Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்நான் நேற்று (16.03.2022) அன்று முகநூலில் கண்ட அறபு மொழியில் எழுதப்பட்டிருந்த வரலாறின் சுருக்கத்தை தமிழில்...

நான் நேற்று (16.03.2022) அன்று முகநூலில் கண்ட அறபு மொழியில் எழுதப்பட்டிருந்த வரலாறின் சுருக்கத்தை தமிழில் தந்துள்ளேன்.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

ஸெய்யிதுனா அபூ பக்ர் ஸித்தீக், ஸெய்யிதுனா அலீ இப்னு அபீ தாலிப் றழியல்லாஹு அன்ஹுமா இருவரும் ஒரு நாள் எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களின் இல்லம் சென்றார்கள்.

இல்லத்தின் கதவடி சென்றதும் அபூ பக்ர் நாயகம் அலீ நாயகம் அவர்களிடம் முதலில் நீங்கள் உள்ளே செல்லுங்கள் என்றார்கள்.

அதற்கு அலீ நாயகம், உலகில் வாழும் மனிதர்களில் அபூ பக்ர் அவர்களை விடச் சிறந்த ஒருவர் மீது ஆதவன் உதிக்கவுமில்லை, மறையவுமில்லை என்று பெருமானார் உங்களைத்தானே சிறப்பாக்கிக் கூறியுள்ளார்கள். அவ்வாறிருக்க நீங்கள்தானே முதலில் செல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

அதற்கு அபூ பக்ர் நாயகம் பதில் கூறுகையில், அலீயே! உங்கள் பற்றிக் கூறிய றஸூலுல்லாஹ் அவர்கள், பெண்களில் சிறந்த எனது மகள் பாதிமாவை ஆண்களில் சிறந்த அலீ அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளேன் என்று உங்களைச் சிறப்பாக்கிச் சொல்லியிருக்க நான் முதலில் செல்வது எவ்வாறு? என்று கூறினார்கள்.

அதற்கு அலீ நாயகம் பதில் கூறுகையில், முஸ்லிம் சமூகத்தின் “ஈமான்” விசுவாசத்தையும், அபூ பக்ர் அவர்களின் விசுவாசத்தையும் நிறுத்தால் அபூ பக்ரின் விசுவாசம்தான் கதிக்கும் என்று உங்களைத்தானே பெருமானார் சிறப்பாக்கிச் சொல்லியிருக்க நான் முதலில் செல்வது எவ்வாறு? என்றார்கள்.

அதற்கு அபூ பக்ர் நாயகம் பதில் கூறுகையில், மறுமையில் “மஹ்ஷர்” மைதானத்தில் அலீ, பாதிமா, ஹஸன், ஹுஸைன் ஆகியோர் எழுப்பப்பட்டு வாகனத்தில் வலம் வரும் போது மக்கள் அலீயாகிய உங்களைக் கண்டு வியப்படைந்தவர்களாக யார் இந்த நபீ என்று கேட்பார்கள். அப்போது இவர் நபீ அல்ல. இவர்தான் அலீ என்று சொல்லப்படும். இத்தகைய சிறப்புக்கள் உள்ள உங்களை விட நான் எவ்வாறு முதலில் செல்வேன் என்றார்கள்.

அதற்கு அலீ அவர்கள் பதில் கூறுகையில், எம் பெருமானார் அவர்கள் உங்கள் பற்றிக் கூறுகையில் எனது “றப்பு” இரட்சகன் தவிர இன்னொருவரை எனது நண்பனாக நான் தெரிவு செய்ய விரும்பினால் அபூ பக்ர் அவர்களையே நான் தெரிவு செய்திருப்பேன் என்று உங்களைத்தானே எம்பெருமானார் சிறப்பாக்கிச் சொல்லியுள்ளார்கள். உண்மை இவ்வாறிருக்கும் நிலையில் நான் எவ்வாறு முதலில் செல்வது? என்று கூறினார்கள்.

அதற்கு அபூ பக்ர் நாயகம் பதில் கூறுகையில், அலீயே! உங்கள் பற்றிப் பெருமானார் கூறுகையில், நான் மறுமையில் அலீயோடு இருப்பேன் என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ் என்னிடம் எனது ஹபீபே! நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை உங்களுக்கு சிறந்த தந்தையாகவும், அலீ அவர்களை உங்களுக்கு சிறந்த சகோதரனாகவும், தோழரனாகவும் தெரிவு செய்து தந்தேன் என்று கூறுவான் என்று கூறி உங்களின் சிறப்பைத்தான் வெளிப்படுத்தினான். இந்நிலையில் நான் எவ்வாறு முதலில் செல்வது என்று கூறினார்கள்.

அதற்கு அலீ நாயகம் பதில் கூறுகையில், அபூ பக்ர் அவர்களே! உங்களை அல்லாஹ் திருக்குர்ஆனில் والّذي جاء بالصّدق وصدّق به أولئك هم المتقون (அத்தியாயம் – சுமர், வசனம்: 33) என்று கூறி உங்களை சிறப்பாக்கி கூறியிருக்கும் நிலையில் நான் எவ்வாறு முதலில் செல்ல முடியும்? என்று கூறினார்கள்.

அதற்கு அபூ பக்ர் நாயகம் பதில் கூறுகையில், அலீ அவர்களே! அல்லாஹ் திருக்குர்ஆனில் وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِيْ نَفْسَهُ اِبْتِغَاءَ مَرْضَاتِ اللهِ (அத்தியாயம் – பகறா, வசனம்: 207) என்று உங்களை சிறப்பாக்கி கூறியிருக்கும் நிலையில் நான் எவ்வாறு முதலில் செல்ல முடியும் என்று கூறினார்கள்.

இவ்வாறு அபூ பக்ர் நாயகமும், அலீ நாயகமும் யார் முதலில் செல்வது என்று உரையாடிக் கொண்டிருந்த வேளை வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பெருமானாரிடம் வந்து உங்களின் வீட்டு வயாலில் அபூ பக்ர் அவர்களும், அலீ அவர்களும் யார் முதலில் உங்களிடம் வருவதென்று தர்க்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களிடம் செல்லுங்கள் என்று அறிவித்தார்கள்.

பெருமானார் அவர்கள் உடனே எழுந்து வாயலுக்கு வந்து அபூ பக்ர் அவர்களை வலது கையாலும், அலீ அவர்களை இடது கையாலும் பற்றிக் கொண்டு இல்லத்தில் நுழைந்து நாம் இவ்வாறுதான் மறுமை நாளில் எழுப்பப்படுவோம் என்று கூறினார்கள்.

மேற்கண்ட இவ் வரலாறு தருகின்ற பாடங்களில் மிகப் பிரதான பாடங்களை கவனிப்போம்.

ஸெய்யிதுனா அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களை விட வயதில் மூத்தவர்கள். இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்தவர்களில் அலீ அவர்களை விட முந்தினவர்கள். நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் உயிருடன் இருந்த காலத்திலேயே அவர்களால் தொழுகை நடாத்துமாறு பணிக்கப்பட்டு பள்ளிவாயலில் “ஜமாஅத்” கூட்டாகத் தொழுகை நடத்தியவர்கள். இவை தவிர இன்னும் பல சிறப்புக்கள் பெற்றவர்களாவர்.

இவ்வாறிருந்தும் கூட பெருமானார் அவர்களின் வீட்டில் முதலில் நுழைய மறுத்தது அவர்களின் பணிவையும், உயர் பண்பையுமே எடுத்துக் காட்டுகிறது. அவர்கள் நினைத்திருந்தால் முதலில் அவர்கள் பெருமானாரின் வீட்டில் நுழைந்திருக்கலாம். அவர்கள் அவ்வாறு செய்திருந்தாலும் கூட அலீ அவர்கள் அதைக் குறை கண்டிருக்கவுமாட்டார்கள்.

எனினும் தங்களின் பணிவின் நிமித்தமே அவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பது தெளிவாகின்றது.

ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களும், ஸெய்யிதுனா அபூ பக்ர் நாயகம் போல் தங்களின் பணிவை வெளிப்படுத்துவதற்காகவே அவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதும் தெளிவாகிறது.

நபீ தோழர்களில் இவ்விருவரும் மட்டுமன்றி ஏனைய நபீ தோழர்களும் இவர்கள் போல் நற்குணம் நிறைந்தவர்களாகவே இருந்துள்ளார்கள்.

பொதுவாக நபீ தோழர்களில் சிலர் வேறு சிலரை விட மார்க்க அறிவிலும், இறைஞான அறிவிலும் ஏற்றத் தாழ்வுள்ளவர்களாயிருந்தாலும் கூட அவர்கள் அனைவரும் “றஸூலுல்லாஹ்” எனும் பல்கலைக் கழகத்தில் படித்தவர்களாதலால் அவர்களின் உயர் குணங்கள் யாவும் தோழர்களிடமும் இருந்தன.

எது எவ்வாறிருப்பினும் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “மஃரிபா” எனும் இறைஞானத்தை ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அள்ளி வழங்கியது போல் வேறு எந்த ஒருவருக்கும் வழங்கவில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரு சமயம் பெருமானார் அவர்கள் அலீ அவர்களை மட்டும் தனியாக அழைத்துச் சென்று அல்லாஹ்வின் இரகசியங்களில் الأسرار الإلهيّة பல இரகசியங்களைச் சொல்லிக் கொடுத்த பின் இவற்றை எவருக்கும் சொல்ல வேண்டாம் என்றும் “வஸிய்யத்” செய்தார்கள். அதன்படி அலீ அவர்கள் தங்களின் “வபாத்” மரணம் வரை அவற்றில் ஒரு துளியைக் கூட எவருக்கும் வெளிப்படுத்தாமலேயே வாழ்ந்து மறைந்தார்கள்.

ஆயினும் ஒரு நாள் அந்த இரகசியங்களை தங்களின் நெஞ்சில் மட்டும் மறைத்து வைத்திருக்க முடியாத ஒரு கட்டம் வந்த போது கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்து தனக்கே சொல்லி தனது தாகத்தை தீர்த்துக் கொண்டார்கள் என்றும் ஒரு வரலாறு கூறுகிறது.

இமாம் சமக்ஷரீ அவர்கள் தானறிந்த இறை இரகசியங்களை தனது மனதில் மறைத்து வைத்திருக்க முடியாமற் போன ஒரு கட்டத்தில் தான் வளர்த்து வந்த ஆட்டிற்கு அவற்றைக் கூறி தனது மனக் கஷ்டத்தை – தாகத்தை தீர்த்துக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.

நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் இறை இரகசியங்களை மட்டும் சொல்வதற்காக தோழர்களில் ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களை மட்டும் தெரிவு செய்து அவர்களிடமே சொல்லி வந்தார்கள் என்பதற்கும் வரலாறுண்டு.

இறைஞான மகான்கள், ஸூபீ மகான்கள் அனைவரும் இதுகால வரை சொன்னவையும், எழுதியவையும் பகிரங்கமானவையே தவிர அவை இரகசியமானவை அல்ல.
إِفْشَاءُ سِرِّ الرُّبُوْبِيَّةِ كُفْرٌ
இறை இரகசியங்களை பகிரங்கப்படுத்துவது “குப்ர்” என்று கூறியவர்கள் இறைஞான மகான்களும், ஸூபீ மகான்களுமேயாவர். அவர்களே இவ்வாறு சொல்லிவிட்டு அவர்களே பகிரங்கமாகப் பேசினார்கள் என்பதும், தமது நூல்களில் எழுதினார்கள் என்பதும் தவறாகும். இது காலவரை எழுதியவர்களோ, பேசியவர்களோ இறை இரகசியத்தை எழுதவுமில்லை, பேசவுமில்லை. அவர்கள் எழுதியவையும், பேசியவையும் பகிரங்கமாக எழுதவும், பேசவும் வேண்டியவையுமேயாகும்.

இறை இரகசியத்தைப் பகிரங்கமாகச் சொல்வது “குப்ர்” நிராகரிப்பைச் சேருமென்பது அவர்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. ஆகையால் அவர்களில் எவரும் சொல்லக் கூடாததைச் சொல்லி நாதாக்களின் பேச்சுக்கு மாறு செய்யவில்லை.

நாம் இன்று பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற ஞானம் கூட இறை இரகசியத்தை சேர்ந்ததல்ல. ஆயினும் விபரம் தெரியாதவர்கள் நாம் கூறி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் இறை இரகசியம் என்று கூறுகிறார்கள். இது தவறு. பெரும் தவறு. நாம் பேசி வருகின்ற “எல்லாம் அவனே” என்ற ஞானம் இறை இரகசியமாயிருந்தால் அது எவராலும் பேசப் பட்டிருக்கமாட்டாது. எழுதப்பட்டிருக்கவுமாட்டாது.

இறை இரகசியம் என்பது ஸூபீ மகான்கள், வலீமார், குத்புமார் போன்றோருக்கு மட்டும் “இல்ஹாம்”, “கஷ்பு” என்ற வகையில் அல்லாஹ்வே ஆசிரியராயிருந்து مَلَكُ الْإِلْهَامِ – مَلَكُ الْكَشْفِ இல்ஹாம், கஷ்பு என்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள அமரர்கள் மூலம் ஊட்டப்படுகின்ற ஞானப் பானமாகும். அது அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதுவே இறை இரகசியம். அதையே சொல்லக் கூடாது. அது “விலாயத்” ஒலித்தனம் பெற்றவர்களுக்கு மட்டும் தெரியும். அனுபவிப்பதற்கான தராதரம் உள்ளவர்கள் அனுபவிப்பார்கள்.
صُدُوْرُ الْأَحْرَارِ قُبُوْرُ الْأَسْرَارِ
“சுதந்திரம் பெற்றவர்களின் உள்ளங்கள் இரகசியங்களின் குழிகள்”. இங்கு சுதந்திரம் பெற்றவர்கள் என்பது “விலாயத்” ஒலித்தனம் பெற்றவர்களைக் குறிக்கும்.

عَنْ جَابِرٍ، قَالَ: لَمَّا كَانَ يَوْمُ غَزْوَةِ الطَّائِفِ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ مَلِيًّا مِنَ النَّهَارِ، فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: يَا رَسُولَ اللهِ لَقَدْ طَالَتْ مُنَاجَاتُكَ عَلِيًّا مُنْذُ الْيَوْمِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَنَا انْتَجَيْتُهُ وَلَكِنَّ اللهَ انْتَجَاهُ»

தாயிப் போர் நாளன்று நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும், தோழர்களும் ஓர் இடத்தில் இருந்தார்கள். அவ்வேளை பெருமானார் அவர்கள் அலீ அவர்களை மட்டும் அழைத்துக் கொண்டு சற்றுத் தூரம் சென்று இருவரும் அன்று பகல் முழுவதும் பேசிக் கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஸெய்யிதுனா அபூ பக்ர் நாயகம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் றஸூலே! இன்று நீங்கள் அலீ அவர்களுடன் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கூறினார்கள். அதற்கு றஸூல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அவருடன் நான் பேசவில்லை. எனினும் அல்லாஹ்தான் அவருடன் பேசினான் என்று கூறினார்கள்.

ஆதாரம்: அல்முஃஜமுல் கபீர் லித்தபறானீ (1756)
அறிவிப்பு: ஜாபிர் றழியல்லாஹு அன்ஹு

இந்த நபீ மொழியில் நபீ அலைஹிஸ்லாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களை அல்லாஹ் என்று சொல்லியிருப்பது சிந்தனையாளர்களுக்கு ஒரு விருந்தாக அமையட்டுமாக!

நபீ பெருமான் அவர்கள் இறை இரகசியங்கள் சொல்வதற்கு அலீ அவர்களையே தெரிவு செய்வார்கள் என்று நான் மேலே எழுதியதற்கு ஆதாரமாகவே இதை எழுதினேன்.

அல்லாஹ்தான் நபீ பெருமானின் தோற்றத்தில் வெளியானான் என்பதையும், அவனே படைப்பாகத் தோற்றுகிறான் என்பதையும் “மகான்கள்” ஆய்வு செய்வார்களா?

RELATED ARTICLES

Most Popular

Recent Comments