தொடர்: 04
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
رمَوا الشّيخ أبا مدين المغربي بالزّندقة وأخرجوه من بَجايةَ إلى تلمسان، فمات بها،وكذلك أخرجوا الشّيخ أبا الحسن الشّاذلي من الغرب إلى مصـر، وشهدوا عليه بالزّندقة، وسلّمه الله من كيدهم،ورموا الشّيخ عزَّ الدّين بنَ عبد السّلام بالكُفر وعَقَدوا له مجلسا فى كلمة قالها فى عقيدتِه وحرشوا السلطان عليه، ثمّ حصل له اللُّطف، ذكره ابن أيمَن فى رسالته، ورموا الشّيخ تاج الدين السّبكي بالكفر وشهدوا عليه إنّه يقول بإباحة الخمر واللِّواط، وأنّه يَلْبَسُ فى اللّيل الغِيَار والزُّنَّارَ، وأتوا به مغلولا مقيّدا، من الشّام إلى مصـر، وخرج الشّيخ جمال الدّين الأسنوي فَتَلَقَّاهُ من الطّريق وحكم بِحِقْنِ دمه، وأنكروا على سيّدي إبراهيم الجعبري وسيّدي حسين الجاكي، ومنعوهما أن يجلسا على كرسيّ الوعظ، وغير ذلك،
உலகப் பிரசித்தி பெற்ற ஸூபீ மகான்களில் ஒருவரான அல்குத்பு ஷுஐப் அபூ மத்யன் அல் மக்ரிபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் போலி முல்லாக்களாலும், பொறாமைக் காரர்களாலும் “சிந்தீக்” என்று “பத்வா” வழங்கப்பட்டு அவர்களின் “பஜாயா” என்ற ஊரிலிருந்து “திலம்ஸான்” என்ற ஊருக்கு நாடு கடத்தப்பட்ட போது வழியில் “தாறுல் பனா”வை விட்டும் “தாறுல் பகா”வுக்குச் சென்றார்கள்.
“சிந்தீக்” என்ற சொல் பற்றிய விபரம் முன்னர் எழுதப்பட்டுள்ளது. அறிய வாய்ப்பில்லாது போனவர்களுக்காக மீண்டும் ஒரு முறை எழுதுகிறேன்.
இச் சொல் பாரசீக மொழிச் சொல்லாகும். இதன் அடிப்படை “சன் – தீன்” என்றிருக்கும். இதன் சுருக்கமான பொருள்
اَلذي يُضْمِرُ الْكُفْرَ وَيُظْهِرُ الْإِيْمَانَ
“சிந்தீக்” என்பவன் “குப்ர்” எனும் நிராகரிப்பை மனதுள் மறைத்துக் கொண்டு “ஈமான்” எனும் விசுவாசத்தை வெளிப்படுத்துபவனாவான். சுருங்கச் சொன்னால் “முனாபிக்” எனலாம்.
மகான் அபூ மத்யன் அவர்கள் பற்றி இன்னுமோர் இடத்தில் விரிவாக எழுதுவோம். இன்ஷா அல்லாஹ்!
இவ்வாறே, உலகப் பிரசித்தி பெற்ற ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் அலீ ஷாதுலீ நாயகம் றஹிமஹுல்லாஹ் அவர்களையும் மொறோக்கோ நாட்டிலிருந்து “மிஸ்ர்” நாட்டுக்கு நாடு கடத்தினார்கள். அது மட்டுமல்ல அவர்களுக்கு “சிந்தீக்” என்று “பத்வா”வும் வழங்கினார்கள். எனினும் அல்லாஹ் அவர்களின் சூட்சியிலிருந்து அவர்களைக் காப்பாற்றிவிட்டான். அவர்களின் வரலாறும் விரிவாக எழுதப்பட வேண்டியதாகும். இன்னோர் இடத்தில் எழுதுவோம். இன்ஷா அல்லாஹ்!
மேலும் உலகப் பிரசித்தி பெற்ற பேரறிஞர், சகல கலா வல்லவர், இப்னு அறபீ நாயகம் அவர்களின் காலத்தவரும், அவர்களை தற்கால “குத்பு” என்று தனது பணியாளிடம் சொன்னவருமான இமாம் இஸ்ஸுத்தீன் இப்னு அப்திஸ் ஸலாம் அவர்களையும் இந்தக் கொலை காரக் கும்பல் விட்டு வைக்கவில்லை. இவர்களுக்கும் “முர்தத்” பத்வா வழங்கி, இவர்கள் கொள்கை தொடர்பாகக் கூறிய ஒரு சொல்லை ஆராய்வதற்காக ஏற்பாடும் செய்து இறுதியில் அரசனிடம் இவர்களின் விவகாரம் முன்வைக்கப்பட்டு அரசனால் மன்னிக்கப்பட்டு கொலையிலிருந்து தப்பிக் கொண்டார்கள். இவர்களின் வரலாறும் மிக விரிவாக எழுதப்பட வேண்டியதாகும். இவர்களும் பகிரங்கமாக “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் பேசியும், எழுதியும் வந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும். பிறிதோர் இடத்தில் இவர்களின் வரலாறு இடம் பெறும். இன்ஷா அல்லாஹ்!
இன்னுமிது போல் சட்ட மேதை இமாம் தாஜுத்தீன் அஸ்ஸுப்கீ றஹிமஹுல்லாஹ் அவர்களுக்கும் “முர்தத்” என்று பத்வா வழங்கியது மட்டுமன்றி அவர்கள் மதுபானம் – போதைப் பொருள் பாவிப்பது ஆகுமென்றும், ஆண்களின் தன்னினச் சேர்க்கை ஆகுமென்றும் சொல்வதாகவும் பொய்யான கதை பரப்பி அவர்களின் நாட்டில் அவர்களுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தினார்கள். அது மட்டுமன்றி அவர்கள் இரவு நேரத்தில் கழுத்தில் பூ நூல் போடுவதாகவும், யூதர்கள் போல் உடை அணிவதாகவும் வதந்திகளையும், கட்டுக் கதைகளையும் பரப்பி அவர்களின் கை, கால்களுக்கு விலங்கிட்டு அவர்களைக் கொலை செய்வதற்காக சிரியா நாட்டிலிருந்து “மிஸ்ர்” நாட்டுக்கு கொண்டு வந்தார்கள். வரும் வழியில் இமாம் ஜலாலுத்தீன் அல் அஸ்னவீ எதிர்பாராமல் சந்தித்து அவர்கள் கொலை செய்யப்படாமல் பாதுகாத்தார்கள்.
இன்னும் இமாம்களான அஸ் ஸெய்யித் இப்றாஹீம் அல் ஜஃபரீ, அஸ் ஸெய்யித் ஹுஸைன் அல் ஜாகீ ஆகியோரை பேசவே கூடாதென்று தடை செய்தார்கள்.
இறைஞானிகளுக்கும், ஸூபீ மகான்களுக்கும் போலி உலமாஉகளாலும், பொறாமைக் காரர்களாலும் நடந்த அநீதிகளை எழுதிய இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் நூலில் இவர்களின் வரலாறுகளை எழுதியதற்கான காரணத்தை இறுதியாக எழுதி முடித்துள்ளார்கள்.
காரணம்:
முன்னோர்களில் ஸூபீ மகான்களுக்கு எதிரிகளும், போலி முல்லாக்களும் செய்த கொடுமைகளை, அநீதிகளை, அட்டூழியங்களை அறிந்த ஒருவன் ஸூபிஸ வழியிற் சென்றால் தனக்கும் அத்தகைய கொடுமைகள் நடக்கலாமென்று பயந்து ஸூபிஸத்தை விட்டும் அவன் தூரமாகி, ஓரமாகி விடாமல் மேற்கண்ட மகான்களுக்கே அத்தகைய கொடுமைகள் நடந்துள்ளதென்றால் நாம் எம்மாத்திரம் என்றும், அவர்களுக்கே அவ்வாறு நடந்திருக்கும் போது நாமேன் ஒதுங்கி விடவேண்டும் என்றும் சிந்தித்து மன நிம்மதி பெறுவதற்கேயாகும்.
இக்காரணம் நியாயமானதாகும். ஏனெனில் போலிகளாலும், பொறாமைக் காரர்களாலும் முன்னோர்களான ஸூபீ மகான்களுக்கு இளைக்கப்பட்ட கொடுமைகளை நினைத்து நம்மில் எவரும் ஸூபிஸத்தை விட்டும் தூரமாகி விடாமல் நாம் துணிவோடும், நியாயத்தோடும் ஸூபிஸக் கொள்கை சரிதான் என்பதை நிறுவுவதற்கு களத்தில் இறங்கிச் செயற்படச் சக்தியுள்ளவர்கள் இறங்கிச் செயற்பட வேண்டும் என்றும், ஒத்துழைப்பு வழங்கச் சக்தியுள்ளவர்கள் அந்த வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றேன்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 1979ம் ஆண்டு “வஹ்ததுல் வுஜூத்” பேசிய எனக்கும், அதை ஏற்றுக் கொண்ட பல இலட்சம் மக்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று ஒரு “பத்வா” வெளியிட்டு அதை சுமார் 42 ஆண்டுகளாக அமுல் படுத்துகிறது.
அவர்கள் தமது “பத்வா” பிரசுரத்தில் “ஹுலூல் – இத்திஹாத்” என்ற கொள்கை பிழையென்று கூறி அதற்கான ஆதாரங்களையும் எழுதியுள்ளார்களேயன்றி “வஹ்ததுல் வுஜூத்” பிழை என்பதற்கான எந்த ஒரு ஆதாரம் கூட கூறவில்லை. அது மட்டுமல்ல. அவர்களின் அறபு “பத்வா”வில் ஓர் இடத்தில் கூட “வஹ்ததுல் வுஜூத்” என்ற சொல்லைக் கூட அவர்கள் குறிப்பிடவில்லை.
எனது பெயரையும் அறபு “பத்வா”வின் ஓர் இடத்தில் கூட குறிப்பிடவில்லை.
அறபு “பத்வா”வில் குறிப்பிடாதவற்றை அதன் தமிழாக்கத்தில் குறிப்பிட்டு “ஹுலூல் – இத்திஹாத்” பேசாத எனது பெயரை தமிழாக்கத்தில் மட்டும் குறிப்பிட்டுள்ளார்கள். நான் “ஹுலூல் – இத்திஹாத்” பேசியிருந்தால் மட்டும்தான் எனது பெயரை அவர்கள் அதில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
நானோ “வஹ்ததுல் வுஜூத்” பேசியிருக்கும் நிலையில் எனது பேச்சு பிழையென்பதற்கான ஆதாரங்கள் கூறாமல் “ஹுலூல் – இத்திஹாத்” என்ற கொள்கை பிழையென்பதற்கான ஆதாரங்களை மட்டும் கூறிவிட்டு “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை பேசிய எனது பெயரை அந்த “பத்வா”வின் தமிழாக்கத்தில் குறிப்பிட்டிருப்பது எந்த வகையில் நியாயமென்று அறிஞர்கள் சிந்தனை செய்தும், ஆய்வு செய்தும் பார்க்க வேண்டும்.
இவர்களின் இச் செயல் எது போன்றதெனில், நான் ஆட்டிறைச்சி சாப்பிடுவது ஆகுமென்று பேசியிருக்கும் நிலையில் பன்றி இறைச்சி சாப்பிடக் கூடாதென்பதற்கான ஆதாரங்களைக் கூறி றஊப் மௌலவீ பன்றி இறைச்சி சாப்பிடலாமென்று கூறுகிறார் என்று சொன்னது போன்றதாகும். இப்படியும் ஓர் அறியாமையா? ஸுப்ஹானல்லாஹ்!
இவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” பிழையென்பதற்கான ஆதாரங்களைக் குறிப்பிட்டு றஊப் மௌலவீ “வஹ்ததுல் வுஜூத்” பேசுகிறார். இது பிழையென்று “பத்வா” வழங்கியிருந்தால் அது நியாயமானதாகும்.
நானோ “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கைக்கு எதிராக அது பிழையென்று சுமார் 50 ஆண்டுகளாகப் பேசி வருபவன் என்பது சிறு பிள்ளைகள் கூட அறிந்த விடயமாயிருக்கும் நிலையில் உலமா சபை இவ்வாறு “பத்வா” வழங்கியிருப்பதை அறியாமை என்று சொல்லாமல் முட்டாள் தனமென்று அல்லது விளக்கமற்ற குழப்பம் என்றே சொல்ல வேண்டும்.
1979ம் ஆண்டு “பத்வா” வழங்கிய காலப்பகுதியில் “பத்வா” வழங்கிய முல்லா மகான்களுக்கு “ஹுலூல் இத்திஹாத்” கொள்கை பிழையென்று தெரிந்திருந்ததேயன்றி “வஹ்ததுல் வுஜூத்” என்றால் என்னவென்று கூடத் தெரிந்திருக்கவில்லை. இதனால்தான் “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கையை “வஹ்ததுல் வுஜூத்” என்று புரிந்து “பத்வா” வழங்கிவிட்டார்கள் போலும். “வஹ்ததுல் வுஜூத்” என்பதே அவர்களுக்குத் தெரியாமலிருக்கும் நிலையில் இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் எவ்வாறு தெரிந்திருக்கப் போகிறது?
“பத்வா” வழங்கிய முல்லாக்களே! நீங்கள் தற்போது “பத்வா”வில் தவறு செய்யவில்லை என்றும், நீங்கள் கொடுத்த “பத்வா” சரியானதே என்றும் பொது மக்கள் மத்தியில் கூறி உங்களின் “பத்வா”வுக்கு ஆதரவு தேடுவதாயின் அந்த “பத்வா”வைக் காட்டி அதில்தான் கையெழுத்து எடுக்க வேண்டும். இதுவே சரியான, நியாயமான நடைமுறையாகும்.
நீங்கள் இவ்வாறு செய்யாமல் கையெழுத்துக்கென்று புதிய பாணியில் அவசர அவசரமாக ஒரு பிரசுரம் தயாரித்து அதையே உலமாஉகளிடம் காட்டி கையெழுத்து எடுத்துள்ளீர்கள். எடுத்துக் கொண்டுமிருக்கிறீர்கள். இதை பொது மக்கள் நம்ப வேண்டுமென்பதற்காக உங்களின் புதிய பாணிப் பிரசுரத்தையும் இங்கு பதிவிடுகிறேன். இதெல்லாம் உங்களின் தில்லு முல்லேதான். தில்லுமுல்லுச் செய்வதும், பொய் சொல்வதும், சூழலுக்கும், சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறு மாறுவதும், கதையை மாற்றுவதும் உங்களின் தொட்டில் பழக்கம் போலாகிவிட்டது.
தொடரும்…