துவைதம் எனும் வைரஸால் மூளை தாக்கப்பட்ட ஹிஷாம் பத்தாஹீ வேதனை தாங்க முடியாமல் எடுக்கும் வாந்திதான் “மத்ஸூஸ்”
தொகுப்பு: மௌலவீ MJM ஜஹானீ றப்பானீ
“வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தின் “கிங்” என்று உலகறிந்த மா மேதை அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பிரசித்தி பெற்ற நூல்களான “அல்புதூஹாதுல் மக்கிய்யா”, மற்றும் “புஸூஸுல் ஹிகம்” போன்ற நூல்களில் “ஈமானைப் பறிக்கக் கூடிய மிகப் பயங்கரமான வழிகெட்ட கருத்துக்கள் உள்ளதையும் உண்மையான ஸூபீகளால் மறுக்க முடியாது என்பதே நிதர்சனமாகும். இவ்வாறான கருத்துக்களால்தான் உங்களைப் போன்ற (அத்வைதிகள்) சிலர் வழி கெட்டுப் போனார்கள் என்பதும் உண்மையே” என்று பிறைக் குழுவின் தலைவர் ஹிஷாம் பத்தாஹீ தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான கருத்துக்களின் உண்மை நிலை என்ன என்று அவரே தெளிவுபடுத்துகிறார். அக்கருத்துக்கள் இஸ்லாத்தின் விரோதிகளால் பொய்யாக புனையப்பட்டதாகும். அல்லது அக்கருத்துக்களின் வெளிரங்கம் “குப்ர்” ஆக இருந்த போதிலும் சங்கையான ஸூபீ மகான்களின் “இஸ்திலாஹாத்” அடிப்படையில் ஷரீஆவுக்கு முரணில்லாத சரியான அர்த்தம் ஒன்று இருக்கலாம்.
அன்பின் தரீகாவாதிகளே! ஸூபீகளே!
ஸூபிய்யாக்களின் நூற்களில் உள்ள கருத்துக்களை விளங்கிக் கொள்ள அவர்களின் பரிபாஷை – கலைச் சொல் தெரிந்திருத்தல் அவசியம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்த “இஸ்திலாஹாத்” பரிபாஷைகளை அறிந்து அவர்களின் நூற்களை வாசித்து ஸூபிஸ வழியில் பயணிப்பது சரியா? தவறா? இதுதான் இன்றுள்ள கருத்து மோதல்களுக்கு காரணம்.
ஹிஷாம் பத்தாஹீயும், அவர் சார்ந்த முல்லாக்களும் வீட்டு முற்றத்தில் கூண்டிலடைக்கப்பட்டிருக்கும் பச்சைக் கிளி போல் ஸூபிஸம் சரி என்றும், ஸூபீயாக்கள் சரியானவர்கள் என்றும் சொல்லிவிட்டு 40 நாட்கள் “சில்லா” போவதில் அர்த்தமில்லை.
இவ்வாறு அவர்கள் கூறுவதும் கூட உள்ளத்தால் ஸூபிஸத்தையோ, ஸூபீகளையோ சரிகண்டும், நேசித்தும் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதுகாலவரை ஸூபிஸத்தைப் பற்றியோ, ஸூபிஸ நூற்கள் பற்றியோ வாய் திறக்காத இவர்கள் இன்று வாய் திறப்பதன் நோக்கம் என்னவென்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஸூபீயாக்களின் நூற்களை எல்லோரும் விளங்கி அவ்வழி பயணிக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் பரிபாஷையறிந்த இமாம்கள், நாதாக்கள் அவற்றில் காணப்படும் கருத்துக்களை தமது நூற்களில் குறிப்பிட்டு விளக்கமும் எழுதியுள்ளார்கள். உதாரணமாக இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ அவர்களின் “அல்யவாகீத் வல் ஜவாஹிர்” என்ற கிரந்தத்தை எடுத்துக் கொண்டால் அதில் ஸூபிய்யாக்களின் கொள்கைகள் பற்றியே விபரித்துள்ளார்கள். அந்த நூலின் முன் பக்கத்திலேயே பின்வருமாறு எழுதியுள்ளார்கள். اليواقيت والجواهر فى بيان عقائد الأكابر “அல்யவாகீத் வல் ஜவாஹிர் – பெரியார்களின் கொள்கைகளை விளக்கி வைத்தல்”.
பூணை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருள் என்று சொல்வது போல் அவர்களின் குறிப்பாக இப்னு அறபீ நாயகம் அவர்களின் நூற்களில் உள்ள கருத்துக்களை பார்க்க கூடாது. அவற்றை எடுத்து நடக்க கூடாது. ஷரீஅத்துக்கு முரண்பட்டு விடும். அவற்றுக்கு உள் அர்த்தம் இருக்கும் என்று கூறிவிட்டு நகர்ந்து செல்வதில் அர்த்தமில்லை. இது ஒரு அறிஞனுக்கு அழகில்லை. “எனக்குத் தெரியாதென்பது அறிவின் பாதி” என்று சொல்லப்படுவதுபோல் தமக்குத் தெரியாவிட்டால் தெரியாதென்று கூறுவதில் என்ன வெட்கம்?
அதேபோல் ஸூபிய்யாக்களின் நூற்களில், குறிப்பாக இப்னு அறபீ நாயகத்தின் “புதூஹாத்”, மற்றும் “புஸூஸ்” போன்றவற்றில் யூதர்களால் பொய்யாக புனையப்பட்ட கருத்துக்கள் உள்ளன என்று கூறுவதற்கு யார் தகுதியுடையவர்? என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஹிஷாம் பத்தாஹிக்கும், அவர் சார்ந்த முல்லாக்களுக்கும் அவ்வாறு கூற முடியாது. அறிஞர்கள் தங்களின் நூற்களில் கூறியுள்ளார்கள் என்பதால் நாமும் கூறுகின்றோம் என்று கூறலாமே தவிர குறித்த இந்தக் கருத்து “மத்ஸூஸ்” பொய்யாக புனையப்பட்டது என்று கூறுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. அவ்வாறு கூறுவதாயின் ஒரு வசனத்தைச் சுட்டிக் காட்டி இந்த வசனம் “மத்ஸூஸ்” பொய்யாகப் புனையப்பட்டது என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இமாம்களால், ஸூபீகளால் சொல்லப்பட்டடிருக்க வேண்டும். அவ்வாறு கூறப்பட்ட கருத்துக்களையே நாம் கூற முடியுமே தவிர நமக்குத் தெரியாதென்பதற்காக, நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தங்களின் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு வசனத்தை அல்லது கருத்தை “மத்ஸூஸ்” பொய்யாகப் புனையப்பட்டதெனக் கூறி நகர்ந்து விட முடியாது.
வயிற்றோட்டம் பிடித்தவன் ஓடித்திரிவது போல் ஸூபிஸம் சம்பந்தமாக இடையிடையே தெரிந்தோ தெரியாமலோ தவறான கருத்துக்களை வெளியிட்டு வருவது உண்மையில் ஸூபிஸத்தை மக்களுக்கு போதிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அல்ல. எப்படியோ “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவம் ஸூபிஸம் அல்ல என்று காட்டி தங்களின் பட்டம், பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்கேயாகும். இறுதி நாள் நெருங்கும் போது தோன்றக் கூடிய தஜ்ஜாலை விடக் கேடான الأئمة المضلون வழி கெடுக்கும் தலைவர்கள் – உலமாஉகள் என்று எம்பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பயந்தது இவர் போன்ற வழிகாட்டி என்ற போர்வையில் வழிகெடுப்பவர்களையேயாகும்.
பகிரங்க சவால்:
பிறைக்குழுவின் தலைவர் மௌலவீ ஹிஷாம் பத்தாஹீ அவர்கள் முடிந்தால் “ஐனிய்யத்” படைத்தவனும், படைப்பும் ஒன்று என்ற கருத்தைக் காட்டக் கூடிய இப்னு அறபீ நாயகம் அவர்களின் நூல்களில் வரக் கூடிய கருத்துக்கள் “மத்ஸூஸ்” பொய்யாக புனையப்பட்டவை என்று அக்கருத்துக்களைச் சுட்டிக் காட்டி ஏற்றுக் கொள்ளப்பட்ட, உலகப் பிரசித்தி பெற்ற ஸூபீகள், இமாம்கள் எவராவது குறிப்பிட்டிருந்தால் அதை எடுத்துக் காட்டுங்கள். மாறாக மொட்டையாக கருத்துக்களை தெரிவித்து விட்டு அத்வைத கருத்துக்களை காட்டக் கூடிய வசனங்கள் யூதர்களால் பொய்யாக புனையப்பட்டதென்று கூறி நழுவிச் செல்ல வேண்டாம்.
அதேபோல் ஒரு தலைப்பில் கூறப்பட்ட விடயத்தின் சாரத்தையே கூற வேண்டும். அதில் உங்களின் வழிகெட்ட துவைதத்தைக் காட்டக் கூடிய வசனத்தை முன் பின் தொடரின்றி காட்டிவிட்டு அதை உங்களுக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளவும் வேண்டாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
உலகத்துக்காக ஸூபீ வேடம் போடாமல் ஸூபீகள் அனைவருமே “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற அத்வைதம் பேசியவர்கள் என்பதை ஏற்று ஒன்றோ அதை ஏற்று நல்வழி வாழுங்கள். அல்லது அதை மறுத்து – ஸூபிஸத்தை மறுத்து கடந்த காலங்களில் நீங்கள் பயணித்த அதே வழியில் தொடர்ந்தும் பயணியுங்கள். இதை விடுத்து ஸூபிஸம் உண்மைதான். ஆனால் அத்வைதம் ஸூபிஸமல்ல என்று வாதிட்டு உங்களை நீங்களே கேவலப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுரை வழங்குகிறோம்.
أَيْنَمَا تَكُونُوا يُدْرِكْكُمُ الْمَوْتُ وَلَوْ كُنْتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ
“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!” (04 -78)
ஸூபீ வேடம் போட்டால் தப்பித்து விடலாம் என்ற தவறான எண்ணத்தை கைவிட்டு எக்கொள்கையாயினும் உண்மையை – உங்கள் கொள்கையை பேசுங்கள். உள்ளத்தில் ஒன்றும், நாவில் ஒன்றும் இருக்க மாறு வேடம் போட்டு உங்களையும், உங்கள் அமைப்புக்களையும் காப்பாற்றலாம் என்று எண்ணாதீர்கள்!
وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
அல்லாஹ் சதிகாரர்களுக்கெல்லாம் சதி காரன். (03-54)
ஸூபிஸக் கலையில் உலகப் பிரசித்தி பெற்ற மகான்களுக்குத் தெரியாத ஞானம் இந்த ஹிஷாம் பத்தாஹீக்கு தெரிந்தது எவ்வாறு? கீழே கூறப்பட்டுள்ள கூற்றுக்கள் ஸூபீகள் என்று புகழ் பெற்றவர்களால் இப்னு அறபீ நாயகம் அவர்களின் நூலில் கூறப்படும் கருத்துக்கள் தொடர்பாக கூறப்பட்டவையாகும். பதிலளிக்க முடியாமல் இவைகளும் இட்டுக்கட்டப்பட்டவை என்றோ அல்லது அவர்கள் “பனா” உடைய நிலையில் கூறினார்கள் என்றோ கூறிவிடாதீர்கள் பிறைக்குழு தலைவர் அவர்களே!
وجعل الصوفيّة قولَ ابن عربي هو القولَ الفصلَ، والمعتمدَ فى مسائل التصوّف، وصار مِقْياسَ العلم بالتصوّف هومقدارُ ما يستوعب الصوفيُّ من آراء ابن عربي، بل اعتقدوا أنّ إدامةَ مطالعةِ كتبِه تجعل المرأ وليّا عارفا بالله كما يزعمون، (مراتب الوجود للجيلي، ص – 9 )
ஸூபிய்யாக்கள் இப்னு அறபீ நாயகத்தின் சொல்லையே இறுதி முடிவாக எடுத்துக் கொள்கின்றார்கள். ஸூபிஸம் சம்பந்தப்பட்ட விடயங்களில் அவர்களின் சொல்லையே நம்பத்தகுந்த வார்த்தையாகவும் எடுத்துக் கொள்கின்றார்கள். ஒரு ஸூபீயின் தஸவ்வுப் பற்றிய அறிவின் அளவுகோல் அவர் இப்னு அறபீ நாயகத்தின் கருத்துக்களை எந்தளவு புரிந்து கொள்கின்றாரோ அந்த அளவு ஆகும். இல்லை. இப்னு அறபீ நாயகத்தின் நூற்களை ஒருவன் தொடர்ந்து படித்து வருவதால் அவனை அல்லாஹ்வை அறிந்த வலிய்யாக ஆக்கும் என்று நம்புகின்றார்கள்.
(மறாதிபுல் வுஜூத் லில் ஜீலீ, பக்கம் – 9)
وباختصارٍ فقد صار ابن عربي (بُرهان متقدّمي هؤلاء الطائفة، وحُجّةَ متأخِّرِيهم)
(المكتوبات للسّرهندي، 2 ஃ5 )
சுருங்கக் கூறின் இப்னு அறபீ நாயகம் இக் கூட்டத்தாரில் (ஸூபீகளின்) முன்னோர்களின் சான்றாகவும், பின்னோர்களின் ஆதாரமாகவும் ஆகிவிட்டார்கள். (அல் மக்தூபாத் லிஸ் ஸர்ஹன்தீ, பக்கம் 2-5 )
ويزعم محمد البُوطي أنّ ما فى كُتب ابن عربي من الأقوال الدالّة على وحدة الوجود مَدْسوسٌ عليه، ويرى أنّ الحقّ (الإمساك عن اتّهامه بأيّ جنوح أو زيغ، فإنّنا لا نملك أن نَجْزِمَ بأن هذا الباطل من كلامه يقينا، بل لا نملك حتّى الظّنَّ الراجح بذلك)
((التصوّف السليم جوهر ا|لإسلام، مقال للبوطي
முஹம்மத் அல் பூதீ, இப்னு அறபீ நாயகம் அவர்களின் நூல்களில் “வஹ்ததுல் வுஜூத்”ஐ காட்டக் கூடிய அனைத்தும் அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறுகின்றார். அவர்களை எந்தவொரு தவறைக் கொண்டும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதும், அவர்களின் பேச்சிலிருந்து இந்தப் பொய்யை உறுதி செய்யாமலிருப்பதும், நல்லெண்ணம் கொள்ளாமலிருப்பதும் உண்மை என்றும் கூறுகின்றார்.
(அத் தஸவ்வுபுஸ் ஸலீம் ஜௌஹறுல் இஸ்லாம் – மகாலுன் லில் பூதீ)
وممّا ينقضُ هذا الزعم أنّ كتابه المشهور ‘ الفتوحات المكيّة ‘ يوجد منه الآن نسخة كاملة فى سبعة وثلاثين مجلّدا، هي بخطّ ابن عربي نفسه، وكتابه ‘ فصوص الحكم ‘ يوجد منه الآن نسخة بخطّ محمد القونوي تلميذ ابن عربي وربيبه، وعلى هذه النسخة سماع مصدّق عليه من ابن عربي، فهل دسّ ابن عربي على نفسه؟
(مؤلّفات ابن عربي لعثمان يحيى، ص – 43 ، 477 ، 479 )
இப்னு அறபீ நாயகம் அன்னவர்களின் பிரபல்யமான “அல் புதூஹாதுல் மக்கிய்யஹ்” என்ற நூல் இப்போதும் 37 வால்யூம் கொண்ட அவர்களின் கையெழுத்துப் பிரதிகளாக கிடைக்கப் பெறுவதும், மேலும் அவர்களின் பிரதான மாணவனும், வளர்ப்பு மகனுமாகிய முஹம்மத் அல் கவ்னவீ அவர்களின் கையெழுத்துடன் “புஸூஸுல் ஹிகம்” என்ற நூல் கிடைக்கப் பெறுவதும் (இப்பிரதிகளில் இப்னு அறபீ நாயகம் அவர்களிடமிருந்து கேட்டு உண்மைப்படுத்தப்பட்டவைகளும் உள்ளவை குறிப்பிடத்தக்கது), மேலே கூறிய முஹம்மத் அல்பூதீ உடைய நம்பிக்கையை மறுக்கின்றன. ஆகவே இப்னு அறபீ நாயகம் தன்மீது தானே இட்டுக் கட்டினார்களா? என்ற வினாவும் உண்டாகின்றது.
(முஅல்லபாது இப்னி அறபீ லிஉத்மான் யஹ்யா, பக்கம் – 431, 477, 479)
எனவே, ஹிஷாம் பத்தாஹீ, மற்றும் அவர் சார்ந்த முல்லாக்கள் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க எந்த அருகதையும் அற்றவர்கள் என்பது தெளிவாகின்றது.