தொடர் 02
ஸூபிஸம் தெரியாத புதிய கொம்பர்கள்!
நான் கண்ட கனவு நனவாயிற்று!
நான் செய்த கற்பனையும் நிஜமாயிற்று!
ஆழமறியாமற் கால் வைத்தல் ஆபத்து.
இரு பெரும் மேதைகளையும் எச்சரிக்கிறேன்.
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
اِعْلَمْ رَحِمَكَ اللهُ أَنَّهُ لَا يَجُوْزُ الْإِنْكَارُ عَلَى الْقَوْمِ إِلَّا بَعْدَ مَعْرِفَةِ مُصْطَلَحِهِمْ فِى أَلْفَاظِهِمْ، ثُمَّ إِذَا رَأَيْنَا بَعْدَ ذَلِكَ كَلَامَهُمْ مُخَالِفًا لِلشَّرِيْعَةِ رَمَيْنَا بِهِ،
(ஸூபீ மகான்கள் தாம் பாவிக்கின்ற – பயன்படுத்துகின்ற சொற்களில் கலைச் சொற்கள் என்று சில சொற்கள் வைத்திருப்பார்கள். அச் சொற்களுக்கான பொருள் தெரியாதவர்கள் அவர்கள் பாவிக்கின்ற வெளிரங்கமாக சொற்களை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களின் கருத்துக்களை மறுப்பது கூடாது. முதலில் அவர்களின் கலைச் சொற்களை – பரிபாஷையை அறிய வேண்டும். அதன்பின் அவர்களின் பேச்சு “ஷரீஆ”வுக்கு முரணானதாயிருந்தால் அதை மறுக்கலாம். தூக்கியும் எறியலாம்)
மேற்கண்ட அறபு வசனங்களின் சுருக்கம் என்னவெனில் எந்த ஒரு கலையாயினும் அதற்கென்று அக்கலையுடையவர்கள் சில சொற்களைக் கலைச் சொற்கள் என்று வைத்திருப்பார்கள்.
இதன் விபரமென்னவெனில் ஓர் அறபுச் சொல் அநேகமானவர்களால் பாவிக்கப்படும் பொருளுக்கு அதைப் பாவிக்காமல் அக்கலையுடையவர்கள் மட்டும் புரிந்து கொள்ளும் வகையில் அதை வேறொரு பொருளுக்கு பாவிப்பார்கள். அக்கலை கற்றுக் கொள்ளாதவனுக்கு அச்சொல்லை அவர்கள் என்ன பொருளுக்கு வைத்துள்ளார்கள் என்பது தெரியாமற் போனால் அவன் அதை தான் அறிந்த பொருளுக்கே பயன்படுத்துவான். அவ்வாறு அவன் பயன்படுத்தும் போது அவ்வசனம் பல சிக்கல்களையும், கருத்து வேறுபாட்டையும் ஏற்படுத்திவிடும்.
அவனுக்கு அந்த வசனம் திருக்குர்ஆனுக்கும், ஹதீதுகளுக்கும் முரணானவைபோல் விளங்கும். அப்போது அவன் என்ன செய்வான்? இவ்வசனம் பிழையானதென்றும், இஸ்லாமிய கொள்கைக்கு முரணானதென்றுமே சொல்வான். வாதிடுவான். இதற்குக் காரணம் அவன் அக்கலையின் கலைச் சொற்களைத் தெரியாமலிருப்பதேயாகும்.
இவ்விடயத்தை வாசகர்கள் விளங்கிக் கொள்வதற்காக சில உதாரணங்கள் எழுதுகிறேன்.
உதாரணமாக فَقْرٌ – “பக்றுன்” என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். இச்சொல்லின் வெளிப்படையான, அதிகமானவர்கள் தெரிந்து வைத்துள்ள பொருள் “வறுமை” என்ற பொருள்தான். அறபு மொழி தெரிந்த ஏழு வயதுள்ள சிறுவன் உள்ளிட்ட அனைவரும் வறுமை என்று மட்டும்தான் அறிந்து வைத்துள்ளார்கள்.
ஸூபீகள் இதே சொல்லை என்ன பொருளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்ற விபரம் தெரியாதவன் இதற்கு வறுமை என்றுதான் பொருள் சொல்வான். அவ்வாறு அவன் சொன்னால் அது இஸ்லாமிய கொள்கைக்கு – “அகீதா”வுக்கு முற்றிலும் முரணானதாகிவிடும்.
பின்வரும் விடயத்தைக் கவனிக்கவும்.
كَادَ الْفَقْرُ أَنْ يَكُوْنَ كُفْرًا
ஸூபீ மகான்கள் இவ்வாறு ஒரு வசனம் பாவிப்பார்கள். இது ஹதீதில் வந்துள்ள வசனமாகும். இதன் பொருள் (வறுமை “குப்ர்” மத மாற்றத்திற்கு – இறை நிராகரிப்புக்கு நெருங்கிவிட்டது) என்பதாகும். இதற்கான விளக்கம் நீளமானது. சுருங்கச் சொல்வதாயின் வறுமையினால் திருடுபவன் திருட்டை “ஹலால்” ஆகும் என்று நினைப்பது போன்று என்று சொல்லலாம்.
இதன் சரியான பொருள் மேலே நான் எழுதியுள்ள பொருள்தான். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை. இவ்வசனத்தில் “பக்ர்” என்ற சொல் வறுமை என்ற அதன் வெளிப்படையான பொருளுக்கே பாவிக்கப்பட்டுள்ளது.
இவ்வசனம் போல் ஸூபீ மகான்கள் இன்னொரு வசனமும் பாவிப்பார்கள். இதையும் கவனியுங்கள்.
إِذَا تَمَّ الْفَقْرُ هُوَ اللهُ
இவ்வசனத்தின் வெளிப்படையான பொருள் (வறுமை பூரணமானால் அவன் அல்லாஹ்) என்பதாகும்.
இவ்வசனத்தின் வெளிரங்கப் பொருளின்படி (ஒருவருக்கு வறுமை பூரமணமானால் – அவன் உச்சக்கட்ட வறுமை அடைந்தால் அவன் அல்லாஹ்) என்று பொருள் வரும்.
இவ்வாறு பொருள் சொன்னால், இதுவே இதன் சரியான பொருளென்றும், நம்பினால் உண்ண, உடுக்க வழியில்லாதவனும், “பிளேன்டி” குடிக்க வசதியற்றவனும் அல்லாஹ் என்ற கருத்து வரும். இது பிழையான கருத்தாகும். புத்திக்குப் பொருந்தாத கருத்துமாகும்.
எனவே, மேற்கண்ட வசனத்திலுள்ள “பக்ர்” என்ற சொல்லுக்கு வறுமை என்று பொருள் கொள்ளாமல் ஸூபீகள் இதற்கு தமது பரிபாஷையில் என்ன பொருள் கொள்கிறார்கள்? என்ன பொருளுக்கு இதைக் கலைச் சொல்லாகப் பாவிக்கிறார்கள்? என்று தெரிந்து கொண்டால் இவ்வசனம் மார்க்கத்திற்கு முரணானதாகாது. اَلنَّاسُ أَعْدَاءُ مَا جَهِلُوْا (மனிதர்கள் தமக்குத் தெரியாதவற்றின் எதிரிகள்) என்ற பழமொழி இங்கு நினைவு படுத்தப்பட வேண்டியதாகும்.
إِذَا تَمَّ الْفَقْرُ هُوَ اللهُ
“பக்ர்” பூரணமானால் அவன் அல்லாஹ் என்ற வசனத்தில் வந்துள்ள “பக்ர்” என்ற சொல்லுக்கு வறுமை என்ற பொருள் இருந்தாலும் கூட ஸூபீ மகான்கள் இச் சொல்லை வறுமை என்ற பொருளுக்கு பயன்படுத்தாமல் فَنَاءٌ – “பனாஉன்” என்ற பொருளுக்குப் பயன்படுத்துவார்கள்.
“பனா” فَنَاءٌ என்றால் அடியான் தன்னை அல்லாஹ்வில் அழித்து தானுமில்லை, மற்றும் வேறு ஒன்றுமே இல்லை என்ற நிலைக்கு வருதலாகும். இப்படியொரு நிலை ஸூபிஸ ஞானத்தில் உண்டு. அதை ஐயமறத் தெளிவாகக் கூறுவதாயின் ஒரு “ஹதீதுக் குத்ஸீ”யைக் கூறி அதன் வெளிச்சத்தில் விளக்கம் எழுதினால் மட்டுமே ஸூபிஸ ஞானம் அறவே தெரியாதவர்களால் ஓரளவேனும் நான் கூற நினைக்கின்ற விடயத்தை புரிய முடியும்.
எனினும் நான் கூற நினைக்கின்ற “ஹதீதுக் குத்ஸீ” தனித்தலைப்பில் விளக்கமாக எழுத வேண்டிய, அல்லது பேச வேண்டிய விடயமாகும். அரை குறையாகச் சொன்னால் மார்க்க அறிஞர்களிற் சிலரால் அதை விளங்கிக் கொள்ள முடியாமற் போய்விடும். ஆகையால் முழுமையான விளக்கம் தேவையானோர் இதன் கீழ் குறிப்பிடும் முகவரியுடன் தொடர்பு கொண்டு இது தொடர்பாக நான் பேசிய CD களைப் பெற்றுப் பயனடையுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
எனினும் என்னால் முடிந்தவரை சுருக்கி அந்த “ஹதீது குத்ஸீ”யின் விளக்கத்தை தொட்டுக் காட்டுகிறேன்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‘ إِنَّ اللَّهَ قَالَ: مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالحَرْبِ، وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ، وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ: كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا،
ஹதீதுக் குத்ஸீயின் தலைப்புக்குப் பொருத்தமான வசனங்களுக்கு மட்டுமான தமிழாக்கம்:
(எனதடியான் “நவாபில்”கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டே இருப்பான். அப்போது அவனை நான் நேசிப்பேன். நான் நேசித்தால் அவன் கேட்கும் கேள்வியாக நான் ஆவேன், அவன் பார்க்கும் பார்வையாகவும் நான் ஆவேன், அவன் பிடிக்கும் கையாகவும் நான் ஆவேன், அவன் நடக்கும் காலாகவும் நான் ஆவேன்)
இந்த இறையறிவிப்பின் மூலம் பல உண்மைகள் தெளிவாகின்றன. அவை பின்வருமாறு. அடியான் – மனிதன் “நவாபில்” கள் மூலம் அல்லாஹ்வை நெருங்கியவனாக இருக்க வேண்டுமென்பதும், அவ்வாறு அவன் நெருங்கிச் செல்கையில் அவன் அவ் அடியானை நேசிப்பான் என்பதும், அவன் இவனை நேசித்து விட்டானாயின் அடியானின் கேள்வியாக அவன் ஆவதாகவும், அவனின் பார்வையாக அவன் ஆவதாகவும், அவனின் கையாக அவன் ஆவதாகவும், அவனின் காலாக ஆவதாகவும் வாக்களித்துள்ளான்.
இந்த ஹதீதுக்குத்ஸீ மூலம் நாம் பொதுவாக அறிகின்ற விடயம் என்னவெனில் மனிதன் அல்லாஹ்வை நெருங்க வேண்டும் என்பதாகும். அவனே எல்லாமாயுமிருக்கும் நிலையில் அவனை நெருங்குதல் என்பது எவ்வாறு சாத்தியமாகும்? நெருங்குவதற்கு இரண்டு வஸ்த்துக்கள் தேவையென்று ஒரு கேள்வி பிறக்கும். இதற்கு சுருக்கமான விடை பின்வருமாறு. “குர்பு” நெருக்கம் – நெருங்குதல் என்பது இடத்தைப் பொறுத்த நெருக்கம் அல்லவென்றும், அது கருத்தைப் பொறுத்த நெருக்கம் என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும். நெருக்கம் என்றால் அதன் சுருக்கம் அவனை அறிதலேயாகும். பெருமானாரை நெருங்குதல் என்றால் அவர்களை அறிவதேயாகும். திரு மதீனா போக வேண்டுமென்பதல்ல. “குத்பு” நாயகம் அவர்களை நெருங்குதல் என்றால் அவர்களை அறிவதேயன்றி இறாக் – பக்தாத் போக வேண்டுமென்பதில்லை. இவையாவும் கருத்தைப் பொறுத்த நெருக்கமேயன்றி இடத்தைப் பொறுத்த நெருக்கமல்ல. ஆகையால் இரண்டுக்கு இங்கு இடமில்லை.
இவ்வாறு அடியான் அறிவின் மூலம் அல்லாஹ்வை நெருங்கிச் செல்கையில் அவன் இவ்வடியானை விரும்புகிறான். நேசிக்கிறான். அவன் இவ் அடியானை நேசித்து விட்டால் அவன் இவனுக்கு நாலு பரிசில்களை “கிப்ட்” அன்பளிப்பாக வழங்குகிறான்.
அவை அல்லாஹ் அடியானின் கேள்வியாதல், அவனின் பார்வையாதல், அவனின் கையாதல், அவனின் காலாதல் ஆகியன.
ஒரு காதலன் தனது காதலியை அறிவால், அன்பால் நெருங்கிக் கொண்டே இருந்தானாயின் அவள் இவனை நிச்சமயாக விரும்புவாள். அவ்வாறு அவள் விரும்பிவிட்டால் அவனுக்கு அவள் பரிசில்களை வழங்குவாள். சுருங்கச் சொன்னால் நான்கு பரிசில்கள் மட்டுமல்ல. தன்னையே முழுமையாக “கிப்ட்” அன்பளிப்பாக கொடுத்துவிடுவாள். இவ்வாறுதான் அல்லாஹ்வைக் காதலிப்பவர்களுக்கும் அல்லாஹ் ஹதீதில் குறித்த நான்கு பரிசில்கள் மட்டுமன்றி அவன் தன்னையே அடியானுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிடுவான்.
اَلرَّبُّ رَبٌّ، وَالْعَبْدُ عَبْدٌ، لَا يَصِيْرُ الرَّبُّ عَبْدًا وَلَا الْعَبْدُ رَبًّا،ஷ
றப்பு – இறைவன் இறைவன்தான். அப்து – அடியான் அடியான்தான். இறைவன் அடியானாக மாறுவதுமில்லை, அடியான் இறைவனாக மாறுவதுமில்லை. அவன் அவன்தான், இவன் இவன்தான்.
அல்லாஹ் அடியானின் கேள்வியாதல், பார்வையாதல், அவனின் கையாதல், காலாதல் என்பதெல்லாம் அடியானின் கட்டுப்பாடான தன்மைகள் யாவும் அல்லாஹ்வின் கட்டுப்பாடற்ற தன்மைகளாகிவிடுதலையே குறிக்கும். இது தவிர அல்லாஹ்வுக்கு வேறானவனாக அடியானுமில்லை, அடியானுக்கு வேறானவனாக அல்லாஹ்வுமில்லை. அல்லாஹ் மட்டுமே உள்ளான்.
அல்லாஹ் அடியானை நேசித்தால் அவனுக்கு அல்லாஹ் வழங்கும் பரிசில்கள் நான்கு என்று கூறியுள்ளான். அவற்றில் கேள்வியும், பார்வையும் இரு தன்மைகளாகும். ஏனெனில் كُنْتُ سَمْعَهُ அவனின் கேள்வியாக நான் ஆவேன் என்று அல்லாஹ் கூறியுள்ளானே தவிர كُنْتُ أُذُنَهُ நான் அவனின் காதாகுவேன் என்று சொல்லவில்லை. இதேபோல் كُنْتُ بَصَرَهُ அவனின் பார்வையாக நான் ஆகுவேன் என்று கூறியுள்ளானே தவிர كُنْتُ عَيْنَهُ நான் அவனின் கண்ணாக ஆவேன் என்று சொல்லவில்லை.
கேள்வி, பார்வை எனும் சடமற்ற இரு புலன்களைக் குறிப்பிட்டுள்ளானேயன்றி இரு புலன்களும் வெளியாகுமிடங்களான சடமுள்ள காதையும், கண்ணையும் குறிப்பிடவில்லை. இவ்வாறு அல்லாஹ் கூறியுள்ளதன் மூலம் புலன்களாக வெளியானவனும் அவன்தான் என்ற கருத்து தெளிவாக விளங்கப்படுகிறது. இவ்விரு பரிசில்களும் “ஸிபாத்” எனும் தன்மைகளைக் குறிக்கின்றன.
ஆயினும் كُنْتُ يَدَهُ அவனின் கையாக நான் ஆவேன் என்ற பரிசும், كُنْتُ رِجْلَهُ அவனின் காலாக நான் ஆகுவேன் என்ற பரிசும் சடப் பொருளைக் குறிக்கின்றனவேயன்றி தன்மைகளைக் குறிக்கவில்லை.
இவ்வாறு சொல்லியுள்ளதன் மூலம் சடப் பொருளாக வெளியானவனும் அவன்தான் என்ற கருத்து தெளிவாக விளங்கப்படுகின்றது. பொதுவாக அல்லாஹ் சடப் பொருளாகவும், சடமற்ற தன்மைகளாகவும் வெளியாகியுள்ளான் என்ற தத்துவம் விளங்கப்படுகின்றது.
அல்லாஹ் சடமற்ற இரண்டு தன்மைகளையும், சடமுள்ள இரண்டு வஸ்த்துக்களையும் பரிசில்களாக வழங்கியிருப்பதன் மூலம் சடமற்ற தன்மைகளாகவும், சடமுள்ளவையாகவும் அவனே உள்ளான் என்ற உண்மை தெளிவாக விளங்கப்படுகின்றது.
மேலே குறிப்பிட்ட “ஹதீதுக் குத்ஸீ” “பனா” நிலையைக் கூறுவது அறிவுள்ளவர்களுக்கு மறைவானதன்று. “பனா” என்ற சொல்லுக்கு அழிதல் என்று பொருள் இருந்தாலும் கூட அடியானின் உடல் அழிந்து போய் அல்லாஹ்வின் உடல் அவனுக்கு வருவதாகும் என்ற கருத்தில் இது சொல்லப்பட்ட “ஹதீது குத்ஸீ” அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வில் “பனா” அழிதல் என்பது அடியானின் உடல் அழிந்து அல்லாஹ்வின் உடல் அவனுக்கு வருதல் என்பது கருத்தல்ல. உடல் அழிவதில்லை. உடல் உடல்தான். எனினும் “பனா” அழிதல் என்பது உணர்வு அழிவதையே குறிக்கும். அதாவது أَنِّيَّةٌ – நான் என்ற உணர்வும், غَيْرِيَّةٌ – வேறு என்ற உணர்வும் அழிவதையே “பனா” என்ற சொல் உணர்த்துகிறது.
“பனா”வில் மூன்று வகையுண்டு. இதை பின்வரும் பாடல் உணர்த்துகிறது.
فَنَاءٌ فِى فَنَاءٍ فِى فَنَاءٍ – فَكَانَ فَنَائُهُ عَيْنَ الْبَقَاءِ
முப்பெரும் “பனா” நிகழ்ந்தால் அதன் பின் “பனா” அழிதல் என்பதில்லை. “பகா” என்ற தரிபாடு மட்டுமே இருக்கும்.
اَلْفَنَاءُ فِى الذَّاتِ، اَلْفَنَاءُ فِى الصِّفَاتِ، اَلْفَنَاءُ فِى الْأَسْمَاءِ
“தாத்”தில் “பனா” ஆதல், “ஸிபாத்”தில் “பனா” ஆதல், “அஸ்மா”க்களில் “பனா” ஆதல் என்று மூன்று வகையான “பனா” உண்டு. இவ்வாறு “பனா” ஆன பின்னுள்ள நிலை “பகா” என்று ஸூபீ மகான்களிடம் சொல்லப்படுகின்றது. இதைக் கருத்திற் கொண்டே ஸூபீகள் إِذَا تَمَّ الْفَقْرُ هُوَ اللهُ “பக்ர்” எனும் நிலையை – “பனா” வின் உச்சக்கட்டத்தை அடைந்தவன் அல்லாஹ் என்று ஸூபீகள் சொன்னார்கள். “பகா” என்ற சொல் ஸூபிஸக் கலையில் மூன்று “பனா”க்களையும் கடந்த பின் ஏற்படும் நிலையைக் குறிக்கும்.
மௌலவீ பத்தாஹீ, மௌலவீ ஹஸனீ இருவரும் சகல கலா வல்லவர்களாயிருக்கலாம். அதுபற்றி நான் குறை கூறவில்லை. எனினும் இவ்விருவரும் ஸூபிஸக் கலையில் புதிதாக கால் வைத்தவர்கள். இவர்கள் இருவரையும் “தஸவ்வுப்” ஸூபிஸக் கலையில் பாலர்வகுப்பு மாணவர்களாகவே நான் காண்கிறேன். இவர்கள் இருவரும் “மௌலா இஸ்லாம்” புதிதாக இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்தவர்கள் போன்றவர்களாவர். புதிதாக இஸ்லாமில் சேர்ந்தவர்களுக்கு இஸ்லாமிய சட்டங்கள் எல்லாமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் பல வருடங்கள் இஸ்லாமுடன் பின்னிப் பிணைந்திருந்தால்தான் அவர்களால் இஸ்லாமின் பரவலான சட்டங்களைப் பூரணமாக அறிய முடியும். இவ்விரு ஹஸ்றத்மார்களும் ஸூபிஸக் கலையின் பாலர் வகுப்பு மாணவர்களேயாவர். இவர்கள் பட்டதாரி மாணவர்களாக வேண்டும்.
اللهم اجعلهما عالمين صوفيين ماهرين، وعلمهما ما لم يعلما مِن أسرار التوحيد والتصوّف،
“நவாபில்” தொடர்பான விபரம் அடுத்த தொடரில் இடம் பெறும்.