தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“சகாத்” கொடுக்க கடமைப்பட்டவன் அந்த நிதியை அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறிய எட்டுப் பிரிவினருக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால் மட்டுமே அது “சகாத்” ஆகும்.
அவன் அதை தனது சுய நலத்திற்காகவோ, பொது நலத்திற்காகவோ பயன்படுத்துவது கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அது “சகாத்” ஆக நிறைவேறாது.
ஆயினும் அதே நிதி கை மாறுமாயின் அந்த நிதியைப் பெற்றவன் தனது சுய நலத்திற்காகவோ, பொது நலத்திற்காகவோ பயன்படுத்த முடியும்.
கை மாறுவதால் – مِلْكْ சொந்தம் மாறுவதால் சட்டமும் மாறுவதுண்டு.
“சகாத்” நிதி நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கும், அவர்களின் குல வழி வந்தவர்களுக்கும் கூடாது. அவர்களுக்கு கொடுப்பதும் கூடாது. அவர்கள் எடுப்பதும் கூடாது.
பெருமானாரின் குல வழி வந்தவர்கள் மௌலானா, ஸெய்யித், தங்கள், “அஹ்லுல் பைத்” போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றார்கள்.
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَحْمٍ، فَقِيلَ: تُصُدِّقَ عَلَى بَرِيرَةَ، قَالَ: «هُوَ لَهَا صَدَقَةٌ وَلَنَا هَدِيَّةٌ»
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் இறைச்சி கொண்டு வரப்பட்டு இது Bபரீரா அவர்களுக்கு கொடுக்கப்பட்ட “சதகா” (சகாத்) என்று சொல்லப்பட்டது. அவ்வேளை நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “அது பரீராவுக்கு “சதகா”, எங்களுக்கு “ஹதிய்யா” என்று அருளினார்கள்.
ஆதாரம்: புகாரீ – 2577
அறிவிப்பு: அனஸ் றழியல்லாஹு அன்ஹு
عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُبَيْدَ بْنَ السَّبَّاقِ، قَالَ: إِنَّ جُوَيْرِيَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا فَقَالَ: «هَلْ مِنْ طَعَامٍ؟» قَالَتْ: لَا، وَاللهِ، يَا رَسُولَ اللهِ، مَا عِنْدَنَا طَعَامٌ إِلَّا عَظْمٌ مِنْ شَاةٍ أُعْطِيَتْهُ مَوْلَاتِي مِنَ الصَّدَقَةِ، فَقَالَ: «قَرِّبِيهِ، فَقَدْ بَلَغَتْ مَحِلَّهَا»
நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் மனைவி ஜுவைரியா அவர்கள் உபைத் இப்னுஸ் ஸப்பாக் அவர்களுக்கு பின்வருமாறு அறிவித்ததாக அவர்கள் கூறினார்கள். நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மனைவி ஜுவைரிய்யாவிடம் வந்து சாப்பாடு ஏதாவது உண்டா? என்று வினவினார்கள். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் திருத்தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக எனது அடிமைப் பெண்ணுக்கு “சகாத்”திலிருந்து வழங்கப்பட்ட ஓர் ஆட்டு முள்ளைத் தவிர வேறெந்த உணவும் என்னிடமில்லை என்று பதில் கூறினார்கள். அப்போது நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அதை என்னிடம் கொண்டு வாருங்கள். அது உரிய இடத்திற்கு வந்து விட்டது என்று கூறினார்கள்.
ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம் – (169-1073)
அறிவிப்பு: உபைதா இப்னு ஸப்பாக்
மேற்கண்ட இரு நபீ மொழிகளையும் ஆய்வு செய்தால் நான் மேலே எழுதிக்காட்டிய விளக்கம் சரியானதென்று விளங்கும்.
முந்தின நபீ மொழியில் சொல்லப்பட்ட இறைச்சி நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்பதும், அன்னை பரீராவுக்கு கொடுக்கப்பட்டதென்றும், இதனால்தான் அது அவருக்கு “சதகா” என்றும், தங்களுக்கு “ஹத்யா” என்றும் கூறினார்கள். “மில்க்” சொந்தம் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸ்லாம் அவர்களுக்கு மாறியதால் “ஹறாம்” ஆக்கப்பட்டது “ஹலால்” ஆகிவிட்டது.
இரண்டாவது நபீ மொழியில் பெருமானார் அவர்களின் மனைவி அன்னை ஜுவைரிய்யா அவர்களின் அடிமைப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட “சதகா”வாயிருந்ததினால்தான் நபீ பெருமான் அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள் என்ற விபரம் தெளிவாகிறது.
இவ்வாறு நபீ குல வழி வராதவர்களுக்கு வழங்கப்பட்ட “சகாத்” நிதியை அல்லது உணவை அல்லது பொருளை அவர்கள் நபீ குல வழி வந்தவர்களுக்கு கொடுப்பதும் ஆகும். அவர்கள் எடுப்பதும் ஆகும்.
கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் மனைவியர் “அஹ்லுல் பைத்” ஸாதாத்மார்களில் சேர்வார்களா? இல்லையா? என்பதில் கருத்து வேறுபாடு காணப்பட்டாலும் இவர்கள் أُمَّهَاتُ الْمُؤْمِنِيْنْ விசுவாசிகளின் தாய்மார்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவ்வாறு பெயர் சொல்லப்பட்டதற்கான காரணம் உலகிலுள்ள எந்த ஒரு விசுவாசியும் அவர்களைத் திருமணம் செய்யக் கூடாதென்பதேயாகும். தாய்மாரை அவர்களின் பிள்ளைகள் திருமணம் செய்யக் கூடாதல்லவா? இத்தகைய சிறப்பான பெயரால் அவர்கள் அழைக்கப்பட்டாலும் அவர்கள் “அஹ்லுல் பைத்” நபீ குல வழிவந்தவர்களில் சேர்வார்களா? என்பதில் கருத்து வேறுபாடு உண்டு.
மேற்கண்ட இரு நபீ மொழிகளில் இரண்டாவது நபீ மொழியில், நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “அது உரிய இடத்திற்கு வந்து விட்டது” என்று சொன்னதிலிருந்து அது கை மாறி வந்ததால் தங்களுக்கு அது ஆகும் என்று கூறியுள்ளார்கள் என்று விளங்கப்படுகின்றது.
நான் மேற்கண்டவாறு தலைப்பு எழுதியதற்கான காரணம் என்னவெனில் “சகாத்” வழங்குவதற்கு தகுதி பெற்ற செல்வந்தர்களிற் சிலர் தமது “சகாத்” நிதியில் தில்லு முல்லு – ஊழல் செய்கிறார்கள் என்று நம்பத் தகுந்தவர்களால் எனக்கு கிடைத்த இரகசியத் தகவல்களேயாகும். உண்மையை அல்லாஹ் அறிந்தவன். எனினும் எவரின் பெயரையும் குறிப்பிடாமல் பொதுவாக எழுதுகிறேன்.
முஸ்லிம் செல்வந்தர்களிற் சிலருளர். அவர்கள் புனித றமழான் மாத இறுதியில் தமது “சகாத்” நிதியைக் கொடுத்து விட்டு நோன்புப் பெருநாளை அடுத்த நாளிலிருந்து ஒரு “லெஜர்” போட்டுக் கொள்வார்களாம்.
அன்று முதல் அடுத்த றமழான் மாதம் வரை எவருக்கேனும், எதற்கேனும் தாம் அன்பளிப்பாக வழங்கும் கணக்குகளை குறித்த புத்தகத்தில் குறித்து வைத்துக் கொள்வார்களாம். யாசகர்களுக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் அதைக் கூட குறித்து வைப்பார்களாம்.
வெளியூர்களில் உள்ள தம்முடன் வியாபாரத் தொடர்புடைய செல்வந்தர்கள் குடும்பத்தோடு தமது வீடுகளுக்கு வந்தால் அவர்களை அனுசரித்து, உபசரித்து, அவர்கள் தங்கியிருக்கும் வரை அவர்களுக்கு மூன்று வேளை விஷேட சாப்பாடுகளும் கொடுத்து கௌரவப்படுத்தி அனுப்புவார்களாம். அவர்களுக்கான செலவுகளை கணக்குப் பார்த்து குறித்து வைத்துக் கொள்வார்களாம். நோன்பு மாதத்தில் பள்ளிவாயலுக்கு கஞ்சி, ஈத்தம்பழம் கொடுத்தாலும் அதன் செலவுகளையும் குறித்து வைத்துக் கொள்வார்களாம்.
ஒரு வருடத்தின் பின் புனித றமழான் மாத முடிவில் அந்த வருடம் அவர்கள் மேற்கண்டவாறு செலவிட்ட சகல செலவுகளையும் கணக்கெடுத்து அத்தொகையை தமது சகாத் நிதியில் கழித்துக் கொள்வார்களாம்.
உதாரணமாக தமது சகாத் நிதி – அதாவது தாம் “சகாத்” கொடுக்க வேண்டிய தொகை 10 இலட்சம் என்றால் இவர்கள் அந்த வருடம் செலவிட்ட தொகை ஐந்து இலட்சமாயின் தமக்கு கடமையான சகாத் நிதியிலிருந்து ஐந்து இலட்சத்தைக் கழித்துக் கொள்வார்களாம்.
இன்னும் சிலர் உள்ளார்களாம். அவர்கள் பெருங்கோடீஸ்வரர்கள். ஒரு சில நாடுகளில் உள்ள கோடீஸ்வரர்களான வியாபாரிகளுடன் தொடர்புள்ளவர்கள். வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம் கோடீஸ்வரர்களான வியாபாரிகள் நமது நாட்டிலுள்ள அவர்களுடன் தொடர்புள்ள கோடிஸ்வரர்களுக்கு றமழான் மாதம் பணம் அனுப்பி நமதூர் ஏழைகளுக்கு கொடுக்குமாறு சொல்வதாகவும், அவர்கள் சொன்னவாறு கொடுத்துவிட்டு இவர்கள் கொடுக்கவுள்ள “சகாத்” நிதியில் கழித்துக் கொள்வதாகவும் அறிய முடிகிறது.
மேற்கண்ட நடைமுறைகள் யாவும் பிழையானவையாகும். அது அவரின் “சகாத்”. இவர் தனது பொருளாதாரத்தை கணக்கிட்டு “சகாத்” கொடுப்பது இவரின் கடமை. இவர் தனது “சகாத்” நிதியிலிருந்து கழித்துக் கொள்வது தவறு.
கடந்த காலங்களில் அறிந்தோ, அறியாமலோ மேற்கண்டவாறு செய்து வந்தவர்கள் இனிமேல் செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன்.
இன்னும் சிலர் இப்படியும் செய்வதாக அறிய முடிகிறது. அதாவது “சகாத்” கொடுக்க வேண்டிய காலம் நெருங்கியவுடன் சில செல்வந்தர்கள் தங்க நகைகள் செய்து மனைவி மக்களுக்கு அணிகலன்களாக கொடுத்துவிடுவதாகவும், பின்னர் அவற்றை விற்றுப் பணமாக்கி கொள்வதாகவும் அறிய முடிகிறது.
இவர்கள் இவ்வாறு செய்வது அணிகலன்களுக்கு – அணிவதற்கென்றுள்ள நகைகளுக்கு “சகாத்” கொடுக்கத் தேவையில்லை என்ற சட்டத்தை ஆதாரமாகக் கொண்டேயாகும். இவர்கள் إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ “செயல்கள் யாவும் “நிய்யத்” எண்ணங்களின் படியாகும்” என்ற நபீ மொழியை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். وَاللهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى அல்லாஹ் இரகசியத்தையும், அதை விட மேலான பரம இரகசியத்தையும் அறிந்தவன் என்ற தத்துவத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
பொய் சொல்வது “ஹறாம்” மார்க்கத்தில் விலக்கப்பட்ட விடயமாயினும் அது “வாஜிப்” கடமையான இடமும் உண்டு. அவ்வேளை பொய் சொல்வது கடமையாகிவிடும்.
எது போலெனில் ஒரு வம்பன், குடிகாரன், கொலை காரன் துப்பாக்கியோடு ஒரு நேர்மையான நல்ல மனிதன் ஒருவனின் கடைக்குள் திடீரெனப் புகுந்து முதலாளி எங்கே? என்று கேட்டால் அவர் உள்ளே இருந்தாலும் கூட அவர் இல்லையென்று பொய் சொல்ல வேண்டுமென்பதே மார்க்கம். இவ்வாறு செய்தல் ஓர் உயிரைக் காப்பாற்றுவதற்கேயாகும். ஓர் உயர்ந்த, சிறந்த நோக்கத்தில் பொய் சொல்ல முடியும். அது பெயரளவில் மட்டும்தான் பொய்யேயன்றி அதற்கு குற்றமில்லை.
திரு மக்காவிலுள்ள “ஹறம்” எல்லையில் உயிரினங்களைக் கொல்வது கூடாது. இது பொது விதி. وَمَا مِنْ عَامٍّ إِلَّا وَقَدْ خُصَّ مِنْهُ الْبَعْضُ “எந்த ஒரு பொது விதியாயினும், பொது சட்டமாயினும் அதில் சிலருக்கு சில விதி விலக்கு உண்டு” என்பதும் பொது விதிதான்.
இந்த விதியின் படி “ஹறம்” எல்லைக்குள் ஐந்து உயிரினங்களைக் கொல்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டு.
خَمْسٌ فَوَاسِقُ يُقْتَلْنَ فِى الْحِلِّ وَالْحَرَمِ: اَلْحَيَّةُ وَالْغُرَابُ وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُوْرُ وَالْحِدْأَةُ،
மேற்கண்ட இவ் ஐந்தின் பெயர்களும் பின்வருமாறு: காகம், பருந்து, தேள், எலி, கடிநாய். இவற்றை மட்டும் மக்காவில் “ஹறம்” எல்லையிலும் கொலை செய்ய அனுமதியுண்டு.
ஒருவனின் எதிரி அவனைக் கொலை செய்வதற்காக அவனைத் தேடி அவனின் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டி அவனின் பெயர் சொல்லி அவன் இருக்கிறானா? என்று கேட்டால் இல்லையென்று சொல்வதுதான் மார்க்கமேயன்றி இருக்கிறான் என்று கூறி அவனைக் காட்டிக் கொடுப்பது கூடாது. இவ்வாறான கட்டத்தில் பொய் சொல்வது “ஹறாம்” ஆகாது.
இவ்வாறான கட்டங்களில் பொய் சொல்வது ஆகும் என்பதை ஆதாரமாக வைத்துக் கொண்டு எல்லா விடயங்களிலும் பொய் சொல்ல முடியாது.
“சகாத்” வழங்கும் செல்வந்தன் “சகாத்” நிதியை இரகசியமாக வழங்காமல் பகிரங்கமாக வழங்க வேண்டும்.
விளக்கம் அடுத்த தொடரில்….