Sunday, October 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இஸ்லாமிய வரலாற்றில் போலி மார்க்க அறிஞர்களால் கொல்லப்பட்டும், நாடு கடத்தப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் மேஞ்சுவனம் சென்ற ஸூபீ...

இஸ்லாமிய வரலாற்றில் போலி மார்க்க அறிஞர்களால் கொல்லப்பட்டும், நாடு கடத்தப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் மேஞ்சுவனம் சென்ற ஸூபீ மகான்கள்.

தொடர்: 06

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ்!

கடந்த தொடர் ஒன்றில் நான் எழுதிய குறிப்புக்கள் மூலம் இப்னு அறபீ நாயகமவர்களின் தராதரமும், அவர்களின் நூல்களின் தராதரமும், குறிப்பாக அவர்களின் “அல்புதூஹாதுல் மக்கிய்யா” என்ற நூலின் தரமும் விளங்கியிருக்கும்.

அவர்களின் மகத்துவத்தை எடுத்துக் காட்டும் இன்னுமொரு விடயத்தைக் குறிப்பிடுகிறேன்.

சிரியா வாசிகளில் ஒருவர் இப்னு அறபீ நாயகம் அவர்கள் மீது கடும் பொறாமை உள்ளவராக இருந்தார். அவர்கள் “வபாத்” மரணித்து நல்லடக்கம் செய்யப்பட்ட சில நாட்களில் அந்த எதிரி அவர்களின் மண்ணறையை எரித்துச் சாம்பலாக்கும் நோக்குடன் ஒரு நாள் நள்ளிரவு தீப்பந்தத்தோடு அவர்களின் “தர்ஹா” அடக்கவிடம் நோக்கி வந்து நின்றான். அவ்வளவுதான்.

ஜலஜலவென்ற ஓசையோடு பூமிக்குள் மறைந்து விட்டான். பூமி அவனை விழுங்கிவிட்டது. இது நள்ளிரவில் நடந்த நிகழ்வு. எவருக்கும் தெரியாது.

ஆயினும் அப்பகுதியில் அவர்களின் அடக்கவிடத்திற்கு அருகிலிருந்த மாடி வீட்டில் “முறாகபா” தியானத்திலிருந்த ஒரு மகான் இந் நிகழ்வை நேரில் பார்த்துக் கொண்டிருந்தார்.

அன்று காலை தீ வைக்க வந்தவனின் உறவினர்கள் அவனைத் தேடி அலைந்தனர். அப்போது அந்த நிகழ்வை நேரில் கண்ட மகான் மக்கள் மன்றில் தோன்றி நடந்த உண்மையை உரைத்தார். மக்கள் கடல் அலை போல் அவ்விடத்தை நோக்கி திரண்டனர். பூமி விழுங்கிய அக்கயவன் கழுத்து வரை மட்டும் விழுங்கப்பட்டு இறந்த நிலையில் காணப்பட்டான். அவனை அவ்வாறே வைத்து மூடிவிட்டார்கள். அவன் விழுங்கப்ட்ட இடத்தின் சுவடு இன்றும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இது நான் நேரில் கண்ட உண்மை.

இன்னுமொரு சம்பவத்தை இங்கு குறிப்பிடுகிறேன். அவர்கள் கூறிய தத்துவம் புரியாத, அவர்கள் மீது பொறாமை கொண்ட சிரியாவாசி ஒருவன் ஒவ்வொரு நாளும் ஐங்காலத் தொழுகையின் பின்னும் அவர்களை பத்து தரம் சாபமிடுவதாக நேர்ச்சை செய்து சாபமிட்டு வந்தான். اَللهم الْعَنْ اِبْنَ عَرَبِيْ இறைவா! இப்னு அறபீயை சபித்துவிடுவாயாக! என்று சொல்லி வந்தான். ஒரு நாள் அவன் மரணித்து விட்டான். அவன் நாயகம் அவர்களை எதிர்த்தவனாதலால் அவனைப் பார்ப்பதற்கென்று மக்கள் படையெடுத்தனர். அவனின் முகம் அசுத்தமான ஒரு பிராணியின் முகமாக மாறியிருந்தது கண்டு இப்னு அறபீ நாயகமவர்களின் மகிமையை அவர்கள் புரிந்து கொண்டனர்.

இப்னு அறபீ நாயகமவர்கள் அவனை எதிரியாகக் கருதாமல் அவனின் வீடு சென்று “ஜனாசா” பிரேதத்தைப் பார்த்துவிட்டு ஒரு “முசல்லா” கேட்டுப் பெற்று நீண்ட நேரம் தொழுது கொண்டிருந்தார்கள். “ஸுஜூத்” நிலையில் இருந்தார்கள். தொழுகையை முடித்து விட்டு ஜனாசாவை பார்த்து அல்லாஹ்வுக்கு “ஷுக்ர்” செய்தார்கள். அதன்பின் “ஸுஜூத்” நிலையில் அவர்களுக்கு நடந்ததை தங்களுக்கு மிக நெருங்கியவர்களுக்கு கூறினார்கள்.

இன்னுமொரு நிகழ்வையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். காத்தான்குடி தற்கொலைக் குண்டுதாரி சஹ்றான் ஒரு நாள் தானே ஏற்பாடு செய்த கூட்டமொன்றில் காரசாரமாக எனக்கு எதிராகவும், இப்னு அறபீ அவர்களுக்கு எதிராகவும் வாய்க்கு வந்த மாதிரியெல்லாம் உளறினான். அவன் தனது உளறலில், சிலரால் ஷெய்குல் அக்பர் என்று சொல்லப்படுகின்றவன் ஷெய்குல் அக்பர் அல்ல. அவன் ஷெய்த்தான் கபீர் என்று ஊளையிட்டான். அந்த ஊளை என் காதைத் துளைத்து என் உள்ளத்தைச் சுட்டது. அவனின் உளறலை செவியேற்றுக் கொண்டிருந்த நான் என் தலைக்கேறிய வெறி தாங்க முடியாமல் இறைவா! உனது வலீயை இவன் மிகக் கீழ்த்தரமாக பேசுகிறான். உலகமே வியக்குமளவு இவனுக்கு ஒரு தண்டனையை வழங்குவாயாக! என்று எனக்குத் தெரியாமலேயே என் நாவு சொல்லியது. இதையடுத்து சில நாட்களின் பின் அவன் சிதறி மரணித்து விட்டான். இஸ்லாமிய சட்டம் பேசியவனுக்கே ஜனாசாக்கடமை செய்ய முடியாமற் போயிற்று. இதுவே தலைவிதி.

ஷெய்குல் அக்பர் அவர்கள் திரு மக்காவில் “அல்புதூஹாத்” எனும் நூலை எழுதி முடித்தபின் அதை வெளியிடுவது தொடர்பாக பல நாட்கள் சிந்தித்த பின்பு ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதாவது குறித்த நூலைக் கோர்த்துக் கட்டாமல் தனித் தனித் தாளாக அதை “கஃபா”வின் மொட்டை மாடியில் திறந்த நிலையில் ஒரு வருட காலம் அல்லது மூன்று மாதங்கள் வைப்பதென்றும், இடைப்பட்ட காலத்தில் பெய்கின்ற மழையினால் ஒரு தாளாவது நனைந்து போனால், அல்லது காற்றினால் பறந்து தொலைந்து போனால் அதை வெளியிடுவதில்லை என்றும், ஒரு குறையுமில்லாதிருந்தால் மட்டுமே அதை வெளியிடுவதென்றும் முடிவு செய்து “கஃபா”வின் மேற்புறத்தில் வைத்தார்கள்.

ஒரு வருடம் அல்லது மூன்று மாதங்கள் நகர்ந்து முடிந்தன. “கஃபா”வில் வைக்கப்பட்டிருந்த தாள்களில் ஒன்று கூட நனையாமலும், பறக்காமலும் இருந்தது கண்டு வியந்து ஸுப்ஹானல்லாஹ்! என்று சொன்னவர்களாக அதை எடுத்து வெளியிட்டார்கள்.

மேற்கண்ட தகவல்களை நான் எழுதியதற்கான காரணம், உலமாஉகளில் “அரை வேக்காடு” என்று ஒரு கூட்டம் எல்லாக் காலத்திலும், எல்லா ஊர்களிலும் இருந்தே வருகிறது. இவர்கள் சில கலைகளில் மட்டும் சில கிதாபுகளில் சில பக்கங்களை மட்டும் ஓதிவிட்டு எல்லாம் படித்த, முற்றும் கற்ற முல்லாக்கள், அல்லாமாக்கள் போல் தாம் படிக்காத கலைகளிலும் வாய் போட்டுத் தலையிட்டு அறிஞர்களையும், அனுபவசாலிகளையும் புறக்கணிக்கிறார்கள். மார்க்கத்தில் தில்லுமுல்லு செய்கிறார்கள். அல்லாஹ்வுக்கும், றஸூலுக்கும், அவ்லியாஉகளுக்கும், ஸூபீ மகான்களுக்கும் “முர்தத்” என்று “பத்வா” வழங்குவதற்கும் முன் வந்து விட்டார்கள். இத்தகைய கீழ்த்தரமான வேலைகள் செய்பவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவைச் சேர்ந்த சில வஹ்ஹாபீகளும், ஷரீஆ கவுன்சிலைச் சேர்ந்த ஒரு சில அறிவிலிகளுமேயாவர்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் “பத்வா” குழுவும், “ஷரீஆ கவுன்சில்” அமைப்பைச் சேர்ந்தவர்களும் செய்த “பத்வா” என்ற அட்டூழியமும், “ஷரீஆ கவுன்சில்” செய்த “வுஜூத்” இரண்டு, “தன்ஸீஹ் – தஷ்பீஹ்” என்ற இரு நிலைகளில் “தஷ்பீஹ்” இல்லை என்ற அட்டகாசமும் உலகில் யஹூதீகள், நாஸாறாக்கள் கூட செய்யாத அட்டூழியமும், அட்டகாசமுமேயாகும்.

உலமா சபையின் “பத்வா” குழுவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? என்று சிந்திக்குமளவு அவர்களின் நடவடிக்கை இருக்கின்றது. நான் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை பேசியிருக்கும் நிலையில் நான் பேசியது “ஹுலூல் – இத்திஹாத்” என்று இவர்களாக கற்பனை செய்து அல்லது மன முரண்டாக வேண்டுமென்றே என் பெயரை அதில் குறிப்பிட்டும், நான் கூறிய ஸூபிஸ ஞானத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றும் நாடு முழுவதும் பகிரங்கப்படுத்தி எங்களை அவமானப் படுத்தியதும் இவர்கள் செய்த அட்டூழியமும், அநீதியுமாகும்.

“பத்வா” வாபஸ் பெறப்படுவதுடன் மான நஷ்டத்திற்கு வழக்குத் தாக்கல் செய்வதற்கும் இந் நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற பாதிக்கப்பட்ட பலரும் முன் வந்தமைக்காக அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“ஷரீஆ கவுன்சில்” ஹஸனீ என்பவர் “வுஜூத்” உள்ளமை இரண்டு என்றும், படைத்தவனுக்கு ஒன்று, படைப்புக்கு ஒன்று என்றும் கூறி இஸ்லாமிய “அகீதா” கொள்கைக்கு துரோகம் செய்தது போதாதென்று இது காலவரை ஸூபீ மகான்கள் பேசி வந்த “தன்ஸீஹ் – தஷ்பீஹ்” எனும் அல்லாஹ்வின் இரு நிலைகளில் “தஷ்பீஹ்” எனும் நிலை அவனுக்கு கிடையாதென்றும் கூறி இதிலும் இருட்டடிப்புச் செய்து விட்டார்கள்.

ஸூபீ மகான்கள், ஆரிபீன் – இறைஞானிகள் அனைவரும் “வுஜூத்” உள்ளமை அல்லாஹ்வுக்கு மட்டுமேயன்றி படைப்புக்கு இல்லையென்றும், அவ்வாறு இருப்பதாகச் சொன்னாலும் கூட அதன் “வுஜூத்” உள்ளமை “மஜாஸீ” அல்லது “வஹ்மீ” அல்லது “இழாபீ” அல்லது “இஃதிபாரீ” என்றும் சொல்ல வேண்டும் என்றும் அதாவது போலியானதென்றும், பெயரளவில் உள்ளதேயன்றி அது எதார்த்தத்தில் உள்ளதல்ல என்றும் சொல்ல வேண்டும் என்று அவர்கள் தமது நூல்கள் அனைத்திலும் கூறியிருக்கும் நிலையில் ஹஸனீ அவர்கள் மட்டும் குறித்த மகான்களுக்கு மாறாகச் சொல்லியிருப்பது பெரும் விந்தையாக உள்ளது.

அதோடு அல்குத்பு அப்துல் கரீம் அல்ஜீலீ அவர்கள் “தஷ்பீஹ்” நிலை அல்லாஹ்வுக்கு உண்டென்றும், படைப்புக்கு “வுஜூத் ஹகீகீ” சுயமான உள்ளமை இல்லையென்றும் சொல்லியிருக்கும் நிலையில் அவர்களைப் புறக்கணித்து அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாதென்று ஹஸனீ ஸாஹிப் அவர்கள் கூறியிருப்பதும் பெரும் விந்தையான விடயமேயாகும்.

இதோடு மட்டும் இவர் நின்றுவிடவில்லை. தனது அறியாமையையும், அகங்காரத்தையும், கர்வத்தையும் பின்வருமாறு தெரியப்படுத்துகிறார். (அப்துல் கரீம் அல் ஜீலீ சொன்னாலென்ன, வேறு யார்தான் சொன்னாலென்ன அதை நாம் கணக்கெடுக்கத் தேவையில்லை. பெருமானார் அவர்களே “தஷ்பீஹ்” இல்லையென்று சொல்லியிருக்க மற்றவர்களை நாம் எவ்வாறு பின்பற்றுவது?) என்று அந்தப் பெரிய “குத்பு” அவர்களைத் தூக்கியெறிந்து பேசுவதற்கு இவருக்கு என்ன தகுதியுண்டு? அறிவுத்துறையிலும், அனுபவத்திலும் அவர் போன்ற மகானா இவர்? ஸுப்ஹானல்லாஹ்! கர்வம் தலையைத் தாக்கினால் நாவு உளறத்தான் செய்யும்.

“தஷ்பீஹ்” உண்டென்று அப்துல் கரீம் ஜீலீ மட்டும் சொல்லவில்லை. ஸூபீ மகான்கன் அனைவரின் கருத்தும் “தஷ்பீஹ்” உண்டு என்பதேயாகும். இவ்வாறு சொல்வதால் “மித்ல்”, “குப்வு” என்று சொல்லப்படுகின்ற “நிகர்” வந்துவிடாது. ஏனெனில் “தஷ்பீஹ்” நிலை என்பது அல்லாஹ்வின் உள்ளமையில் ஏற்படுகின்ற ஒரு நிலையே தவிர அவனின் உள்ளமையை இன்னொன்றுக்கு ஒப்பாக்குதல் – நிகராக்குதல் என்ற கருத்தல்ல. “தஷ்பீஹ்” என்ற சொல்லில் ஏமாந்து விடக் கூடாது. “தஷ்பீஹ்” நிலையில் வெளியாதல் என்பது அவனின் “தாத்”தின் உள்ளமையின் நிலையே அன்றி அவனை இன்னொன்றுக்கு ஒப்பாக்குதல் என்ற கருத்துக்கு இடமே இல்லை.

இப்னு அறபீ நாயகம் அவர்கள் “தன்ஸீஹ் – தஷ்பீஹ்” இரண்டையும் பாடலில் கூறுவதைப் பாருங்கள்.

தொடரும்….

RELATED ARTICLES

Most Popular

Recent Comments