Sunday, October 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இஸ்லாமிய வரலாற்றில் போலி மார்க்க அறிஞர்களால் கொல்லப்பட்டும், நாடு கடத்தப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் மேஞ்சுவனம் சென்ற ஸூபீ...

இஸ்லாமிய வரலாற்றில் போலி மார்க்க அறிஞர்களால் கொல்லப்பட்டும், நாடு கடத்தப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் மேஞ்சுவனம் சென்ற ஸூபீ மகான்கள்.

தொடர்: 03

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

وأخرجوا يوسفَ بنَ الحسين الرازي وقام عليه زُهَّادُ الرَّيِّ وصُوفِيُوها، وأخرجوا أبا عثمان المَغْرِبِي مِن مكّة مع كثرة مجاهدتِه وتَمام علمِه وحالِه، وضربوه ضربا مُبَرَّحًا، وطافوا به على جملٍ، فأقام ببَغدادَ إلى أن مات بها، وشهِدُوا على الشِّبلي بالكفر مِرارا مع تمام علمه وكثرةِ مُجاهداتِه، وأدخلَهُ أصحابُه البِيمارستان، ليرجع النّاس عنه مُدَّةً طويلة، وأخرجوا الإمام أبا بكر النّابلسـي مع فضلِه وكثرةِ علمه واستِقامتِه فى طريقتِه من الغرب إلى مصـر، وشهدوا عليه بالزَّنْدَقَةِ عند سلطان مصر، فأمرَ بسَلخِهِ مَنكوسا، فصار يقرأ القرآن وهم يسلخُونَه بتدبُّرٍ وخُشُوعٍ حتّى قطع قلوب النّاس، وكادوا أن يفتتنوا به، وكذلك سَلَخُوا النَّسِيْمِي بِحَلَبَ، وعملوا له حيلة حين كان يقطَعُهُم بالحُجَجِ، وذلك أنّهم كتبوا سورة الإخلاص وأرشوا مَن يَخِيْطُ النِّعال، وقالوا هذه ورَقَة محبّة وقبول، فضَعْهَا لنا فى أطباق النَّعل، ثمّ أخذوا ذلك النَّعل، وأَهْدَوْه للشّيخ من طريق بعيدة، فلبِسَه وهو لا يشعر، ثمّ طلعُوا لنائب حَلَبَ، وقالوا له بَلَغَنَا من طريق صحيحة أنّ النَّسِيميَّ كَتَبَ قل هو الله أحد وجعلها فى طِباقِ نَعلِه، وإن لمْ تُصدِّقْ فأرسِلْ ورائَهُ وانظُرْ ذلك، ففعل فاسْتَخْرَجُوْا الورقةَ، فسلَّمَ الشّيخُ لله تعالى ولم يُجِبْ عن نفسه، وعلِمَ أنّه لا بُدَّ أن يُقتلَ على تلك الصورة،

وأخبرني بعضُ تلامذةِِ تلامِذَتِه أنّه صار يُنشِدُ مُوَشَّحَات فى التّوحيد وهم يَسلخونه حتّى عمِلَ خمسمأة بيتٍ، وكان ينظر إلى الّذي يسلخُه ويتبسَّمُ،

யூஸுப் இப்னு ஹுஸைன் அல்றாஸீ அவர்களை ஊரை விட்டும் வெளியேற்றினார்கள். இதேபோல் அபூ உத்மான் அல்மக்ரிபீ அவர்களை திரு மக்கா நகரை விட்டும் வெளியேற்றினார்கள். அவர்கள் கடுமையாக வணக்கம் செய்பவராகவும், அறிவு ஞானமுள்ளவராகவும் இருந்தும் கூட அவர்களுக்கும் அவ்வாறு செய்து அவர்களை கடுமையாக அடித்தும், வேதனை செய்தும் ஓர் ஒட்டகத்தின் மீது அவர்களை ஏற்றி ஊரெல்லாம் சுற்றினார்கள். இறுதியில் அவர்கள் “பக்தாத்” நகரில் விடப்பட்டு மரணிக்கும் வரை அங்கேயே தங்கியிருந்தார்கள்.

இவ்வாறுதான் அபூ பக்ர் ஷிப்லீ என்ற ஞான மகானுக்கும் வேதனை செய்தார்கள். அவர்கள் கடுமையான வணக்கமுள்ளவர்களாகவும், அறிவுள்ளவர்களாகவும் இருந்தும் கூட அவர்களைத் துன்புறுத்தினார்கள். இதனால் இறைஞானி ஷிப்லீ அவர்களின் சிஷ்யர்கள் அவர்களை மருத்துவமனையொன்றில் சிறிது காலம் மறைத்து வைத்தார்கள்.

இவ்வாறுதான் இமாம் அபூ பக்ர் அந்நாபலஸீ எனும் இறைஞானிக்கும் வேதனை செய்தார்கள். அவர்கள் மாபெரும் அறிவாளியாகவும், ஆன்மிக நிலையில் உயர் நிலை அடைந்தவர்களாகவும் இருந்தும் கூட அவர்களையும் மொறோக்கோவிலிருந்து மிஸ்ர் நாட்டுக்கு நாடு கடத்தினார்கள். அதோடு அவர்கள் துன்புறுத்துவதை நிறுத்திக் கொள்ளவில்லை. மிஸ்ர் நாட்டின் அரசனிடம் அவர் “சிந்தீக்” என்றும் சாட்சி சொல்லி அவர்களைக் கொலைக்குட்படுத்தினார்கள். அவர்களைத் தலை கீழாய்க் கட்டித் தொங்கவிட்டு அவரின் தோலுரித்து கொலை செய்யுமாறு அரசன் கட்டளையிட்டான். அவ்வாறே செய்யப்பட்டார்கள். அவர்களின் உயிர் பிரியும் வரை திருக்குர்ஆனை பக்தியோடும், சிந்தனையோடும் ஓதிக் கொண்டே இருந்து மரணித்தார்கள். இவர்கள் தலை கீழாய் தொங்கவிடப்பட்டு தோலுரிக்கப்பட்டும் அழாமலும், வேதனைப்படாமலும் இருந்தது கண்டு வியந்த மக்கள் அவரை நம்பினார்கள்.

இவ்வாறுதான் “ஹலப்” எனும் பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருந்த உலகப் பிரசித்தி பெற்ற இறைஞானி நஸீமீ றஹிமஹுல்லாஹ் அவர்களையும் கொன்றார்கள். நஸீமீ அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை மக்கள் மத்தியில் பகிரங்கமாகப் பேசியதோடு அவர்களை எதிர்த்தவர்களுக்கு உரிய பதிலடி கொடுத்தும் வந்ததால் அவர்கள் மீது பொறாமை கொண்ட ஒன்றுக்கும் உதவாத முல்லாக்கள் – அன்று வாழ்ந்த கொலை காரக் கும்பல்கள் மூலம் நஸீமீ அவர்களையும் கொன்றொழிக்கத் திட்டமிட்டார்கள். அவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தில் மிகத் திறமையுள்ளவர்களாயிருந்ததால் அவர்களுடன் யார் பேசியும் கூட அவர்களைத் தோற்கடிக்க முடியாதிருந்ததால் அவர்களை ஒழித்துக் கட்ட வேண்டுமென்றே பொறாமைக் கார முல்லாக்கள் முடிவு செய்தார்கள்.

நஸீமீ அவர்களுக்கு “ஹலப்” பிரதேசத்தில் மக்களின் செல்வாக்கு அதிகமாயிருந்ததால் அவர்களை அங்கேயே கொலை செய்யாமல் மிகவும் தந்திரமாகவே கொலை செய்ய வேண்டியதாயிருந்தது.

போலி முல்லாக்களும், பொறாமைக் காரர்களும் பல இரகசியக் கூட்டங்கள் நடத்தி ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஏனெனில் “ஹலப்” பிரதேசத்தைப் பொறுத்தவரை நஸீமீ அவர்களுக்கு ஆதரவாளர்கள் அதிகமாயிருந்ததால் கொலை செய்வதற்கு காரணமாயிருந்தவர்கள் அல்லது கொலை செய்தவர்கள் தெரிய வந்தால் அவர்கள் தப்ப முடியாதென்பது அவர்களுக்கே தெரியுமாதலால் எவருக்கும் தெரியாமல் அவர்களைக் கொல்வதற்குப் பின்வருமாறு முடிவு செய்தார்கள்.

அதாவது திருக்குர்ஆனின் “ஸூறதுல் இக்லாஸ்” குல்ஹுவல்லாஹ் அத்தியாயத்தை ஒரு தாளில் எழுதி, ஒரு புதிய செருப்பின் அடிப்பக்கம் அதை மறைத்து வைத்து நஸீமீ அவர்களுக்கு அறிமுகமில்லாதவர் மூலம் அதை அன்பளிப்புச் செய்வதென்று முடிவு செய்தார்கள். செய்த முடிவின்படி செயல்பட்டார்கள்.

மகான் நஸீமீ அவர்களுக்கு அறிமுகமில்லாத ஒருவர் மூலம் அது அவர்களுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

செம்மானிடம் – செருப்புத் தைக்கின்றவனிடம் புதிய செருப்பையும், “இக்லாஸ்” அத்தியாயம் எழுதப்பட்ட தாளையும் கொடுத்து இவ்வாறு செய்து தர வேண்டுமென்று சொல்லப்பட்ட போது அவன் எதற்காக இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டான். அதற்கவர்கள், ஓர் ஊரில் பெரிய மனிதர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு இதை அன்பளிப்புச் செய்தால் அவர் இதன் அருளால் எங்களை நேசிப்பார். எங்களுக்கு உதவியும் செய்வார் என்று சொன்னார்கள். செம்மான் அவர்கள் சொன்னவாறு செய்து கொடுத்தான். அவனுக்கு அறிமுகமில்லாத ஒருவர் மூலம் அவனிடமிருந்து அதைப் பெற்று அதேபோல் அறிமுகமில்லாத ஒருவர் மூலம் மகான் நஸீமீ அவர்களுக்கு அன்பளிப்புச் செய்துவிட்டு “ஹலப்” பிரதேசத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த ஆட்சியாளனுக்கு பின்வருமாறு அறிவித்தார்கள்.

(இவ்வூரிலுள்ள நஸீமீ என்பவர் “வஹ்ததுல் வுஜூத்” பேசுகிறார். மக்களை வழி கெடுக்கிறார். இப்போது திருக்குர்ஆனை அவமதிப்பதற்காக “குல்ஹுவல்லாஹ்” அத்தியாயத்தை தாளில் எழுதி அதை தனது செருப்பின் அடிப்பாகத்தில் வைத்து அதை அணிந்துள்ளார்) என்று இரகசிய தகவல் கொடுத்தார்கள்.

ஸுல்தான் – ஆட்சியாளன் நஸீமீ அவர்களைச் சோதிப்பதற்காக உளவாளிகளை அவரிடம் அனுப்பி வைத்தான். உள்வாளிகள் நஸீமீ அவர்களை சோதித்து செருப்பின் கீழிருந்த திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்ட தாளோடும், செருப்போடும் அவரைக் கைது செய்து ஆட்சியாளரிடம் ஒப்படைத்தார்கள்.

ஆட்சியாளர் அவரின் தோலுரித்து அவரைக் கொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டான்.

மகான் நஸீமீ அவர்கள் கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். மக்கள் கடல் போல் கொந்தளிக்கின்றனர். ஆனால் அவரோ புன்னகைப்போடு கொலைக் களத்தில் கால் பதித்து அங்கு வைக்கப்பட்டிருந்த வாள், கத்தி, ஆணி, கயிறு போன்றவற்றைக் கண்டு சிரித்தார்கள். அங்கு கூடி நின்ற இலட்சக் கணக்கான மக்கள் வியந்து “ஸுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்” என்று முழங்கிய ஒலி விண்ணையும் அதிர வைத்தது. வாளுடன் வந்தான் கொல்வதற்கு நியமிக்கப்பட்டவன். உறையிலிருந்து உருவினான் வாளை. நஸீமீ தன்னைச் சமாளிக்க முடியாத அளவு சிரித்து மகிழ்ந்தார்கள்.

பின்னர் அவர்கள் தலை கீழாய் தொங்கவிடப்பட்டு தோலுரிக்கப்பட்டார்கள். தோலுரிக்கத் தொடங்கிய நேரம் இறை காதல் கவி பாடத் தொடங்கிய நஸீமீ தோலுரித்து முடிய 500 காதல் கவிகள் பாடி முடித்தார்கள்.

நஸீமீ அவர்கள் நினைத்திருந்தால் தங்களின் ஆன்மிக வல்லமை மூலம் – “விலாயத்” ஒலித்தன சக்தி கொண்டு கொலையிலிருந்து தப்பியிருக்க அவர்களால் முடியுமாயினும் அவர்கள் தங்களின் அதியுயர் அந்தஸ்த்து கருதி அதை விரும்பவில்லை. தனது “மஹ்பூப்” ஆன அல்லாஹ் எதை விரும்புகிறானோ அது நடக்கட்டும் என்று இறை செயலைப் பொருந்திக் கொண்டார்கள். “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்”

தொடரும்….

RELATED ARTICLES

Most Popular

Recent Comments