தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே!
ஒரு மனிதன் நோயுற்று அவன் தனது வீட்டிலோ, அல்லது மருத்துவ மனையிலோ சிகிச்சை பெற்று வருவானாயின் அவனின் காலடி சென்று அவனிடம் சுக, செய்தி விசாரிப்பது வணக்கமாகும்.
இவ்விடயத்தில் முஸ்லிம், காபிர், ஸுன்னீ, வஹ்ஹாபீ, நல்லவன், கெட்டவன், ஆண், பெண், பக்கத்து வீட்டான், தூரத்து வீட்டான், ஆன்மிகவாதி, அரசியல்வாதி என்ற வேறுபாடின்றி நோயாளி என்ற காரணத்தை மனதிற் கொண்டு அவனிடம் சென்று நலம் விசாரித்தல் பல வகையில் நல்ல காரியமேயாகும்.
நோய் வினவச் செல்பவன் தன்னால் முடியுமான ஏதாவது உணவுப் பொருளை, அல்லது குடிபானத்தை எடுத்துச் செல்வது விரும்பத்தக்கதாகும்.
நான் சிறுவனாயிருந்த காலத்தில் ஆண்கள் நோய் வினவச் செல்லும் போது ஹோர்லிக்ஸ், நெஸ்டோமோல்ட் போன்ற பால்டின், ஒறேஞ் – தோடம்பழம் போன்றவை எடுத்துச் செல்வதும், பெண்கள் சீனி எடுத்துச் செல்வதும் வழக்கத்தில் இருந்தன. ஒன்றுமே எடுத்துச் செல்ல வசதியற்றவர்கள் வெறும் கையுடன் செல்வார்கள். நோய் வினவச் செல்பவர் பண வசதியுள்ளவராயின் நோயாளிக்கு தன்னால் முடிந்த பண உதவி செய்வார். இவ்வாறு அன்று வாழ்ந்தவர்கள் செய்வது வழக்கத்தில் இருந்தது. இன்று நோயாளியைச் சந்திக்கச் செல்லும் வழக்கம் பெண்களிடம் இருந்தாலும் ஆண்களிடம் மிகவும் குறைந்துவிட்டது. அவர்களிடம் இவ்வழக்கம் குறைந்து போனதற்கான காரணம் நான் சொல்லித்தான் வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை.
ஓர் ஏழை மனிதன் இருக்கிறான். அவனுக்குத் தீராத நோய். தனது பொருளாதார வசதிக்கேற்றவாறு சில டொக்டர்களிடம் காட்டி மருந்து பாவித்தும் பயனில்லை. நாளுக்கு நாள் நோய் கூடிக் கொண்டே செல்கிறது. தரமான டொக்டர் ஒருவரிடம் செல்வதற்கு அவனிடம் வசதியில்லை. அவன் ஏழை என்ற காரணத்தால் அவனுக்கு கடன் கொடுத்து உதவும் எவருமில்லை. தொழிலின்றிப் படுக்கையிலிருக்கும் அவனின் மனைவி மக்களைக் கவனிப்பதற்கு எவருமில்லாத நிலையில் அவன் அரச மருத்துவ மனை சென்று அங்கு பல வாரங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றும் பலன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அவனின் மனைவியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் பெருங் கோடீஸ்வரனாக இருந்தான். அவனுக்கு தோட்டங்களும், கடைகளும், வாகனங்களும் இருந்தும் கூட அவன் இவ் ஏழை நோயாளியை நோய் வினவக் கூடச் செல்லவில்லை. அவனின் வைத்தியச் செலவு தனது தலை மேல் விழுந்து விடுமென்று பயந்து நோயாளியின் வீடுள்ள வழியால் கூட அவன் போகவில்லை. இத்தகைய உலோபி இருந்தென்ன இறந்தென்ன! இறப்பது மேலானதே!
இவனையும், இவன் போன்றவர்களையும் அல்லாஹ் நாசமாக்க வேண்டுமென்றுதான் “துஆ” செய்ய வேண்டும். ஆயினும் நாம் செய்யத் தேவையில்லை. நமது உயிரினும் மேலான உத்தம நபீகளார் அவர்களே இவனின் அழிவுக்கு பின்வருமாறு கரமேந்திவிட்டு உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
اَللهم أَعْطِ مُنْفِقًا خَلَفًا وَمُمْسِكًا تَلَفًا
இறைவா! மக்களுக்கு – ஏழைகளுக்கு கொடுப்பவனுக்கு இன்னும் பொருளாதாரத்தை கொடுப்பாயாக! கொடுக்காமல் தனக்காக பதுக்கி வைத்திருப்பவனின் பொருளாதாரத்தில் அழிவை ஏற்படுத்துவாயாக! அவர்களின் இப் பிரார்த்தனை – “Bபத்துஆ” – “Bபதுவா” ஏற்றுக் கொள்ளப்பட்டதினால்தான் பணத்தின் மேல் படுத்துறங்கிய பலர் இன்று “பேமன்ட்” நடை பாதையில் படுத்துறங்குவதை நாம் பார்க்கின்றோம். பணத்திமிர் காரணமாக ஹாஜாவின் கந்தூரிக்கு பன்றிக் குட்டி கட்டுவேன் என்று மார்தட்டிய வம்பன் ஒருவன் உண்ண உணவின்றியும், உடுக்க உடையின்றியும் தெருத் தெருவாக அலைந்து திரிவதையும் காண்கிறோம். இத்தகைய தண்டனைக்குட்பட்ட வம்பர்களின் வாழ்வை எண்ணி உலோபிகளான ஏனைய பண முதலைகள் பாடம் படிக்க வேண்டும்.
நோயாளியும், மற்றவர்களும் ஓத வேண்டியவை.
عن عائشة رضي الله عنها ‘ أنَّ رسول الله صلى الله عليه وسلم كان إذا أَوَى إلى فراشه جمع كفّيه ثم نفث فيهما، فقرأ فيها: (قُلْ هُوَ اللَّهُ أحَدٌ) و (قُلْ أعُوذُ بِرَبّ الفَلَقِ) و (قُلْ أعُوذُ بِرَبّ النَّاس) ثم يمسحُ بهما ما استطاع من جسده، يبدأ بهما على رأسه ووجهه وما أقبل من جسده، يفعلُ ذلك ثلاثَ مرّاتٍ، قالت عائشة: فلما اشتكى كان يأمرني أن أفعل ذلك به ‘.
وفي رواية في الصحيح: ‘ أن النبي صلى الله عليه وسلم كان ينفث على نفسه في المرض الذي تُوفي فيه بالمعوِّذات، قالت عائشة: فلما ثَقُلَ، كنتُ أنفثُ عليه بهنّ وأمسحُ بيد نفسه لبركتها ‘.
நோயாளியாயினும், ஆரோக்கியமானவர்களாயினும் உறக்கத்திற்காகச் சென்றால் பின்வரும் ஓதல்களை ஓதி இரு உள்ளங்கைகளிலும் ஊதி அவ்விரு கைகள் கொண்டும் தலை முதல் உள்ளங் கால் வரை தடவிக் கொண்டால் நோயாளிக்கு நோய் சுகமாகும். நோயில்லாதவர்களுக்கு நோய் வராது.
நபீ அலைஹிஸ்லாது வஸ்ஸலாம் அவர்கள் உறக்கத்திற்காக தங்களின் பாய் அல்லது விரிப்புக்கு வந்தால் தங்களின் இரு கைகளையும் சேர்த்து அவ்விரண்டிலும் ஊதியபின் அவ்விரண்டிலும் “குல்ஹுவல்லாஹு” அத்தியாயம், “குல்அஊது பிறப்பில் பலக்” அத்தியாயம், “குல்அஊது பிறப்பின்னாஸ்” அத்தியாயம் மூன்றையும் ஓதி அவ்விரு கைகளால் தங்களின் உடலில் தடவ முடிந்த இடங்களிலெல்லாம் தடவுவார்கள். தடவும் போது தலை, முகம் வழியாக ஆரம்பம் செய்வார்கள். உடலின் முன் பக்கம், பின் பக்கம் எல்லாவிடங்களிலும் தடவுவார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள் என்று அன்னை ஆயிஷா நாயகி றழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்.
இன்னோர் அறிவிப்பில் “பெருமானார் அவர்கள் “வபாத்” மரணித்த நோயின் போது அவர்களே “குல்அஊது பிறப்பில் பலக்”, “குல்அஊது பிறப்பின்னாஸ்” இரண்டையும் ஓதி தங்கள் மீது ஊதிக் கொள்வார்கள்” என்றும் வந்துள்ளது.
அவர்களுக்கு இயலாமற் போன போது நான் அவற்றை ஓதி அவர்கள் மீது ஊதுவேன், அருளை நாடி அவர்களின் கையாலேயே அவர்களின் உடலை தடவியும் விடுவேன் என்று ஆயிஷா நாயகி அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: புகாரீ, முஸ்லிம் 347, அல் அத்கார் 113
நோயாளி தானே ஓதி தனது கையில் ஊதி தனது உடல் முழுவதும் தடவிக் கொள்ளலாம். அவனுக்கு முடியாதிருந்தால் இன்னொருவர் நோயாளியின் கையில் ஓதி ஊதி அவனின் உடலை அவன் கை கொண்டே தடவலாம். அதற்கு முடியாமற் போனால் ஓதுகின்றவர் தனது கையில் ஊதி நோயாளியின் உடலைத் தடவி விடலாம்.
இவ்வாறு நபீகள் நாயகம் அவர்கள் செய்துள்ளார்கள். அவர்களின் மனைவி ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்களும் செய்துள்ளார்கள்.
இவ்வாறு செய்வதே நமது ஊர்களிலும், ஏனைய ஊர்களிலும் ஊதிப் பார்த்தல் அல்லது ஓதிப் பார்த்தல் என்று சொல்லப்படுகின்றது. தண்ணீரில் இவற்றை ஓதி ஊதி நோயாளிகளுக்கு குடிக்க கொடுக்கவும் முடியும். அல்லது பீங்கானில் எழுதி அதை நீரினால் கரைத்து குடிக்க கொடுக்கவும் முடியும். அதாவது ஆகும். வஹ்ஹாபிஸம் இதற்கு சிவப்புக் கொடிதான் காட்டும். நாம் நபீகளார் செய்ததைச் செய்வோம். “உம்மஹாதுல் முஃமினீன்” விசுவாசிகளின் தாய்மார்களான பெருமானார் அவர்களின் மனைவியர் செய்ததைச் செய்வோம். அச்சமின்றிச் செய்வோம். தயங்காமற் செய்வோம். இவ்வாறு செய்தல் “ஷிர்க்” ஆகவும், நரக வாதிகளின் செயலாகவுமிருந்தால் இவ்வாறு செய்த மகான்கள் செல்லும் நரகத்திற்கு நாமும் செல்வோம். அது எமக்கு சுவர்க்கப் பூங்காவாக இருக்கும். அல்ஹம்து லில்லாஹ்!
வீட்டிலுள்ள தாய்மார்கள் தமது சிறு பிள்ளைகளுக்கு இரவு நேரத்தில் இவ்வாறு செய்தால் அவர்கள் நோயிலிருந்தும், கண் திஷ்டியிலிருந்தும், ஷெய்தானின் தீமையிலிருந்தும் பாதுகாப்பு பெறுவார்கள்.
ஒரு நோயாளியை நோய் வினவச் செல்வோரில் மேற்கண்ட அத்தியாயங்களை பிழையின்றி ஓதத் தெரிந்தவர்கள் இருந்தால் அவர்கள் நோயாளிக்கு ஓதி ஊதலாம். இவ்வாறு செய்தல் நோயாளிக்கு உதவி செய்ததாக ஆகும்.
ஸூபிஸ சமூகத்தவர்களே! ஞான வழித் தோழர்களே! எனது முரீதீன்களே! முரீதாத்துகளே!
உங்களின் உறவினர்களிலோ, மற்றவர்களிலோ எவராவது நோயினால் பாதிக்கப்பட்டால் அவர்கள் இருக்குமிடம் சென்று அவர்களைச் சந்தித்து உங்களால் முடியுமான உதவிகள் செய்யுங்கள். அவர்களைப் பார்க்கச் செல்லும் போது அவர்களுக்குத் தேவையான முடிந்த அன்பளிப்புக்களை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் வசதியற்றவர்களாயிருந்தால் எதையும் எடுத்துச் செல்லாமல் அவர்களைச் சந்தித்து அவர்களுக்காக “துஆ” செய்துவிட்டு வாருங்கள். உங்களின் பிரார்த்தனை அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமையலாம். நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு அருளியுள்ளார்கள்.
قال النبي صلى الله عليه وسلّم: إِدْخَالُ السُّرُوْرِ فِى قُلُوْبِ الْمُؤْمِنِيْنَ عِبَادَةٌ،
“விசுவாசிகளின் உள்ளங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவது வணக்கம்” என்று. இன்னும் பெருமானார் அவர்கள் பின்வருமாறு அருளியுள்ளார்கள்.
قال النبي صلى الله عليه وسلّم: تَبَسُّمُكَ فِى وَجْهِ أَخِيْكَ صَدَقَةٌ،
“நீ உனது சகோதரனின் முகம் பார்த்து புன்னகைப்பது – சிரிப்பது அவனுக்கு நீ வழங்கும் நன்கொடையாகும்” என்று.
எனவே, நீங்கள் அனைவரும் நோயாளிகளைச் சந்தித்து அவர்களுக்காக “துஆ” செய்வீர்களாக!
குறிப்பு: ஸூபிஸ சமூகத்தின் உறுப்பினர்களில் ஒருவரான ஞானப் பாடகர் றூஹுல்லாஹ் “பெயின்டர்” அவர்கள் 32 அடி உயரத்திலிருந்து தரையில் விழுந்து இருகைகளும் உடைந்த நிலையில் சத்திர சிகிச்சை செய்து தனது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதை உங்களின் கவனத்திற்குத் தருகிறேன். இவரின் இல்லம் கைறாத் பள்ளிவாயலுக்கு அண்மையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.