தொடர்: 07
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
மேற்கண்ட தலைப்பில் இஸ்லாமிய வரலாற்றில் ஸூபீகளுக்கு எதிரான முஸ்லிம்களால் துன்புறுத்தப்பட்ட ஸூபீகளிற் பலரின் பெயர் விபரங்களை எழுதினேன். இன்னும் பலருளர்.
நான் பெயர் குறித்து எழுதியவர்களின் விபரம் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ ஸூபீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “அல்யவாகீத்” எனும் நூல் 12, 13, 14ம் பக்கங்களிலிருந்து கிடைத்த தகவல்களாகும்.
இதே இமாம் அவர்களுக்கு “தபகாதுஷ் ஷஃறானீ” என்றும் ஒரு நூல் உண்டு. அதிலும் அவர்கள் துன்புறுத்தப்பட்ட ஸூபீகளின் வரலாறுகளை எழுதியுள்ளார்கள். அவர்களின் விபரங்களையும், “அல்யவாகீத்” எனும் நூலில் கூறப்பட்டவர்களின் விபரங்களையும், இன்னும் இவையல்லாத நூல்களில் கூறப்பட்ட துன்பத்திற்குள்ளான ஸூபீ மகான்களின் விபரங்களையும் ஒன்று சேர்த்து ஒரே நூலில் ஒரே பார்வையில் வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை கருத்திற் கொண்டு எழுதவுள்ளோம். இன்ஷா அல்லாஹ்!
காரணங்கள்:
ஸூபீ மகான்கள் மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டதற்கும், கொலை செய்யப்பட்டதற்குமான காரணங்கள் எவை என்பதை இங்கு ஆய்வு செய்வோம்.
ஒன்று அறியாமை. இரண்டு பொறாமை.
அறியாமையினால் ஸூபீ மகான்களை எதிர்த்தவர்களிற் பலர் உலமாஉகளும், பொது மக்களுமேயாவர். பொறாமையால் எதிர்த்தவர்கள் உலமாஉகள் மட்டுமேயாவர். பொது மக்களல்லர். ஏனெனில் ஸூபீ மகான்கள் மீது உலமாஉகளுக்கு பொறாமை வருவதற்கே அதிக வாய்ப்புகள் உண்டு. பொது மக்களுக்கு அந்த வாய்ப்பு மிகக் குறைவு.
ஒரு விஞ்ஞானிக்கு இன்னொரு விஞ்ஞானியின் மீது பொறாமை ஏற்படுவதற்கே அதிக வாய்ப்பு உண்டு. மெய்ஞ்ஞானி மீது ஏற்படுவதற்கு வாய்ப்பு மிகக் குறைவு. இதேபோல் ஒரு புடவைக் கடைக் காரனுக்கு இன்னொரு புடவைக் கடைக் காரன் மீது பொறாமை ஏற்படுவதற்கே வாய்ப்பு அதிகம் உண்டு. அவனுக்கு செங்கல் வியாபாரியின் மீது பொறாமை ஏற்படுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ஓர் “ஆலிம்” மார்க்கம் கற்றவனுக்கு அவன் போன்ற ஓர் ஆலிம் – மார்க்கம் கற்றவன் மீது பொறாமை ஏற்படுவதற்கே வாய்ப்பு அதிகம் உண்டு. மார்க்கம் படியாதவன் மீது பொறாமை ஏற்படுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.
இவ் உண்மையை இக்காலத்தில் நிதர்சனமாக காண முடியும். பொதுவாகச் சொல்வதாயின் ஒரு துறை சார்ந்தவனுக்கு அத்துறை சார்ந்தவன் மீதே பொறாமை ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமுண்டு. மற்றவர்கள் மீது ஏற்படுவதற்கு வாய்ப்புக் குறைவு.
மேற்கண்ட விளக்கத்தின் படி ஸூபீகள் மீது பொறாமை ஏற்படுவதாயின் அவர்கள் போன்ற ஸூபீகளுக்கே ஏற்பட வேண்டும். ஸூபீகள் அல்லாத உலமாஉகளுக்கு ஏற்புடுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.
ஸூபீகளுக்கு அவர்கள் போன்ற ஸூபீகள் மீது பொறாமை ஏற்பட மாட்டாது. ஆயினும் ஸூபீகள் அல்லாத உலமாஉகளுக்கு ஸூபீகள் மீது பொறாமை ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.
ஸூபீகளுக்கு அவர்கள் போன்ற ஸூபீகள் மீதும் பொறாமை ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனையோர் மீதும் பொறாமை ஏற்பட வாய்ப்பு அறவே இல்லை.
ஏனெனில் “ஸூபீ” என்ற சொல்லின் சரியான பொருளையும், அதற்கான விளக்கத்தையும் அறிந்து கொண்டால் ஸூபீ என்பவரிடமிருந்து பொறாமை உருவாவதற்கு அறவே வாய்ப்பு இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இதன் விபரம் பின்னர் வரும்.
பொதுவாக அறிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் ஸூபீகள் அல்லாத உலமாஉகளுக்கு – மௌலவீமார்களுக்கு – ஸூபீகள் மீது பொறாமை ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. ஆயினும் ஸூபீகளுக்கு எவர் மீதும் பொறாமை ஏற்பட வழியே இல்லை. ஓர் உண்மையான ஸூபீயிடமிருந்து பொறாமையை எதிர்பார்ப்பது அல்லது அவரிடம் பொறாமை உண்டு என்று நினைப்பது சீனியிலிருந்து கசப்பை எதிர்பார்ப்பது போன்றும், சீனி கசக்கும் என்று நினைப்பது போன்றுமாகும்.
இஸ்லாமிய வரலாற்றில் ஸூபீகளைப் பல வழிகளிலும் துன்புறுத்தியவர்கள் முஸ்லிம் மத குருக்களான, ஸூபிஸம் தெரியாத மௌலவீமார்களேயாவர். இதுதான் உண்மை என்பதற்கு ஆதாரம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும், “ஷரீஆ கவுன்ஸிலும்” ஸூபிஸ தத்துவத்தை எதிர்ப்பதேயாகும். இது கண்முன் நடக்கின்ற நிதர்சனமான உண்மை.
இன்று – இக்காலத்தில் ஸூபிஸ தத்துவமான “வஹ்ததுல் வுஜூத்” கோட்பாட்டை எதிர்த்தவர்களும், மறுத்தவர்களும் உலமாஉகளேயன்றி பொது மக்களல்லர்.
ஸூபீ மகான்களை ஸூபீயல்லாத உலமாஉகள் எதிர்த்ததற்கு பொறாமை காரணம் என்று கூறினோம். அவர்களின் பொறாமைக்கு எது காரணம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
தொன்று தொட்டு ஸூபீகள் பொது மக்களால் கண்ணியப்படுத்தப்பட்டும், கௌரவிக்கப்பட்டுமே வந்துள்ளார்கள். பொது மக்கள் சாதாரண உலமாஉகளுக்கு கொடுக்கும் கண்ணியத்தையும், மரியாதையையும் விடப் பல மடங்கு அதிகமாகவே ஸூபீகளுக்கு மரியாதையும், கண்ணியமும் செய்து வந்துள்ளார்கள். இவ்வழக்கம் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதல் இற்றை வரை இருந்து வருகின்ற ஒன்றாகும்.
ஸூபீகள் அல்லாஹ்வுடன் தொடர்புள்ளவர்கள் என்றும், உலமாஉகள் ஷரீஆ சட்டங்களுடன் தொடர்புள்ளவர்கள் என்றும் பொது மக்களிடம் ஓர் அபிப்பிராயம் உண்டு. இதனால் பொது மக்கள் சாதாரண உலமாஉகளை நேசிப்பதை விடக் கூடுதலாக ஸூபீ மகான்களையே நேசிக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவு வழங்குகிறார்கள். அவர்களின் கை, கால்களை முத்தமிடுகிறார்கள். அவர்களுக்கு பண உதவி, பொருளுதவி மற்றும் அவர்களுக்குத் தேவையான உதவி உபகாரங்களை செய்கிறார்கள்.
இவற்றைக் காணும் ஸூபீகளல்லாத உலமாஉகளுக்கு எரிச்சலும், மன உளைச்சலும் ஏற்படுகின்றன.
ஸூபீகளல்லாத உலமாஉகள் ஸூபீ மகான்களை எதிர்ப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன என்றும், அவற்றில் ஒன்று பொறாமை என்றும், பொறாமைக்கு காரணம் ஸூபீ மகான்களுக்கு பொது மக்கள் செய்கின்ற கண்ணியமும், உதவி ஒத்தாசைகள் என்றும் எழுதினோம்.
அறியாமை:
ஸூபீ மகான்களை எதிர்க்கும் உலமாஉகளின் அறியாமை இன்னொரு காரணம் என்று கூறினோம். இது பற்றி சற்று ஆராய்வோம்.
ஸூபிஸக் கலையாயினும், வேறு எக்கலையாயினும் அதை முறைப்படி கற்பதன் மூலமே அதை அறிந்து கொள்ள முடியும்.
ஸூபிஸக் கலை ஏனைய கலைகள் போல் ஒரு கலைதான். ஆயினும் அதையும் கூட ஒரு மகானிடம் கற்பதன் மூலமே புரிந்து கொள்ள முடியும்.
இஸ்லாமிய வரலாற்றில் சிலர் வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் கல்விக்காக எந்த ஓர் அறபுக் கல்லூரிக்கும் சென்றவர்களுமல்லர். எந்த ஓர் ஆசிரியரிடம் கால் மடித்தவர்களுமல்லர். அவர்களுக்கும், அறபு மொழிக்கும் எந்த ஒரு தொடர்பும் இருந்ததுமில்லை.
ஆயினும் வெளிப்படையான அறிவில் கெய்ரோ அல்அஸ்ஹர் பல்கலைக் கழகத்தில் கற்று கலாநிதிப் பட்டம் பெற்றவர்களை விட எல்லாக் கலைகளிலும், குறிப்பாக ஸூபிஸக் கலையிலும் திறமையுள்ளவர்களாக ஸூபீ மகான்களே இருந்துள்ளார்கள் என்பதற்கு நம்பத் தகுந்த வரலாறுகள் உள்ளன.
அறபு மொழியில் “அல் இப்ரீஸ்” என்று ஒரு “கிதாப்” நூல் உண்டு. இது 335 பக்கங்கள் கொண்ட நூல். இதில் பழைய அச்சும் உண்டு. புதிய அச்சும் உண்டு. பழைய அச்சு என்னிடம் உண்டு.
இந்நூல் அஷ்ஷெய்கு நஜ்முல் இர்பான் அல்ஹாபிள் அஸ்ஸெய்யித் அஹ்மத் இப்னுல் முபாறக் றஹிமஹுல்லாஹ் அவர்களால் எழுதப்பட்டது. இவர்களின் காலத்தில் (1095 – 1131) ஒரு மகான் இருந்துள்ளார்கள். இவர்களின் பெயர் அப்துல் அஸீஸ் அத்தப்பாக் றஹிமஹுல்லாஹ் என்பதாகும். இவர்கள் “உம்மீ” எழுத வாசிக்கத் தெரியாதவர்கள். இவர்கள் “பாஸ்” நாட்டில் பிறந்தார்கள்.
நூலாசிரியர் நஜ்முல் இர்பான் அஹ்மத் இப்னுல் முபாறக் அவர்கள் இவர்களைத் தேடியலைந்து சந்தித்து இவர்களிடம் சில காலம் தங்கியிருந்து பல கேள்விகள் கேட்டு அவற்றுக்கு அவர்கள் சொன்ன விடைகளை நூலாக வடித்தெடுத்ததே “இப்ரீஸ்” எனும் நூலாகும்.
மகான் அப்துல் அஸீஸ் அத்தப்பாக் றஹிமஹுல்லாஹ் அவர்கள் எழுத வாசிக்கத் தெரியாத “உம்மீ”யாக இருந்தும் கூட அவர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு விடைகள் சொல்லும் போது திருக்குர்ஆன் வசனங்கள், நபீ மொழிகள், மற்றும் ஆதார நூல்களின் பெயர்கள், பக்கங்களுடன் விளக்கமாகச் சொல்பவர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வலீமார்களுக்கும், ஸூபீ மகான்களுக்கும் அல்லாஹ் عِلْمُ الْإِلْهَامِ – இல்முல் இல்ஹாம், عِلْمُ الْكَشْفِ – இல்முல் கஷ்ப், عِلْمُ الْوَهْبِيْ – இல்முல் வஹ்பீ, عِلْمُ اللَّدُنِّيْ இல்முல்லதுன்னீ எனும் இறை ஞானங்களை வழங்கினான். இத்தகைய ஞானங்களை வலீமார் தாம் எழுதிய நூல்களில் பதிவு செய்துள்ளார்கள்.
ஸூபீகளல்லாத உலமாஉகள் இத்தகைய ஞானங்களைப் பார்த்து அறியும் போது இவை திருக்குர்ஆனிலும், ஹதீதுகளிலும் இல்லாதவை என்று கூறி இவ்வாறான கருத்துக்களை மறுக்கின்றார்கள். இவ்வாறு மறுப்பவர்கள் தமது அறியாமையை மூட்டை கட்டி ஒரு புறம் வைத்து விட்டு ஸூபீ மகான்களின் நூல்களை வாசிக்க வேண்டும்.