Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்கையெழுத்து தலையெழுத்தை மாற்றாது!கிழவியை “மேக்கப்” செய்தாலும் கிழவி கிழவிதான்!

கையெழுத்து தலையெழுத்தை மாற்றாது!
கிழவியை “மேக்கப்” செய்தாலும் கிழவி கிழவிதான்!

தொடர் 01

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

கையெழுத்தின்றி “பத்வா” வழங்கி 42 ஆண்டுகள் கடந்த பிறகுதான் அந்த “பத்வா”வுக்காக கையெழுத்து வேட்டை ஆரம்பமாகியிருப்பது உலக அதிசயங்களில் ஒன்றாகும்.

ஒரு “பத்வா” வெளியிடுவதாயின் அது எந்தக் கலையோடு சம்பந்தப்பட்டதோ அக்கலை மேதைகளிடம் மதிப்புரை, கையெழுத்து போன்றவை பெற்று அவற்றுடன் அதை இணைத்து வெளியிடுவதே வழக்கம். இதுவே சரியான, அறிவுக்குப் பொருத்தமான நடைமுறையாகும்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவானது “தஸவ்வுப்” ஸூபிஸம் பேசிய எனக்கும், நான் கூறிய கருத்தைச் சரி கண்ட இந்நாட்டவர்களுக்கும், வெளிநாட்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றும், எங்கள் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்றும் ஒரு “பத்வா” தீர்ப்பு வழங்கி அதை நாடளாவிய ரீதியில் பகிரங்கப்படுத்தியது.

இது 1979ம் ஆண்டு நடந்த நிகழ்வாகும். அவர்கள் வழங்கிய “பத்வா”வில் – தீர்ப்பு நூலில் “பத்வா” தீர்ப்பு வழங்கிய நீதிவானின் பெயரோ அல்லது நீதிவான்களின் பெயர்களோ, மற்றும் உலமா சபையின் தலைவரின் பெயரோ கூறப்படாத மொட்டை “பத்வா”வாகவே அது இருந்தது.

இது மட்டுமல்ல. அத் தீர்ப்பில் அறபுப் பகுதியில் எனது பெயர் எந்த ஓர் இடத்திலும் கூறப்படவில்லை என்பதும், ஆனால் தமிழாக்கத்தில் மட்டும் பல இடங்களில் எனது பெயர் கூறப்பட்டுள்ளதென்பதும் இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும். இங்கு ஓர் இருட்டடிப்பு உண்டு. சதியும் உண்டு. ஆய்வாளர்கள் அறிந்து கொள்வர்.

எவரின் கையெழுத்துமின்றி இவ்வாறு “பத்வா” வழங்கி 42 ஆண்டுகள் கடந்த பிறகு முதலில் 79ம் ஆண்டு வழங்கிய “பத்வா” சரியானதென்று இப்போது உலமா சபை இலங்கை நாட்டிலுள்ள உலமாஉகளிடமும், தரீகாவின் ஷெய்குமார்களிடமும், அறபுக் கல்லூரி அதிபர்கள், மற்றும் ஆசிரியர்களிடமும் கையெழுத்து எடுத்து வருவதாக நம்பத் தகுந்தவர்கள் மூலம் அறிய முடிகின்றது. இப்படியொரு முயற்சி தென் மாகாணத்தில் நடைபெறுவதாகவும், விஷயம் தெரியாமற் கையெழுத்திட்ட சிலர் பின்னர் கவலைப்பட்டதாகவும், இன்னும் சிலர் மகிழ்ச்சியோடு கையெழுத்திட்டதாகவும் அறிய முடிகிறது.

கையெழுத்திட்ட, இட இருக்கின்றவர்களின் கவனத்திற்கு!

“பத்வா”விலுள்ள தில்லு முல்லுகளும், இருட்டடிப்புக்களும், தவறான கருத்துக்களும், உங்களுக்குப் புரியாத நிலையில் நீங்கள் அதில் கையெழுத்திட்டால் பின்னர் சட்ட ரீதியான சிக்கல்களையும், இன்னல்களையும், கஷ்டங்களையும், மற்றும் அல்லாஹ்வின் தண்டனையையும் நீங்கள் சந்திக்க வாய்ப்பு உண்டு. இக்கட்டத்தில் நீங்கள் உங்கள் அறிவைப் பயன்படுத்துவது அவசியம்.

ஏனெனில் நாங்கள் இந்த “பத்வா” பிரச்சினையை எத்தனை கோடி ரூபாய் செலவிட்டேனும் சர்வதேசத்தின் கவனத்தையீர்க்க ஐ. நா வரை கொண்டு செல்ல உத்தேசித்துள்ளோம். அவ்வாறு நடந்தால் அதில் கையெழுத்திட்ட அனைவரும் பல்வேறு சங்கடங்களைச் சந்திக்காமல் இருக்க வேண்டுமென்பதையும், நீங்கள் அல்லாஹ்வினதும், நபீகணாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களினதும், ஸூபீ மகான்களினதும் கோபத்திற்குள்ளாகாமல் இருக்க வேண்டுமென்பதையும் கருத்திற் கொண்டு “பத்வா” தொடர்பான, சில தகவல்களை முன் கூட்டியே உங்களுக்கு அறியத் தருகிறேன். இதை என் கடமையாகவும் நான் கருதுகிறேன்.

நான் கூறும் தகவல்கள் உங்களுக்கு கிடைத்தபின் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பது உங்களின் விருப்பத்தைப் பொறுத்ததாகும்.
قَضَى وَقَدَّرَ كُلَّ شَيْءٍ بِحَقٍّ
وَمَا تَشَاءُوْنَ إِلَّا أَنْ يَشَاءَ اللهُ
உலமா சபை உங்களிடம் கையெழுத்துப் பெற்று அவர்களுடன் உங்களையும் பலிக் கடாய்களாக்க சதி செய்கிறார்கள். நீங்கள் புத்தியோடும், எச்சரிக்கையோடும் இருந்து கொள்ளுங்கள். குற்றம் செய்த ஒருவன் சிறைக்குப் போகும் போது தனக்குத் துணையாக குற்றஞ் செய்யாதவனையும் குற்றவாளியாக்கி அழைத்துச் செல்வதுமுண்டு.

உலமா சபை “பத்வா” வழங்கிய முறையும் பிழை. அது இந்நாட்டு சட்டத்திற்கு முரணானதுமாகும். பத்வா வழங்குவதற்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் அவசியம். குறிப்பாக ஒருவரை மதம் மாற்றி “பத்வா” வழங்குவது தண்டனைக்குரிய பெருங்குற்றம். உலமா சபை என்றால் அதன் பொருள் அறிஞர்கள் சபை என்பதாகும். இவர்கள்தானா அறிஞர் சபை உறுப்பினர்கள்? ஸுப்ஹானல்லாஹ்! வஞ்சகம் நிறைந்த நெஞ்சுடையவர்கள். தில்லு முல்லுப் பண்ணுகின்றவர்கள். உருட்டுப்புரட்டுச் செய்தல் இவர்களுக்கு கை வந்த கலையாகிவிட்டது.

முஸ்லிம்களை மதம் மாற்றி “பத்வா” வழங்குவதற்கு இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இவர்களால் கூறமுடியுமா? சட்ட விரோதமாக “பத்வா” கொடுத்து முஸ்லிம்களை “முர்தத்” மதம் மாற்றிவிட்டு நாங்கள் சுத்தமானவர்கள், சரியாகவே செய்துள்ளோம் என்று மார்தட்டி நிற்கின்றார்கள். இவர்கள் போன்ற பொய்யர்களும், நடிகர்களும், நயவஞ்சகர்களும் உலகில் எந்த ஒரு நாட்டிலும் இருக்கமாட்டார்கள்.

இவர்கள் குள்ள நரிகளேயன்றி நாட்டு மக்களை நல்வழிப்படுத்தும் வழிகாட்டிகளல்லர். இவர்களின் தில்லு முல்லையும், இருட்டடிப்பையும் கவனியுங்கள்.

நான் பேசிய கருத்துக்கள் “வஹ்ததுல் வுஜூத்” ஞானக் கருத்துக்களாகும். உலமா சபையின் “பத்வா” “ஹுலூல் – இத்திஹாத்” பிழை என்பதற்கானதாகும். வஹ்ததுல் வுஜூத் வேறு, ஹுலூல் – இத்திஹாத் வேறு. வஹ்ததுல் வுஜூத் இஸ்லாமிய தத்துவம். ஹுலூல் – இத்திஹாத் வழிகேடு.

எனது பேச்சுக்கும், இவர்களின் “பத்வா”வுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை. இவர்களின் “பத்வா”வை நல்லாப் படித்த நாலு பேர் பார்த்தாலே போதும். பொய்யெது மெய்யெது என்பது குன்றின் மேல் தீபம் போல் துலங்கும்.

“பத்வா” என்பது அதை எழுதியவரின் அல்லது எழுதியவர்களின் கையெழுத்துக்களுடன் வெளியிடப்பட வேண்டிய ஒன்றாகும். இதுவே நடைமுறையுமாகும். ஆனால் உலமா சபை தடுமாற்றத்தினாலோ என்னவோ, அல்லது அறியாமையினாலோ என்னவோ ஒருவரின் கையெழுத்துக் கூட இல்லாமல் “பத்வா” வெளியிட்டுள்ளது. “பத்வா” எழுதிய அறிவிலி யார்? நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவருடன் நேரில் பேச வேண்டும். அவர் யாரென்று பகிரங்கமாகச் சொல்லுமா உலமா சபை?

என்னையும், என்னுடனுள்ள உலமாஉகளையும் ஒன்றும் தெரியாத முட்டாள்கள் என்று இவர்கள் நினைத்துக் கொண்டார்களா? அல்லது நாங்கள் அவர்களின் அடிமைகள் என்று கணித்துக் கொண்டார்களா?

“பத்வா” வெளியிடும் போதே அதில் பத்வா வழங்கியவர்களின் கையெழுத்து இருக்க வேண்டும். இவர்கள் பஸ் போன பின் அதற்கு கை காட்டும் அறிவிலிகளாவர். “பத்வா” வழங்கி 42 வருடங்கள் கடந்த பிறகுதான் வெளியான “பத்வா”வுக்கு கையெழுத்து திரட்டுகிறார்கள். இவர்களின் அறியாமையை என்னென்று சொல்வது? இது அறியாமையா? அல்லது மூளைதான் கலங்கிப் போயிற்றா?

குள்ளப் புத்தியும், கள்ளப் புத்தியுமுள்ள இவ் உலமா சபை தெளிவான சிந்தனையும், அறிவும் உள்ளவர்களாயின் “பத்வா” வழங்கும் போதே அதில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். தற்போது அவர்களை அச்சம் சூழ்ந்து கொண்டதால் எவன் காலைப் பிடித்தேனும், அல்லது எவன் காலைக் கழுவிக் குடித்தேனும் “பத்வா”வை பலப்படுத்துவதற்காக “உடறட மெனிகா” வேகத்தில் கையெழுத்துக்காக ஓடித்திரிகிறார்கள். தென் மாகாணத்தைக் கலக்குகிறார்கள்.

இவர்களிற் சிலர் கையெழுத்து வேட்டைக்காக தென் மாகாணத்தின் சில இடங்களுக்குச் சென்ற போது சில சிங்கங்கள் இவர்கள் மீது சீறிப் பாய்ந்ததாகவும், இன்னுமொரு மகான் எனது தந்தையும், தந்தையின் தந்தையும், மற்றும் எனது பாட்டன்மாரும் “வஹ்ததுல் வுஜூத்” பேசியவர்களாதலால் அது பிழையென்று எழுதப்பட்ட “பத்வா”வில் நான் கையெழுத்து வைக்கமாட்டேன் என்று சொன்னதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. நீதி மன்றில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் உலமா சபையின் தில்லு முல்லுகள் யாவும் சந்திக்கு வரும். உலமா சபையின் வண்டவாளங்கள் யாவும் தண்டவாளம் ஏறும். இன்ஷா அல்லாஹ்! இன்னும் சில நாட்கள் பொறுத்திருப்போம்.

கெய்ரோ பல்கலைக் கழகம் உலமா சபையின் “பத்வா”வுக்கு அங்கீகாரம் வழங்கியிருப்பதாக ஒரு செய்தி உலமா சபை சார்பிலிருந்து வெளி வந்தது யாவரும் அறிந்ததே! அவ்வாறு ஓர் அங்கீகாரம் கிடைத்திருந்தால் அதுவே போதுமே! எதற்காக ஓடியோடி கையெழுத்தெடுக்க வேண்டும்? இது என்ன பயமுறுத்தலா? பனங்காட்டு நரி சலசலப்புக்கு அங்சாது. உலமா சபை இதை தெரிந்து கொண்டால் போதும்.

உலமா சபை “பத்வா” குழுவினரின் வயிறு பயத்தால் கலங்கிவிட்டது போலும். வயிறு கலங்கி “லூஸ் மோஷன்” ஏற்பட்டவனுக்கு மலம் கழிக்க மல கூடம் தேவையில்லை. அவன் சாலையிலும், சபையிலும் மலம் கழிக்க வெட்கப்படமாட்டான். இன்று உலமா சபைக்கு இந்நிலைதான் ஏற்பட்டுள்ளது.

“பத்வா” வழங்கிய முல்லாக்களுக்கு தமது “பத்வா” பிழையென்பது இப்போது விளங்கிவிட்டது. தமது தில்லுமுல்லுகள் மக்களுக்குத் தெரிந்து விட்டதென்பதும் அவர்களுக்கு இப்போது புரிந்து விட்டது. இதனால் அவர்களின் சிந்தனையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பயம் அவர்களைக் கவ்விப் பிடித்துக் கொண்டது.

இதனால் எப்படியாவது, என்ன சொல்லியாவது, எவரைப் பலிக் கடாயாக்கியாவது தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று அடம் பிடிப்பது போல் தாம் வழங்கிய “பத்வா”வை பலப்படுத்துவதற்காகவே கையெழுத்து எடுக்கிறார்கள்.

இவர்கள் ஓர் இலட்சம் கையெழுத்துக்கள் கொண்டு “பத்வா”வை “டெகரேஷன்” அழகு படுத்தினாலும் கிழவி கிழவிதான். “மேக்கப்” செய்வதால் கிழவி குமரியாவதில்லை. கையெழுத்தால் தலையெழுத்து மாறப் போவதுமில்லை.

உலமா சபையின் “பத்வா”வில் கையெழுத்து வைக்க விரும்புகின்ற உலமாஉகளே! ஷெய்குமார்களே! அறிஞர்களே! உங்களின் நெஞ்சில் விரல் குத்தி – கை வைத்து மனச் சாட்சியிடம் “பத்வா” கேட்டுச் செயல்படுங்கள். கையெழுத்து வைப்பதால் ஏற்படப் போகின்ற இலாப, நட்டங்களையும் சிந்தித்துச் செயல்படுங்கள்.

கையெழுத்தெடுப்பதிலும் ஓர் இருட்டடிப்பு உண்டு. அடுத்த தொடரில் அது அம்பலமாகும்.


தொடரும்…

RELATED ARTICLES

Most Popular

Recent Comments