Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்எனது ஆன்மிக குருமாரும், அவர்கள் எனக்குச் செய்த உதவிகளும்!

எனது ஆன்மிக குருமாரும், அவர்கள் எனக்குச் செய்த உதவிகளும்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

1959 – 60ம் ஆண்டளவில் காலியில் ஓதிக் கொண்டிருந்த கால கட்டத்தில் புனித மக்காவைச் சேர்ந்த “ஷாதுலிய்யா தரீகா”வின் ஷெய்குமார்களில் ஒருவரான டொக்டர் பாஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இலங்கை வந்த பயணம் காலிக் கோட்டைக்கு அழைத்து வரப்பட்டு கோட்டை மத்ரஸாவில் சில நாட்கள் தங்கியிருந்தார்கள்.

அவ்வேளை மத்ரஸா மாணவர்கள் 60 பேர் இருந்திருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் “பைஅத்” எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரே நேரத்தில் அனைவருக்கும் “பைஅத்” கொடுத்தார்கள் டொக்டர் பாஸீ நாயகம் அவர்கள். அவர்களிடம் எதையும் கற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு எனக்கோ, மாணவர்களுக்கோ கிடைக்கவில்லை. “பைஅத்” பெற்றது மட்டும்தான்.

அதன் பிறகு பல வருடங்களின் பின் அஷ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ, ஸித்தீகீ, காஹிரீ, காதிரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் காத்தான்குடிக்கு வந்த சமயம் – ஆண்டு நினைவில் இல்லை – அவர்களிடம் நான் “பைஅத்” செய்து அவர்களின் “முரீத்” சிஷ்யன் ஆனேன்.

தொடர்ந்து பல வருடங்களாக இன்றுவரை அவர்களின் சிஷ்யனாகவே இருந்து வருகிறேன்.

அவர்களிடம் “பைஅத்” செய்து பல வருடங்களின் பின் ஷெய்கு நாயகம் அவர்கள் காத்தான்குடிக்கு வந்து வழமைபோல் ஹபீபா ஹாஜியார் என்ற அவர்களின் முரீதுடைய வீட்டில் தங்கியிருந்த கால கட்டத்தில் அவர்களின் “முரீதா” சிஷ்யையாகிய எனது மாமி – மனைவியின் தாய் மூலம் ஒரு செய்தியனுப்பியிருந்தார்கள். அது ஒரு சுபச் செய்தியாகவே இருந்தது. “நாளைக் காலை “ஸுப்ஹ்” தொழுதவுடன் என்னைச் சந்திக்கவும்” என்று சொல்லியிருந்தார்கள்.

அதன்படி அங்கு சென்றேன். ஷெய்கு நாயகம் ஓதிக் கொண்டிருந்தார்கள். சற்று நேரம் அமைதியாக நின்றிருந்தேன். என்னை அழைத்து அவர்களுக்கு முன்னால் அமரச் செய்து அவர்களின் பெட்டியிலிருந்து துணித் தொப்பி ஒன்றை எடுத்து என் தலையில் போட்ட பின் எனது கரம் பற்றி என்னை அவர்களின் “கலீபா”வாக்கி மக்களுக்கு “பைஅத்” வழங்குவதற்கு “இஜாஸா” அனுமதியும் வழங்கினார்கள். பின்னர் தொப்பியை எடுத்துக் கொண்டார்கள். அது அவர்களின் ஷெய்கு அஸ்ஸெய்யித் அஷ் ஷெய்கு முஹம்மத் அப்துல் காதிர் ஸூபீ ஹைதறாபாதீ அவர்களின் தொப்பி என்று தெரிய வந்தது.

இவ்வாறு பல வருடங்கள் ஓடி மறைந்தபின் நான் “பைஅத்” கொடுப்பதற்கும், “றாதிப்” நடத்துவதற்கும் ஆரம்பித்து இன்று வரை செய்து வருகிறேன். எனக்கு காத்தான்குடியிலும், வெளியூர்களிலும், வெளி நாடுகளிலும் பல்லாயிரம் பேர் “முரீத்”களாக உள்ளனர்.

இடைப்பட்ட காலத்தில் அஸ்ஸெய்யித், அஷ்ஷெய்கு அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா அவர்கள் கண்டியில் இருந்த காலத்தில் அவர்களிடமும் “பைஅத்” பெற்று அவர்களின் சிஷ்யனாகவும் ஆனேன். இவர்கள் எனக்கு “பைஅத்” தந்தார்களேயன்றி “பைஅத்” கொடுப்பதற்கு அனுமதி தரவில்லை.

நான் இறைஞான அறிவையும், ஸூபிஸ ஞான அறிவையும் 50 வீதம் ஸூபீ நாயகம் அவர்கள் மூலமும், 15 வீதம் மௌலானா வாப்பா நாயகம் அவர்கள் மூலமும், 10 வீதம் இந்தியாவிலிருந்த மூன்று வருட கால கட்டத்தில் அங்குள்ள ஷெய்குமார்களிற் சிலர் மூலமும் பெற்றிருக்கிறேன்.

இவர்கள் சொல்லித் தந்த அடிப்படைகளை அத்திவாரமாக வைத்து ஞான மகான்கள், ஸூபீ மகான்கள் எழுதிய ஞான நூல்களை இராப்பகலாக வாசித்து வாசித்து நான் பெற்றதே நான் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” ஞானமாகும்.

மேற்கண்ட எனது ஷெய்குமார் இருவரும், மற்றும் நான் இந்தியாவில் சந்தித்த ஞான மகான்கள் பலரும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் அரசர்கள் என்றே சொல்வேன். அவர்களில் குறிப்பாக ஸூபீ நாயகமவர்கள் ஸூபிஸக் கலையில் – வஹ்ததுல் வுஜூத் விளக்கத்தில் நிகரற்றவர்களாயிருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

மௌலானா வாப்பா தொடர்பான சிறிய சம்பவமொன்றை இங்கு குறிப்பிடுகிறேன். இது அவர்களின் ஆன்மிக நிலையை உணர்த்துவதோடு “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைக்கு அவர்கள் ஆதரவானவர்கள் என்பதையும் காட்டுகிறது.

ஒரு நாள் மௌலானா வாப்பா அவர்கள் சுகயீனமாக மஜீத் ஹாஜியார் வீட்டில் தங்கியுள்ளார்கள் என்ற செய்தி கிடைத்து அங்கு நான் சென்றேன். அவர்கள் சாய்மணக் கதிரை – சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் சிஷ்யர்களிற் சிலரும் தரையில் இருந்தனர். என்னைக் கண்ட வாப்பா மௌலவீக்கு ஒரு கதிரை கொடுங்கள் என்றார்கள். நான் அவர்களுக்கு அருகில் கதிரையில் அமர்ந்தேன். சுமார் மூன்று நிமிடங்கள் அமைதி நிலவியது. எவரும் பேசவில்லை. வாப்பா அவர்களும் உறங்கிவிட்டார்கள். எதிர்பாராமல் வேகமாக எழுந்த வாப்பா அவர்கள் “அல்லாஹ் சற்று நேரம் உறங்கிவிட்டான்” என்றார்கள். அவ்வளவுதான் பிறகு பேசிக் கொண்டிருந்தார்கள். இது அவர்களின் ஆன்மிக நிலையை அப்பட்டமாகக் காட்டுகின்றது. “இது “ஷரீஆ”வின்படி பிழை என்றால் மௌலானா வாப்பா யார்? அவர்கள் யாரென்று உலமா சபையிடம் கேட்கிறேன். இன்னொரு சமயம் மௌலானா வாப்பா கொழும்பில் ஒரு ஹாஜியார் வீட்டில் இருந்த போது அவர்களைச் சந்திப்பதற்காக ஊரிலிருந்து ஒரு குழு சென்றோம். சாலை நெரிசல் காரணமாக 11 மணியளவில்தான் கொழும்பை அடைந்தோம். வாப்பா அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றோம். அது இருளாயிருந்தது. சற்று நேரத்தின் பின் வீட்டுக் காரர் மாடியிலிருந்து வாப்பா அவர்கள் றஊப் மௌலவீயை வருமாறு சொல்கிறார்கள் என்றார். அல்ஹம்துலில்லாஹ்! அனைவரும் உள்ளே சென்றோம். நான் அங்கு சென்றது வாப்பா அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. மனக்கண் திறந்தவர்களுக்கு மறைவானது எது இருக்கிறது?

வாப்பா அவர்கள் வழமைக்கு மாறாக என்னிடம் சுக செய்திகள் விசாரிக்காமல் என் கரம் பற்றி என்னை மட்டும் அவர்களின் அறைக்கு அழைத்துச் சென்று மகன்! தற்போது என்னிடம் பல கோடி ரூபாய் பணம் உள்ளது. எவ்வளவு தேவையாயினும் தரலாம் என்றார்கள். என்னிடம் பணம் இருக்கிறது வாப்பா என்றேன். மீண்டும் அவ்வாறே கேட்டார்கள். நானும் அவ்வாறே பதில் சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டேன். மறுகணம் வாப்பா அவர்கள் மர்ஹூம் மௌலவீ பாறூக் காதிரி அவர்களின் கை பற்றி அவர்களின் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். ஐந்து நிமிடத்தில் இருவரும் வெளியே வந்து விட்டார்கள்.

மௌலானா வாப்பாவிடம் விடை பெற்றுக் கொண்டு வரும் வழியில் வாப்பா அவர்கள் என்னைத் தனிமையாக அழைத்துச் சென்று என்னிடம் சொன்ன செய்தியை வந்தவர்களிடம் கூறிவிட்டு பாறூக் மௌலவீயிடம் வாப்பா அவர்கள் என்ன சொன்னார்கள்? என்று கேட்டோம். அதற்கவர் உங்களிடம் சொன்னதற்கு மாறாக என்னிடம் சொன்னார்கள். அதாவது தங்களிடம் தற்போது பணம் பற்றாக் குறையாக இருப்பதால் 10 இலட்சம் ரூபாய் எடுக்கலாமா? என்று என்னிடம் கேட்டார்கள் என்றார்.

வாப்பா அவர்களின் இந் நடவடிக்கையும் அவர்களின் ஆன்மிக உச்சக் கட்டத்தையே காட்டுகிறது.

மௌலானா வாப்பா அவர்கள் தங்களுக்கு மிக நெருங்கியவர்கள் இருக்கும் போது மட்டும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம், ஸூபிஸ ஞானம் என்பன தெளிவாகப் பேசுவார்கள்.

அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ பாவா நாயகமோ பேசினால் “வஹ்ததுல் வுஜூத்” மட்டும்தான் பேசுவார்கள். மிகவும் ஆழமாகவும் பேசுவார்கள். தெட்டத் தெளிவாகவும் பேசுவார்கள். என் வாழ்வில் அவர்கள் போல் “வஹ்ததுல் வுஜூத்” பேசிய ஒருவரை நான் காணவில்லை.

காத்தான்குடியில் அவர்கள் தங்கியிருக்கும் போது எனது வீட்டுக்கு அழைத்து ஒரு முழு நாள் தங்க வைத்து உபசரித்து மனத் திருப்தியோடு அவர்களை வழியனுப்பி வைப்பது எனது வழக்கம்.

முரீத் பிள்ளைகளின் வீடுகளில் இராச் சாப்பாடு சாப்பிட்டார்களாயின் சில நேரம் அங்கேயே தங்கிவிடுவார்கள். சில நேரம் வழமையாக தங்கும் வீட்டுக்குப் போய்விடுவார்கள்.

றப்பானிய்யா ஹாஜியார் வீட்டில் ஓர் இராச்சாப்பாடு ஒழுங்கு செய்யப்ட்டிருந்தது. சாப்பாட்டிற்கு நானும் அழைக்கப்பட்டு அங்கு சென்றிருந்தேன். சுமார் 15 பேர்கள் சாப்பாட்டில் கலந்து கொண்டார்கள். மௌலவீமார்களில் நான் மட்டுமே கலந்து கொண்டேன்.

சாப்பிட்ட பின் அங்கு கூடியிருந்தவர்களுக்கு உபதேசம் செய்தார்கள். பேசும் போது என் முகத்தையே அதிக நேரம் பார்த்துப் பேசினார்கள். அவர்கள் பேசிய விடயம் மொழியிலக்கணத்தோடு தொடர்புடைய பேச்சாதலால் வாசக நேயர்கள் மிக அவதானத்தோடு வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

“அல்லாஹ் – அல்லாஹ்” என்று “திக்ர்” செய்தல்.

ஒருவன் “அல்லாஹ் அல்லாஹ்” என்று “திக்ர்” செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அது ஓர் சொல்தானேயன்றி ஒரு வசனமல்ல. வசனம் என்று சொல்வதாயினும் அதில் எழுவாய், பயனிலை இரண்டும் இருக்க வேண்டும். பொருளும் பொருத்தமாயிருக்க வேண்டும். அல்லாஹ் அல்லாஹ் என்று “திக்ர்” செய்யும் போது அது ஒரு சொல்லாயிருப்பதால் அதற்கு “அல்லாஹ்வாகிறவன்” என்று மட்டும்தான் பொருள் வருமேயன்றி அதன் பொருள் பூரணமாகாது. பொருள் பூரணமாவதாயின் பொருத்தமான பொருளுக்குரிய இன்னொரு சொல் அதோடு இணைந்து வர வேண்டும். உதாரணமாக الله حاضر என்றும் الله ناظر என்றும் சொல்வது போன்றாகும்.

இவ்வாறு வசனம் வந்திருந்தால் பொருளும் அமையும், பொருத்தமாகவுமிருக்கும். இந்த வசனங்களில் “ஹாழிறுன்” என்ற சொல்லை அல்லாஹ் என்ற “முப்ததா”எழுவாய்க்கு “கபர்” பயனிலையாக அமைத்தால் அல்லாஹ் சமுகமாயுள்ளான் என்று பொருள் வரும். அல்லது “நாளிறுன்” என்ற சொல்லை அல்லாஹ் என்ற “முப்ததா” எழுவாய்க்கு “கபர்” பயனிலையாக அமைத்தால் அல்லாஹ் பார்ப்பவனாயுள்ளான் என்று பொருள் வரும்.

இதில் எந்த ஒரு சிக்கலுமில்லை. ஆயினும் எழுவாய், பயனிலையுடன் இணைந்த வசனமாக இல்லாமல் தனித் தனிச் சொல்லாயிருந்தால் அது அல்லாஹ் என்ற பொருளை மட்டும் தான் தருமேயன்றி வசனம் நிறைவு பெறவுமாட்டாது, பொருத்தமாக அமையவும் மாட்டாது.

எனவே, அல்லாஹ் – அல்லாஹ் என்று மட்டும் தனித்தனிச் சொல்லாக “திக்ர்” செய்யும் போது “முப்ததா – கபர்” எழுவாய் – பயனிலையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்? என்று இருந்தவர்களிடம் கேள்வி எழுப்பிவிட்டு அவர்களே அதற்கான பதிலையும் கூறினார்கள்.

அல்லாஹ் என்று மட்டும் “திக்ர்” செய்யும் போது அச் சொல்லுக்கு முன்னால் ஓர் எழுவாயை – முப்ததாவை அமைப்பதாயின் மூன்றில் ஒரு வகையாக அமைக்கலாம். هو الله என்றும், أنت الله என்றும், أنا الله என்றும் அமைக்கலாம். இதற்கு முறையே அவன் அல்லாஹ் என்றும், நீ அல்லாஹ் என்றும், நான் அல்லாஹ் என்றும் பொருள் வரும். இம் மூன்று வகையிலும் எது சிறந்ததென்றால் மூன்றாவதாகச் சொன்ன “அனல்லாஹ்” “நான் அல்லாஹ்” என்பதேயாகும்.

ஏனெனில் “ஹுவ”, “அன்த”, “அன” என்பவை “ழமாயிர்” என்று இலக்கணத்தில் சொல்லப்படும். அதாவது பிரதிப் பெயர்களாகும். இப் பிரதிப் பெயர்களில் “அன” என்பதே சிறந்ததென்று இலக்கணவாதிகள் கூறுகிறார்கள்.

எனவே, ஒருவன் அல்லாஹ் என்று மட்டும் “திக்ர்” செய்யும் போது “அனல்லாஹ்” என்று வாயால் மொழியாமல் “அன” நான் என்பதை மனதுள் வைத்துக் கொண்டு அல்லாஹ் என்று மட்டும் சொல்ல வேண்டும் என்று விளக்கம் கொடுத்தார்கள்.

இது “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையின் உச்சக்கட்ட விளக்கமாகும்.

“அன” நான் என்பதை மனதுள் வைத்துக் கொண்டு அதை வெளிப்படையாகச் சொல்லாமல் “அல்லாஹ்” என்று மட்டும் மொழிந்தாலும் கூட “அனல்லாஹ்” நான் அல்லாஹ் என்பதே அதன் கருத்தாகும்.

எனினும் “ஷரீஆ”வைப் பேணி அவ்வாறு வெளிப்படையாகச் சொல்லாமலிருப்பதே சிறந்ததாகும். ஒருவன் அவ்வாறு சொன்னாற் கூட நாங்கள் – ஸூபீகள் அவனைக் கொலை செய்யமாட்டோம்.

ஆயினும் இலங்கை நாட்டின் தாய் உலமா சபை இறையச்சமில்லாமலும், பேணுதல் இல்லாமலும் “எல்லாம் அவனே” என்று சொன்ன எனக்கும், இதை ஏற்றுக் கொண்ட இந்நாட்டிலும், வெளிநாடுகளிலுமுள்ள முஸ்லிம்களுக்கும் “முர்தத்” என்று சொல்லியிருப்பது பெரும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஒரு முஸ்லிமை காபிர் என்று சொன்னவன் காபிராகிவிட்டான் என்பதற்கு அதிக நபீ மொழிகள் ஆதாரமாக உள்ளன. அந்த நபீ மொழிகளின் ஆதாரங்களின் படி எங்களுக்கு “முர்தத்” என்று “பத்வா” வழங்கினவர்களும், அதை ஏற்றுக் கொண்டவர்களும், அவர்களின் தீர்ப்பை செயல்படுத்தினவர்களும் “காபிர்”களேயாவர். இதற்கு நபீ மொழிகளும், சட்ட நூல்களின் தகவல்களும் ஆதாரங்களாக உள்ளன. நீதி என்பது அது வெளியாகுமிடத்திலேயே வெளியாகும்.

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ

RELATED ARTICLES

Most Popular

Recent Comments