Saturday, October 12, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இஸ்லாமிய வரலாற்றில் போலி மார்க்க அறிஞர்களால் கொல்லப்பட்டும், நாடு கடத்தப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் மேஞ்சுவனம் சென்ற ஸூபீ...

இஸ்லாமிய வரலாற்றில் போலி மார்க்க அறிஞர்களால் கொல்லப்பட்டும், நாடு கடத்தப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் மேஞ்சுவனம் சென்ற ஸூபீ மகான்கள்.

தொடர்: 05

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

மேற்கண்ட தலைப்பில் கடந்த பதிவுகளின் போது 30க்கும் மேற்பட்ட ஸூபீ மகான்கள் பற்றி எழுதினேன். இன்னும் பலரின் பெயர்களைக் குறிப்பிட வேண்டும். இன்ஷ் அல்லாஹ்! அது பற்றி சிறிய நூலொன்று எழுதுவதே பொருத்தம். அல்லாஹ் விரும்பி நாடினால் எழுதுவோம்.

ஸூபீகளிற் சிலர் கொலை செய்யப்படாமல் பல்வேறு துன்பங்களைச் சுமந்து மரணித்துள்ளார்கள். அவர்களில் ஒருவர்தான் “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவத்தை – இறையியலை – எழுதியும், பேசியும் பகிரங்கப்படுத்திய அஷ்ஷெய்குல் அக்பர், வல் மிஸ்குல் அத்பர், அல்கிப்ரீதுல் அஹ்மர், அந்நூறுல் அப்ஹர், அல்அல்மஇய்யுல் அஷ்ஹர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள்.

இவர்கள் மற்றவர்களை விட தெளிவாகவும், பகிரங்கமாகவும், ஆழமாகவும், அதிகமாகவும் பேசிய ஒருவராயிருந்தும் கூட எதிரிகளின் பிடியிலிருந்து தப்பிய ஒருவர் இவர்கள் என்றால் அது மிகையாகாது.

ஒவ்வொரு மகானும் தனது தகுதிக்கேற்றவாறு அற்புதங்கள் வெளிப்படுத்துவார்கள். சிலரின் அற்புதம் வேறு சிலரின் அற்புதங்களை விட விஷேடமானதாகவும் இருக்கும்.

இப்னு அறபீ அவர்களின் அற்புதங்களில் நான்கு அற்புதங்களை மட்டும் இங்கு சுட்டிக் காட்டுகிறேன்.

ஒன்று: இவர்கள் திரு மக்கா நகரில் தங்கியிருந்த காலத்தில் ஒரு நூல் எழுதினார்கள். அதன் பெயர் “அல் புதூஹாதுல் மக்கிய்யா” ஆகும். இந்நூல் 1042 பக்கங்கள் கொண்ட 03 வால்யூம்கள் ஆகும். (தற்கால அச்சு)

இந்நூலை எழுதுவதற்கு அவர்கள் ஆதாரமாக எடுத்த உசாத் துணை நூல் “இல்ஹாம்” ஒன்று மட்டும்தான். வேறெந்த நூலையும் அவர்கள் தொட்டுக் கூடப் பார்த்ததில்லை. இது தொடர்பாக அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

وقال أيضا فى الكلام على الأذان من الفتوحات اعْلَمْ أنِّيْ لَمْ اُقَرِّرْ بحمد الله تعالى فى كتابي هذا ولا غَيْرِه قَطُّ، اَمْرًا غَيْرَ مَشْرُوْعٍ وما خرجتُ عن الكتاب والسنّة فى شيئٍ من تَصَانِيْفِيْ،

وقال فى الباب السادس والستّين وثلاثمأة، جميعُ ما أكتُبه فى تصانيفي ليس هو عن فِكرٍ ولا رويّةٍ، وإنّما هو عن نَفثٍ فى رَوعي من ملَكِ الإلهام،

وقال فى الباب السّابع والستّين وثلاثمأة ليس عندي بحمد الله تقليدٌ لأحدٍ غيرِ رسول الله صلّى الله عليه وسلّم، فعُلومُنا كلّها محفوظةٌ من الخطأ،

وقال فى الباب العاشر من الفتوحات نحن بحمد الله لا تعتَمد فى جميع ما نقوله إلّا على ما يُلقيه اللهُ تعالى فى قلوبنا لَا على ما تحتَمِلُه الألفاظُ،

وقال فى الباب السابع والأربعين ومأتين منها جميعُ علومنا من علوم الذّوق، لا من العلم بلا ذوقٍ، فإنّ علوم الذّوق لا تكون إلّا عن تجلٍّ إلهيٍّ، والعلم قد يحصُلُ لنا بنَقْل المُخبِر الصادق وبالنّظر الصحيح،

وقال فى الباب التاسع والثمانين منها، والباب الثامن والأربعين وثلاثمأة، اعلم أن ترتيب أبواب الفتوحات لم يكن عن اختيارٍ منِّي ولا عن نظر فكري، وإنّما الحقّ تعالى يُملي لنا على لسانِ مَلَكِ الإلهام جميعَ ما نسطرُه، وقد نذكر كلاما بين كلامين لا تعلُّقَ له بما قبله ولا بما بعده، كما قال تعالى حافظوا على الصلوات والصلاة الوُسطى بين آيات طَلاقٍ ونِكاح وعِدَّةٍ ووفاةٍ، تَتَقدّمها وتتأخّر عنها،

மேற்கூறப்பட்ட ஒழுங்கின்படி தமிழாக்கம் செய்கிறேன்.

“புதூஹாத்” – “அதான்” உடைய பாடத்தில் பின்வருமாறு இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள். (நான் என்னுடைய நூல்களில் “ஷரீஆ”வுக்கு முரணான எதையும் எழுதவில்லை. எனது ஆக்கங்கள் எதிலும் திருக்குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் முரணான எதையும் நான் எழுதவில்லை)

மேலும் குறித்த நூல் 366ம் பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். (எனது ஆக்கங்களில் நான் எழுதும் அனைத்தும் எனது கற்பனையோ, எனது சொந்தக் கருத்துக்களோ அல்ல. அவையாவும் “மலகுல் இல்ஹாம்” “இல்ஹாம்” எனும் அறிவுக்குப் பொறுப்பான அமரர் மூலம் எனக்கு கிடைப்பவையேயாகும்.

மேலும் இப்னு அறபீ அவர்கள் தங்களின் “அல்புதூஹாதுல் மக்கிய்யா” 367ம் பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

(அல்லாஹ்வின் அருளால் நான் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தவிர வேறெவரையும் பின்பற்றுவதில்லை. ஆகையால் நாங்கள் பேசுகின்ற, எழுதுகின்ற எல்லா அறிவுகளும் தவறிலிருந்து பாதுகாக்கப்பட்டவையேயாகும்)

மேலுமவர்கள் “புதூஹாதுல் மக்கிய்யா” 10ம் பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

(அல்லாஹ்வின் அருளால் எங்களின் உள்ளங்களில் அல்லாஹ் ஏற்படுத்துகின்றவை தவிர வேறெதையும் நாங்கள் நம்புவதில்லை. சொற்கள், வசனங்கள் தரும் கருத்துக்களை நாங்கள் நம்புவதில்லை)

மேலுமவர்கள் அதே நூல் 247ம் பாடத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

(எங்களின் அறிவுகள் அனைத்தும் நாங்கள் அனுபவித்தவையாகும். அனுபவிக்காத வெறும் அறிவை நாங்கள் சொல்வதில்லை. ஏனெனில் அனுபவ அறிவுகள் அல்லாஹ்வின் “தஜல்லீ” வெளிப்பாட்டில் உள்ளவையாகவே இருக்கும். அறிவானது சில வேளை உண்மையான அறிவிப்பாளர் மூலமும் கிடைக்கும். சில நேரம் எங்களின் ஆய்வின் மூலமும் கிடைக்கும்)

மேலுமவர்கள் அதே நூல் 89ம் பாடத்திலும், 348ம் பாடத்திலும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

(நீ அறிந்து கொள். புதூஹாதுல் மக்கிய்யா எனும் எனது நூலில் பாடங்கள் ஒழுங்கு செய்தது எனது விருப்பத்தின்படியல்ல. அது எனது ஆய்வுமல்ல. எனது அபிப்பிராயமுமல்ல. எனினும் அல்லாஹ் “இல்ஹாம்” எனும் அறிவுக்குரிய அமரர் மூலம் எங்களுக்கு வசனம் சொல்லித் தருகிறான். நாங்கள் எழுதுகிறோம். எமது எழுத்துக்கள் சொல்வதெழுதலேயாகும். இதனால் சில சமயம் இரு பேச்சுக்களுக்கிடையில் அப்பேச்சின் முன் தொடருடன் அல்லது பின் தொடருடன் தொடர்பில்லாத பேச்சையும் கூறிவிடுவோம். அல்லாஹ்வும் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறியுள்ளான். அதாவது இரண்டு பேச்சுக்களுக்கிடையில் அப்பேச்சுகளோடு தொடர்பில்லாத வேறொரு பேச்சைக் கூறியுள்ளான். உதாரணமாக

حَافِظُوْا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى
தொழுகைகள் மீதும், நடுத் தொழுகை மீதும் பேணுதலாக இருந்து கொள்ளுங்கள் என்ற திரு வசனத்தை “தலாக்” – விவாகரத்து, “நிகாஹ்” – திருமணம் தொடர்பான திரு வசனங்களுக்கிடையிலும், “வபாத்” மரணத்தின் “இத்தா” தொடர்பான வசனங்களுக்கிடையிலும் அல்லாஹ் கூறியிருப்பது போன்று.

மேற்கண்ட குறிப்புக்கள் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் யார்? அவர்கள் எப்பேர்ப் பட்டவர்கள்? அவர்களின் நூல்கள் யாவும், குறிப்பாக “அல்புதூஹாதுல் மக்கிய்யா” எனும் நூலும் எப்பேர்ப்பட்டவை என்பதையும் தெளிவாகக் கூறுகின்றன.

ஷெய்குல் அக்பர் அவர்களை விஷயம் தெரியாத பலரும், விஷயம் தெரிந்தும் அவர்கள் மீது பொறாமை கொண்ட சில வம்பர்களும் எதிர்த்தாலும் கூட அறிவுலகைச் சேர்ந்த அனைவரும், மற்றும் உலகில் தோன்றிய இறைஞானிகளும், ஸூபீ மகான்களும் அவர்களைப் புகழ்ந்தே கூறியுள்ளார்கள்.

ஷெய்குல் அக்பர் நாயகம் அவர்கள் ஒரு நாள் “வுழூ” எனும் வெளிச்சுத்தம் செய்து அது முறியாமலேயே தொடர்ந்து மூன்று மாதங்கள் பாதுகாத்திருந்ததாக இமாம் இப்னு ஹஜர் அல்ஹைதமீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அல்பதாவல் ஹதீதிய்யா” எனும் நூல் கூறுகிறது.

ஒருவர் “வுழூ” எனும் சுத்தம் செய்து கொண்டால் அவர் உறங்கலாகாது. ஒரு நொடி நேரம் கூட உறங்கினாலும், அது முறிந்து விடும். இதேபோல் அவர் மலசலம் கழிக்கவும் கூடாது. ஒரு தரமேனும் மலம் அல்லது சலம் கழித்தால் கூட அவரின் “வுழூ” முறிந்து விடும். இன்னுமிதேபோல் அவரின் உடல் திரையின்றி “மஹ்றம்” அல்லாத பெண்களின் உடலில் பட்டு விடுமாயினும் அவரின் “வுழூ” முறிந்து விடும். “மஹ்றம்” அல்லாத பெண்கள் என்பது அவர் திருமணம் செய்வதற்கு அனுமதித்த பெண்களைக் குறிக்கும். இவர்களின் உடல் திரையின்றிப் பட்டு விடுமானால் “வுழூ” முறிந்து விடும். “மஹ்றம்” ஆன பெண்கள் என்பது திருமணம் செய்வதற்கு மார்க்கம் தடை செய்த பெண்களைக் குறிக்கும். ஒருவரின் தாய், அவனின் உடன் பிறந்த சகோதரிகள், சகோதரியின் பெண் பிள்ளைகள் போன்று. ஒருவனின் மனைவியின் உடல் அந்நிய பெண்களின் உடல் போன்றதே! அதாவது கணவனின் உடலும், மனைவியின் உடலும் திரையின்றிப் பட்டால் இருவரின் “வுழூ” சுத்தமும் “ஷாபிஈ” மத்ஹபின் படி முறிந்து விடும்.

இவ்வாறுதான் ஓர் ஆணின் உள்ளங்கை தனது அல்லது பிறரின் ஆண்குறியில் திரையின்றிப் படுவதுமாகும். பட்டால் “வுழூ” முறிந்து விடும். இவ்வாறுதான் “வுழூ” எனும் சுத்தம் செய்தவனின் மல வாயலால் காற்று – குசு வெளியாவதுமாகும். சுத்தம் முறிந்து விடும்.

ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ நாயகம் மூன்று மாதங்கள் ஒரே “வுழூ”வுடன் மேற்கண்ட நிபந்தனைகளுடன் அதைப் பாதுகாத்திருந்தது அவர்களின் மாபெரும் “கறாமத்” அற்புதமேயாகும்.

ஷெய்குல் அக்பர் அவர்கள் மூன்று மாதங்களும் மலசலம் கழித்திருக்கவில்லை, உறங்கவில்லை, மனைவி உள்ளிட்ட எந்தவொரு அந்நிய பெண்களின் உடல் திரையின்றிப் படவுமில்லை, அவர்கள் தங்களின் ஆண்குறியை தொட்டதில்லை, இவ்வாறு செய்வதற்கு ஒரு தரமேனும் முன்கூட்டி எந்த ஒரு பயிற்சியும் எடுக்காத ஒருவர் இவ்வாறு செய்ததன் மூலம் அவர்கள் “குத்பிய்யத்” எனும் ஆன்மிக உச்சக்கட்டத்தை அடைந்த மகான் என்பது தெளிவாக விளங்குகிறது.

குறிப்பு: நான் மேலே கூறிய மார்க்க சட்டங்கள் யாவும் “ஷாபிஈ மத்ஹப்” அடிப்படையைக் கொண்டதாகும்.

தொடரும்…

RELATED ARTICLES

Most Popular

Recent Comments