Saturday, October 12, 2024
Homeஎழுத்தாக்கங்கள்கடலின் ஆழத்தை அளந்தாற் கூட இறைஞானக் கடலின் ஆழத்தை அளக்க முடியாது!

கடலின் ஆழத்தை அளந்தாற் கூட இறைஞானக் கடலின் ஆழத்தை அளக்க முடியாது!

தொடர் 02

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

ஹதீதுக்கலை மேதை ஷாஹ் அப்துல் ஹக் முஹத்திதுத் திஹ்லவீ அவர்கள்.

عبارة الشّيخ المحقّقِ شاه عبد الحق المحدثِ الدّهلويِّ فى ‘إخبار الأخبار ‘ أنّ العالم غيرُ الحقّ من كلّ وجه عند الحكماء والمتكلِّمين، وأمّا التَّحقيقُ عند المحقّقين فَخِلافُ ذلك، فإنّه عينُ الحقِّ من وجه وغيرُ الحق من وجه، فَهُمُ الحائزون بين الجمع والفرق، والجامعون بين التشبيهِ والتّنزيه، فقلتَ بالعينيّة حقيقةً أو قلت بالغيريّة تَعَيُّنًا، إذ لا نصيب للعالم مِن الإطلاق، فالأمر حقٌّ وخلقٌ، الربُّ ربٌّ لإطلاقِه، والعبدُ عبدٌ لتَقْيِيْدِهِ، أمّا العينُ فواحدةٌ فى أطوارها، فالتّنزيهُ المَحْضُ جهالةٌ، والتّشبيهُ المحضُ ضلالةٌ، وجمعُهما معرفةٌ بالأمر، فأمرُ العالَم ظُهورُ الحقِّ فى مَظاهِرِ العُبُوديّة لإظهار الرُّبُوبيّة، فالعالَمُ وجهُ الحقِّ وذاتُه باطنُ العالم، وهذا كلُّه كَمالُ الأسماء، وأمّا كمالُه الذَّاتيّ فلا يعلم الغيبَ إلّا هُو،
கடந்த பதிவின் போது அஷ்ஷெய்குல் முஹக்கிக் ஷாஹ் அப்துல் ஹக் முஹத்திதுத் திஹ்லவீ றஹிமஹுல்லாஹ், அஷ்ஷெய்கு ஷாஹ் வலிய்யுல்லாஹ் முஹத்திதுத் திஹ்லவீ றஹிமஹுல்லாஹ், அஷ்ஷெய்கு அஷ் ஷாஹ் அப்துல் அஸீஸ் முஹத்திதுத் திஹ்லவீ றஹிமஹுல்லாஹ், ஹாபிள் சீறாஸீ றஹிமஹுல்லாஹ், அஷ்ஷெய்கு இம்தாதுல்லாஹில் முஹாஜிரீ றஹிமஹுல்லாஹ் ஆகியோர் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பாக கூறிய கருத்துக்களை எழுதியிருந்தேன்.

குறித்த மகான்கள் ஐவரும் தட்டிக் கழிக்க முடியாத அறிவு மலைகளாவர். இவர்களே “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை சரி கண்டு ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஒன்றுக்கும் உதவாத சில்லறைகள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பது அவர்களுக்கு இவ் அறிவில் பாக்கியம் இல்லை என்பதற்கான ஆதாரமாகும். எவ்வளவுதான் திறமை இருந்தாலும் இந்த இறை ஞானத்தை புரிந்து கொள்வதற்கு “நஸீப்” எனும் நற்பாக்கியம் அவசியமேதான்.

மேற்கண்ட அறபு வரிகளுக்கான தமிழாக்கம் பின்வருமாறு.

அஷ்ஷெய்குல் முஹக்கிக் ஷாஹ் அப்துல் ஹக் அல்முஹத்திதுத் திஹ்லவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “இக்பாறுல் அக்பார்” எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

(நிச்சயமாக “ஆலம்” – உலகம் எல்லா வகையிலும் அல்லாஹ்வுக்கு வோறனதேயாகும். இது “ஹுகமாஉ” தத்துவ ஞானிகளினதும், “முதகல்லிமீன்”களினதும் கருத்தாகும். இவ்விரு சாராரும் தத்துவவாதிகள் தானாயினும் ஸூபீ மகான்களின் கருத்துக்கும், இவர்களின் கருத்துக்கும் வித்தியாசமுண்டு.

ஆயினும் இவ்விடயத்தில் “முஹக்கிகீன்” என்போர் அதாவது எதையும் சந்தேகம் தீரும் வரை துருவித் துருவி ஆராய்ந்து இரண்டாம் கருத்துக்கு இடமில்லாமல் முடிவு சொல்வோர்களான மகான்கள் மேற்கண்ட இரு சாரார்களுக்கும் மாறாக கருத்துக் கூறியுள்ளார்கள். அதாவது அல்லாஹ் ஒரு வகையில் “ஆலம்” எனும் இவ்வுலகு தானானவனாயும், இன்னொரு வகையில் அதற்கு வேறானவனுமாவான் என்று சொல்லியுள்ளார்கள்.

இவர்கள் தான் “ஜம்உ” “பர்க்” எனும் இரண்டையும் சேர்த்துக் கொண்டவர்களாவர். “ஜம்உ” என்றால் படைத்தவனும், படைப்பும் இரண்டும் ஒன்றென்று நம்புதல். “பர்க்” என்றால் அது வேறு, இது வேறு என்று நம்புதல். இது மட்டுமல்ல. இவர்கள்தான் “தன்ஸீஹ்” எனும் நிலையையும், “தஷ்பீஹ்” எனும் நிலையையும் ஒன்று சேர்த்துச் சென்ற நல்லடியார்களாவர்.

நீ எதார்த்தம் கவனித்து இரண்டும் ஒன்றென்று “ஐனிய்யத்” அடிப்படையில் சொல். அல்லது குறிப்பு என்ற அடிப்படையில் அது வேறு, இது வேறு என்று சொல். பொதுவாக “ஆலம்” எனும் உலகம் “இத்லாக்” ஆகச் சொல்லப்படுவதற்கு (குறிப்பற்றதாகச் சொல்லப்படுவதற்கு) “நஸீப்” பாக்கியம் இல்லை. எனவே, விடயம் இரண்டுக்கிடையிலேயே சுழன்று செல்கிறது. பொதுவாக றப்பு றப்புதான். குறிப்பாக அப்து அப்து தான். எவ்வாறாயினும் மூலம் ஒன்றே ஒன்றுதான்.

“தன்ஸீஹ்”, “தஷ்பீஹ்” இரண்டும் அவசியமே! ஒன்றை எடுத்து மற்றதை விடுவது விசுவாசமாகாது.

தனியே “தன்ஸீஹ்” மட்டும் அறியாமையாகும். இதேபோல் தனியே “தஷ்பீஹ்” மட்டும் வழிகேடாகும். இவ்விரண்டையும் இணைத்துச் செல்லுதல் இறைஞானமாகும்.

“ஆலம்” எனும் உலகின் காரியம் அல்லாஹ் தனது “றுபூபிய்யத்” றப்பாக இருக்கும் தன்மையை வெளிப்படுத்துவதற்காக “உபூதிய்யத்” எனும் பாத்திரங்களில் அவன் வெளியாவதாகும்.

எனவே, “ஆலம்” உலகம் என்பது அல்லாஹ்வின் முகமாகவும், அவனின் “தாத்” ஆலமின் உட்பகுதியாகவும் உள்ளது. இவையாவும் “அஸ்மாஉ” திரு நாமங்களின் பூரணமாகும். ஆயினும் அவனின் “தாத்” உடைய பூரணத்தை அவன் மட்டுமே அறிவான்.

அஷ்ஷெய்குல் முஹக்கிக் ஷாஹ் அப்துல் ஹக் அல்முஹத்திதுத் திஹ்லவீ அவர்களின் மேற்கண்ட அறபு வசனங்களுக்கான தமிழாக்கத்தை எழுதினேன்.

மகான் அவர்களின் இப்பேச்சு மிக ஆழமான கருத்தாதலால் நூறு வீதம் சரியாக எழுத என்னால் முடியாமற் போயிற்று. என்னை விடத் தரமான ஒருவர் இதைவிட விளக்கமாக எழுதுவார்.

“வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசுவோர் முதலில் “தன்ஸீஹ் – தஷ்பீஹ்” எனும் இரண்டு அம்சங்களையும் அறிந்திருக்க வேண்டும். இவ்விரண்டையும் ஐயம் தீர அறியாதவர் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை விளங்கிக் கொள்ளவுமாட்டார். விளக்கி வைப்பதற்கும் அவரால் முடியாது.

இருக்கு முதலெல்லாம்
கொடுத்திட்டாலும்
இரவு பகலெல்லாம்
வணங்கிட்டாலும்
ஹறத்தில் கிதாபெல்லாம்
ஓதிட்டாலும்
வருட முழு நோன்பு
நோற்றிட்டாலும்
வருசை ஹஜ்ஜதை
செய்திட்டாலும்
கருத்தில் இது இரண்டை
அறியாதவர்
கடைசி நரகிற்கிரையாவரே!

என்று “தன்ஸீஹ் – தஷ்பீஹ்” குறித்து ஒரு மகான் பாடியுள்ளார்கள். இவ்விரண்டையும் விபரமாக அறியாதவர் சுவர்க்க வாசலண்டை கூட செல்ல முடியாது.

இதே கருத்தை அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் பல நூல்களில் கூறியுள்ளார்கள்.

فإن قلت بالتنزيه كُنتَ مُقَيِّدًا – وإن قلت بالتَّشْبِيْهِ كنتَ محدِّدًا
فإن قلتَ بالأمرين كنتَ مُسدِّدًا – وكنت إماما فى المعارف سيّدا
فمن قال بالإشفاعِ قد كان مُشركا – ومن قال بالإفراد كان مُوحِّدا
وإيّاك والتَّشْبيهَ إن كنت ثانيا – وإيّاك والتّنزيهَ إن كنت مُفرِدا

நீ “தன்ஸீஹ்” நிலையை மட்டும் சொன்னால் – நம்பினால் நீ அவனைக் “கைத்” பண்ணினவனாகிவிட்டாய். நீ “தஷ்பீஹ்” நிலையை மட்டும் சொன்னாலும் – நம்பினாலும் கூட நீ அவனை “ஹத்” கட்டுப்படுத்தினவனாகிவிட்டாய்.

நீ இரண்டையும் நம்பினால் – “தன்ஸீஹ் – தஷ்பீஹ்” இரண்டையும் நம்பினால் நீ நேர்மையாளனாகவும், இறை ஞானத்தின் தலைவனாகவும் ஆகிவிடுவாய்.

எவன் இரண்டு என்று நம்பினானோ அவன் இணை வைத்தவனாகி விடுவான். எவன் ஒன்றென்று சொன்னானோ அவன் விசுவாசியாகிவிடுவான்.

நீ இரண்டாமவனாக இருந்தால் உன்னையும், “தஷ்பீஹ்”ஐயும் நான் எச்சரிக்கிறேன். நீ ஒன்றென்று சொல்பவனாயிருந்தால் உன்னையும், தன்ஸீஹையும் நான் எச்சரிக்கிறேன்.
قال الشّيخ عبد الكريم الجيلي رضي الله عنه فى كتابه ‘ الإنسان الكامل ‘ مِن الصفحة الثانية والثلاثين أنّ التّشبيهَ الإلهي عبارةٌ عن صورة الجَمال، لأنّ الجمالَ الإلهيَّ له معانٍ، وهي الأسماء والأوصافُ الإلهيّة، ولهُ صُورٌ، وهي تجلّياتُ تِلك المعاني فيما يقع عليه من المحسوس أو المعقول، فالمحسوسُ كما فى قول رأيتُ ربِّي فى صورةِ شابٍّ أمردَ، والمعقول كقوله أنا عند ظنِّ عبدِي بي، فَلْيَظُنَّ بِي ما شاء، وهذه الصورة هِيَ المرادَةُ بالتشبيه، ولا شكَّ أنّ اللهَ تعالى فى ظُهوره فى صورة جمالِه باقٍ على ما اسْتَحَقَّهُ مِن تَنزِيهِه، فكما أعطيتَ الجنابَ الإلهيَّ حقَّه من التّنزيه فكذلك أعطِهِ مِن التشبيه الإلهيّ حقَّه،
அஷ் ஷெய்கு அப்துல் கரீம் ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல் இன்ஸானுல் காமில்” எனும் நூல் 33ம் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

“அத்தஷ்பீஹுல் இலாஹிய்யு” என்பது அழகிய “ஸூறத்” உருவத்தைக் குறிக்கும். ஏனெனில் தெய்வீக அழகுக்கு பல பொருள் உண்டு. அவைதான் தெய்வீகத் தன்மைகளும், திரு நாமங்களுமாகும். அவனுக்குப் பல “ஸூறத்” உருவங்கள் உள்ளன. அவைதான் அக்கருத்துக்களின் “தஜல்லியாத்” வெளிப்பாடுகளாகும். அவ் வெளிப்பாடுகள் “மஹ்ஸூஸ்” “மஃகூல்” இரண்டையும் குறிக்கும். “மஹ்ஸூஸ்” என்றால் ஐம்புலன்களால் உணரப்படுபவையாகும். எனது இரட்சகனை முகத்தில் முடி முளைக்காத அழகிய வாலிபனின் உருவத்தில் கண்டேன் என்ற நபீ பெருமானின் அருள் வாக்குப் போன்று. “மஃகூல்” என்பது புத்தியால் அறியப்படக் கூடியதாகும். இதற்கு உதாரணமாக ஹதீதுக் குத்தஸீ ஒன்றைக் கூறலாம். அந்த ஹதீதுதான்
أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِيْ بِيْ فَلْيَظُنَّ بِيْ مَا شَاءَ

என்ற ஹதீதாகும். இது “ஹதீதுக் குத்ஸீ” எனப்படும். இதன் பொருள் “எனதடியான் என்னை நினைக்குமிடத்தில் நான் இருக்கிறேன். ஆகையால் அவன் என்னை விரும்பியவாறு நினைத்துக் கொள்ளட்டும்” என்பதாகும்.

இந்த “ஸூறத்” உருவம் தான் “தஷ்பீஹ்” என்பது கொண்டு நாடப்பட்ட உருவமாகும்.

ஆயினும் எந்தவொரு சந்தேகமுமின்றி அல்லாஹ் எந்த ஓர் உருவத்தில் வெளியானாலும் கூட அவனின் “தன்ஸீஹ்” நிலையிலிருந்து அவன் அழியாமலும், மாறுபடாமலுமே உள்ளான். அவனின் “தன்ஸீஹ்” நிலைக்கு எந்த ஒரு குறைபாடும் ஏற்படவில்லை என்பதை உறுதியாக தெரிந்து கொள்ள வேண்டும்.

மனிதா! நீ அல்லாஹ்வின் “தன்ஸீஹ்” நிலைக்கு கொடுக்க வேண்டியதை அதற்குக் கொடுத்தும், அவனின் “தஷ்பீஹ்” நிலைக்கு கொடுக்க வேண்டியதை அதற்குக் கொடுத்தும் வாழ்ந்து கொள்!

அஷ்ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜீலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “இன்ஸான் காமில்” எனும் நூலில் கூறிய விடயம் நிறைவு பெற்றது.

எனது பொதுவான ஓர் ஆலோசனை. இறைஞான அறிவைப் பொறுத்த மட்டில் தெளிவற்ற விடயங்களில் இறைஞானத்துறையில் பரவலான அறிவும், நல்ல அனுபவமும் உள்ள அறிஞர்களையும் சேர்த்து அவர்களின் கருத்துக்களையும் அறிந்த பின்னரே சரி பிழை காண முற்பட வேண்டும். இதுவே அறிவுடைமையாகும். மனச்சாட்சிக்கு பொருத்தமானதுமாகும்.

முற்றும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments