தொடர்:02
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
கடந்த தொடரில் மேற்கண்ட இத்தலைப்பில் உள்ளமையுடன் தொடர்புள்ள முன்னறிவுக் குறிப்புக்களிற் சிலதை எழுதியிருந்தேன். இத் தொடரில் தலைப்பிலுள்ள கேள்விக்கு விடை எழுதுகிறேன்.
“வுஜூத்” உள்ளமை என்பதை “முதகல்லிமீன்” – ஸூபீ மகான்களில் ஆரம்பப் படியில் நிற்பவர்கள் மூன்று வகைகளாகப் பிரித்து விளக்கம் சொல்கிறார்கள்.
ஒன்று – وَاجِبُ الْوُجُوْدِ “வாஜிபுல் வுஜூத்”
இரண்டு – مُمْكِنُ الْوُجُوْدِ “மும்கினுல் வுஜூத்”
மூன்று – مُمْتَنِعُ الْوُجُوْدِ “மும்தனிஉல் வுஜூத்”
இம்மூன்றுக்கும் முறையே சொல்லர்த்தம் – வெளிப்படையான பொருள் உள்ளமை கடமையானது, உள்ளமை சாத்தியமானது, உள்ளமை விலக்கானது.
உள்ளமை கடமையானவன் படைத்தவன் மட்டும்தான் என்று கூறுகின்றார்கள். அவன் அறபு மொழியில் அல்லாஹ் என்றும், தமிழில் கடவுள் என்றும், இறைவன் என்றும் அழைக்கப்படுவான். உர்து, பாரசீக மொழிகளில் “குதா” என்றும், ஆங்கிலத்தில் “கோட்” God என்றும், சிங்களத்தில் “தெவ்யன் வஹன்சே” දෙවියන් වහන්සේ என்றும் அழைக்கப்படுவான். இவ்வாறு ஒவ்வொரு மொழியுடையோரும் தமது மொழியில் அழைத்துக் கொள்வார்கள். யார் எந்த மொழியில், எப்பெயர் கொண்டு அழைத்தாலும் மனிதர்கள் அனைவருக்கும் இன, மத, மொழி வேறுபாடின்றி இறைவன் ஒருவன்தான்.
“வுஜூத்” உள்ளமை என்பது படைத்தவனுக்கு மட்டும் உரியதேயாகும். அவனுக்கு மட்டுமே கடமையுமாகும்.
“வாஜிப்” என்ற அறபுச் சொல்லுக்கு கடமை என்று பொருள். இது அதன் சொல்லர்த்தமாகும். இச் சொல் விளக்கத்தில் வித்தியாசப்படும். இறைவனுக்கு கடமை என்றால் அது ஒரு விளக்கத்தையும், மனிதனுக்கு கடமை என்றால் அது இன்னொரு விளக்கத்தையும் தரும்.
உதாரணமாக இறைவனுக்கு உள்ளமை கடமை என்பதற்கும், முஸ்லிமுக்கு தொழுகை கடமை என்பதற்கும் ஒரே சொல்லாயினும் விளக்கத்தில் வித்தியாசமுண்டு.
முஸ்லிமுக்கு தொழுகை கடமை என்றால் அவன் அதைச் செய்ய வேண்டுமென்று கருத்து. அவன் அதைச் செய்யாவிட்டால் அவன் குற்றவாளி. அவனுக்குத் தண்டனை உண்டு.
ஆயினும் இறைவனுக்கு “வுஜூத்” உள்ளமை கடமை என்பது முஸ்லிமுக்கு தொழுகை கடமை என்பது போன்றதல்ல. செய்தல் அவசியம். விடுதல் குற்றம் என்ற கருத்திற்கு இடமில்லை.
இறைவனுக்கு “வுஜூத்” உள்ளமை கடமை என்பது அது அவனில் இருப்பது அவசியம் என்ற கருத்தை தருமேயன்றி அவன் அதைச் செய்யவேண்டும் என்ற கருத்து வராது. இதுவே இரண்டுக்குமுள்ள வேறுபாடாகும்.
இறைவனுக்கு உள்ளமை கடமை என்பது அவன் உள்ளவனாக – உளதானவனாக – இருப்பதையே குறிக்கும். உள்ளமை என்றால் ஒன்று உள்ளதாக இருத்தல் என்பதையே உணர்த்தும். உள்ளமை என்ற இச் சொல் மூலம் இப்போது கூறிய இதே கருத்தையே விளங்கிக் கொள்ள வேண்டும்.
உள்ளமை என்றால் “வுஜூதிய்யத்” உளதாக இருத்தல் என்று புரிந்து கொள்ள வேண்டும். இருத்தல் என்பது நிற்றல், அமர்தல் என்பவற்றுக்கான எதிர்மறை என்று எண்ணிவிடலாகாது. அவ்வாறு விளங்குதல் பிழையாகும்.
ஒருவன் வீட்டின் வெளியே நின்று வீட்டுக்காரன் இருக்கிறானா? என்று வினவினால் அவன் தரையில் அமர்ந்திருந்தாலும், நின்று கொண்டிருந்தாலும், ஒன்றில் சாய்ந்து கொண்டிருந்தாலும், அல்லது தரையில்தான் சாய்ந்து கொண்டிருந்தாலும் கூட வினவினவனுக்கு அவன் இருக்கின்றான் என்றுதான் பதில் கூற வேண்டும். இந்த இருத்தல்தான் உள்ளமை எனப்படும். ஏனெனில் வினவினவனின் நோக்கம் வீட்டுக் காரன் உள்ளே இருக்கிறானா? என்பதை அதாவது “ஆள்” இருக்கிறானா? என்பதை அறிவதேயன்றி அவன் எந்த அமைப்பில், எந்நிலையில் இருக்கின்றான்? என்பதை அறிவதல்ல. வீட்டுக்காரன் இருக்கின்றானா? என்று கேட்டவனின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாத ஒருவன் அவன் இருக்கவில்லை நின்று கொண்டிருக்கிறான் என்றோ, அல்லது சாய்ந்து கொண்டிருக்கிறான் என்றோ பதில் கூறுவானாயின் அவன் “வுஜூதிய்யத்” எனும் இருத்தல் பற்றி விளங்காதவனாக இருப்பான். அல்லாஹ்வின் “வுஜூதிய்யத்”தை நாம் அவ்வாறு விளங்கிக் கொள்ளக் கூடாது.
“வாஜிபுல் வுஜூத்” அல்லாஹ் உள்ளமை அவசியமானவனென்று நம்புதல் அவசியம்.
“தாத்”
இதுவரை கூறிய அந்த உள்ளமைதான் ஸூபீ மகான்களால் “தாத்” என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. ஆயினும் “முதகல்லிமீன்” என்போர் அதாவது இறை “அகீதா” கொள்கை மேலோட்டமாகப் பேசுவோர் “வுஜூத்” உள்ளமை என்பதை இறைவனின் “ஸிபத்” தன்மை என்ற பெயரால் அழைப்பார்கள். அவனின் இருபது “ஸிபத்” தன்மைகளில் ஒன்றாக உள்ளமையை சேர்த்துக் கொள்வார்கள்.
ஸூபீ மகான்களோ “வுஜூத்” – உள்ளமை என்பதும், “தாத்” என்பதும் ஒன்றுதான் என்று கூறுவர். “முதகல்லிமீன்”கள் உள்ளமை என்பது “ஸிபத்” என்று கூறினாலும் கூட அதற்கு صِفَةٌ نَفْسِيَّةٌ “ஸிபத் நப்ஸிய்யா” என்று சொல்வார்கள். இவ்வாறு அவர்கள் பெயர் வைத்ததன் மூலம் அவர்கள் ஒரு வகையில் ஸூபீகளின் கருத்தை மறைமுகமாக ஆதரிக்கிறார்கள் என்பது சூசகமாக விளங்கப்படுகிறது. அவர்கள் அதற்கு அவ்வாறு பெயர் சொல்லாமலும், அதன் மூலம் மறைமுகமாக ஆதரிக்காமலும் இருப்பார்களாயின் ஸூபீ மகான்கள் அவர்களைச் சரி காணமாட்டார்கள். நான் கூறும் இவ்விபரத்தை தெளிவாக விளங்குவதாயின் உள்ளமைக்கு “ஸிபத் நப்ஸிய்யா” என்று ஏன் பெயர் வைக்கப்பட்டதென்று ஆய்வு செய்தால் புரியும்.
“முதகல்லிமீன்” என்றால் பேசுபவர்கள் என்று பொருள். மனிதர்கள் எல்லோரும் பேசுபவர்களாயிருக்கும் நிலையில் அவர்களை மட்டும் “பேசுபவர்கள்” என்று குறிப்பாக கூறப்பட்டதற்கான காரணம் இவர்கள் عِلْمُ الْكَلَامِ “இல்முல் கலாம்” எனும் கொள்கை பேசுபவர்கள் என்பதினாலாகும். “இல்முல் கலாம்” என்பது علم العقيدة , علم التوحيد – “இல்முல் அகீதா”, “இல்முத் தவ்ஹீத்” உடன் சம்பந்தப்பட்ட அறிவாகும்.
“வாஜிபுல் வுஜூத்” உள்ளமை கடமையானவன் அல்லாஹ் மட்டுமேயாவான் என்ற விபரமும், அவனின் உள்ளமை மட்டுமே وُجُوْدٌ مُسْتَقِلٌّ “வுஜூதுன் முஸ்தகில்லுன்” சுயமான வுஜூத் என்ற விபரமும் தெளிவாகிவிட்டன.
“மும்கினுல் வுஜூத்”
படைப்பின் உள்ளமை “மும்கின்” சாத்தியமானது, இடம்பாடானது என்று சொல்லப்படும். இவ்வாறு சொல்பவர்கள் கூட “முதகல்லிமீன்” என்பவர்களேயாவர். ஸூபீ மகான்கள் அல்ல. படைப்பின் “வுஜூத்” உள்ளமைக்கு “மும்கினுல் வுஜூத்” உள்ளமை சாத்தியமென்று பெயர் வைக்கப்பட்டிருப்பதே அதற்கு சுயமான “வுஜூத்” இல்லையென்பதற்கான ஆதாரமாகும்.
ஸூபீ மகான்கள் “முதகல்லிமீன்” என்போரைவிட ஒரு படி மேலே சென்று படைப்புக்குப் பொதுவாக உள்ளமையே கிடையாது என்று கூறுவார்கள். இன்னும் தெளிவாகச் சொன்னால் படைப்பு என்பதே இல்லை என்று சொல்வார்கள். அவர்கள் தமது வாதத்தை திருக்குர்ஆனின் ஆதாரங்கள், ஹதீதின் ஆதாரங்கள் மூலம் நிறுவுவார்கள். நான் அது பற்றி இவ்விடத்தில் விபரிக்காமல் “முதகல்லிமீன்” என்போர் படைப்பின் உள்ளமை “இம்கான்” சாத்தியமானதென்று சொல்லியிருந்தாலும் கூட அதற்கு நிச்சயமாக – திட்டமாக உள்ளமை இருப்பதாகச் சொல்லவில்லை. இதற்கு ஆதாரம் அவர்கள் படைப்பின் உள்ளமைக்கு “மும்கினுல் வுஜூத்” உள்ளமை சாத்தியமானதென்று பெயர் வைத்திருப்பதேயாகும்.
படைப்புக்கு உள்ளமை இல்லையென்றால் அது எவ்வாறு நிலைபெற்று நிற்கிறதென்ற கேள்விக்குப் பின்வருமாறு விடை கூறலாம்.
படைப்புக்கு சுயமான வுஜூத் – உள்ளமை இல்லாது போனாலும் அப்படைப்பு அல்லாஹ்வின் சுயமான வுஜூத் – உள்ளமை கொண்டே நிலை பெற்று நிற்கிறதென்று கூற வேண்டும். அதாவது அல்லாஹ்வின் சுயமான உள்ளமையின் வெளிப்பாடுதான் படைப்பாகும் என்று முடிவு செய்ய வேண்டும்.
இதை விளங்குவதாயின் قَائِمٌ بِنَفْسِهِ , قَائِمٌ بِغَيْرِهِ தன்னைக் கொண்டு நிற்றல், பிறதைக் கொண்டு நிற்றல் என்ற விபரத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
இறைவன் قَائِمٌ بِنَفْسِهِ தன்னைக் கொண்டு நிற்பவனாவான். இது அவனுக்கு மட்டுமுரிய தன்மையாகும். இத்தன்மை படைப்புக்கு கிடையாது. படைப்பு என்பது قَائِمٌ بِغَيْرِهِ தன்னைக் கொண்டு நிற்காமல் அல்லாஹ்வின் உள்ளமை கொண்டு நிற்பதாகும்.
“காயிமுன் பினப்ஸிஹீ” தன்னைக் கொண்டு நிற்பவன் என்பது இறைவனில் அவசியம் இருக்க வேண்டிய பண்பாகும். “ஸிபத்” ஆகும். “காயிமுன் பிஙெய்ரிஹீ” தன்னைக் கொண்டு நிற்காமல் அல்லாஹ்வைக் கொண்டு நிற்பதானது படைப்பின் “ஸிபத்” தன்மையாகும்.
எனவே, படைப்புக்கென்று தனியான உள்ளமை இல்லாது போனாலும் அது இறைவனின் உள்ளமை கொண்டே நிற்கிறதென்று முடிவு செய்தல் வேண்டும்.
இறைவன் தன்னைக் கொண்டு நிற்பவன் என்றால் அது எவ்வாறு என்பதையும், படைப்பு இறைவனைக் கொண்டு நிற்கிறதென்றால் அது எவ்வாறு என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்விரு விபரமும் தெரியாமலிருப்பதே இறைவனுக்கும், படைப்புக்குமுரிய “ஐனிய்யத்” ஆன தொடர்பை மறுப்பதற்கு காரணமாகும்.
இறைவன் தன்னைக் கொண்டு நிற்பவன் என்றால் அதன் சுருக்கம் என்னவெனில் அவனின் உள்ளமை அவனுக்கு இன்னொருவனால் வழங்கப்பட்டதல்ல என்பதாகும். இதேபோல் படைப்பு இறைவனைக் கொண்டு நிற்பதென்றால் அதன் சுருக்கம் என்னவெனில் அது அவனின் உள்ளமையின் வேறுபடாத வெளிப்பாடாகவே உள்ளது என்பதாகும்.
படைப்பு இறைவனைக் கொண்டு நிற்கிறதென்று சொல்வதால் இரண்டு வஸ்த்துக்கள் என்ற கருத்து வராது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவ் எதார்த்தத்தைப் பின்வரும் உதாரணங்கள் மூலம் தெரிந்து கௌ;ளலாம்.
ஷேட் பஞ்சு கொண்டும், கதிரை மரம் கொண்டும், வளையல் தங்கம் கொண்டும் நிற்பது போன்றாகும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஷேட் பஞ்சு கொண்டு நிற்கிறதென்று சொல்வதற்கு ஒரு வஸ்த்துதான் தேவையே தவிர இரண்டு வஸ்த்துக்கள் தேவையில்லை. இவ்வாறுதான் கதிரை மரம் கொண்டு நிற்கிறதென்பதற்கும் ஒரு வஸ்த்துதான் தேவையே தவிர இரண்டு வஸ்த்துக்கள் தேவையில்லை. இவ்வாறுதான் வளையல் தங்கம் கொண்டு நிற்கிறதென்பதற்கும் இரண்டு வஸ்த்துக்கள் தேவையில்லை.
மேற்கண்ட மூன்று உதாரணங்களில் ஒவ்வொன்றிலும் பஞ்சு ஷேட், மரம் கதிரை, வளையல் தங்கம் என இரண்டு வஸ்த்துக்களின் பெயர்கள் சொல்லப்பட்டாலும் ஒவ்வோர் உதாரணத்திலும் இருப்பது ஒன்று மட்டும்தான் – ஒரு வஸ்த்து மட்டும்தான்.
பஞ்சு ஷேட் என்ற உதாரணத்தில் உள்ளமை பஞ்சுக்கேயன்றி ஷேட்டுக்கல்ல. மரம் கதிரை என்ற உதாரணத்தில் உள்ளமை மரத்துக்கேயன்றி கதிரைக்கல்ல. தங்கம் வளையல் என்ற உதாரணத்தில் உள்ளமை தங்கத்துக்கேயன்றி வளையலுக்கல்ல.
மேற்கண்ட உதாரண்ஙகளில் பஞ்சு, மரம், தங்கம் என்பன “வுஜூத்” உள்ளமை போன்றவையும், ஷேட், கதிரை, வளையல் என்பன உள்ளமையின் வேறுபடாத வெளிப்பாடுகள் போன்றவையுமாகும்.
இவ்வாறுதான் படைப்புக்கள் அனைத்திற்கும் அல்லாஹ்வின் சுயமான “வுஜூத்” உள்ளமை மூலமாக இருப்பதுமாகும். இவ் உதாரணங்களில் பஞ்சுக்கு மட்டும் “வுஜூத்” உள்ளமை உண்டு, ஷேட்டுக்கு இல்லை என்றும், மரத்திற்கு மட்டுமே “வுஜூத்” உண்டு, கதிரைக்கு இல்லையென்றும், தங்கத்திற்கு மட்டுமே “வுஜூத்” உண்டு, வளையலுக்கு இல்லையென்றும் விளங்க வேண்டும்.
ஸூபீ மகான்கள் சொல்வது போல் படைப்பே இல்லையென்றால் “மும்கினுல் வுஜூத்” என்ற பேச்சுக்கே இடமில்லாமற் போய்விடும். “வாஜிபுல் வுஜூத்” மட்டுமே உண்டு என்ற முடிவும் வந்து விடும்.
ஆயினும் “முதகல்லிமீன்”கள் சொல்வது போல் படைப்புக்கு “மும்கினுல் வுஜூத்” உள்ளமை சாத்தியம் என்ற வகையில் அதற்கு உள்ளமை இருப்பதாக வைத்துக் கொண்டால் அவ் உள்ளமை இறைவனின் வேறுபடாத வெளிப்பாடு என்று முடிவு செய்தல் வேண்டும்.