தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
அறபு மொழியில் பதுக்குதல் என்பதற்கு اِحْتِكَارْ – “இஹ்திகார்” என்று சொல்லப்படும்.
اَلْإِحْتِكَارُ مِنَ الْكَبَائِرِ، مُحَرَّمٌ شَرْعًا
பதுக்குதல் பெரும்பாவம். “ஷரீஆ”வில் “ஹறாம்” விலக்கப்பட்டதாகும்.
“இஹ்திகார்” என்பதற்கான வரைவிலக்கணம் பின்வருமாறு.
جَمْعُ الشَّيْئِ وَاحْتِبَاسُهُ اِنْتِظَاًرا لِغَلَائِهِ فَيَبِيْعَهُ بِالْكَثِيْرِ
ஒரு வஸ்த்துவை அதிக விலைக்கு விற்கும் வாய்ப்பை எதிர்பார்த்து – நாடி அதை விற்காமல் சேமித்து வைத்தல் பதுக்குதல் எனப்படும்.
இவ்வாறு வரைவிலக்கணம் மொழியடிப்படையில் சொல்லப்பட்டாலும் “ஷரீஆ” அடிப்படையில் எல்லா வஸ்த்துக்களையும் எடுத்துக் கொள்ளாது.
“ஷரீஆ” அடிப்படையில் அத்தியாவாசிய உணவுப் பொருட்களையும், உணவுப் பொருட்களல்லாத அத்தியாவாசியப் பாவனைப் பொருட்களையும் எடுத்துக் கொள்ளும்.
அத்தியாவாசிய உணவுப் பொருட்களில் அரிசி, கோதுமை, பால்மா, சில நாடுகளைப் பொறுத்து பேரீத்தம் பழம் என்பன அடங்கும். பொதுவாக எந்த நாட்டில் எது மக்களால் அத்தியாவாசிய உணவுப் பொருளாகக் கருதப்படுகிறதோ அது அதில் அடங்கும்.
பெற்றோல், டீசல், கேஸ், மண்ணெண்ணெய், மின்சாரம் என்பன உணவுப் பொருட்களல்லாது போனாலும் அத்தியாவாசியப் பொருட்களில் அடங்கும். இதற்கு விளக்கம் தேவையில்லை. இது அனைவரும் அறிந்த ஒன்றே.
மார்க்கத்தில் பதுக்குதல் கூடாதென்று சொல்லப்பட்டவற்றைப் பதுக்குதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இது தொடர்பான எச்சரிக்கை அறிவிப்புகளில் பல்வேறு வசனங்களில் நபீ மொழிகள் வந்துள்ளன. அவற்றிற் சிலதை பதுக்கல் வியாபாரிகளின் நன்மை கருதி எழுதுகிறேன்.
عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا يَحْتَكِرُ إِلَّا خَاطِئٌ»
பதுக்குபவன் தவறு செய்பவனாவான். அதாவது العاصى الآثم பாவியாவான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். (முஸ்லிம் 1605)
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ احْتَكَرَ طَعَامًا أَرْبَعِينَ لَيْلَةً، فَقَدْ بَرِئَ مِنَ اللَّهِ تَعَالَى، وَبَرِئَ اللَّهُ تَعَالَى مِنْهُ،
எவன் நாற்பது இரவுகள் வரை உணவுப் பொருளைப் பதுக்குகின்றானோ அவன் அல்லாஹ்வை விட்டும் நீங்கிவிட்டான். அல்லாஹ்வும் அவனை விட்டும் நீங்கிவிட்டான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். (அஹ்மத் 4880)
மேற்கண்ட நபீ மொழியில் 40 இரவுகள் என்று கூறுப்பட்டுள்ளதால் 39 இரவுகள் பதுக்கலாம் என்று பதுக்கல் வியாபாரிகளின் முகம் மலரலாம். அவர்கள் 39 இரவுகளும் பதுக்கியது எதற்காக என்பதை விளங்கிக் கொண்டார்களாயின் முகம் வாடிவிடும். மலராது. நாற்பது அடி அடித்தவனும் குற்றவாளிதான். ஓர் அடி அடித்தவனும் குற்றவாளிதான்.
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنِ احْتَكَرَ عَلَى الْمُسْلِمِينَ طَعَامَهُمْ، ضَرَبَهُ اللَّهُ بِالْجُذَامِ وَالْإِفْلَاسِ»
ஒருவன் முஸ்லிம்களுக்கு உணவு கொடுக்காமல் – விற்பனை செய்யாமல் பதுக்கி வைப்பானாயின் அல்லாஹ் அவனை “ஜுதாம்” குஷ்ட நோயாலும், பங்குறோத்தாலும், பொருளாதார வீழ்ச்சியாலும், நஷ்டத்தாலும் சோதிப்பான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
(இப்னுமாஜஹ் – 2153)
“ஜுதாம்” என்பது ஒரு நோயைக் குறிக்கும். இச் சொல்லுக்கு அறபு மொழியுடையோர் பின்வருமாறு விளக்கம் தருகின்றனர்.
اَلْجُذَامُ دَاءٌ كَالْبَرَصِ، يُسَبِّبُ تَسَاقُطَ اللَّحْمِ وَالْأَعْضَاءِ،
“ஜுதாம்” என்பது بَرَصْ போன்ற ஒரு நோயாகும். உடலில் உள்ள சதை, மற்றும் உறுப்புக்கள் அழுகி விழுவதற்கு காரணமாக அது அமையும். இந் நோய்தான் “ஜுதாம்” என்று சொல்லப்படுகிறது.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ளனர். தமிழ் நாட்டிலும் உள்ளனர்.
இவர்களை சாதாரண மனிதர்கள் நெருங்கமாட்டார்கள். இந்நோயால் கை, கால் விரல்கள் அழுகி துண்டு துண்டாக விழும். முக அமைப்பு மாறிவிடும். நான் இன்னோரை தமிழ் நாட்டிலும், வேறு மாநிலங்களிலும் கண்டுள்ளேன். இவர்களில் நூறு வீதமானோரும் யாசகர்களாகவே இருப்பார்கள். இவர்களின் கை, கால்கள் அழுகத் தொடங்கினால் அழுகிக் கொண்டே செல்லும். நுகர்வதற்கு முடியாத துர் நாற்றம் இவர்களிடம் வீசும். இதனால் இவர்களை எவரும் நெருங்குவதுமில்லை. இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதுமில்லை.
இந் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் அநேகர் முஸ்லிம்கள் அல்லாதவர்களிலும், அவர்களால் கீழ் சாதியினர் என்று கணிக்கப்படுபவர்களிலுமே இருப்பார்கள். இவர்களில் யாராவது கை நீட்டி யாசகம் கேட்டால் கொடுக்க விரும்புவோர் தூர நின்று எறிவதை நான் இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் கண்டிருக்கிறேன். இந் நோய் இறை சாபத்தால் ஏற்படுகிறதென்று சிலர் கூறுகின்றனர். அல்லாஹ் மிக அறிந்தவன். அவன் குறிப்பாக முஸ்லிம்களையும், பொதுவாக மனிதர்களையும் இந்நோயிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்று இரு கரம் ஏந்துகிறேன். ஏனெனில் முஸ்லிம்கள் அல்லாதவர்களும் அவனின் வெளிப்பாடுகளேதான்.
எனது 78 வருட வாழ்வில் காத்தான்குடியில் இந் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை மட்டுமே நான் கண்டுள்ளேன். அவர் மரணித்து சுமார் 50 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
“برص” – பறஸ் என்பதும் இது போன்ற நோயென்று சொல்லப்பட்டாலும் கூட இது அதுவல்ல. “ஜுதாம்” அல்ல. சற்று வித்தியாசமுண்டு. இந் நோயால் உறுப்புக்களோ, சதைகளோ அழுகி விழுவதில்லை. இதற்கு அறபு மொழியில் பின்வருமாறு வரைவிலக்கணம் கூறப்பட்டுள்ளது.
اَلْبَرَصُ مَرَضٌ يُحْدثُ فِى الْجِسْمِ كُلِّهِ قِشْرًا أَبْيَضَ وَيُسَبِّبُ لِلْمَرِيْضِ حَكًّا مُؤْلٍمًا
“பறஸ்” என்பது ஒரு நோய். உடல் தோலை வெள்ளை நிறமாக்கிவிடும். அதாவது சாம்பல் நிறமாக்கிவிடும். வேதனை தரும் சொறிச்சலையும் ஏற்படுத்திவிடும்.
எனினும் “கவறை” என்று நமது நாட்டில் பெயர் சொல்லப்படுகின்ற நோய் மேற்கண்ட நோயில்லை. இது இலங்கை நாட்டிலுமுண்டு. இது மேற்கண்ட இழிவான இரு நோய்கள் போன்றதல்ல. எனினும் பொது மக்கள் இதை இறை தண்டனையால் ஏற்படுகின்ற நோயென்றே கணிக்கின்றார்கள். உண்மை அவ்வாறில்லை. எனினும் இதற்கு மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான விஷேட வைத்தியர் ஒருவர் இந்தியாவின் டில்லி நகரில் உள்ளார். விபரம் தேவையானவர்களுக்கு அவரின் முகவரி தர முடியும்.
மேற்கண்ட மூன்று வகை நோய்களில் பதுக்கல் பேர்வழிகள் “ஜுதாம்” எனும் மிக இழிவான நோயை பயந்து கொள்ள வேண்டும்.
قال النبي صلى الله عليه وسلّم: مَنْ اِحْتَكَرَ طَعَامًا عَلَى أُمَّتِيْ أَرْبَعِيْنَ يَوْمًا وَتَصَدَّقَ بِهِ لَمْ يُقْبَلَ مِنْهُ (ابن عساكر)
ஒருவன் அத்தியாவாசிய உணவை விற்காமல் எனது “உம்மத்” சமூகத்தவர்களை விட்டும் பதுக்குவானாயின் அதை அவன் தர்மம் செய்தாற் கூட அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். (இப்னு அஸாகிர்)
பதுக்கல் பேர்வழிகளை எச்சரிக்கும் நபீ மொழிகள் அதிகம் உள்ளன. விரிவையஞ்சி விட்டுவிட்டேன்.
இரண்டாவது கலீபா உமர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்தில் பள்ளிவாயலில் ஒரு வகை உணவு வைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட “கலீபா” அவர்கள் அது பற்றி வினவியபோது இது பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவு என்று கூறப்பட்டது. யார் பதுக்கினார்கள் என்று அவர்கள் வினவியபோது பறூக் என்பவரும், உங்கள் அடிமைகளில் ஒருவரும் என்று கூறப்பட்டது. பின்னர் இருவரும் அங்கு அழைக்கப்பட்டு “கலீபா” அவர்களால் விசாரிக்கப்பட்ட போது எங்களின் சொந்தப் பணத்தால் நாங்கள் வாங்கி விற்பனை செய்கிறோம் என்று தாம் செய்தது சரி என்ற பாணியில் பதில் கூற கலீபா உமர் அவர்கள், “யாராவது முஸ்லிம்களுக்கு அவர்களின் உணவைக் கொடுக்காமல் பதுக்கி வைக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் குஷ்ட வியாதியாலும், பாரிய நட்டத்தாலும் சோதிப்பான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.
அவ்வேளை இருவரில் ஒருவரான பறூக் என்பவர் இதன் பிறகு நான் இவ்வாறு செய்யமாட்டேன் என்று கூறினார். மற்றவரோ எங்களின் பணத்தால் நாங்கள் வாங்கி விற்கிறோம் என்று மன முரண்டான பதில் கூறினார்.
இந்த வரலாறை அறிவித்த அறிவிப்பாளரில் ஒருவரான அபூ யஹ்யா என்பவர், பின்னொரு காலத்தில் மன முரண்டாக பதில் சொன்னவர் “ஜுதாம்” நோயால் பாதிக்கப்பட்டிருந்ததை தான் கண்டதாக கூறியுள்ளார்.
சட்ட மேதைகளான “புகஹாஉ” களுக்கிடையில் அத்தியாவாசிய உணவுப் பொருட்கள் எவை என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும் ஒரு நாட்டில் எது அத்தியாவாசிய உணவுப் பொருளாக கருதுப்படுகின்றதோ அதைப் பதுக்குதல் கூடாது.
இலங்கை நாட்டில் அரிசி, மாவு என்பனவும், மற்றும் மாப் பண்டங்களும் பிரதான உணவுகளில் அடங்கிவிடும். இன்னும் சில நாடுகளில் திராட்சைப் பழம், அப்பிள் பழமும் அடங்கிவிடும்.
மனிதர்கள் போன்றவையே கோழி, ஆடு, மாடு போன்ற உயிரினங்களுமாகும். இவற்றுக்கான பிரதான உணவுகளை பதுக்குதலும் தண்டனைக்குரிய குற்றமேதான்.
இமாம் ஙஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் அவசிய உணவுகளில் இறைச்சி, பழ வர்க்கங்களையும் சேர்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக சட்ட விபரங்கள் தேவையானோர் எம்முடன் அல்லது ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
நம்ப முடியாத அதிசயமென்னவெனில் அடர்ந்த தாடியும், தலைப்பாகையும் கரண்டை வரை ஜுப்பா – சட்டையும் அணிந்தவர்கள் பதுக்கல் பேர்வளிகளாக இருப்பதேயாகும்.
குறிப்பு: சிறுவர்களுக்கான பால்மா, மருந்து வகைகளைப் பதுக்குதல் பெரும் பாவமாகும்.