Monday, October 14, 2024
Homeஎழுத்தாக்கங்கள்கையெழுத்து தலையெழுத்தை மாற்றாது!கிழவியை “மேக்கப்” செய்தாலும் கிழவி கிழவிதான்!

கையெழுத்து தலையெழுத்தை மாற்றாது!
கிழவியை “மேக்கப்” செய்தாலும் கிழவி கிழவிதான்!

தொடர் 02

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனக்கும், நான் கூறிய ஸூபிஸ ஞானக் கருத்தான “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை ஏற்றுக் கொண்டவர்ளுக்கும் எதிராக 1979ம் ஆண்டு நாங்கள் அனைவரும் மதம் மாறியவர்கள் என்று ஒரு “பத்வா” மார்க்கத் தீர்ப்பு வழங்கியது.

அத் தீர்ப்பில் நானும், நான் கூறிய கருத்தை ஏற்றுக் கொண்டவர்களும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றும், எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டடிருந்தது.

உலமா சபையின் இந்த “பத்வா”வினால் சுமார் 42 வருடங்களாக நானும், எனது ஆதரவாளர்களும் மத உரிமை, மற்றும் மனித உரிமைகளை இழந்து வாழ்கிறோம்.

நாங்கள் இலங்கைத் திரு நாட்டில் பரம்பரை முஸ்லிம்களாக 1979ம் ஆண்டு வரை அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்ந்து வந்தோம். இலங்கையில் எந்த ஊராயினும் அங்குள்ள பள்ளிவாயல்களில் தொழுது வந்தோம். எங்களுக்கு எந்த ஒரு தடையும் எவராலும் இருந்ததில்லை. இதேபோல் “ஜனாசா” மரணம் நிகழ்ந்த வீடுகளுக்குச் சென்று நல்லடக்கப் பணிகளில் கலந்து கொண்டோம். திருமண வீடுகள் சென்று அங்கு நடைபெறுகின்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டோம். இவைபோல் எந்த ஒரு தடையுமின்றி முஸ்லிம்களின் பள்ளிவாயல்களிலும், அவர்களின் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டோம். எங்களுக்குரிய மத, மற்றும் உரிமைகளை அரசாங்கம் பறிக்கவுமில்லை, வேறெவரும் பறிக்கவுமில்லை. நிம்மதியாக வாழ்ந்தோம். அல்ஹம்துலில்லாஹ்!

எனினும்1979ம் ஆண்டு நான் பேசிய “தஸவ்வுப்” ஸூபிஸ தத்துவத்தை – “வஹ்ததுல் வுஜூத்” எனும் மெய்ஞ்ஞானத்தை – தவறாகப் புரிந்து கொண்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எனக்கும், எனது கருத்தை ஏற்றுக் கொண்ட இந்நாட்டிலும், வெளி நாடுகளிலும் வாழ்கின்ற ஸூபிஸ ஞானத்தை – வஹ்ததுல் வுஜூத் தத்துவத்தை – ஏற்றுக் கொண்ட பல இலட்சம் மக்களுக்கும் “முர்தத்” மதம் மாற்றி “பத்வா” தீர்ப்பு வழங்கியது. உலமா சபைதான் அவர்களை மதம் மாற்றியதேயன்றி அவர்களாக மதம் மாறவில்லை.

அன்று முதல் இன்றுவரை அனைவரும் “முர்தத்” – மதம் மாற்றப்பட்டும் முஸ்லிம் சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்டும், மத உரிமைகள், மற்றும் மனித உரிமைகள் பறிக்கப்பட்டும் பல்வேறு கஷ்டங்களையும், இன்னல்களையும் அனுபவித்து வருகிறோம். இதே நொடி வரை அனுபவித்துக் கொண்டே வாழ்கிறோம்.

எங்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா செய்த அட்டூழியம், அநீதியெல்லாம் அரசாங்கத்திற்குத் தெரியாமலுமில்லை. இலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தெரியாமலுமில்லை. இலங்கையில் வாழும் பொது நலன் விரும்பிகளுக்கு தெரியாமலுமில்லை. இலங்கையிலுள்ள ஏனைய உலமாஉகளுக்கும் “தரீகா”வின் ஷெய்குமார்களுக்கும் தெரியாமலுமில்லை.

எனினும் இது தொடர்பாக அரசாங்கமோ, ஏனைய அமைப்புக்களோ, முஸ்லிம் தலைவர்களோ, முஸ்லிம் அரசியல்வாதிகளோ, ஷெய்குமார்களோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆயினும் ஷெய்குமார்களில் குப்பியாவத்தையில் சமாதி கொண்டுள்ள எனது ஞானகுருவான அஷ்ஷெய்கு அப்துல் காதிர் ஸூபீ ஹழ்றத் றஹிமஹுல்லாஹ் அவர்களும், கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீயும், எனது ஞானகுருவுமான அஸ்ஸெய்யிதுஷ்ஷெய்கு அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா றஹிமஹுல்லாஹ் அவர்களும், முஸ்லிம் அரசியல்வாதிகளில் முன்னாள் பிரதி அமைச்சர் சகோதரர் பரீத் மீரா லெப்பை, முன்னாள் ஆளுனர் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் மட்டும் இது தொடர்பாக தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டார்களாயினும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் குரங்குப் பிடி காரணமாகவும், மற்றும் இடையிலுள்ள ஊர் குழப்பிகளின் தலையீடு காரணமாகவும் எந்த ஒரு நல்ல முடிவும் எட்டப்படவில்லை. குறித்த ஷெய்குமார் இருவைரயும் என்றும் நான் மறவேன். அதேபோல் அரசியல்வாதிகள் இருவரையும் நான் பாராட்டுகிறேன். அவர்களின் முயற்சிக்காக நன்றியும் கூறுகிறேன்.

நானும், எனது ஆதரவாளர்களும் இந்நாட்டின் பரம்பரை முஸ்லிம்களாயிருந்தும், எங்களின் அரசியல் ஆவணங்கள் அனைத்திலும் நாங்கள் இலங்கை முஸ்லிம்கள் என்று உத்தியோக பூர்வமாக பதியப்பட்டிருந்தும் கூட எங்களுக்கு ஒரு நியாயம் கிடைக்காமலிருப்பது வேதனைக்குரியதேயாகும்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இதுவரை எங்களுக்குச் செய்த அட்டூழியமும், அநீதியும், அடக்கு முறையும் போதாதென்று மீண்டுமொரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சதி செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் முதல் கட்ட நடவடிக்கையாக 42 ஆண்டுகளுக்கு முன் எவரின் கையெழுத்துமின்றி அவர்கள் வழங்கிய “பத்வா”வுக்கு ஆதரவு தேடி தென் மாகாண உலமாஉகளிடமும், “தரீகா”வின் ஷெய்குமார்களிடமும் கையெழுத்துப் பிச்சை கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இலட்சியமும், குறிக்கோளும் மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி என்னையும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களையும் நசுக்குவதும், எங்களை – குறிப்பாக என்னைக் கொலை செய்வதுமேயாகும். இவர்கள் எங்களைக் கொலை செய்வார்கள் என்பதற்கான ஆதாரம் இவர்கள் தமது தீர்ப்பின் 20ம் பக்கம் எங்களைக் கொலை செய்ய வேண்டுமென்று எழுதியிருப்பதேயாகும்.

என்னையும், எனது ஆதரவாளர்களையும் மேலும் நசுக்குவதற்காகவும், கொஞ்சமேனும் மிஞ்சியுள்ள உரிமைகளைப் பறிப்பதற்காகவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 42 வருடங்களுக்கு முன் வழங்கிய தமது “பத்வா”வை சோடித்து பொது மக்களை ஏமாற்றி எங்களை நசுக்குவதற்காக தென்மாகாணத்தில் வீடு வீடாகச் சென்று கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளார்கள். உலமா சபையிலுள்ள வஹ்ஹாபிகளும், வெளியே உள்ள வஹ்ஹாபிகளும் ஒன்றிணைந்து எமக்கு எதிராகச் செயல்படத் துணிந்து விட்டனர்.

அரசாங்கம் இதைக் கவனத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லையானால் உலமா சபையின் நடவடிக்கையால் முஸ்லிம்களுக்கிடையில் பிளவும், பிரச்சினையும் உருவாக இடமுண்டு என்ற விடயத்தை கவலையுடன் கூறிக் கொள்கிறேன்.

42 வருடங்களுக்கு முன்னர் வழங்கிய “பத்வா”வுக்கு இப்போது கையெழுத்துச் சேர்த்து உலமா சபை எதைச் சாதிக்கப் போகின்றதென்று நான் அவர்களைக் கேட்கிறேன். ஓர் இலட்சம் ஒப்பம் எடுத்தாலும், ஓர் இலட்சம் பேர் ஒன்று திரண்டு எதிர்த்தாலும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை பொய்யாக்க உலமா சபையாலும் முடியாது, உலக நாடுகளாலும் முடியாது. அல்லாஹ் அருள் மறையில் கூறியுள்ள அகமியத்தை, அண்ணலெம் பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொன்ன தத்துவத்தை, குத்புமார், மற்றும் வலீமார் சொன்ன தத்துவத்தை எந்த ஒரு நபராலும் மறுக்கவும் முடியாது, மாற்றவும் முடியாது. உலமாஉகளின் இந்த முயற்சி “பித்னா” குழப்பத்திற்கு வழி வகுக்குமேயன்றி நல்லிணக்கத்தைக் கொண்டு வராது.

உலமா சபை முல்லாக்களின் “முர்தத்” பத்வாவுக்கு கையெழுத்திட்ட உலமாஉகளே!

முல்லாக்களின் “பத்வா” “தக்வா” இல்லாத வெறும் “பத்வா” என்பதையும், அது அவர்களின் மனோ இச்சையின் வெளிப்பாடு என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். “ஹஸத்” எனும் பொறாமைக்கு பொதுவாக உருவமில்லையாயினும் முல்லாக்களின் பொறாமைக்கு உருவமுண்டு. அதுவே التدسيس على التوحيد – “அத்தத்ஸீஸ் அலத் தவ்ஹீத்” “ஏகத்துவத்தில் ஊடுருவல்” என்ற அவர்களின் அர்த்தமற்ற நூலாகும். அல்லது அவர்களின் உருவத்தையே அதன் உருவமென்றும் கொள்ளலாம்.

எனது 78 வருட வாழ்வில் காத்தான்குடி உலமாஉகள் போன்ற பொறாமைக் காரர்களை நான் கண்டதேயில்லை.

“பத்வா” வழங்கியதும் பொறாமையின் வெளிப்பாடுதான். அதற்கு மெருகூட்டுவதற்காக கையெழுத்து வேட்டையில் இறங்கியிருப்பதும் அதன் வெளிப்பாடுதான். இன்னும் பல வெளிப்பாடுகளும் வெளியாகும்.

உலமாஉகளே! நீங்கள் “பத்வா”வில் கையெழுத்து வைத்திருந்தால் நீங்கள் அவர்களின் சதி வலையில் மாட்டிக் கொண்டீர்கள். இதன் தீமை எதுவென்று இன்னும் சில வாரங்களில் உங்களுக்குத் தெரிய வரும். நீங்கள் ஆழமறிந்து கால் வைத்திருக்க வேண்டும். தவறிவிட்டீர்கள். இன்பமோ, துன்பமோ அனுபவித்தே ஆக வேண்டும்.

முல்லாக்களின் “பத்வா”வுக்குகையெழுத்து வைக்கவுள்ள உலமாஉகளே! நீங்கள் கையெழுத்து வைப்பதால் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை பிழையாகப் போவதுமில்லை, வைக்காமல் விடுவதால் அது சரியாகப் போவதுமில்லை. ஏனெனில் இக் கொள்கை அல்லாஹ் திருக்குர்ஆனிலும், ஹதீது குத்ஸீயிலும், நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் பொன் மொழிகளிலும், அவ்லியாஉகள் தங்களின் பேச்சுக்களிலும் அறிவித்த கொள்கையாகும். இதைப் பல்கலைக் கழக வேந்தர்களாலோ, கலாநிதிகளாலோ, அறபுக் கல்லூரி அதிபர்களாலோ, ஆசிரியர்களாலோ, ஷெய்குமார்களாலோ எவராலும் மறுக்க முடியாது. உலகமே ஒன்று திரண்டாலும் கூட இதை மறுக்க முடியாதென்பதே உண்மை.

நீங்கள் கையெழுத்து வைப்பதோ, வைக்காமல் விடுவதோ உங்களின் விருப்பத்தைப் பொறுத்ததாகும்.

கௌரவத்திற்குரிய தரீகாவின் “ஷெய்கு”மார்களே! முல்லாக்களின் “பத்வா”வில் கையெழுத்து வைப்பதோ, வைக்காமல் விடுவதோ உங்களின் விருப்பத்தைப் பொறுத்ததாகும்.

ஆயினும் ஒன்றை மட்டும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். முல்லாக்கள் வழங்கியுள்ள “பத்வா” “ஹுலூல் – இத்திஹாத்” வழிகேடு என்பதற்கானதாகும். “வஹ்ததுல் வுஜூத்” பிழை என்பதற்கானதல்ல. ஆயினும் அதில் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை பேசிய எனது பெயரைக் குறிப்பிட்டுள்ளார்கள். இது அவர்கள் செய்த சதியும், இருட்டடிப்புமாகும். முல்லாக்கள் உங்களிடமிருந்து கையெழுத்தைப் பெற்றுக் கொண்டு அது “வஹ்ததுல் வுஜூத்” கொள்கை வழிகேடு என்பதற்கான “பத்வா” என்று பொது மக்களிடம் அவர்களை ஏமாற்றப் போகின்றார்கள். இதுவே நடக்கப் போகின்றது. இவ்வாறு நடந்தால் நீங்களும் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைக்கு எதிரானவர்கள் என்று பொது மக்களால் கணிக்கப்படுவீர்கள்.

எனவே, இவ்விடயத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments