தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
தொழுகைகளில் ஐங்காலத் தொழுகைகள் மட்டுமே செயல் முறைகளில் ஒரே அமைப்பைக் கொண்டதாக உள்ளன.
இமாம்களான “புகஹாஉ”கள் – சட்ட மேதைகளால் தாபிக்கப்பட்ட “மத்ஹபு”கள் பலவாயினும் ஐங்காலத் தொழுகை அமைப்பில் எல்லா மத்ஹபுகளும் நிலை, றுகூஉ, ஸுஜூத், இருப்பு போன்றவற்றில் ஒரு மாதிரியே உள்ளன.
ஐங்காலத் தொழுகைகள் அனைத்திலும் நிலை, றுகூஉ, ஸுஜூத், இருப்பு எல்லாமே உண்டு. இவற்றில் “மத்ஹப்”களுக்கிடையில் மாற்றமில்லை. இதேபோல் ஐங்காலத் தொழுகைகளின் “றக்அத்” எண்ணிக்கைகளிலும் மாற்றமில்லை. எல்லா “மத்ஹப்”களிலும் “றக்அத்”களின் எண்ணிக்கை 17 மட்டும்தான்.
ஆயினும் ஐங்காலத் தொழுகைகளில் உள்ள “பர்ழ்”, “ஷர்த்”, “ஸுன்னத்” என்பவற்றில் மட்டும் சில மாற்றங்கள் உள்ளன. இவற்றில் எதையும் நான் பிழை என்று ஒரு போதும் சொல்லமாட்டேன்.
நான் இமாம் ஷாபிஈ அவர்களின் “மத்ஹப்”ஐ பின்பற்றுபவனாவேன். “தரீகா”களில் “காதிரிய்யா”வையும், “அகீதா” கொள்கையில் இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரீ றஹிமஹுல்லாஹ் அவர்களைப் பின்பற்றும் “அஷ்அரீ”யுமாவேன். “தஸவ்வுப்” ஸூபிஸத்தில் “அக்பரிய்யா” தரீகாவான ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் தரீகாவையும் பின்பற்றுபவனாவேன். வஹ்ஹாபிஸ கொள்கையை நூறு வீதம் மறுக்கின்ற, “ஸுன்னீ” கொள்கையை நூறு வீதம் ஏற்றுக் கொண்ட “ஸுன்னீ”யுமாவேன்.
தொழுகைகளின் அமைப்பில் சில தொழுகைகள் ஐங்காலத் தொழுகைக்கு முற்றிலும் முரண்பட்டவையாக உள்ளன.
உதாரணமாக இரு பெருநாள் தொழுகை, “ஜனாசா” – மையித் தொழுகை, “இஸ்திஸ்கா” மழை வேண்டித் தொழும் தொழுகை, கிரகணத் தொழுகைகள் போன்று.
இவ்வாறான மாற்றங்கள் ஏன் வந்தன? இவற்றுக்கான விளக்கம் என்ன? என்பது பற்றி முஸ்லிம்கள் அனைவரும் அறியாது போனாலும் உலமாஉகளும், ஆய்வாளர்களும் அறிந்திருப்பது அவசியம்!
பெருநாள் தொழுகையில் ஏழும், ஐந்தும் எதற்கு?
இரு பெருநாள் தொழுகைகளிலும் முதலாம் “றக்அத்”தில் ஏழு “தக்பீர்”களும். இரண்டாம் “றக்அத்”தில் ஐந்து “தக்பீர்”களும் சொல்கிறோம். இது மார்க்கத்தில் உள்ள விடயமாகும். இஸ்லாம் தத்துவமுள்ள மார்க்கமாகும். அது கூறுகின்ற ஒவ்வொரு செயலுக்கும் தத்துவம் உண்டு. ஒருபோதும் தத்துவத்தை விட்டும் காலியான மார்க்கமில்லை இஸ்லாம் மார்க்கம். காரணமின்றிக் காரியமில்லை என்பது போல் இஸ்லாமில் கூறப்பட்ட எந்த ஒரு சட்டமாயினும் அதற்குப் புத்திக்குப் பொருத்தமான காரணம் உண்டு. அக் காரணத்தை பின்னணியாகக் கொண்டே “ஷரீஆ”வின் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பெருநாள் தொழுகையில் முதலாம் “றக்அத்”தில் ஏழு தரம் “தக்பீர்” சொல்ல வேண்டும். இதற்கான காரணம் ஒரு மனிதன் வருடத்தில் இரு தரமாவது தனது “நப்ஸ்”ஐக் கொன்று விட வேண்டும் என்பதேயாகும். “நப்ஸ்”ஐக் கொல்வதென்றால் அதன் தீக்குணங்களைக் கொல்வதையே குறிக்கும்.
பொறாமை, வஞ்சகம், எரிச்சல், ஆணவம், அகங்காரம், மமதை, பெருமை, பெண் மோகம், பதவி மோகம், பண மோகம், பொருள் மோகம், பொன் மோகம், காமம் என்பனவும், இவை போன்ற தீக்குணங்கள் யாவும் “நப்ஸ்” உடைய குணங்களாகும். அதன் குணங்களை ஒவ்வொன்றாக கூறத் தேவையில்லை. பொதுவாக சுருக்கமாகச் சொல்வதாயின் اَلْأَخْلَاقُ الْمَذْمُوْمَةُ இகழப்பட்ட குணங்கள் அனைத்தும் “நப்ஸ்” உடைய குணங்களேயாகும். இவற்றை அழித்தொழித்து இல்லாமற் செய்வதே அதைக் கொல்வதாகும். இதை விடச் சுருக்கமாகச் சொல்வதாயின் ஒருவன் தனது மனவெழுச்சிக்கு மாறு செய்தலென்று சொல்ல முடியும்.
ஒருவனின் மனவெழுச்சி அதாவது “நப்ஸ்” எதைக் கேட்கிறதோ அவன் அதை அதற்கு உடனே கொடுத்துவிடாமல் நாளை தருகிறேன், நாளை மறுநாள் தருகிறேன் என்று ஏமாற்றி காலம் கழிக்க வேண்டுமேயன்றி அதற்கு கொடுத்து அதை வளர்க்காமல் நாம் நமது கட்டுப்பாட்டிற்குள் அதை வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மனிதனிலும் ஏழு “நப்ஸ்”கள் உள்ளன என்று இறைஞானிகளும், ஸூபீ மகான்களும் “தரீகா”வின் ஷெய்குமார்களும் கூறுகிறார்கள்.
ஏழு “நப்ஸ்”கள் என்று கூறுவதால் தனித்தனியான ஏழு “நப்ஸ்”கள் இருப்பதாக நாம் விளங்கிக் கொள்ளலாகாது. “நப்ஸ்” என்பது ஒன்றே ஒன்றுதான். அது ஏழுமல்ல. பலதுமல்ல. “நப்ஸ்” என்றாலும், “கல்பு” உள்ளம் என்றாலும் இரண்டும் ஒன்றுதான்.
ஆயினும் கல்பில் – உள்ளத்தில் ஏற்படுகின்ற தீக்குணங்களைக் கவனித்து அது “நப்ஸ் அம்மாறா” என்றும், “லவ்வாமா” என்றும், “முல்ஹிமா” என்றும், “முத்மஇன்னா” என்றும், “றாழியா” என்றும், “மர்ழிய்யா” என்றும், “காமிலா” என்றும் அழைக்கப்படும்.
இவ் ஏழு “நப்ஸ்”களில் மிகவும் கொடியதும், கீழ்த்தரமானதும் “அம்மாறா” என்ற “நப்ஸ்”தான்.
இந்த “நப்ஸ்” உள்ளவன் பஞ்சமா பாதகங்களை பயமின்றிச் செய்வான். விபச்சாரம், களவு, கொள்ளை முதலான கொடிய பாவங்களையும் பயமின்றிச் செய்வான். எதுவெல்லாம் பாவம் என்று “ஷரீஆ” கூறுகிறதோ அப்பாவங்களை சாதாரணமாக, அவனின் அன்றாட வேலைகள் போல் செய்வான். இதனால்தான் إِنَّ النَّفْسَ لَأَمَّارَةٌ بِالسُّوْءِ – நிச்சயமாக “நப்ஸ்” ஆனது பாவங்கள் கொண்டு அதிகம் ஏவக்கூடியதாகும் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.
இவனின் “நப்ஸ்” இவனிடம் தோழா! பாவம் செய்வதற்கு நீ பயப்படத் தேவையில்லை. அல்லாஹ் தனக்குத் தானே غَفَّارْ “ஙப்பார்” பாவங்களை மன்னிப்பவன் என்று பெயர் வைத்தது எதற்காக என்று சிந்தித்துப் பார். நீ பாவம் செய்தால்தானே அவனின் “ஙப்பார்” பாவத்தை மன்னிப்பவன் எனும் திரு நாமம் தொழிற்படும் – செயல்படும். இன்றேல் அவன் தனக்கு அவ்வாறு பெயர் வைத்ததில் அர்த்தமில்லாது போய் விடுமல்லவா?
ஒருவன் தச்சு வேலை கற்று தனக்கு “தச்சன்” என்று பெயர் வைத்துக் கொண்டானாயின் அவன் தச்சுத் தொழில் செய்ய வேண்டுமல்லவா? அவன் அவ்வேலை செய்வதாயின் – அவன் அத் தொழில் செய்வதாயின் ஊர் மக்கள் வீடுகள் கட்ட வேண்டுமே. அவர்கள் வீடுகள் கட்டினால்தானே அவன் “தச்சன்” என்ற பெயருக்கு பொருத்தமானவனாவான்.
அல்லாஹ்வும் இவன் போன்றவன்தான். அவனுடைய “ஙப்பார்” பாவங்களை மன்னிப்பவன் என்ற அத்தொழிற் பெயர் செயல்படுவதாயின் மனிதர்கள் பாவம் செய்யத்தானே வேண்டும்.
இவ்வாறு “நப்ஸ் அம்மாறா”வில் இருப்பவனுக்கு அது புத்திமதி, ஆலோசனைகளைக் கூறிக் கொண்டும், அவனும் அதன் ஆலோசனைகளை சரி கண்டு, “ஆமா சாமி” போட்டு பாவங்களை தொழில் செய்வது போன்று செய்து கொண்டே இருப்பான். இந்நிலை முதலாவது “நப்ஸ்” ஆன “நப்ஸ் அம்மாறா”வில் இருப்பவனின் நிலையாகும். இவன் இந்நிலையிலேயே வாழ்ந்து மரணிப்பானாயின் இவனின் நிலை வன விலங்குகளின் நிலை போலாகிவிடும். இவனுக்கு மோட்சமே கிடையாது.
இவனை விட சற்று நல்லவன்தான் இரண்டாம் படியான “நப்ஸ் லவ்வாமா”வில் இருப்பவனாவான். இவனை விட சற்று நல்லவன்தான் மூன்றாம் படியான “நப்ஸ் முல்ஹிமா”வில் இருப்பவனாவான். இவனை விட சற்று நல்லவன்தான் நாலாம் படியான “நப்ஸ் முத்மயின்னா”வில் இருப்பவனாவான். இவ்வாறு “நப்ஸ்” உடைய படிகளை ஒவ்வொன்றாகத் தாண்டிச் சென்று இறுதியில் ஏழாம் “நப்ஸ்” ஆன “ஷநப்ஸ் காமிலா”வை அடைவான். இவ் இடத்தை அடைந்தவன்தான் “இன்ஸான் காமில்” பூரண மனிதனாவான்.
எனினும் முதலாம் படியிலிருந்து தொடராக மூன்று படிகளையும் கடந்து நாலாம் படியான “நப்ஸ் முத்மயின்னா”வை அடைந்தவன்தான் நல்வழி பெறுவதற்கு தகுதியுடையவனாவான். அதாவது அரை மனிதனாவான்.
இவனையே அல்லாஹ் தனது ஒரு கண்ணாலேனும் பார்த்து,
يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ، ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً،
“முத்மயின்னா”வான நப்ஸே! சாந்தி பெற்ற ஆன்மாவே! நீ உனது இறைவன்பால் அவனை நீ பொருந்திக் கொண்ட நிலையிலும், அவன் உன்னைப் பொருந்திக் கொண்ட நிலையிலும் மீள்வாயாக! என்று அழைப்பு விடுப்பான். (திருமறை 89-27,28)
மேற்கண்ட இரு வசனத்தில் நாலாம் படியான – நாலாவது “நப்ஸ்” ஆன “நப்ஸ் முத்மயின்னா”வில் இருக்கும் ஆன்மாவையே தன் பக்கம் வருமாறு அல்லாஹ் அழைத்துள்ளான். இப்படிக்கு முந்தின மூன்று படிகளில் எந்தப் படியில் உள்ளவர்களையும் அவன் தன் பக்கம் அழைத்ததற்கு ஆதாரமில்லை.
எனவே, பெருநாள் தொழுகையில் முதலாவது “றக்அத்”தில் சொல்லப்படுகின்ற ஏழு “தக்பீர்”களும் ஏழு “நப்ஸ்”களையும் வெட்டி வீழ்த்தும், கொன்றொழிக்கும் ஏழு வாள்களாகவே அல்லாஹ் அமைத்துள்ளான்.
பெருநாள் தொழுகை தொழுகின்ற ஒருவன் எந்த ஓர் ஆன்மீக சிந்தனையுமின்றி உள்ளம் உறங்கிய நிலையில் “அல்லாஹு அக்பர்” “அல்லாஹு அக்பர்” என்று நாவால் மட்டும் சொல்லாமல் தான் சொல்கின்ற ஒவ்வொரு “தக்பீர்” உம் “நப்ஸ்” எனும் “ஷெய்தான்” ஷாத்தானை வெட்டிக் கொலை செய்யும் வாள் என்று அவன் நினைத்தவனாக, உணர்ந்தவனாக சொல்ல வேண்டும். இவ்வாறு உணர்ந்து சொல்லாமல் “கூட்டத்தோடு கோவிந்தா” போடும் கதையாக நாம் சொல்கின்ற ஏழு “தக்பீர்”களும் அமைந்து விடலாகாது.
தொழுபவன் முதலாம் “றக்அத்”தில் மேற்கண்டவாறு செய்யும் போது குறைந்த பட்சம் ஏழு “நப்ஸ்”களிலும் மிகவும் கொடிய “நப்ஸ்”களான “நப்ஸ் அம்மாறா”, “நப்ஸ் லவ்வாமா” ஆகிய “நப்ஸ்”கள் மட்டுமாவது வெட்டப்படுவதற்கும், எஞ்சிய ஐந்து “நப்ஸ்”கள் வெட்டப்படாமல் விடுபடுவதற்கும் சாத்தியமுண்டு.
எனவே, இரண்டாம் “றக்அத்”தில் ஐந்து தரம் “தக்பீர்” சொல்வதன் மூலம் எஞ்சிய ஐந்தும் வெட்டப்பட்டு தொழுதவன் ஏழு “நப்ஸ்”களையும் வெட்டி வீழ்த்திய அல்லது அவற்றைக் கொன்று எரித்துச் சாம்பலாக்கிய உணர்வை பெறுவான்.
قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا، وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا
“நப்ஸ்”ஐ சுத்தம் செய்தவன் வெற்றி பெற்றுவிட்டான். அதை மாசு படுத்தியவன் தோல்வியடைந்து விட்டான். (திருமறை 91 – 09, 10)
“நப்ஸ்” என்ற பிர்அவ்னை, அல்லது ஷெய்தானை வெல்வதற்கு இஸ்லாம் வழங்குகின்ற பயிற்சி முறைகளில் ஒன்றுதான் பெருநாள் தொழுகையில் அமைந்துள்ள 7, 5 தக்பீர் எனும் பயிற்சி முறையாகும். மொத்தம் 12 தக்பீர்கள் மூலம் – 12 வாள்கள் கொண்டு ஏழு “நப்ஸ்”களையும் இரண்டு போர்க்களத்திலும் வெட்டி வீழ்த்தி விட்டு, ஏழு “நப்ஸ்”களையும் கடந்து “றூஹ்” உடைய இடத்தை அடைந்தவனாக தொழுகையை முடித்துக் கொண்டு பள்ளிவாயலில் இருந்து வெளியே வருகின்ற “இன்ஸான் காமில்” பூரண மனிதன் வரவேற்கப்பட வேண்டியவனாவான்.
இதனால் நோன்பு என்ற ஆன்மிக பயிற்சி மூலம் 30 நாட்களும் “நப்ஸ்” எனும் வன விலங்குடன் போராடி இறுதியில் அவற்றை கொன்று முடித்து விட்டு பள்ளிவாயலில் இருந்து வெளியே வருகின்ற மணவாளனை சாலையின் இரு மருங்கிலும் மலக்குகள் நின்று வாழ்த்துகிறார்கள். எமக்கும் இவ்வாழ்த்து கிடைக்குமா?
نَالَ مَنْ نَالَ، سَعِدَ مَنْ سَعِدَ، اَلسَّعْيُ مِنَّا وَالْإِتْمَامُ مِنَ اللهِ،
اِجْتِهَادُكَ فِيْمَا ضُمِنَ لَكَ وَتَقْصِيْرُكَ فِيْمَا طُلِبَ مِنْكَ دَلِيْلٌ عَلَى انْطِمَاسِ الْبَصِيْرَة ِمِنْكَ، (الحكم العطائيّة)