“தக்பீர்”களின் எண்ணிக்கைகளிலும், பெருநாள் தொழுகையின் ஏனைய சட்டங்களிலும் “மத்ஹப்”களுக்கிடையில் வித்தியாசங்கள் காணப்பட்டாலும் நான்கு இமாம்களும், நான்கு “மத்ஹப்”களும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவையாகும். “ஸுன்னத் வல் ஜமாஅத்” உலமாஉகளுக்கிடையில் இவ் விடயத்தில் கருத்து வேறுபாடு ஒன்றுமே இல்லை.
எனினும் “தக்பீர்” சொல்லும் எண்ணிக்கையில் அதிக “தக்பீர்” சொல்ல வேண்டிய “மத்ஹப்” “ஷாபிஈ மத்ஹப்” மட்டுமேயாகும்.
ஷாபிஈ மத்ஹபில் மொத்தம் 12 “தக்பீர்”களும், “ஹனபீ மத்ஹப்” இல் மொத்தம் 6 “தக்பீர்”களும், ஏனைய “மத்ஹப்”கள் ஒவ்வொன்றிலும் 11 “தக்பீர்”களும் சொல்ல வேண்டும்.
“தக்பீர்” இன் எண்ணிக்கை வித்தியாசம் காணப்படுவதால் அதிக “தக்பீர்” உள்ள “மத்ஹப்” சிறந்ததென்றும், குறைந்த “தக்பீர்” உள்ள “மத்ஹப்” சிறப்புக் குறைந்ததென்றும் கருத்து வந்து விடாது.
“ஷாபிஈ மத்ஹப்” இல் முதலாம் “றக்அத்”தில் ஏழு “தக்பீர்”கள் சொல்வதன் மூலம் ஒரு மனிதனின் ஏழு வித “நப்ஸ்”கள் ஏழு “தக்பீர்” எனும் வாள்கள் மூலம் கொல்லப்படுவதாகவும், இரண்டாம் “றக்அத்” இல் ஐந்து “தக்பீர்” சொல்வதன் மூலம் முதற் போரில் கொல்லப்படாத “நப்ஸ்”கள் இருக்குமாயின் அவை இரண்டாம் போரில் கொல்லப்படும் என்றும் ஒரு தத்துவம் சொல்லப்பட்டிருந்தாலும் இதே தத்துவம் ஏனைய “மத்ஹப்”களில் இல்லை என்று எவரும் கவலைப்படத் தேவையில்லை.
ஏனெனில் ஏழு “நப்ஸ்”களிலும் முந்தின அம்மாறா, லவ்வாமா, முல்ஹிமா மூன்று “நப்ஸ்”களுமே மிகவும் கொடியவை என்றும், கீழ்த்தரமானவை என்றும் கணிக்கப்படுகின்றன.
மூன்று “தக்பீர்”கள் மூலம் இம் மூன்று விரோதிகளும் கொல்லப்பட்டாலே போதும். அட்டூழியமும், அட்டகாசமும் குறைந்து விடும். எஞ்சிய “நப்ஸ்”கள் கொலை செய்யப்படாமல் பயத்தினாலேயே செத்துவிடும்.
“நப்ஸ்” உடைய ஏழு படிகளில் தொடரான முந்தின மூன்று படிகளுமே மிக பயங்கரமானவையாகும்.
“ஹனபீ மத்ஹப்” இல் இரண்டு “றக்அத்” இலும் மொத்தம் ஆறு “தக்பீர்”கள் சொல்லப்படுவதால் அவை கொண்டு ஆறு “நப்ஸ்”கள் கொல்லப்பட்டு விடுகின்றன. எஞ்சியுள்ள ஒன்று கொல்லப்படாவிட்டாலும் அது பயத்தால் தானாகவே செத்து விடும் என்பதில் ஐயமில்லை.
“ஹன்பலீ, மாலிக் மத்ஹப்”களைப் பின்பற்றுவோரும் எந்த ஒரு கவலையும் கொள்ளத் தேவையில்லை. அவர்களில் ஒவ்வொரு மத்ஹப் வழி செல்பவர்களும் மொத்தம் 11 தக்பீர்கள் சொல்வதால் அவர்களும் கவலைப்படத் தேவையில்லை.
எந்த மத்ஹப் உடையவர்களாயினும் “தக்பீர்” சொல்லும் போது அவர்கள் தம்மில் உள்ள “நப்ஸ்” எனும் “காபிர்”ஐ கொலை செய்வதாக “நிய்யத்” நாடிக் கொள்ள வேண்டும். ஒரு மனிதன் தனது “நப்ஸ்”ஐ கொலை செய்வதற்கு “தக்பீர்” சொல்லுதல் ஒரு பயிற்சியாயிருப்பது போல் “பர்ழ்” கடமையான, அல்லது “ஸுன்னத்” ஆன நோன்பு நோற்பதும் ஒரு பயிற்சியேயாகும்.
இதேபோல் தினமும் மித மிஞ்சி உண்ணாமல் உணவில் கட்டுப்பாடு வைத்துக் கொள்வதும் ஒரு பயிற்சியேயாகும்.
قال النبي صلى الله عليه وسلّم إِنَّ الشَّيْطَانَ لَيَجْرِيْ مِنِ ابْنِ آدَمَ مَجْرَى الدَّمِ فَضَيِّقُوْا مَجَارِيَهُ بِالْجُوْعِ وَالْعَطْشِ،
“நிச்சயமாக “ஷாத்தான்” மனிதனில் இரத்தம் ஓடும் இடங்களில் எல்லாம் ஓடுகிறான். எனவே, பசித்திருப்பதன் மூலமும், தாகித்திருப்பதன் மூலமும் அவன் ஓடும் வழிகளை நெருக்கி வையுங்கள் என்று நபீகள் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
பசித்திருத்தல், தாகித்திருத்தல் ஷாத்தானின் அட்டூழியத்தை குறைப்பதற்கு வழி செய்யுமாதலால் ஆன்மிக வழி வாழ விரும்புவோர் வயிறு நிரம்ப, வயிறு புடைக்க உண்ணாமல் கட்டுப்பாட்டுடன் உண்பது ஆன்மிகம் வலுப் பெற வழி செய்யும்.
قال صلى الله عليه وسلم حَسْبُ ابْنِ آدَمَ لُقَيْمَاتٌ يُقِمْنَ صُلْبَهُ،
ஆதமுடைய மகனுக்கு – மனிதனுக்கு அவனின் முதுகு முள்ளை நிமிர்த்தும் அளவு சில சிறு பிடிகள் போதும் என்று அண்ணலெம்பிரான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
இந் நபீ மொழியில் ஒரு நுட்பம் உண்டு. அதை இங்கு சுட்டிக் காட்டுகிறேன்.
لُقْمَةٌ
என்றால் ஒரு பிடி, لُقَيْمَةٌ என்றால் ஒரு சிறு பிடி. لُقْمَةٌ என்பதற்கு பன்மைச் சொல் لُقَمٌ என்று வரும். لُقَيْمَةٌ என்ற சொல்லுக்கு பன்மைச் சொல் لُقَيْمَاتٌ என்று வரும். மேற்கண்ட நபீ மொழியில் இந்த பன்மைச் சொல் தான் வந்துள்ளது. இதன்படி சில சிறு பிடிகள் என்று கருத்து வரும். சிறு பிள்ளைகளுக்கு உணவூட்டும் போது தாய்மார் தமது கையால் பிடிக்கின்ற பிடிகளில் சுமார் 13 பிடி போதும் என்று ஒரு வலிய்யுல்லாஹ் உயிருடன் இருந்த நேரம் அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்.
எனவே, மனிதன் குறிப்பாக ஆன்மிக வழி நடப்பவன் சத்துள்ள உணவுகளை தேவைக்கேற்ப உட் கொண்டாலும் கூட எதையும் வயிறு நிரம்ப, புடைக்க உண்பதை தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
சுகாதார, வைத்திய முறைப்படி வயிறை மூன்று பங்குகளாகப் பங்கிட்டு ஒரு பகுதிக்கு உணவும், இன்னொரு பகுதிக்கு நீரும் கொடுக்க வேண்டும். மற்றொரு பகுதியை காலியாக – வெறும் வயிறாக வைத்துக் கொள்தல் வேண்டும்.
எனினும் உடலை வருத்தி வேலை செய்வோர் மட்டும் ஆன்மிக வழி நடப்பவர்களாயிருந்தாலும், இல்லாவிட்டாலும் கணிசமான அளவு சாப்பிட்டுக் கொள்தல் நல்லது. திருமணம் செய்தோர் இளம் தம்பதிகளாயின் வயிறு புடைக்க சாப்பிடாமல் சத்துள்ள உணவுகளை உட்கொள்வது சிறந்தது.
எவராயினும் பொதுவாக ஆண்களும், பெண்களும் தினமும் காலையில் சுத்தமான தேன் சிறிய கரண்டி ஒன்று குடித்து வருவதும், குறைந்த பட்சம் விரும்பிய நேரம் தினமும் மூன்று பேரீத்தம் பழம் சாப்பிட்டு வருவதும் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வழி செய்யும்.
எனது ஆக்கங்களை வாசிப்பவர்கள் எனக்காகவும், எனது மகன் “செய்னீ ஸுஃதான்” அவர்களுக்காகவும் “துஆ” செய்ய வேண்டுமென்று அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.
أيها الصديق الصادق! لا تنس هذا العبد الحقير الفقير من دعائك، لأنّه جاوز ثمانية وسبعين،