தொகுப்பு: மௌலவீ MJM ஜஹானீ றப்பானீ
இஸ்லாத்தின் பார்வையில் மது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அன்னவர்கள் புனித தீனுல் இஸ்லாத்தை பிரகடனம் செய்ய முன் “ஜாஹிலிய்யா” காலத்தில் வாழ்ந்த மக்கள் மதுப் பிரியர்களாக காணப்பட்டனர். அவர்கள் மத்தியில் இஸ்லாமிய மார்க்கத்தைப் பிரகடனம் செய்ய வந்த பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அன்னவர்கள் ஒரே தடவையிலேயே மதுவை தடை செய்யவில்லை. முதலில் மதுவிலுள்ள தீமை பற்றி அல்லாஹ் கூறியதை விளக்கி வைத்தார்கள்.
يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ
(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். நீங்கள் கூறுவீர்களாக! “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரியது” (ஸூறதுல் பகறா 219)
இந்த திருவசனம் இறங்கப் பெற்றதும் சிலர் மதுவைத் தவிர்ந்து கொண்டனர். சிலர் பாவித்தனர். அடுத்த கட்டமாக அல்லாஹு தஆலா மதுபோதையில் உள்ள நேரத்தில் தொழுகைக்கு நெருங்க வேண்டாம் என்று கட்டளையிட்டான்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنْتُمْ سُكَارَى حَتَّى تَعْلَمُوا مَا تَقُولُونَ
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள். (ஸூறதுன் நிஸா 43)
மூன்றாவது கட்டமாகத்தான் அதை பின்வரும் திரு வசனங்கள் மூலம் முற்றாகத் தடை செய்தான்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ، إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?
(ஸூறதுல் மாயிதா 90, 91)
மதுப் பிரியர்களாக காணப்பட்ட அந்த மக்களை கட்டம் கட்டமாக அல்லாஹு தஆலா புனித தீனுல் இஸ்லாத்தின் வழிக்கு மாற்றியமைத்தான். மது போதைக்கு அடிமையான ஒருவரை எடுத்த எடுப்பிலேயே அந்தப் பழக்கத்தை விட்டும் விடுவிக்க முடியாது என்பதையே மேற் கூறப்பட்ட திரு வசனங்கள் மூலம் நாம் விளங்குகின்றோம்.
இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் மதுப் பாவனை ஒரு சதாரண ஒன்றாகவே காணப்படுகின்றது. அதன் தீய விளைவு பற்றியோ, அதை உபயோகிப்பதால் கிடைக்கவிருக்கின்ற இறை தண்டனை பற்றியோ, இஸ்லாமிய மார்க்கத்தில் மது பாவிப்பவருக்கு என்ன தண்டனை என்பது பற்றியோ சிந்திக்காமல் விரும்பியவர் பாவிக்கலாம், விரும்பாதவர் விட்டு விடலாம் என்றளவில்தான் காணப்படுகின்றது. அது மாத்திரமின்றி மதுபானம் அருந்துவதுதானே மார்க்கத்தில் விலக்கப்பட்டுள்ளது, வேறு பெயர்களில் நவீன கண்டுபிடிப்பாளர்களினால் சமுகத்தை சீர்கெடுக்கவென தயாரிக்கப்பட்ட பொருட்களை உபயோகிக்கலாம்தானே என்று இன்றைய சமூகம் அப்பொருட்களைப் பாவிப்பதால் ஏற்படும் உடல், உள ரீதியான பாதிப்புக்களை அறியாமலும், சமூகத்தில் தம்மோடு உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை உணராமலும், குறித்த போதைப் பொருட்களை உபயோகிப்பதால் தான் அதை விட்டும் மீள முடியாமல் தனது பொருளதாரமும் அழிந்து தானும், தன் தயவில் வாழும் மனைவி மக்களும் கஷ்டமான நிலைமைக்கு தள்ளப்படுவதை உணராமலும் உபயோகித்துக் கொண்டிருக்கின்றார்கள். அது மாத்திரமின்றி ஹெரோயின், ஐஸ் போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகி பாவிப்பதற்கு அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாமல் தாம் என்ன செய்கிறோம் என்பது கூடப் புரியாமல் தற்கொலை முயற்சி செய்யக்கூடிய நபர்களையும் நாம் காண்கிறோம்.
போதை வஸ்த்து எந்த உருவத்தில் வந்தாலும் அது பற்றிய தகவல் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே அதை உபயோகித்தல் தண்டனைக்குரிய குற்றமேதான். பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்.
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ»
போதை தரக்கூடிய அனைத்தும் “ஹறாம்” விலக்கப்பட்டதாகும்.
இந்த அடிப்படையில் இன்று சமூகத்திற்கு மிக ஆபத்தாக இருக்கின்ற ஹெரோயின், ஐஸ் போன்ற போதை வஸ்த்துக்களை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும். மட்டுமன்றி நமது பொறுப்பிலுள்ள இளைஞர்கள், உறவினர்களை அதில் விழுந்துவிடாமல் அவர்களுக்கு அறிவூட்டி அவர்களைக் காப்பாற்றுவதும் காலத்தின் தேவையாகும்.
பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “போதை தரக் கூடிய அனைத்தும்” என்ற சொல் கொண்டு அதிகம் உண்பதால் போதையை ஏற்படுத்தக் கூடிய பேரீத்தம் பழம் குறைந்தளவு சாப்பிடுவது “ஹறாம்” என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அதிகம் உண்பதால் ஒரு வகை போதை ஏற்படக் கூடிய புரியாணி சாப்பிடுவதும் “ஹறாம்” என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
போதை தரக்கூடிய திரவமான எதுவாயினும் அதன் அளவு போதையை ஏற்படுத்தாத அளவு குறைவாக இருந்தாலும் அது “ஹறாம்” விலக்கப்பட்டதுதான். உதாரணமாக சாராயத்தில் இருந்து ஒரு தேக்கரண்டி அளவு ஒருவன் குடிக்கின்றான். அதை பருகியதால் அவனின் மன நிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லையாயினும் அது “ஹறாம்” என்பதேயாகும்.
அதே நேரம், ஒரே நேரம் தரமான பேரீத்தம் பழம் 500 கிராம் அளவு சாப்பிடுவதால் ஒரு வகை போதையை ஏற்படுத்தும் என்று வைத்துக் கொள்வோம். ஒருவன் அந்த பேரீத்தம்பழத்தில் இரண்டு அல்லது மூன்று பழத்தை சாப்பிடுவதால் எவ்வித மாற்றமும் அவனின் மன நிலையில் ஏற்படவில்லையாயின் அது “ஹறாம்” அல்ல. “ஹலால்” என்பதேயாகும்.
ஒருவர் பேரீத்தம் பழம் “ஹலால்” தானே. பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சாப்பிட்ட பழம்தானே என்று கூறி அதை உண்பது கொண்டு தனக்கு ஏதோ ஒரு வகையான உணர்வு ஏற்படும் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு அதிகமாக சாப்பிட்டால் إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ அவருடைய எண்ணத்திற்குத்தான் கூலி கிடைக்கும்.
ஆகவே, ஸூபிஸ சமுகம் சார்ந்த இளைஞர்கள் போதை விடயத்தில் மிகக் கவனமாக நடந்து கொள்ளுமாறு உங்களுக்கு ஆலோசனை வழங்குகிறேன். உங்களின் பொன்னான நேரங்களை இப்படியான தீய பழக்க வழக்கங்களில் செலவிடாமல் ஆன்மீக விடயங்களில் செலவு செய்தீர்களாயின் ஈருலக பாக்கியங்களையும் அடைந்து கொள்வீர்கள். வாராந்தம், மாதாந்தம் நடைபெறும் விஷேட ஆன்மீக நிகழ்வுகள், மவ்லித் மஜ்லிஸ்கள், அவ்லியாஉகளின் தரிசனத்திற்கான புனித பயணங்கள் போன்றவற்றில் கவனமெடுத்து நம்மை நாமே மாற்றிக் கொள்வோம்.