Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஸூபிஸம் தெரியாத புதிய கொம்பர்கள்! நான் கண்ட கனவு நனவாயிற்று! நான் செய்த கற்பனையும் நிஜமாயிற்று!

ஸூபிஸம் தெரியாத புதிய கொம்பர்கள்! நான் கண்ட கனவு நனவாயிற்று! நான் செய்த கற்பனையும் நிஜமாயிற்று!

தொடர் 01

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

“ஹுலூல் – இத்திஹாத்” எனும் வழிகெட்ட கொள்கைக்கும், இறை ஞான மகான்கள் கூறிய “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைக்கும் வேறுபாடு தெரியாத நிலையில் “வஹ்ததுல் வுஜூத்” எனும் ஸூபிஸ தத்துவம் பேசிய எனக்கும், நான் சொன்ன கருத்தை சரிகண்டு ஏற்றுக் கொண்ட உலகில் வாழும் ஸூபிஸக் கொள்கைவாதிகளுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றும், எம்மனைவரையும் உடனடியாகக் கொலை செய்ய வேண்டும் என்றும் மனக் கண்ணும், முகக் கண்ணும் குருடான ஒரு கூட்டம் மார்க்கத் தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பு வெளியான காலம் முதல் இற்றைவரை இத்தீர்ப்பு பிழையென்று நானும், என்னுடனுள்ள மௌலவீமார்களும் பேசியும், எழுதியும் வருகிறோம். ஆயினும் எமது பேச்சு அக்குருடர்களின் செவிகளுட் செல்லவுமில்லை. அவர்களின் கண்ணுக்குத் தெரியவுமில்லை. அவர்கள் எமக்கு பேச்சு மூலம் பதில் தரவுமில்லை. எழுத்து மூலம் பதில் தரவுமில்லை. செவிடர்கள் போலும், செத்த பிணங்கள் போலும் அவர்கள் இருந்தார்கள். இருக்கிறார்கள். இவ்வாறு 42 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

பின்னர், அண்மைக் காலத்திலிருந்து طلع قرنا الشيطان ஷாத்தானின் இரு கொம்புகள் வெளயாகி “பத்வா” வழங்கியவர்களின் கைக் கூலியாக செயல்படத் தொடங்கியுள்ளன. இவ்விரு கொம்புகளும் மண் குதிரைகள் போல் மண் கொம்புகள்தான். “தஸவ்வுப்” ஸூபிஸத்தின் வாடையைக் கூட நுகராத அரை வேக்காடுகள்தான்.

“பத்வா” வழங்கியவர்கள் விடயத்தை சரியாக விளங்காமல் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை, “ஹுலூல் – இத்திஹாத்” கொள்கையென்று தவறாகப் புரிந்து அவ்வாறு “பத்வா” வழங்கினார்கள்.

“ஹுலூல் – இத்திஹாத்” பிழையென்று அவர்கள் வழங்கிய “பத்வா”வை நாமும் மறுக்கவில்லை. நாமும் அக்கொள்கை பிழையென்றே சுமார் 50 ஆண்டுகளாக எழுதியும், பேசியும் வருகிறோம்.

ஆயினும் “வஹ்ததுல் வுஜூத்” பேசிய எனது பெயரை அந்த “பத்வா”வில் குறிப்பிட்டதே அவர்கள் செய்த பிழையாகும். அவர்கள் தமது பிழையை உணர்ந்து உண்மை நிலையை பொது மக்களுக்கு விளக்கி அந்த “பத்வா”வை வாபஸ் பெறாமல் அதில் என் பெயர் குறிப்பிட்டதை மட்டும் வாபஸ் பெற்றிருந்தால் எப்பவோ இப்பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கும். “பத்வா” வழங்கியோர் ஆழமாகச் சிந்திக்காமல் விட்டதே இதற்குக் காரணமாகும். “அனானிய்யத்” என்ற பிர்அவ்ன்அவர்களின் தலைமேல் சலம் கழித்துவிட்டான்.
بَالَ فِرْعَوْنُ عَلَى رَأْسَيْهِمَا وَعَلَى رُؤُوْسِهِمْ
அண்மைக் காலமாக “பத்வா” வழங்கியவர்கள் எந்தவொரு சத்தமும் இல்லாமல் அமைதியாக உள்ளார்கள். ஏனோ தெரியவில்லை. ஆயினுமவர்கள் ஷெய்தானின் இரு கொம்புகளைப் புத்திசாலித்தனமாக களத்தில் இறக்கிவிட்டு அவர்கள் திரை மறைவிலிருந்து “கிரிக்கட்” விளையாட்டை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்விரு கொம்புகளும் தமது அறியாமையாலும், பதவி மோகத்தினாலும் அவர்கள் விரித்த சதி வலையில் சிக்குண்டு தடுமாறுகிறார்கள். ஸூபிஸ ஞானத்தில் பாலர் வகுப்பு அறிவுமில்லாத இவ்விருவரும் தடுமாற்றத்தால் செய்வதறியாது நிலை குலைந்து நிற்கிறார்கள். வாய்க்கும், மூளைக்கும் தொடர்பின்றி கருத்துக்கள் கூறுகின்றார்கள். அவற்றில் ஒன்றுதான் “வுஜூத்” எனும் உள்ளமை ஒன்றல்ல. அது பலதென்று சொன்னதும், சொல்வதுமாகும்.

அல்லாஹ்வுக்கு மட்டுமே وُجُوْدٌ مُسْتَقِلٌّ சுயமான உள்ளமை உண்டு. வேறு எவருக்கும், எதற்கும் சுயமான “வுஜூத்” இல்லை என்பதே அறிஞர்களின் தீர்க்கமான முடிவாகும். இதன்படி படைப்புக்கு சுயமான வுஜூத் – உள்ளமை இல்லையென்று நம்புவது ஒரு விசுவாசியின் கடமையாகும். இதற்கு மாறாக படைப்புக்கு சுயமான உள்ளமை உண்டு என்ற நம்பினவனும், சொன்னவனும் “முஃமின்” விசுவாசியாகமாட்டான்.

கொள்கையுடைய இமாம்கள் அல்லாஹ்வின் உள்ளமைக்கு “வாஜிபுல் வுஜூத்” அல்லாஹ் உள்ளமை அவசியமானவனென்றும், அவன் படைத்த “கல்க்” படைப்பு அல்லாஹ்வின் உள்ளமைக்கு மாறானதென்றும், அவ்வாறு சொல்வதாயினும் அதற்கு “வுஜூத் மஜாஸீ” அல்லது “வுஜூத் வஹ்மீ” உண்டென்றே சொல்ல வேண்டுமென்றும் தெளிவாகச் சொல்லியுள்ளார்கள். படைப்பின் வுஜூத் பெயரளவில் மட்டும் உள்ளதேயன்றி “வுஜூத் ஹகீகீ” அதற்கு இல்லை. அதற்கு எதார்த்தமான உள்ளமை கிடையாது. இதுவே ஸூபீகளின் தீர்க்கமான முடிவாகும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை.

“அகீதா” கொள்கை பேசும் அறிஞர்கள் படைப்புக்கு “வுஜூத்” உள்ளமை இல்லாது போனலும் அதற்கு مُمْكِنُ الْوُجُوْدِ – “மும்கினுல் வுஜூத்” உள்ளமை சாத்தியமானதென்ற கருத்தில் அவ்வாறு சொல்வார்கள். படைப்புக்கு இவ்வாறு பெயர் வந்ததற்கான காரணத்தை ஒருவன் தெளிவாக ஆய்வு செய்வானாயின் அவ்வாறு பெயர் வந்ததே படைப்பு “அதம்” இல்லையென்பதற்கான ஒரு சமிக்ஞை என்பது தெளிவாகும்.

படைப்புக்குப் பொதுவாக உள்ளமை உண்டு என்று சொன்னாலும், அல்லது அதன் உள்ளமை “மும்கினுல் வுஜூத்” என்று சொன்னாலும் படைப்பு என்பது அல்லாஹ்வின் உள்ளமைக்கு வேறானதென்ற கருத்து வரவே வராது. மாறாக அது தானானது என்ற கருத்துதான் வரும். இதுவே எமது இலக்கும், குறிக்கோளுமாகும்.

அல்லாஹ்வுக்கும் உள்ளமை உண்டு, படைப்புக்கும் உள்ளமை உண்டு, உள்ளமை இரண்டு என்று சொல்வோர் மேலே நான் சொன்னதுபோல் “வுஜூத் மஜாஸீ”, “வுஜூத் வஹ்மீ” அடிப்படையில் அவ்வாறு சொன்னால் அல்லது நம்பினால் “குப்ர்” எனும் நிராகரிப்பிலிருந்தும், “ஷிர்க்” எனும் இணையிலிருந்தும் தப்பிக் கொள்வார்கள்.

படைப்பின் உள்ளமைக்கு நாம் எப்பெயர் வைத்துக் கொண்டாலும் அவ் உள்ளமை அல்லாஹ்வின் உள்ளமையின் “தஜல்லீ” வெளிப்பாடென்றும், அதற்கு வேறான, தனியானதல்ல என்றும் நம்ப வேண்டும்.

அல்லாஹ்வுக்கு உள்ளமை இருப்பது போல் படைப்புக்கு உள்ளமை உண்டு என்றும், உள்ளமை என்பது ஒன்றல்ல, அது இரண்டு என்றும் அறியாமை போதையால், அல்லது பதவி மோகத்தின் மஸ்த்தினால் உளறியவர் – உளறிக் கொண்டிருப்பவர் “ஸூபீ” அல்ல. அவர் தப்லீக் ஆதரவாளன். சுருங்கச் சொன்னால் “முகல்லித் வஹ்ஹாபீ”யேயாவார்.

இரு கொம்புகளில் ஒரு கொம்பு உளறும் போது ஸூபிஸத்தில் “தன்ஸீஹ்” மட்டுமே உண்டு. “தஷ்பீஹ்” இல்லையென்று உளறியது. மற்றக் கொம்பு பேசுகையில் அப்துல் கரீம் ஜீலீயை ஒரு பக்கம் வையுங்கள் என்று அந்த மகானை புறம் தள்ளி வைக்கிறது. இந்த அறிவிலிக்கும், அந்த அறிவாளி மகானுக்கும் மலைக்கும், மடுவுக்குமுள்ள தூரம் இருக்கும் நிலையில் இக் கொம்பு இவ்வாறு உளறியிருப்பது தனக்குத் தானே காறி உமிழ்ந்தது போன்றாகும். இந்தக் கொம்புக்கு அவர்களின் “கறாமத்” அற்புதமொன்று அதிவிரைவில் வெளியாகும். இதைக் கண்டு மக்கள் مَنْ عَادَى لِيْ وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ “எனது வலீயை எவன் பகைத்தானோ அவனை என்னுடன் போர் செய்ய வருமாறு அழைக்கிறேன்” என்ற ஹதீதுக் குத்ஸியின் தத்துவம்தான் என்னே! என்று கூறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இன்னொரு கொம்பின் மற்றுமோர் உளறல். “நாங்கள் இப்னு அறபீ அவர்களை குத்பு என்றும், வலீ என்றும், பெரிய சித்தீக் என்றும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அவரின் “புதூஹாதுல் மக்கிய்யா”, “புஸூஸுல் ஹிகம்” எனும் நூல்களில் ஈமானைப் பறிக்கும் பிழையான கருத்துக்கள் உள்ளன” என்று உளறியுள்ளார்.

ஸுப்ஹானல்லாஹ்! خَاتِمَةُ الْوِلَايَةِ المُحَمَّدِيَّةِ இறுதி வலித்தனம் பெற்றவர்கள் என்று ஆரிபீன்களாலும் – இறைஞானிகளாலும், ஸூபிஸ மகான்களாலும் வர்ணிக்கப்பட்ட மாபெரும் மகானின் நூலில் பிழை கண்ட இந்த மகான் இறைவனின் கடும் சோதனைக்குள்ளாக வழி செய்து கொண்டார். அவர்களின் அற்புதம் – “கறாமத்” மிக விரைவில் இவருக்கும் இறங்கும். மக்கள் பார்த்து தமது தலையில் கை வைத்து இவருக்கா இந்த நிலையென்று வியந்து விடுவார்கள். இன்ஷா அல்லாஹ்!

சஹ்றான் என்பவன் இறப்பதற்கு சில நாட்களின் முன் காத்தான்குடியில் பகிரங்க கூட்டமொன்று ஏற்பாடு செய்தான். அவன் அடிக்கடி காத்தான்குடியில் பகிரங்க கூட்டம் போட்டு என்னையும், எனது மௌலவீமாரையும் ஏசுவான். மற்றும் அவனுக்குப் பிடிக்காதவர்களையும் ஏசுவான். இது அவன் வழக்கம். அக்கூட்டத்தில் அவன் பேசியதை என் வீட்டு மாடியிலிருந்து நான் செவியேற்றுக் கொண்டிருந்தேன்.

இறை சாபத்திற்குள்ளான அவன் பேசுகையில் (எல்லோரும் இப்னு அறபீ என்பவனை ஷெய்குல் அக்பர் – பெரிய ஷெய்கு என்று சொல்கிறார்கள். அவன் பெரிய ஷெய்குல் அக்பரல்ல. அவன் ஷெய்தான் கபீர் பெரிய ஷெய்த்தான் என்று குரைத்தான். அவனின் வலீமாருக்கு எதிரான இந்த விஷமத்தனமான பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த நான், என்னால் என்னையே சமாளிக்க முடியாத நிலையில் ( யா ஜப்பார்! யா கஹ்ஹார்! உனது வலீ உலகம் போற்றும் மகான் ஷெய்குல் அக்பர் நாயகமவர்களை இவன் “ஷெய்தான் கபீர்” என்று ஏசுகிறான். இழிவு படுத்துகிறான். எனது வலீயை பகைத்தவனை என்னோடு யுத்தம் செய்ய வருமாறு அழைக்கிறேன் என்று சொன்ன நீ செய்வதைச் செய்) என்று கண்ணீர் மல்கக் கேட்டேன்.

மறு நாள் அல்லது சில நாட்களின் பின் – அவன் உயிரோடிருந்த காலத்திலேயே அவனுக்கு எதிராக சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் கூடியிருந்த கூட்டமொன்றில் (இவனுக்கு இறைவனின் தண்டனை மிக விரைவில் இறங்குமென்று பகிரங்கமாகப் பேசினேன்) அந்தப் பேச்சு காத்தான்குடி மக்களிடம் இப்போதும் இருக்கும். தேவையானோர் தேடியெடுத்து கேட்டுப் பார்க்கலாம்.

ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை காலை கொழும்பிலும், இன்னும் பல இடங்களிலும் மனித குண்டு வெடித்ததாகவும், பலர் கொல்லப்பட்டதாகவும் பரபரப்பான செய்திகள் கிடைத்தன. அன்றைய தினம் தெளிவு கிடைக்கவில்லை. மறுநாள் தான் போட்டோக்கள் வெளியாயின. அப்போதுதான் மேற்கண்ட ஹதீதுக் குத்ஸீயின் தத்துவம் எனக்குப் புரிந்தது. என்பேச்சைக் கேட்ட மக்களுக்குப் புரிந்தது.

“இப்னு அறபீயை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆயினும் அவரின் புதூஹாத், புஸூஸ் எனும் இரு நூல்களிலும் ஈமானைப் பறிக்கும் கருத்துக்கள் உள்ளன” என்று அந்தக் கொம்பு கூறியிருப்பதை வாசிக்கும் போது சஹ்றானின் நினைவுதான் எனக்கு வருகிறது.

அல்லாஹ்வின் எச்சரிக்கையில் மாற்றமில்லை. إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيْعَادَ நிச்சயமாக நீ மக்களுக்கு வழங்கிய வாக்கிற்கு மாறு செய்யமாட்டாய், அல்லாஹ்வின் தண்டனையும், அப்துல் கரீம் ஜீலீ அவர்களினதும், இப்னு அறபீ நாயகமவர்களினதும் அற்புதமும் எந்த உருவத்தில் வெளியாகுமோ? இதற்கு முன் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தைப் பொய்யாக்கும் நோக்கத்துடன் முதன் முதலாக தென் மாகாணத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தை ஏற்பாடு செய்த ஒருவரும், இதே ஞானத்தைப் பொய்யாக்க வெளி நாட்டிலுள்ள ஷெய்குமார்களின் கடிதம் போல் தானே கடிதம் எழுதி பொய்யான கையொப்பமிட்ட ஒருவரும் எவ்வாறு மரணித்தார்கள் என்பதையும் இவ்விரு கொம்புகளும் உணர்ந்து கொள்ள வேண்டும். செயல்படவும் வேண்டும்.

ஸூபீகளான எங்களின் ஆயுதம் “துஆ” ஒன்று மட்டுமே. எங்களிடம் கத்தியுமில்லை, வாளுமில்லை, துப்பாக்கியுமில்லை, குண்டுமில்லை. ஆயினும் எல்லா ஆயதங்களையும் வென்ற மேற்கண்ட ஆயுதங்கள் எம்மிடமுள்ளன.

(தொடரும்…)

RELATED ARTICLES

Most Popular

Recent Comments