أَيُّهَا الْعُلَمَاءُ الْمُتَحَيِّرُوْنَ الْمُتَرَدِّدُوْنَ فِى فَهْمِ مَعَانِيْ وَحْدَةِ الْوُجُوْدِ وَمَضْمُوْنِهَا! لَا تَغْتَرُّوْا بِعِبَارَاتٍ صَدَرَتْ مِنَ الْعَارِفِيْنَ وَالْمَجْذُوْبِيْنَ وَالصُّوْفِيِّيْنَ وَقْتَ فَنَائِهِمْ وَغَيْبَتِهِمْ فِى اللهِ تَعَالَى، وَلَا تُكَفِّرُوْهُمْ بِهَا، لِأَنَّهُمْ مَجْبُوْرُوْنَ بِهَا مِنَ اللهِ تَعَالَى، وَالْمَجْبُوْرُ لَا يُعَاقِبُهُ الشَّرْعُ لِعَدَمِ اخْتِيَارِهِ، وَكَذَلِكَ الْمُكْرَهُ،
“வஹ்ததுல் வுஜூத்” கருத்துக்களையும், அதன் சாராம்சத்தையும் விளங்கிக் கொள்வதில் தடுமாறியும், தடம் புரண்டும் நிற்கின்ற மார்கக் அறிஞர்களே!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல்_ ஆலீ) _
இறைஞானிகளும், ஸூபீ மகான்களும், “மஜ்தூப்”களும் இறைவனில் “பனா” அழிந்தும், அவனில் மறைந்தும் இருக்கும் நேரத்தில் அவர்களால் வெளிவரும் வசனங்களைக் கொண்டு நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். அவற்றை ஆதாரங்களாகக் கொண்டு அவர்களை காபிர்களாக – மதம் மாற்றியும் விடாதீர்கள். ஏனெனில் அவர்கள் அளைவரும் அந் நிலையில் அவ்வாறு சொல்லுமாறு பலாத்காரமாக ஏவப்பட்டவர்களாவர். பலாத்காரம் செய்யப்பட்டவனை “ஷரீஆ” குற்றம் பிடிக்காது. குற்றவாளியாவதாயின் அக்குற்றத்தை அவன் விரும்பியே செய்ய வேண்டும்.
நபீமார், வலீமார், ஸூபீ மகான்கள் போன்றோர் தமது “இக்தியார்” சுய விருப்பத்தின் படி எதையும் செய்வதில்லை. அல்லாஹ்விடமிருந்து “ஆடர்” வந்தால் மட்டுமே செய்வார்கள். இதனால்தான் நபீ மூஸா அலைஹிஸ்லாம் அவர்களும், நபீ அல்லது வலீ கழிர் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ஒன்றிணைந்து செய்த பயணத்தின் போது கடலில் சென்ற கழிர் நபீ அவர்கள் கடலில் சென்ற கப்பலுக்கு ஓட்டை போட்டுவிட்டு, தெருவில் நின்ற ஒரு சிறுவனின் தலையைத் துருவி அவனைக் கொலை செய்து விட்டு, தரையில் விழுவதற்கு சாய்ந்திருந்த சுவரை கூலி பெறாமல் நிமிர்த்தி விட்டு وَمَا فَعَلْتُهُ عَنْ أَمْرِيْ எனது விருப்பத்தின்படி நான் செய்யவில்லை என்று சொன்னார்கள். அல்லாஹ் செய்யச் சொன்னான். நான் செய்தேன் என்றார்கள். இவ்வாறு இறை கட்டளையோடு செய்தவர் குற்றவாளியாகமாட்டார்.
இவ்வாறுதான் நான் மேலே சொன்ன நபீமார், வலீமார், ஸூபீ மகான்களுமாவர்.
அவர்கள் தமது “பனா” நிலைகளில் ஒலிபெருக்கி சாதனம் போல் இருப்பார்கள். “மைக்” ஒலிவாங்கி அவர்களிடமிருக்காது. கேள்விக்குரியவன் பேசுகின்ற ஒலிவாங்கி முன் நிற்பவனேயாவான். “ஸ்பீக்கர், பொக்ஸ்” போன்ற ஒலி பெருக்கி சாதனங்கள் அல்ல.
ஒலிவாங்கி முன் நிற்பவன் “அனல் ஹக்” நானே மெய்ப் பொருள் என்று சொன்னால், அல்லது مَا فِى الْجُبَّةِ إِلَّا اللهُ எனது “ஜுப்பா” சட்டையில் அல்லாஹ்தான் உள்ளான் (எனது சட்டையாக அல்லாஹ்தான் உள்ளான்) என்று சொன்னால் “ஸ்பீக்கர்” ஐ அல்லது “பொக்ஸ்” ஐ உடைப்பதில் என்ன பயன்? ஒலி வாங்கி முன் நின்று கதைப்பவனையல்லவா கேட்க வேண்டும். لَا يُسْئَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْئَلُوْنَ அல்லாஹ் செய்வது பற்றி அவனிடம் கேட்கப்படமாட்டாது. அடியார்கள்தான் கேட்கப்படுவார்கள். (திருக்குர்ஆன் 21-23)
மேற்கண்ட திரு வசனத்திற்கு இரு கருத்துண்டு. ஒன்று வெளிக்கருத்து. மற்றது உட்கருத்து. இதன் வெளிக்கருத்து என்னவெனில் அல்லாஹ் எது செய்தாலும் அவனிடம் கேட்கப்படமாட்டாது. அல்லாஹ்விடம் கேள்வி கேட்க யார் இருக்கிறார்? அடியார்கள்தான் கேட்கப்படுவார்கள். அவர்களிடம் அல்லாஹ் கேட்பான்.
இன்னொரு கருத்துண்டு. அதாவது ஒருவன் அல்லாஹ்வில் “பனா” ஆகி அடியான் இல்லாமற் போய் அல்லாஹ் அடியானின் கேள்வியாகவும், பார்வையாகவும், கையாகவும், காலாகவும் ஆகிவிட்டால் அவ்வேளை அடியான் இல்லை. அடியான் இல்லாமற் போய்விட்டான். அந்நேரம் இருப்பவன் அல்லாஹ்தான். அவனிடம் யார் கேட்பது? இவ்வாறும் ஒரு கருத்து உண்டு.
அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
إِنْ تَغَيَّبْتُ بَدَا – وَإِنْ بَدَا غَيَّبَنِيْ
நான் மறைந்தால் அவன் வெளியாவான். அவன் வெளியானால் என்னை மறைத்துவிடுவான்.
பகல் நேரத்திலும் வானில் நட்சத்திரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆயினுமவை ஆதவன் வெளிச்சத்தில் தெரிவதில்லை. ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. சூரியன் உதித்ததும் அதன் வெளிச்சம் இருந்தாலும் தெரிவதில்லை.
இமாம் மன்சூர் ஹல்லாஜ் “அனல்ஹக்” நானே அல்லாஹ் என்றார்கள். அவர்களா அவ்வாறு சொன்னது? இல்லை. அவர்கள் ஒலிபெருக்கிதான். அல்லது ஒரு “பொக்ஸ்”தான். ஒலிவாங்கியில் அவ்வாறு ஒலித்தவன் மன்சூர் ஹல்லாஜ் இல்லை. அவர்கள் தன்னுணர்வில் மரணித்துவிட்டார்கள். மரணித்தவர் எவ்வாறு பேசுவார்? அன்று அவர்கள் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டும். அவ்வேளை இருந்த இவர் போன்றவர்கள் மௌனிகளாயினர்.
எனக்கும், எனது கருத்தைச் சரி கண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று தீர்ப்புக் கொடுக்கப்பட்டதல்லவா? அவ்வேளை இந்நாட்டில் ஆலிம்கள் இருக்கவில்லையா? நள்ளிரவில், நடு நிசியில், இருட்டிலா தீர்ப்புக் கொடுக்கப்பட்டது? இல்லையே! பல்லாயிரம் ஆலிம்கள் அவ்வேளை உயிருடன் இருந்தார்கள்தானே! என்ன செய்தார்கள். ஒருவராவது ஆதரவாக குரல் கொடுத்தாரா? இல்லையே! ஆயினும் இவர்கள் மேடை ஏறினால் தீனுக்காக உயிர், உடல், பொருள் யாவையும் தியாகம் செய்ய வேண்டுமென்று முழங்குவார்கள். சந்தர்ப்பம் வந்தால் கழுவும் மீனுடன் நழுவிச் செல்லும் மீனாகிவிடுவார்கள்.
நான் மேலே குறிப்பிட்டது போல் அவ்லியாஉகள், அன்பியாஉகள், மஜ்தூப்கள் பல நிலைகளில் இருப்பார்கள். சிலர் “அல்அஸ்மாஉல் ஜலாலிய்யா” ஜலாலிய்யத் மிகைத்தவர்களாயிருப்பார்கள். இன்னும் சிலர் “அல்அஸ்மாஉல் ஜமாலிய்யா” ஜமாலிய்யத் மிகைத்தவர்களாயிருப்பர். இன்னும் சிலர் “தஷ்பீஹ்” இல் “பனா” ஆகிவிடுவார்கள். அபூ யஸீத் பிஸ்தாமீ “தன்ஸீஹ்” இல் “பனா” ஆனதினால்தான் سُبْحَانِيْ مَا أَعْظَمَ شَأْنِيْ என் தூய்மை என்னே! என் தூய்மை என்னே! என் வலுப்பம் என்னே! என்று முழங்கினார்கள். “தஷ்பீஹ்” இல் “பனா” ஆனதினால்தான் வலீமார்களிற் பலர் நானே பாம்பு, நானே பாம்பாட்டி, நானே மகுடி என்று முழங்கினார்கள்.
இவ்வாறு “பனா” ஆனவர்கள் எதார்த்தத்தில் அவ்வேளை “முகல்லப்” அல்லர். மார்க்கச் சட்டம் என்பது “முகல்லப்” என்பவனுக்கேயன்றி பைத்தியக் காரனுக்கல்ல. இறை காதல் என்பது ஒரு வகைப் பைத்தியம்தான்.
இதனால்தான் மன்சூர் அல்ஹல்லாஜ் அவர்களின் பின்னர் தோன்றிய முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (ஹிஜ்ரீ 470-561)அவர்களும், ஹுஜ்ஜதுல் இஸ்லாம் இமாம் ஙஸ்ஸாலீ அவர்களும் (ஹிஜ்ரீ 450-505) நாங்கள் ஹல்லாஜுடை காலத்தில் உயிருடன் இருந்திருந்தால் அவர் கொல்லப்படாமல் கை கொடுத்திருப்போம் என்று கூறினார்கள்.
உலகில் சுமார் 300க்கும் மேற்பட்ட “தரீகா”க்கள் இருந்தன. அவற்றில் சில காலப் போக்கில் மறைந்துவிட்டன. இன்னும் சில போலி உலமாஉகளால் மறைக்கப்பட்டுப் போய்விட்டன. எனினும் இன்றுவரை உயிர் வாழும் தரீகாக்கள் 200க்கும் அதிகமானவை உள்ளன. அவற்றிலும் சில மங்கி மறையும் கட்டத்தில் உள்ளன. இன்னும் சில தேஞ்சி தேஞ்சி விரல்விட்டு எண்ணக் கூடியவர்களைக் கொண்டதாக உள்ளன.
எனினும் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றதும், அதிக ஆதரவாளர்களைக் கொண்டதும் காதிரிய்யா, ஷாதுலிய்யா, ஜிஷ்திய்யா, ரிபாஇய்யா, ஸுஹ்றவர்திய்யா, ஷத்தாரிய்யா, அக்பரிய்யா, தீஜானிய்யா போன்றவையேயாகும்.
இறைஞான மகான்களிற் சிலர் தமது “பனா” நிலையில் لَا مَوْجُوْدَ إِلَّا اللهُ “அல்லாஹ் தவிர எதுவுமில்லை” என்பது பிழையென்று சொல்லிவிடுவார்கள். இமாம் ஸெய்யிதுத் தாயிபா ஜுனைத் அல்பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள், لوكنت حاكما لضـربت عنق من سمعته يقول لا موجود إلا الله நான் நீதிவானாயிருந்தால் “லா மவ்ஜூத இல்லல்லாஹ்” (அல்லாஹ் அன்றி ஒன்றுமில்லை) என்று சொன்னவனின் கழுத்தை துண்டிப்பேன் என்று கூறியதாக ஒரு வசனம் நடமாடுகிறது. அவர்கள் அவ்வாறு சொன்னது உண்மையா? அல்லது “வஹ்ததுல் வுஜூத்” ஞான எதிரிகளின் கற்பனையா? அல்லது அவர்கள் சொன்னதாக அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்டதா? என்பது எமக்குத் தெரியாது. எனினும் அவ்வாறு அவர்கள் சொல்லியிருந்தால் அது அவர்கள் “தன்ஸீஹ்” நிலையில் “பனா”வாயிருந்த நேரம் சொல்லியிருக்கலாம். இதை நாம் ஆதாரமாக கொள்ள முடியாது. 100 வீதம் அவர்கள் தெளிவான நிலையிலிருந்து அவ்வாறு சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை. அவர்கள் அவ்வாறு சொன்னது சரிதான் என்று ஒரு இறைஞானி சொல்வாராயின் அவர் திருக்கலிமாவின் சரியான பொருள் தெரியாத போலி ஞானியாகவே இருப்பார். ஏனெனில் திருக்கலிமாவின் சரியான பொருள் “அல்லாஹ் அல்லாத ஒன்றுமில்லை” என்பதேயாகும். இது தொடர்பாக “அல்பர்கதுல் பரீத் பீ ஷர்ஹி கலிமதித் தவ்ஹீத்” என்ற பெயரில் அறபு மொழியில் நான் ஒரு நூல் எழுதி அச்சிட்டு இலங்கை, இந்தியாவிலுள்ள உலமாஉகளுக்கும், அறபுக் கல்லூரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளேன். அதில் முழு விபரமும் உண்டு.
“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தைக் கரைத்தக் குடித்த, தமது நூல்களில் “எல்லாம் அவனே” என்றும் எழுதிய பலர் “பனா” நிலையில் அதாவது “தன்ஸீஹ்” நிலையில் “பனா”வான நேரம் தமது கொள்கைக்கு மாறாகச் சொல்லியுள்ளார்கள் என்றும், அவ்வாறு அவர்கள் சொன்னதை நாம் ஏற்றுக் கொண்டும் அதற்கு விளக்கம் கூற வேண்டும். பின்னால் நான் எழுதவுன்ன வசனங்களைக் கவனிக்க வேண்டும்.
قال الشّيخ الأكبر محي الدين ابن عربي فى الباب الثاني والسبعين والثلاثمأة، وبالجملة فالقلوبُ به هائمةٌ، والعقولُ فيه حائرةٌ، يُريد العارفون أن يفصلوه تعالى بالكليّة عن العالم مِن شدّة التنزيه فلا يقدرون، ويُريدون أن يجعلوه عينَ العالم مِن شِدّة القُرب فلا يتحقّق لهم، فهُم على الدوام مُتحيّرون، فتارة يقولون هُوَ، وتارة يقولون مَا هُوَ، وتارة يقولون هُوَ مَا هُوَ، وبذلك ظَهَرَتْ عظمتُه تعالى، (اليواقيت، ج أول، ص 58)
ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ பின்வருமாறு கூறியுள்ளார்கள். அல்லாஹ்வின் விடயத்தில் உள்ளங்கள் அழுகின்றன. புத்திகள் தடுமாறுகின்றன. இறைஞான மகான்கள் கடும் “தன்ஸீஹ்” என்ற வகையில் அல்லாஹ் வேறு, உலகம் வேறு என்று இரண்டையும் பிரித்துப் பேச நினைக்கிறார்கள். அதற்கவர்களால் முடியாதுள்ளது. அதேபோல் கடும் “தஷ்பீஹ்” என்ற வகையில் அல்லாஹ்வும் உலகமும் ஒன்றுதான் என்று கூற நினைக்கிறார்கள். அதற்கும் அவர்களால் முடியாதுள்ளது. இதனால் எப்போதும் அவர்கள் இவ்விடயத்தில் தடுமாற்றமுள்ளவர்களாகவே உள்ளனர். சில நேரம் ஹக்கும், கல்கும் ஒன்றுதான் என்பார்கள். இன்னும் சில நேரம் அவ்வாறில்லை என்பார்கள். இன்னும் சில நேரம் அவ்வாறும்தான், இவ்வாறும்தான் என்பார்கள். இதன் மூலம் அல்லாஹ்வின் வல்லமைதான் வெளிப்படுகிறது.
ஆதாரம்: அல்புதூஹாதுல் மக்கிய்யா
பாடம், 372,
அல்யவாகீத்: பக்கம்: 58, பாகம்: 01
சுருக்கம் என்னவெனில் اَلْوُجُوْدُ عَيْنُ الْمَوْجُوْدِ படைப்பு படைத்தவன் தானானது என்பதேயாகும். இறைஞானிகள் யாராவது சில நேரம் இதற்கு மாறாக சொன்னார்களாயின் அது அவர்களின் ஆன்மிக நிலை மாற்றங்களில் உள்ளதாகுமேயன்றி எதார்த்தம் அதுவல்ல.