1966 – 67 களில் நான் இந்தியா – தமிழ் நாடு வேலூர் “அல் பாகியாதுஸ் ஸாலிஹாத்” அறபுக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன். என்னுடன் தமிழ் நாடு அதிராம் பட்டணத்தைச் சேர்ந்த அப்துல் பத்தாஹ் என்பவரும் ஓதிக் கொண்டிருந்தார். நாங்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். நான் பெரிய வகுப்பிலும், அவர் சிறிய வகுப்பிலும் கல்வி கற்றாலும் இருவரும் ஓர் அறையிலேயே தங்கியிருந்தோம்.
நான் இலங்கை நாட்டுக்கு வந்த பிறகு அவருடன் கடிதத் தொடர்போடுதான் இருந்தேன். அதன் பின் சுமார் 20 வருடங்களின் பிறகு 1989ம் ஆண்டுதான் அவரை நேரில் சந்தித்தேன். அவ்வேளை அவர் சென்னை மஸ்ஜித் மஃமூர் எதிரில் அங்கப்ப நாயகன் தெருவில் கடை வைத்திருந்தார். ஏதோ ஒரு பத்திரிகை ஆசிரியராகவும் இருந்தார்.
ஹைதறாபாத் அஷ்ஷெய்கு நூரிஷாஹ் அவர்களின் தரீகாவின் ஒரு “கலீபா”வாகவும் இருந்தார்.
சென்னையில் சில நாட்கள் அவருடன் தங்கியிருந்தேன். அவருக்கும், எனக்கும் இறைஞானம் வெளிப்படையாகவும், படிக்காதவர்கள் மத்தியிலும் பேசுவது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருந்தன. எனினும் நாங்கள் ஒற்றுமையாகவே இருந்தோம்.
அவர் “ஷரீஆ” வை முதலில் மக்கள் மத்தியில் கூறி அவர்களை அதில் நிலை பெறச் செய்த பிறகுதான் அவர்களுக்கு இறைஞானம் சொல்லிக் கொடுக்க வேண்டும், அதற்கு முன் சொல்லிக் கொடுக்கலாகாதென்ற கருத்துள்ளவராக இருந்தார். நானோ ஒரே நேரத்தில் இரண்டையும் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்ற கருத்துள்ளவனாக இருந்தேன்.
சென்னையிலிருந்து அவரைப் பிரியும் போது நான் இலங்கை சென்ற பின் உங்களுக்கு எனது கருத்து தொடர்பாக ஒரு கடிதம் எழுதுவேன் என்று கூறிவிட்டு இரு வருடங்களின் பின் 1989ம் ஆண்டு அவருக்கு அறபியில் ஒரு கடிதம் அனுப்பி வைத்தேன்.
அதில் எனது கருத்தை வலியுறுத்தி அதற்கான ஆதாரங்களுடன் நான் அனுப்பிய அறபுக் கடிதமே இக்கடிதம்.
நண்பருக்கு எனது கடிதம் கிடைத்த பின் அதை ஹைதறாபாத்திலிருந்த தனது ஷெய்கு அவர்களுக்கு அவர் அனுப்பியிருந்தார்.
அவர்கள் அதை வாசித்து விட்டு இவர் கூறுவதிலும் அர்த்தமுண்டு என்றும், இவரை எனது மரணத்திற்கு முன் ஒரு தரமாவது சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள். ஆயினும் அதற்கு முன் இறையடி சேர்ந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
சுமார் 33 வருடங்களின் பின் 1989ம் ஆண்டு எழுதிய கடிதத்தின் பிரதியொன்று எனது பழைய ஆவணங்களுள்ள பெட்டியிலிருந்து நேற்று 20.02.2022 எனக்கு கிடைத்தது.
இக்கடிதம் இக்கால கட்டத்திற்கு மிகப் பொருத்தமானதென்று நான் உணர்ந்ததால் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தை பகிரங்கமாகப் பேசக் கூடாதென்று அடம் பிடிக்கும் உலமாஉகளின் நன்மை கருதி இதை வெளியிடுகிறேன்.
இந்தக் கடிதத்தின் தமிழாக்கமும், இது தொடர்பான ஏனைய விளக்கங்களும் விரைவில் வெளிவரும். இன்ஷா அல்லாஹ்!
காதிமுல் கவ்மி,
மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ
21.02.2022