தொடர் 01
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا، مِائَةً إِلَّا وَاحِدًا، مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ»
“அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் உள்ளன. அவற்றை மனனம் செய்தவர் சுவர்க்கம் சென்றுவிட்டார்” என்று அருள் நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
“இஸ்ம்” என்றால் பெயர் என்று பொருள். இவை அல்லாஹ்வின் பெயர்களாயிருப்பதால் கண்ணித்திற்குரிய “திரு” என்ற சொல்லுடன் சொல்லப்படுகிறது. திருக்குர்ஆன் என்றும், திரு நபீ என்றும் சொல்வது போன்று.
எனினும் இவ்விபரம் தெரியாத, அறியாமை இருளில் மூழ்கி வாழ்கின்ற சிலர் இது காபிர்களுக்கு பாவிக்கப்படுகின்ற சொல் என்று தவறாக விளங்கி எனக்கும், நான் கூறி வருகின்ற இறைஞானத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் பயன்படுத்துவது விந்தையானதும், வேதனைக்குரியதுமாகும்.
மேற்கண்ட நபீ மொழியில் அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் உள்ளன என்று கூறப்பட்டிருப்பதை நுணுக்கமாக ஆய்வு செய்யாத சிலர் அல்லாஹ்வுக்கு என்றால் அவனின் “தாத்”திற்கு 99 திரு நாமங்கள் என்று விளங்கி அவ்வாறு சொல்கிறார்கள். இது தவறு. அவ்வாறு விளங்கிச் சொல்பவர்கள் இன்னும் சற்று ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்களை அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த ஹதீது – நபீ மொழியின் சரியான பொருள் “அல்லாஹ்” எனும் திரு நாமத்திற்கு 99 திரு நாமங்கள் உள்ளன என்பதாகும். அதாவது “அல்லாஹ்” எனும் திரு நாமம் தன்னுள் 99 திரு நாமங்களை அடக்கியுள்ள ஒரு மகத்தான திரு நாமம் – اِسْمُ الْأَسْمَاءِ திரு நாமங்களின் திரு நாமம் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதனால்தான் அல்லாஹ் எனும் திரு நாமம் جَامِعُ الْأَسْمَاءِ அவனின் அனைத்து திரு நாமங்களையும் உள்வாங்கிய திரு நாமம் என்று கூறப்படுகிறது. இன்னும் இதனால்தான் “அல்லாஹ்” எனும் திரு நாமம் “இஸ்முல் அஃளம்” வலுப்பமிகு திரு நாமம் என்றும் அழைக்கப்படுகிறது.
எனவே, அல்லாஹ்வுக்கு 99 திருநமங்கள் உண்டு என்ற நபீ மொழிக்கு அத்திரு நாமங்கள் எல்லாம் அவனின் “தாத்”திற்குரியவை என்று புரிந்து கொள்ளாமல் அவை “அல்லாஹ்” எனும் திரு நாமத்தின் திரு நாமங்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். فَمَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ “மேற்கண்ட நபீ மொழியின் இவ்வசனத்திற்கு 99 திரு நாமங்களையும் மனனம் செய்தவன் சுவர்க்கம் நுழைந்து விட்டான்” என்று பொருள் கூறப்படுகிறது. இவ்வாறு பொருள் கூறுவதன் மூலம் சுவர்க்கம் செல்வதற்கு இலகுவான வழி காட்டப்படுகிறது.
சுவர்க்க நிலத்தின் பெறுமதி தெரியாதவர்களும், குறித்த வசனத்தை ஆழமாக ஆய்வு செய்யாதவர்களுமே மேற்கண்டவாறு பொருள் விரித்து இலகுவான வழி காட்டுகிறார்கள். இவர்கள் பின்வரும் விபரங்களையும் கவனத்திற் கொண்டு விளக்கம் கூறுதல் சிறந்ததாகும்.
குறித்த வசனத்தில் வந்துள்ள أَحْصَى – “அஹ்ஸா” என்ற சொல்லுக்கு أَحَاطَ “சூழ்ந்து கொண்டான்” என்ற பொருள் உண்டு என்பதையும், عَرَفَ قَدْرَهُ ஒன்றின் தரத்தை அறிந்து கொள்தல் என்ற பொருளும் உண்டு என்பதையும் கருத்திற் கொண்டு விளக்கம் சொல்வதே பொருத்தமானது என்பதை விளங்கிச் செயல்படுதல் சிறந்ததாகும்.
இதன்படி கிளிப் பிள்ளை போல் 99 திருநாமங்களையும் மனனம் செய்வதால் மட்டும் சுவர்க்கம் சென்று விட முடியாதாகையால் 99 திரு நாமங்களில் ஒவ்வொன்றின் தத்துவத்தையும், அகமியத்தையும் அறிந்து விளங்கிக் கொண்டவன் சுவர்க்கம் செல்வான் என்று விளக்கம் கூற வேண்டும். கஷ்டத்தை அனுபவித்து அடைய வேண்டிய விடயத்தை கை மலிந்த பொருளாகவும், “பேமண்ட்” நடைபாதைப் பொருளாகவும் காட்டுதல் பொருத்தமற்றது.
سمعت الشّيخ رضي الله عنه يقول فى اسم الله العظيم الأعظم، أنّه كمالُ المأة، وليس من التسعة والتسعين،
அல்குத்பு அப்துல் அஸீஸ் அத்தப்பாகு(غ) றஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்லாஹ் எனும் திருநாமம் 99 திரு நாமங்களில் அடங்காது என்றும், அதுவே 100 வது திரு நாமம் என்றும் கூறியுள்ளார்கள்.
99 திரு நாமங்களின் தத்துவங்களும், அகமியங்களும் “அல்லாஹ்” என்ற திரு நாமத்தின் வயிற்றுள் உள்ளன.
பெயர்களில் பல வகை உண்டு. அவற்றில் இயற் பெயரும், தொழிற் பெயரும் அடங்கும். அல்லாஹ் என்பது அவனின் “தாத்”திற்குரிய பெயராகும். ஏனைய 99 திரு நாமங்களும் அல்லாஹ் என்ற பெயரின் பெயர்களான தொழிற் பெயர்களாகும்.
இயற் பெயர் என்பது பிறந்த குழந்தைக்கு பெற்றோரால் வைக்கப்படும் பெயராகும். தொழிற் பெயர் என்பது பெயருக்குரியவனின் தன்மைக்கு ஏற்ப, தொழிலுக்கு ஏற்ப அவற்றுக்குப் பொருத்தமாக வைக்கப்படும் பெயர்களாகும். அல்லாஹ்வுக்கு பெற்றோர் இல்லையாதலால் அல்லாஹ் என்ற பெயர் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களால் வைக்கப்பட்ட பெயராகும்.
قال الشّيخ عبد العزيز رحمه الله أوَّلُ من وضع اسمَ الجلالة أبونا آدم عليه الصلاة والسّلام، وذلك أنّ الله تعالى لمّا نَفَخَ فيه الرُّوحَ نَهَضَ مُسْتَوْفِزًا فقام على رِجْلٍ وَاتَّكَأَ على رُكبةالرجل الأخرى، فحصلت له فى تلك الحالةِ مَعَ ربِّهِ مُشَاهَدَةٌ عظيمة، فَأَنْطَقَ اللهُ لِسَانَه بِلَفْظٍ يُؤَدِّي الأسرارَ الَّتي شاهَدَها من الذات العلية، فقال الله،
மேலும் குத்பு அப்துல் அஸீஸ் அத்தப்பாகு(غ) றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
அல்லாஹ் என்று படைத்தவனுக்கு – சிருஷ்டி கர்த்தாவுக்கு பெயர் வைத்தவர்கள் ஆதி பிதா நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்தான். இதன் வரலாற்றுச் சுருக்கம் பின்வருமாறு.
அல்லாஹ் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைப் படைத்து அவர்களுக்கு உயிர் கொடுத்த வேளை அவர்கள் எழுந்து ஒரு காலை தரையில் வைத்தவர்களாகவும், மறு காலின் முழங்காலில் ஊன்றியவர்களாகவும் எழுந்து நின்றார்கள். அவ்வேளை அவர்களுக்கு அல்லாஹ்வின் வலுப்பமிகு காட்சி ஒன்று தெரிந்தது. அக்காட்சியை அவர்கள் கண்ட போது அவர்களின் நாவின் மீது அல்லாஹ் என்ற பெயரை அவனே வெளிப்படுத்தினான். அவர்கள் “அல்லாஹ்” என்றார்கள்.
அவர்களுக்கு அல்லாஹ்வின் காட்சி எவ்வாறு கிடைத்ததென்று எவருக்கும் தெரியாது. எனினும் ஒரு வஸ்த்துக்கு பெயர் வைப்பதாயின் அவ்வஸ்த்துக்குப் பொருத்தமானதாகவே அப் பெயர் இருக்க வேண்டும். அப்பெயர் அவ்வஸ்த்தின் எதார்த்தம், அகமியம் அனைத்தையும் உள் வாங்கியதாகவும் இருக்க வேண்டும்.
அல்லாஹ் என்ற இப்பெயர் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நாவின் மூலம் வெளியானாலும் கூட அப்பெயரைத் தெரிவு செய்தவன் அல்லாஹ்தான். எதார்த்தம் என்னவெனில் அல்லாஹ் தனக்குத் தானே பெயர் வைத்துக் கொண்டான் என்பதாகும்.
“அல்லாஹ்” எனும் பெயர் அவனின் “தாத்”தின் பெயராயிருப்பதால் அது அடியானின் “தாத்”தின் “திக்ர்” ஆகவே இருக்கும். நாவின் “திக்ர்” ஆக இருக்காது.
இதை நம் போன்ற சாதாரண மனிதர்கள் அவனின் காட்சி கிடைத்துச் சொல்வதில்லை. காட்சி பெற்றுச் சொல்லும் ஆற்றல் நபீமார், குத்புமார், ஸூபீ மகான்கள் போன்றோருக்கே உண்டு.
هو ذكر الذّاتِ، لا ذكر اللِّسان، فتَسْمَعُه يَخْرُجُ من الذات كَطَنِيْنِ النحاس الصفر، وهو يثْقُل على الذات، ولا تذيق الذاتُ ذِكره إلّامرّةً أو مرّتين فى اليوم، فقلت ولِمَ؟ فقال رضي الله عنه لأنّه لا يكون إلّا مع المُشَاهَدة التامّة، وذلك ثقيلٌ على هذه الذّات، وإذا ذكرتْه الذّاتُ فَقَدَ العالمَ كلّه هيبةً وجلالا ومخافةً، وقال رضي الله عنه وكان فى السيّد عيسَى بن مريم على نبينا عليه الصلاة والسّلام قوّةٌ على ذكره، وقد كان يذكره فى اليوم أربعَ عشرة مرّة،
“அல்லாஹ்” என்ற திரு நாமம் “தாத்” உடைய “திக்ர்” ஆகும். அது நாவின் “திக்ர்” அல்ல. அந்த “திக்ர்” இன் ஒலி ஒரு பித்தளை – செம்பு அண்டாவில் இரும்புக் கம்பியால் அடித்தால் எவ்வாறு ஒலியை நீ கேட்பாயோ அவ்வாறு ஒலிதான் வெளியாகும். அது “திக்ர்” செய்பவனின் “தாத்”தால் – உடலால் தாங்க முடியாததாகும். அவ்வாறு தாங்குவதாயினும் ஒரே நாளில் ஒரு தரம் அல்லது இரண்டு தரம் மட்டுமே தாங்க முடியும். இவ்வாறு ஷெய்கு அவர்கள் சொன்ன போது இதற்கான காரணம் என்ன என்று அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் அந்த நிலை பூரணமான காட்சி நிலையில் ஏற்படுவதால் அதை உடல் தாங்காது. அதை ஒரு தரம் மனிதன் சொன்னால் கூட அவனின் உடல் அதை தாங்கிக் கொள்ளாது. அவ்வாறு சொன்னாலும் சொன்னவன் பயத்தாலும், நடுக்கத்தாலும் உலகையே இழந்துவிடுவான் என்று பதில் கூறினார்கள்.
மீண்டும் அவர்கள் கூறுகையில் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அதை சொல்வதற்கான சக்தி இருந்தது. அதனால் அவர்கள் ஒரு நாளில் 14 தரம் சொல்வதற்கு சக்தி பெற்றவர்களாயிருந்தார்கள்.
இதன் சுருக்கம்:
“அல்லாஹ்” எனும் திரு நாமம் அவனின் “தாத்” உடைய திரு நாமமாயிருப்பதால் அவனின் “ஸிபாத்” தன்மைகளின் திரு நாமங்களை நாவால் சொல்வது போல் அத்திரு நாமத்தையும் நாவால் சொல்ல முடியாது. அது அவனின் “தாத்”தின் திரு நாமமாயிருப்பதால் அதை உரிய முறையில் சொல்வதாயின் சொல்கின்றவனும் கூட தனது “தாத்” உடல் அனைத்தாலுமே சொல்ல வேண்டும். அவ்வாறு சொல்வதற்கு சக்தி பெற்ற ஒருவர் அவ்வாறு சொன்னாராயின் அவர் சொல்கின்ற அவ் ஒலி – சத்தம் நாவில் இருந்து மட்டும் வராது.
ஒரு செம்பு அல்லது பித்தளையால் செய்யப்பட்ட ஓர் அண்டாவில் – கிடாரத்தில் ஓர் இரும்புக் கம்பியால் அடித்தால் அவ் அடியின் ஒலி – சத்தம் அடித்த இடத்திலிருந்து மட்டும் கேட்காமல் அவ் அண்டாவின் எல்லாப் பகுதிகளிலில் இருந்துமே கேட்கும். இதேபோல் குறித்த திரு நாமத்தை முறையோடு சொல்வதற்கு சக்தி பெற்ற ஒருவர் சொன்னாராயின் அதன் ஒலி அவரின் நாவில் இருந்து மட்டும் கேட்காது. அவரின் உடலின் உரோமக் கண்கள் அனைத்தின் வழியாலுமே கேட்கும். அதாவது முழு உடலின் மூலமும் கேட்கும்.
இவ்வாறு சொல்ல சக்தி பெற்றவர்கள் நபீமாரும், குத்புமாருமேயாவர். வேறு எவராலும் அவ்வாறு சொல்ல இயலாது. ஏனெனில் அவ்வாறு சொல்வதாயின் சொல்பவனுக்கு கிடைக்கின்ற இறை காட்சியை அவனால் சுமந்து கொள்ள, தாங்கிக் கொள்ள முடியாது போய்விடும்.
நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “றூஹுல்லாஹ்” எனும் பட்டத்திற்குரியவர்களாதலால் அவர்களால் ஒரு நாளில் 14 தரம் மட்டுமே சொல்லக் கூடியதாக இருந்தது.
ஆன்மிக முன்னேற்றம் காணாத நாம் – சாதாரண மனிதர்கள் அல்லாஹ் எனும் “திக்ர்”ஐ காட்சி எதுவுமின்றிச் சொல்பவர்களாயிருப்பதால் அவர்கள் ஒரு நாளில் அதை ஒரு கோடித்தரமும் சொல்லலாம். அதனால் அவர்களுக்கு கூட எந்த ஒரு ஆன்மிக ருசியும், சுவையும் கிடைப்பதில்லை.
நாம் அல்லாஹ் என்று “திக்ர்” செய்வது ஆன்மிகப் பயிற்சிக்காகவேயன்றி அதன் ருசியை அனுபவிப்பதற்காக அல்ல.
நாம் மிளகாய் என்று வாயால் சொல்வதால் வாய் உறைப்பதில்லை. நாவு உறைப்பை உணர்வதில்லை. சீனி என்று வாயால் சொல்வதால் வாய் இனிப்பதில்லை. நா இனிப்பை உணர்வதில்லை. நெருப்பு என்று வாயால் சொல்வதால் வாய் சுடுவதில்லை. நா எரிந்து போவதுமில்லை.
ஆயினும் “அல்லாஹ்” என்ற திரு நாமத்தை உரிய முறையில் மொழிவது இவை போன்றல்ல.
தொடரும்….
Pages: 1 2