தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இவர்கள் பிழையாக “பத்வா” கொடுத்துவிட்டு இப்போது 42 வருடங்களின் பின் அதை வாபஸ் பெற்றால் தமது மானம், மரியாதையெல்லாம் காற்றில் பறந்து உலகெங்கும் பரவிவிடும் என்று பயந்து தமது “பத்வா” தீர்ப்பு சரியானதென்று நிறுவுவதற்காக கடும் முயற்சி எடுக்கின்றார்கள். இராப் பகலாக மூளை குழம்பிய நிலையில் ஓடித் திரிகிறார்கள்.
இவர்கள் தமது மானத்தையும், கௌரவத்தையும் காப்பாற்றுவதற்காக திருக்குர்ஆனையும், நபீ மொழிகளையும், வலீமார்களின் தத்துவங்களையும் பொய்யாக்குகிறார்கள்.
இவர்கள் இவ்வாறு வரம்பு கடந்து மார்க்கத்தைப் புரட்டுகிறார்கள். இஸ்லாமிய தத்துவத்தை நிராகரிக்கிறார்கள் என்பதை இலங்கையிலுள்ள மார்க்க அறிஞர்களிற் பலர் அறிந்திருந்தும் கூட அவர்களும் இவர்களைப் பயந்தோ என்னவோ மௌனிகளாக உள்ளனர். சத்தியத்தை – ஹக்கை – உண்மையை வெளியிடத் தயங்குகிறார்கள். இத்தருணத்தில் அறபுக் கல்லூரி அதிபர்கள் எங்கே? உஸ்தாதுமார்கள் எங்கே? ஈமானிய நெஞ்சங்கள் எங்கே? தரீகாவின் ஷெய்குமார்கள் எங்கே? ஏன் இவர்கள் மௌனிகளாயுள்ளார்கள்? ஏன் இவர்கள் உண்மையை உண்மையென்று கூறத் தயங்குகிறார்கள்? இவர்கள் உலமாஉகளா? ளுலமாஉகளா? என்று நான் கேட்கிறேன்.
இந்நாட்டில் இறைஞானம் பேசியவர்களும், “வஹ்ததுல் வுஜூத்” பேசியவர்களும் இன்று எங்கே? ஒரு பாடலில் தன்னையே அல்லாஹ் என்று சொன்னவரும் எங்கே? முஸ்லிம் அரசியல் தலைவர்களாவது இத்தீர்ப்புக்கு எதிராகவோ, அல்லது எவருக்கும் சாதக பாதகமின்றி பொதுவாக நீதி கேட்டோ குரல் கொடுக்காமலிருப்பதேனோ?
முஸ்லிம்களின் ஜனாஸா எரிக்கப்பட்ட போது அரசுக்கு எதிராக குரல் கொடுத்து, மக்களின் மனங்களைத் தம் பக்கம் திருப்புவதற்காகவும், ஈர்ப்பதற்காகவும் தெருவில் இறங்கி, கொடி தூக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று எங்கே? “பத்வா” விவகாரம் மார்க்கத்திற்கு முரணானதில்லையா? இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்களோ?
எனக்கு இந்நாட்டில் பேச்சுரிமை உள்ளது, எழுத்துரிமை உள்ளது, மத உரிமை உள்ளது. ஆகையால் நான் பேசினேன். உரிமையில்லாத ஒன்றை நான் செய்யவில்லை.
ஆனால் ஒருவனை மதம் மாற்றி “பத்வா” தீர்ப்புக் கொடுக்கும் அதிகாரம் உலமா சபைக்கு யார் வழங்கியது? எப்போது வழங்கியது? இத்தகைய அதிகாரம் அவர்களுக்கு உண்டா? என்னையும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களையும் கொலை செய்ய வேண்டுமென்று பகிரங்கமாக எழுத்து மூலம் அறிவித்தஉலமா சபைக்கு இந்த அதிகாரம் யார் கொடுத்தது?
உலமா சபை “பத்வா” வழங்கியதும் தவறு, அதில் கூறப்பட்ட கருத்தும் பிழையென்று ஆதாரங்களோடு நான் அறிவித்தும் கூட அது பற்றிக் கணக்கெடுக்காமலும், எனக்கு பதில் அனுப்பாமலும் ஊமையர்கள் போன்றும், செவிடர்கள் போன்றும் “பத்வா” வழங்கிய முல்லாக்கள் இருப்பதேன்?
நான் பேசியது “வஹ்ததுல் வுஜூத்” எனும் இறைஞான ஸூபிஸ தத்துவமாகும். நான் பேசிய கருத்து எக்கலையோடு தொடர்பானதென்பதைக் கூட அறியாத உலமா சபை அறிவிலிகள் தமது அறியாமை காரணமாக நான் பேசிய கருத்து “ஹுலூல் – இத்திஹாத்” எனும் தவறான கொள்கையென்று கற்பனை செய்து என் பெயர் குறிப்பிட்டு “பத்வா” வழங்கியிருப்பது கடும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
அறிவிலிகளான முல்லாக்களே! உங்களின் “பத்வா”வை ஆதாரமாகக் கொண்டே இந்நாட்டின் தலை சிறந்த அறிஞரும், சிறந்த பேச்சாளருமான மௌலவீ பாறூக் காதிரீ அவர்கள் தனதில்லத்தில் வைத்து இனம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இக்கொலையின் பின்னணி பற்றி உரிய முறையில் விசாரணை நடத்தினால் பல இரகசியங்கள் சந்திக்கு வருவதற்கு வாய்ப்புண்டு.
எனக்கு வழங்கப்பட்ட “பத்வா”வும் கூட எனது வாய்க்கு பூட்டுப் போடுவதற்காக வழங்கப்பட்டதேயன்றி மார்க்கத்தை அடிப்படையாக் கொண்டு வழங்கப்பட்டதல்ல. இதன் பின்னணியில் அசல் வஹ்ஹாபீகளும், “முகல்லித்” வஹ்ஹாபீகளான தப்லீக் அமைப்பினரும் இருப்பதாக பொது மக்கள் பேசிக் கொள்வது அர்த்தமற்றதல்ல.
உலமா சபை “முப்தீ”களே! தலைவர் ரிஸ்வீ அவர்களே!
நான் உங்களிடம் கேட்கும் கேள்விகளில் ஒன்றுக்கும் பதில் கூறாமலும், நான் கூறும் ஆதாரங்களுக்கு மறுப்பாதாரம் தராமலும், நான் அனுப்பும் கடிதங்களில் சிலதை ஏற்றுக் கொண்டும், இன்னும் சிலதை முகவரி பிழையென்று திருப்பி அனுப்பியும் காலம் கடத்திச் செல்கிறீர்கள். கண்ட பலனொன்றுமில்லை கண்ணே றஹ்மானே! உங்களின் காலமும் வீணாகிற்று. எனது நேரமும் வீணாகிறது. வெறுமனே காலம் கடத்தாமல் ஒரு முடிவுக்கு வாருங்கள். இரண்டிலொன்றைச் செய்யுங்கள். “பத்வா”வை வாபஸ் பெற்று என்னையும், எனது ஆதரவாளர்களையும் நிம்மதியாக வாழ விடுங்கள். அல்லது நீங்கள் “பத்வா” தீர்ப்பில் குறிப்பிட்டது போல் என்னையும், எனது ஆதரவாளர்களையும் கொலை செய்து விடுங்கள். உங்கள் மனதில் மறைந்துள்ள சதித்திட்டத்தை செயல்படுத்துங்கள். ஓர் உயிர் போனால் போகட்டும். அதற்குப் பொறுப்பானவர்கள் நீங்கள்தான். இன்றைய சூழ்நிலையில் நான் கொல்லப்பட்டால் அதற்குப் பொறுப்பானவர்கள் நீங்கள் என்பதற்கு சாட்சியே தேவையில்லை. உங்களின் எழுத்தொன்று மட்டும் போதும்.
நீங்கள் வாபஸ் பெற்றால் அது உங்களுக்கு ஒரு வகையில் அவமானமென்பதை உங்கள் போல் நானும் அறிந்தவன்தான். ஆயினும் எவர் என்னதான் சொன்னாலும் அறிவுலகம் உங்களைப் பாராட்டாமலிருக்காது. பாராட்டு கடிதங்களைப் பத்திரப்படுத்த இன்னொரு “பில்டிங்” நீங்கள் வாங்க வேண்டியே வரும். அந்த அளவு பாராட்டுக் கடிதங்கள் குவியும். இவற்றை விட மேலாக அல்லாஹ்வும், நபீமாரும். வலீமாரும், ஸூபீ மகான்களும் உங்களைப் பாராட்டுவார்கள்.
நீங்கள் வாபஸ் பெறாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தானாகையால் முயல்கள் அனைத்துக்கும் மூன்று காலேதான் என்று “ஹபன்னக்” என்ற உலகப் பிரசித்தி பெற்ற மடையன் சொன்னது போல் நீங்களும் சொல்லிக் கொண்டிருப்பீர்களாயின் அல்லாஹ்வின் சாபமும், நபீமார், வலீமார், மற்றும் ஸூபீ மகான்களின் சாபமும், குறிப்பாக உங்கள் “பத்வா”வினால் பாதிக்கப்பட்டு அல்லல் படும் மக்களின் சாபமும் மனிதனை அவனின் நிழல் தொடர்வது போல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
முல்லாக்களே!
நீங்கள் நியாயத்திற்கும், மனச் சாட்சிக்கும் அடி பணியாமல் உங்களின் அட்டூழியத்தை தொடர்வீர்களாயின் உங்களுக்கு எதிராக இலங்கையின் பல ஊர்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தி அரசிடம் நியாயம் கேட்பதற்கும் உங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கும் நாங்கள் – ஸூபிஸ சமுகம் – பின்வாங்கமாட்டோம்.
உங்கள் போல் ஊழல் செய்வதற்கும், தில்லு முல்லுச் செய்வதற்கும், பொய் சொல்வதற்கும் உலகிலேயே உங்கள் போல் எவரும் இருக்க முடியாது. நீங்கள் இதுகால வரை செய்த, குறிப்பாக “பத்வா” விடயத்தில் செய்த தில்லு முல்லுகளையும், அதன்பின் அண்மையில் கையெழுத்து தொடர்பாக செய்த உருட்டுப் புரட்டுகளையும் இலங்கையின் பல ஊர்களுக்கும் சென்று மௌலவீமார், ஷெய்குமார்களைக் கண்டு அவர்களிடம் “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை பொது மக்களுக்கு விளக்கி வைக்கப் போகிறோம் என்று பொய் சொல்லியும், அவர்களை ஏமாற்றியும் கையெழுத்து எடுத்ததை சாட்சிகளுடன் வெளிப்படுத்துவோம். நாங்கள் உங்களுக்குப் பயந்து பதுங்கு குழியில் பதுங்குவோம் என்று நினைத்து விடாதீர்கள். இன்ஷா அல்லாஹ் இறுதிவரை உங்களுக்கு முகம் கொடுத்து நிற்போம்.
“பத்வா” வழங்கிய மனக்கண், அறிவுக்கண் குருடர்களையும், அவர்களுக்கு கூஜா தூக்கும் நடிகர்களையும், மற்றும் ஸூபிஸம் தெரியாமல் உளறும் போலிகளையும் என்னிடம் எழுது கோலுடனும், குறிப்பெழுதும் தாளுடனும் வந்து ஸூபிஸம் கற்றுக் கொள்ளுமாறு ஒரு தரமல்ல பல தரம் அழைத்தேன். இன்று வரை அழைத்துக் கொண்டுமே இருக்கிறேன். இதுவரை எவரும் முன்வரவில்லை.
உலமாஉகளே வாருங்கள். ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ இவ் உயர் ஞானத்தை உங்கள் மண்டையிலேற்ற என்னால் முடியாது. நீங்கள் வேற்றுமையில் வேரூன்றி விட்டீர்கள். ஆகையால் குறைந்த பட்சம் ஒருவார காலமாவது என்னிடம் நீங்கள் தங்கியிருங்கள். உங்களுக்கான தங்குமிட வசதியும், மூன்று வேளை உணவும், மற்றும் குடிபான வசதிகளும், அரசாங்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேசி 100 பேர்கள் கொண்ட பாதுகாப்பு வீரர்களும் ஏற்பாடு செய்து தருகிறேன்.
இந்தச் சலுகை கூட உங்களுக்கு இன்னும் சில மாதங்களுக்கு மட்டுமே. நாங்கள் உங்களுக்கெதிராக நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும், வழக்குத் தாக்கல் செய்வதற்கும் முன்னர் முந்திக் கொள்ளுங்கள்.
இறுதியாக சில அறிவுரைகள்.
كان الإمام أسعد اليافعيّ يقول إنّ حُكمَ إنكار هؤلاء الجهلة على أهل الطريق حكم ناموسة نفخت على جبل تريد إزالته من مكانه بنفختها،
قال الشّعراني رحمه الله ولا يخفى أنّ أصل الإانكار من الأعداء المبطلين إنّما ينشأ من الحسد، ولو أنّ أولائك المنكورن تركوا الحسد وسلكوا طريق أهل الله لم يظهر منهم إنكارٌ ولا حسدٌ، وازدادوا علما إلى علمهم، ولكن هكذا كان الأمر فلا حول ولا قوّة إلّا بالله العليّ العظيم، ، (اليواقيت، ص 14)
இமாம் அஸ்அத் அல்யாபிஈ அவர்கள் பின்வருமாறு கூறுவார்கள். ஞான வழி நடப்பவர்கள் மீது மடையவர்கள் மறுப்பதானது ஒரு நுளம்பு ஒரு மலையை அதன் இடத்திலிருந்து அகற்றுவதற்காக ஊதுவது போன்றாகும்.
இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ அவர்கள் கூறினார்கள். வீணர்களான எதிரிகள் மறுப்பதற்கான அடிப்படை அவர்களின் பொறாமையேயாகும். அந்த வீணர்கள் தமது பொறாமையை விட்டு “அஹ்லுல்லாஹ்” என்று சொல்லப்படக் கூடியவர்களின் வழி நடந்தால் அவர்களில் இருந்து எந்த விதமான மறுப்போ, பொறாமையோ வெளியாகாது. தம்மிடமுள்ள அறிவை இன்னும் பெருக்கிக் கொள்வார்கள். ஆனால் இவ்வாறுதான் விடயம் நடந்து வருகிறது. நன்மை செய்வதாயினும், தீமை செய்வதாயினும் அல்லாஹ்வைக் கொண்டே முடியும்.