியும் பிழைதான். “முப்தீ”கள் தமது தவறையுணர்ந்து “பத்வா”வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இன்றேல் எமது எதிர்ப்பும், விளக்கமும் தொடர்ந்து கொண்டே இருக்கும். முட்டுமுன் குனிந்தவன் புத்திமான். முட்டிய பின் குனிபவன் முட்டாள்.
“எல்லாம் அவனே” என்பதற்கு எதிலும் ஆதாரமில்லை என்ற பொதுச் செயலாளரின் அறிக்கைக்கான ஆதாரங்கள் தொடரும்…