தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நுராமித் 21.01.2022 அன்று அறிக்கையொன்று வெளியிட்டிருந்தார்.
அதில் “எல்லாம் அவனே” “ஹமவோஸ்த்” எனும் அத்தைவதக் கொள்கை இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணானதென்று கூறியிருந்தார். ஆயினும் இதற்கான ஆதாரம் ஒன்று கூட அவர் கூறவில்லை. அதேபோல் “வஹ்ததுல் வுஜூத்” என்று நாம் கூறுகின்ற சொல்லையும் அவர் பாவிக்கவில்லை. ஏனோ? தெரியவில்லை. இங்கு ஒரு மர்மம் உண்டு. காலம் தெளிவு படுத்தும்.
“பத்வா” வழங்கியோர் “ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று வழங்கிவிட்டு “வஹ்ததுல் வுஜூத்” பேசிய எனது பெயரை “பத்வா”வில் குறிப்பிட்டிருந்தார்கள். இவரோ “வஹ்ததுல் வுஜூத்” பிழையென்று சொல்லாமற் சொல்கிறார்.
இவரின் பொதுவான கருத்து என்னவெனில் “வஹ்ததுல் வுஜூத்” பிழை என்பதேயாகும்.
செயலாளர் அர்கம் நுராமித் அவர்கள் ஸூபிஸக் கொள்கையின் ஓர் அங்கமான “வஹ்ததுல் வுஜூத்” எனும் கொள்கையை முற்றாகப் பொய்யாக்கியும், வழிகேடென்றும் கூறி அறிக்கை விட்டிருக்கிறார். இவரும் ஏனையோர் போல் வஹ்ஹாபிஸம் என்ற குட்டையில் ஊறிய மட்டை என்று இப்போதுதான் தெளிவானது.
தொடர்ந்து கூறிய செயலாளர் ஸூபிஸம் சொல்லும் சிந்தனைக்கும், நாங்கள் கூறிவரும் சிந்தனைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லையென்று ஆணித்தரமாக, அடித்துக் கூறியுள்ளார். மேலும் இலங்கையில் பல தரீகாக்கள் இருப்பதாகவும், அவற்றின் ஷெய்குமார்களும், கலீபாஉகளும் நான் கூறி வரும் இச்சிந்தனையை வழிகேடென்று எச்சரித்து வந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
பொதுவாக ஸூபீகளான நாங்கள் கூறும் எல்லாம் அவனே என்ற அடிப்படைத் தத்துவத்தை எதிர்த்தும், மறுத்தும், அது இஸ்லாம் மார்க்கத்திற்கு முரணானதென்றும் கூறி முடித்திருக்கிறார்.
இவரின் அறிக்கை திருக்குர்ஆனுக்கும், நபீ மொழிகளுக்கும் இறைஞானிகளான ஆரிபீன்கள், அவ்லியாஉகளின் பேச்சுக்கும் முற்றிலும் முரணானதாகும்.
உலமா சபை தமது “பத்வா” தீர்ப்புக்கு ஆதாரமாக எடுத்துள்ள நூல்களில் ஒன்றான “அத்துஹ்பதுல் முர்ஸலா” எனும் நூல் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை நிறுவுவதற்கென்றே இமாம் முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் அவர்களால் எழுதப்பட்ட நூலாகும். இந்த நூல் உலமா சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நூல் என்பதற்கு மறுக்க முடியாத ஓர் ஆதாரம் இந்நூலை அவர்கள் தமது அறபு “பத்வா” 28ம் பக்கத்தில் ஆதாரமாக எடுத்திருப்பதாகும்.
இது பற்றி ஒரு கடிதமல்ல. பல கடிதங்கள் உலமா சபைக்கு எழுதி எல்லாம் அவனே எனும் தத்துவம் இந்நூலில் எழுதப்பட்டுள்ளதே இது பற்றி உங்களின் கருத்தென்னவென்று கேட்டு அனுப்பியிருந்தேன்.
இதுவரை ஒரு பதிலும் இல்லை. மௌனம் காப்பது தவிர அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. வாய் திறந்தால் தூண்டிலில் மீன் மாட்டுவது நிச்சயம்.
இதேபோல் உலமா சபை ஏற்றுக் கொண்ட ஸூபீ இமாம்களில் ஒருவரான இமாம் முஹம்மத் அல் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “இஹ்யா உலூமித்தீன்” எனும் நூலில் فضيلة الأوراد وترتيبها وأحكامها எனும் பாடத்தில்
وَلَيْسَ فِى الْوُجُوْدِ سِوَى اللهِ تَعَالَى وَأَفْعَالِهِ
இருப்பவற்றில் அல்லாஹ்வையும், அவனின் செயல்களையும் தவிர வேறொன்றுமே இல்லை என்றும்,
كتاب آداب السماع والوجد
என்ற பாடத்தில்
إِذْ لَيْسَ فِى الْوُجُوْدِ تَحْقِيْقًا إِلَّا اللهُ وَأَفْعَالُهُ
இருப்பவற்றில் திட்டமாக அல்லாஹ்வையும், அவனின் செயல்களையும் தவிர வேறொன்றுமே இல்லை என்றும்,
كتاب شرح عجائب القلب
என்ற பாடத்தில்
إِذْ لَيْسَ فِى الْوُجُوْدِ شَيْءٌ سِوَى اللهِ تَعَالَى وَأَفْعَالِهِ
இருப்பவற்றில் அல்லாஹ்வையும், அவனின் செயல்களையும் தவிர வேறு எந்தவொரு வஸ்த்துமே இல்லை என்றும்,
كتاب التوحيد والتوكّل
என்ற பாடத்தில்
أَنْ لَا يَرَى فِى الْوُجُوْدِ إِلَّا وَاحِدًا
இருப்பவற்றில் ஒன்றைத் தவிர வேறொன்றையும் காணாமல் இருப்பதாகும் என்றும்,
كتاب المحبّة والشوق والأنس والرضا
என்ற பாடத்தில்
فَإِنَّ مَنْ عَرَفَ نَفْسَهَ وَعَرَفَ رَبَّهُ عَرَفَ قَطْعًا أَنَّهُ لَا وُجُوْدَ لَهُ مِنْ ذَاتِهِ وَإِنَّمَا وُجُوْدُ ذَاتِهِ وَدَوَامُ وُجُوْدِهِ وَكَمَالُ وُجُوْدِهِ مِنَ اللهِ وَإِلَى اللهِ وَبِاللهِ، وَإِلَّا فَالْعَبْدُ مِنْ حَيْثُ ذَاتِهِ لَا وُجُوْدَ لَهُ مِنْ ذَاتِهِ بَلْ هُوَ مَحْوٌ مَحْضٌ وَعَدَمٌ صِرْفٌ
“நிச்சயமாக தன்னையும் அறிந்து, தனது இரட்சகனான அல்லாஹ்வையும் அறிந்து கொண்டவன் எந்த ஒரு சந்தேகமுமின்றி தனது “தாத்”தில் நின்றும் தனக்கு உள்ளமை இல்லை என்றும், தனது “தாத்”தின் உள்ளமையும், அந்த உள்ளமை நிலைத்திருப்பதும், இன்னும் அவனின் உள்ளமை பூரணமாவதும் அல்லாஹ்வில் நின்றும், அல்லாஹ் அளவிலே, அல்லாஹ்வைக் கொண்டாகும். இன்றேல் அடியானின் “தாத்”தின் புறத்தில் அவனுக்கு “வுஜூத்” இல்லை. எனினும் அவன் சுத்தமாக, திட்டமாக இல்லவே இல்லை” என்று கூறியுள்ளார்கள்.
மேலும் இதே பாடத்தில்
وَلَيْسَ فِى الْوُجُوْدِ إِلَّا ذَاتُهُ وَأَفْعَالُهُ
இருப்பவற்றில் அல்லாஹ்வின் “தாத்”தையும், அவனின் செயல்களையும் தவிர வேறொன்றுமே இல்லை என்றும் கூறியுள்ளார்கள்.
இன்னும் இமாம் ஙஸ்ஸாலீ அவர்கள் தங்களின் “மிஷ்காதுல் அன்வார்” எனும் நூல் 280ம் பக்கத்தில்,
وَأَنَّ ذَلِكَ هُوَ اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، وَأَنَّ سَائِرَ الْأَنْوَارِمُسْتَعَارَةٌ، وَإِنَّمَا الْحَقِيْقِيُّ نُوْرُهُ فَقَطْ، وَأَنَّ الْكُلَّ نُوْرُهُ، بَلْ هُوَ الْكُلُّ، بَلْ لَا هُوِيَّةَ لِغَيْرِهِ إِلَّا بِالْمَجَازِ،
“நிச்சயமாக அவன் – அல்லாஹ் ஒருவன். அவனுக்கு இணை கிடையாது. ஏனைய ஒளிகள் எல்லாம் இரவலானவை மட்டுமே. எல்லாம் அவனின் ஒளிதான். இல்லை எல்லாம் அவனே! அவனுக்கு மட்டுமே எதார்த்தமான வுஜூத் உண்டு. மற்றவைகளுக்கு “மஜாஸ்” அடிப்படையில்தான் உள்ளமை உண்டு. பெயரளவில்தான் உள்ளமை உண்டு”
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு மேற்கண்ட இவ்விரு ஆதாரங்களையும் எழுதி இவை பற்றிச் சிந்தியுங்கள் என்றும் எழுதியிருந்தேன்.
நான் கூறும் இவ்விரு ஆதாரங்களும் பிழையானதாயின் அதை எனக்கு தெளிவாக்கி வைக்குமாறும், சரியாயின் உங்களின் “பத்வா”வை வாபஸ் பெறுங்கள் என்றும் கேட்டிருந்தேன்.
எனது பல கடிதங்களில் எந்த ஒரு கடிதத்திற்கும் இன்றுவரை பதில் கிடைக்கவில்லை.
மேற்கண்ட இரு நூல்களின் அறபு வசனங்களை எந்த ஒரு மாற்றமுமின்றி எழுதியும் அனுப்பி அவற்றை நீங்களாகவே வாசித்து நீங்களாகவே மக்களுக்கு விளக்கம் கூறுங்கள் என்றும் கூட எழுதியிருந்தேன். உலமா சபை எந்த ஒரு பதிலும் தரவில்லை. பதில் தரமால் விட்டதற்கான காரணம் பயமே தவிர வேறொன்றுமில்லை.
இவை தவிர “பத்வா” வழங்கிய முறை பிழையென்றும், நான் “வஹ்ததுல் வுஜூத்” பேசியிருக்கும் நிலையில் அதை ஹுலூல் – இத்திஹாத் என்று தவறாக விளங்கி அக்கொள்கை “குப்ர்” என்று “பத்வா” வழங்கிவிட்டு அந்த “பத்வா” எனக்கு வழங்கப்பட்டதாக என் பெயர் குறித்து வெளியிட்டது பிழை என்றும் பல தரம் சுட்டிக் காட்டி எழுதியிருந்தேன்.
இவ்வாறெல்லாம் நான் செய்தது உலமாஉகள் தமது “பத்வா” பிழையென்பதை உணர்ந்து அதை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காகவும், பிறர் அவர்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவுமேயாகும்.
ஆயினும் உலமா சபையைச் சேர்ந்த அதன் தலைவரும், “பத்வா” குழு உறுப்பினர்களும், இன்னும் சில வஹ்ஹாபீகளும் உண்மையை அறிந்திருந்தும் தமது தன்மானம் காப்பதற்காக மார்க்கத்தின் அடிப்படை மூலாதாரங்களையே தலை கீழாய்ப் புரட்டுகிறார்கள் என்றால் இதன் பிறகு அவர்களுக்கு எது சொல்லியும் ஏறாதாகையால் இவர்களுக்காக விளக்கம் கூறுவதால் பயனொன்றுமில்லை என்பதை உணர்ந்து இன்னோரை இஸ்லாம் பக்கம் – ஸூபிஸ தத்துவத்தின் பால் அழைப்பதை இதே நொடியோடு நிறுத்திக் கொண்டேன்.
خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصَارِهِمْ غِشَاوَةٌ
அந்த “முனாபிக்” நயவஞ்சகர்களின் உள்ளங்கள் மீதும், அவர்களின் கேள்விகள் மீதும் அல்லாஹ் “சீல்” குத்தி அவற்றை மூடிவிட்டான். இன்னும் அவர்களின் பார்வைகள் மீது மூடியும் போட்டுவிட்டான். (02-07)
உலமா சபையின் பொதுச் செயலாளர் அர்கம் நுராமித் என்பவர் தனது அறிக்கையில், (மேற்கூறிய வழி கெட்ட சிந்தனைக்கும், தூய ஸூபிஸ சிந்தனைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாதென்பதை உறுதியாக கூறிக் கொள்ள விரும்புகிறோம். வரலாறு நெடுகிலும் இலங்கை வாழ் முஸ்லிம்களை வழிநடாத்தி வருகின்ற பல தரீகாக்கள் எமது நாட்டில் இருக்கின்றன. அவற்றில் முன்னணித் தரீகாக்கள் உட்பட அனைத்துத் தரீகாக்களின் ஷெய்குமார்களும், கலீபாக்களும் இச் சிந்தனை இஸ்லாமுக்கு முற்றிலும் முரண்படட்டது என்பதைக் கூறியும், இச் சிந்தனையை வன்மையாக கண்டித்தும் வருவது குறிப்பிடத்தக்கதாகும்) என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரின் அறிக்கை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும். ஏனெனில் நாம் கூறிவருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” சிந்தனையை வழிகெட்ட சிந்தனை என்றும், அதற்கும், தூய ஸூபிஸ சிந்தனைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாதென்றும் கூறுகின்றார். இக்கூற்று அர்கம் நுராமித் அவர்களின் தனிப்பட்ட கருத்தேயன்றி இஸ்லாம் கூறும் கருத்தல்ல.
இவர் தனது இக் கூற்றுக்கு – “வஹ்ததுல் வுஜூத்” வழிகேடான சிந்தனை – எந்த ஓர் ஆதாரமும் கூறாமல் அது வழிகேடென்று கூற முடியாது. அவ்வாறு கூற அவர் அல்லாஹ்வையும், திருத்தூதரையும் போல் “ஷாரிஉ” மார்க்கத் தாபகரல்ல. அந்த உரிமை அவ்விருவருக்குமே உண்டு. இவருக்கு இல்லை. இவர் ஆதாரம் கொண்டு மட்டும்தான் வழிகேடு என்று சொல்ல முடியும்.
இவ்வாறு சொல்லுமிவர் தனது அறிக்கை மூலம் “தூய ஸூபிஸ சிந்தனை” என்று ஒன்றிருப்பதாகவும் ஏற்றுக் கொள்கிறார். அது எதுவென்று கூடக் கூறாமலேயே கதையை முடித்துள்ளார்.
இவர் சரியான, நியாயவாதியாயின் “வஹ்ததுல் வுஜூத்” சிந்தனை வழிகேடென்பதற்கும், தூய ஸூபிஸ சிந்தனை எதுவென்றும், அது சரியென்பதற்கும் ஆதாரங்கள் கூற வேண்டும்.
மீண்டும் பொதுச் செயலாளர், எந்த ஒரு தரீகாவும், அதன் ஷெய்குமார், வலீமாரில் எவரும் வழிகேடான “வஹ்ததுல் வுஜூத்” சிந்தனையை கூறவுமில்லை, அதற்கு ஆதரவாக இருக்கவுமில்லை என்று கூறுகின்றார்.
இவரின் இக்கூற்று பட்டப்பகலில் பத்து கிலோ வட்டக்காயை – சுரைக்காயை சோற்றுள் மறைப்பது போன்ற உண்மைக்குப் புறம்பான கூற்றேயாகும்.
ஏனெனில் தரீகாக்கள் எதுவாயினும் அதன் உயிர் அம்சம் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையேயாகும். அதே அம்சத்தையே ஷெய்குமார், கலீபாமார் அனைவரும் எழுதியும், பேசியும் வந்துள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் எமது எதிர் வரும் கட்டுரைகளில் இது தொடர்பான விபரங்கள் இடம் பெறும்.
உலமா சபைத் தலைவரும், அதன் “பத்வா” குழுவினரும் மார்க்கத்திற்கும், மனச் சாட்சிக்கும் கட்டுப்படாமல் தமது மனோ இச்சைக்கு வழிபட்டுச் செயல்படுபவர்கள் என்பதை நான் அறிந்து கொண்ட பின்னும் இவர்களுக்கு மணப் பெண்ணின் முகக் கவசம் திறந்து அவளின் திரு முகத்தைக் காட்ட விரும்பவில்லையாதலால் இதன் பிறகு நான் எழுதும் எந்தவொரு கட்டுரையாயினும் உலமா சபையின் தலைவர், “பத்வா” குழவினர் தவிர உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களினதும் எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டதாகவே இருக்கும்.
“பத்வா” உடன் தொடர்புள்ள உலமா சபையைச் சேர்ந்தவர்களை அன்போடு அழைத்துப் பார்த்தேன். ஆதாரங்கள் கூறியும் விளக்கிப் பார்த்தேன். எந்தவொரு முயற்சியும் பயனளிக்கவில்லை.
நபீமாரில் ஒருவரான நபீ நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனமொடிந்து அல்லாஹ்விடம் முறையிட்டது போல் நானும் முறையிடுகிறேன்.
قَالَ رَبِّ إِنِّي دَعَوْتُ قَوْمِي لَيْلًا وَنَهَارًا، فَلَمْ يَزِدْهُمْ دُعَائِي إِلَّا فِرَارًا،
எனது சமுகத்தை இராப் பகலாய் அயராது அழைத்தேன். என் அழைப்பு அவர்களை என்னை விட்டும் தூரமாக்கியதேயன்றி அவர்களை என் பக்கம் நெருக்கமாக்கவில்லை. என்னைக் கண்டு அவர்கள் ஓடினார்களேயன்றி என்னை நெருங்கவில்லை.
நான் கூறும் “வஹ்ததுல் வுஜூத்” இறையியல் தொடர்பான கட்டுரைகள் தொடர்ந்து வெளிவரும். இன்ஷா அல்லாஹ்! முதற் கட்டுரை “தஸவ்வுப் – ஸூபிஸம்” என்ற தலைப்பில் இடம் பெறும்.