Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஸூபிஸத்தை கிண்டல் செய்த சிலர் இன்று தம்மைத் தாமே ஸூபீகள் என்று அறிமுகம் செய்து வருவது...

ஸூபிஸத்தை கிண்டல் செய்த சிலர் இன்று தம்மைத் தாமே ஸூபீகள் என்று அறிமுகம் செய்து வருவது நகைப்புக்குரியதாகும்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

ஸூபீ என்ற சொல்லைக் கூட எதிர்த்து எள்ளி நகையாடிய ஸுன்னீ உலமாகளிற் சிலர் இன்று தம்மைத் தாமே ஸூபீகள் என்று சொல்வது வியப்பிற்குரியதாகவும், சிரிப்பிற்குரியதாகவும் உள்ளது.

“தஸவ்வுப்” என்றாலே என்னவென்று கூடத் தெரியாத நிலையிலிருந்த, இன்றும் இருந்து கொண்டிருக்கின்ற உலமாஉகளிற் சிலரும், பாமரர்களிற் பலரும் சக்றானின் குண்டு வெடிப்பின் பிறகு தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தம்மைத் தாமே ஸூபீ என்று கூறுகின்றார்கள்.

இன்னோரின் இலட்சியத்தையும், குறிக்கோளையும் புரிந்து கொண்ட புத்தி சாலிகளும், அறிஞர்களும் இவர்களைக் கணக்கெடுக்காமல் புறம் தள்ளி வைக்கிறார்கள்.

“தஸவ்வுப்” ஸூபிஸம் என்பதற்கு ஸூபீ மகான்களே கூறியுள்ள வரைவிலக்கணங்களில் சிலதை மட்டும் இங்கு குறிப்பிட்டு விளக்கமும் கூறுகிறேன்.
قال سيّد الطائفة الصوفيّة الإمام العارف بالله الجنيد البغدادي قُدِّسَ سِّرُّه: اَلتَّصَوُّفُ أَنْ يُمِيْتَكَ الْحَقُّ عَنْكَ وَيُحْيِيَكَ بِهِ،

ஸூபிஸ சமூகத்தின் தலைவர் அல் இமாம், அல்ஆரிபு பில்லாஹ் ஜுனைத் அல் பக்தாதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் “தஸவ்வுப்” எனும் ஸூபிஸம் என்பதற்கு வரைவிலக்கணம் கூறுகையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்கள்.

வசனத்தின் பொருள்:

“அல்லாஹ் உன்னை விட்டும் உன்னை மரணிக்கச் செய்து அவனைக் கொண்டு உன்னை உயிராக்குவதாகும்”

ஜுனைத் அல் பக்தாதீ அவர்கள் கூறியுள்ள இவ்வரைவிலக்கணத்துக்கு ஸூபீ மகான்கள் அனைவரும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது ஸூபிஸ ஞானத்துறையில் புலமைத்துவம் பெற்றவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக் கனி போல் தெளிவாகத் தெரியும்.

மேலே அறபியில் கூறப்பட்ட வரைவிலக்கண வசனங்களை தமிழ் மொழியில் திறமையுள்ள அறிஞர்கள் வாசித்தாற்கூட அவர்கள் அவற்றின் பொருளையும், சாரத்தையும் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.

ஜுனைத் அவர்களின் வசனங்களுக்குரிய பொருளையும், சாரத்தையும் விளங்குவதாயின் ஓரளவேனும் ஸூபிஸக் கலை தொடர்பான முன்னறிவு இருக்க வேண்டும். இதை சுருக்கமாக எழுதுகிறேன்.

இவ் வசனத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று – அல்லாஹ் உன்னை விட்டும் உன்னை மரணிக்கச் செய்தல் என்பது. இரண்டு – அல்லாஹ் தன்னைக் கொண்டு உன்னை உயிர் பெறச் செய்தல் என்பது.

முதல் அம்சம் பற்றி ஆராய்வோம். எந்தவொரு மனிதனாயினும் அவனிடம் “நான் ஒருவன் இருக்கிறேன்” என்ற எண்ணம், உணர்வு நிச்சயமாக இருக்கும். இது தன்னுணர்வு என்று சொல்லப்படும். உயிரினங்களில் மனிதனிடம் மட்டுமே இவ் உணர்வு இருக்கும். இவ் உணர்வு ஒருவனிடம் இல்லாமற் போதல்தான் அவனின் ஆன்மிக வழிக்கு அத்திவாரமாகும்.

“நான்” என்ற உணர்வுக்கு அறபியில் أَنِّيَّةٌ “அன்னிய்யத்” என்றும், “நான்” என்ற மமதைக்கு أَنَانِيَّةٌ “அனானிய்யத்” என்றும் ஸூபிஸக் கலைவாதிகள் சொல்வர். இங்கு நான் இப்போது பேசுவது “நான்” என்ற உணர்வோடு தொடர்புள்ள விளக்கமேயன்றி “நான்” என்ற أنانية “அனானிய்யத்” மமதையுடன் தொடர்புள்ள விளக்கமில்லை. ஒருவனிடம் “நான்” என்ற தன்னுணர்வு இல்லாமற் போனால் “நான்” என்ற மமதை தானாகவே இல்லாமற் போய்விடும். “நான்” எனும் தன்னுணர்வை அடித்து விரட்டினால் “நான்” என்ற மமதை அடித்து விரட்டாமல் அது தானாகவே போய்விடும். அதாவது அதை நீக்குவதற்கு தனியான மருந்து தேவையில்லை.

ஒரே வசனத்தில் மேற்கண்ட விளக்கத்தை கூறுவதாயின் ஒரு மனிதனிடமுள்ள “நான்” என்ற உணர்வை அல்லாஹ் அவனை விட்டும் நீக்கி விடுதல்தான் அல்லாஹ் அவனை விட்டும் அவனை மரணிக்கச் செய்தல் என்று பொருளாகும்.

ஒருவன் தன்னிலுள்ள “நான்” என்ற உணர்வை அகற்றாமல் இருப்பது “ஷிர்க்” இணை வைத்தல் போன்ற பெரும் பாவமேதான்.

ஏனெனில் ஒருவனிடம் “நான்” என்ற உணர்வு இருப்பது எதார்த்தத்திற்கு முரணானதாகும். எதார்த்தம் என்னவெனில் அல்லாஹ் அல்லாத எதுவுமே இல்லை என்றிருக்கும் நிலையில் ஒருவன் தான் இருப்பதாக நினைத்துக் கொள்வது அல்லது உணர்வது உண்மைக்குப் புறம்பானதாகும். சுருக்கமாகச் சொன்னால் பொய்யாகும். எது இல்லையோ அது இருப்பதாக உணர்வது பொய்தான்.

இமாம் ஜுனைத் அவர்கள் கூறிய வரைவிலக்கணம் அதிக விளக்கத்தை உள்வாங்கிய ஒரு வரை விலக்கணமாகும்.

அவர்களின் வரை விலக்கணத்தில் اَلتَّصَوُّفُ أَنْ يُمِيْتَكَ الْحَقُّ عَنْكَ ஸூபிஸம் என்பது அல்லாஹ் உன்னை விட்டும் உன்னை மரணிக்கச் செய்வதாகும் என்று கூறியிருப்பது ஒருவன் தன்னிலுள்ள தன்னுணர்வை – நான் என்ற உணர்வை அல்லாஹ் நீக்கி வைப்பதாகும் என்று நீக்கி வைத்தல் என்ற செயலை அல்லாஹ்வின் பக்கம் சேர்த்து சொல்லப்பட்டிருந்தாலும் கூட அந்த உணர்வை நீக்குவதற்கு மனிதன்தான் முயற்சிக்க வேண்டும். அவன் முயற்சிக்கும் போது அல்லாஹ் அதை முடித்து வைப்பான். நீக்கி வைப்பான். மனிதன் முயற்சி செய்யாமல் அவ் உணர்வு நீங்காது. நீக்கி வைப்பவன் அல்லாஹ்வாக இருந்தாலும் முயற்சி செய்ய வேண்டியவன் மனிதனேயாவான்.

மனிதன் எந்த வகையில் முயற்சிக்க வேண்டுமென்றால், “நானில்லை நானில்லை” என்ற உணர்வை ஏற்படுத்தும் வழிகளைக் கையாள வேண்டும். அதாவது இதன் சுருக்கம் “நான் இல்லை என்னாக அல்லாஹ்தான் உள்ளான்” என்ற உணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். لَأ أَنَا إِلَّا هُوْ – “லா அன இல்லா ஹூ” நான் அவனாகவே ஒளிய இல்லை – அதாவது நான் அவன்தான் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஸூபீ மகான்கள் இதற்கான வழி முறைகளைச் சொல்லித் தந்துள்ளார்கள். مُوْتُوْا قَبْلَ أَنْ تَمُوْتُوْا “நீங்கள் மரணிக்கு முன் மரணித்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்கள். இது நபீ மொழி என்று சிலரும், இது ஸூபீகளின் பேச்சு என்று வேறு சிலரும் கூறியுள்ளனர்.

மரணிக்குமுன் மரணிப்பது எவ்வாறு என்பதை ஸூபீ மகான்களே கூறியுள்ளார்கள். அதாவது ஒரு மனிதனுக்கு அல்லாஹ் ஏழு தன்மைகளை இரவலாக வழங்கியுள்ளான். சொந்தமாக அல்ல. அவை “குத்றத்” சக்தி, “இறாதத்” நாட்டம், “ஸம்உன்” கேள்வி, “பஸறுன்” பார்வை, “இல்முன்” அறிவு, “கலாமுன்” பேச்சு, “ஹயாத்” உயிர் என்பனவாம்.

இவ் ஏழையும் இழந்தவன் மரணித்தவன்தான். இவற்றை இழப்பதற்கான வழியையும் ஸூபீ மகான்கள் சொல்லித் தந்துள்ளார்கள்.

அதாவது ஒருவன் இரவில் உறக்கத்திற்காக சென்றதும் பின்வரும் ஏழு “திக்ர்”கள் மூலம் ஏழு தன்மைகளையும் இரவல் தந்தவனிடம் கொடுத்து விட வேண்டும். உதாரணமாக
لَا قَادِرَ إِلَّا اللهُ
“லா காதிர இல்லல்லாஹ்” சக்தி உள்ளவன் அல்லாஹ் மட்டும்தான். நானுமில்லை, வேறு யாருமில்லை. இதன் மூலம் அவன் நான் சக்தியற்றவன் என்ற முடிவுக்கு வரல் வேண்டும்.

لَا مُرِيْدَ إِلَّا اللهُ
“லா முரீத இல்லல்லாஹ்” நாட்டம் உள்ளவன் அல்லாஹ் மட்டும்தான். நானுமில்லை, வேறு யாருமில்லை. இதன் மூலம் நான் நாட்டமில்லாதவன் என்ற முடிவுக்கு அவன் வரல் வேண்டும்.

لَا سَمِيْعَ إِلَّا اللهُ
“லா ஸமீஅ இல்லல்லாஹ்” கேட்பவன் அல்லாஹ் மட்டும்தான். நானுமில்லை, வேறு யாருமில்லை. இதன்மூலம் நான் கேள்வியில்லாதவன் என்ற முடிவுக்கு அவன் வரல் வேண்டும்.

لَا بَصِيْرَ إِلَّا اللهُ
“லா பஸீற இல்லல்லாஹ்” பார்ப்பவன் அல்லாஹ் மட்டும்தான். நானுமில்லை, வேறு யாருமில்லை. இதன் மூலம் நான் பார்வையில்லாதவன் என்ற முடிவுக்கு அவன் வரல் வேண்டும்.

لَا عَلِيْمَ إِلَّا اللهُ
“லா அலீம் இல்லல்லாஹ்” அறிந்தவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை. நானுமில்லை, வேறு யாருமில்லை. இதன் மூலம் நான் அறிவில்லாதவன் என்ற முடிவுக்கு வரல் வேண்டும்.

لَا مُتَكَلِّمَ إِلَّا اللهُ
“லா முதகல்லிம இல்லல்லாஹ்” பேசுபவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை. நானுமில்லை, வேறு யாருமில்லை. இதன் மூலம் நான் பேச்சு இல்லாதவன் என்ற முடிவுக்கு வரல் வேண்டும்.

لَا حَيَّ إِلَّا اللهُ
“லா ஹய்ய இல்லல்லாஹ்” உயிருள்ளவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை. நானுமில்லை, வேறு யாருமில்லை. இதன் மூலம் நான் உயிரில்லாதவன் என்ற முடிவுக்கு அவன் வரல் வேண்டும்.

ஒருவன் மேற்கண்டவாறு ஏழு “திக்ர்”கள் மூலம் அல்லாஹ்வால் தனக்கு இரவலாக வழங்கப்பட்ட ஏழு தன்மைகளையும் தந்தவனிடமே ஒப்படைத்து தானுமில்லை, தனக்கென்று ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு அவன் வரும் போது அவன் தனது எண்ணத்திலும், உணர்விலும் மரணித்தவனாகிவிடுகிறான். ஒருவன் தன்னிலுள்ள தன்னுணர்வை – நான் என்ற உணர்வை அழிப்பதற்கு இது ஒரு வழியாகும். ஒருவன் இவ்வாறு தினமும் செய்து வந்தானாயின் அவன் தனது எண்ணத்திலும், உணர்விலும் மரணித்தவனாகிவிடுகிறான்.

இதுவே مَوْتٌ مَجَازِيٌّ என்று ஸூபீ மகான்களால் சொல்லப்படுகின்றது. مُوْتُوْ قَبْلَ أَنْ تَمُوْتُوْا நீங்கள் மரணிக்கு முன் மரணித்து விடுங்கள் என்று ஸூபீ மகான்கள் சொல்வது இவ்வாறு மரணிப்பதையேதான்.

ஸூபீ மகான்களிற் பலர் பின்வருமாறு பாடி உள்ளார்கள்.

நான் என்றிருந்தேனே
நாளும் கழிந்தேனே
தானாயிருந்த தன்மை அறியேனே!

அதாவது “நான் என்று ஒருவன் இருப்பதாக நினைத்து எனது காலத்தை வீணாக்கி விட்டேன். அவன்தான் – அல்லாஹ்தான் என்னாக இருந்தான் என்ற தத்துவத்தை உணராமல் காலம் கழித்துவிட்டேன்” என்று வேதனையால் புலம்புகிறார்.

“ஸூபிஸம்” என்பதற்கு ஸூபீகளின் தலைவர் ஜுனைத் அல் பக்தாதீ அவர்கள் கூறிய வரை விலக்கணம் இரண்டு அம்சங்களை உள்ளடக்கியது என்று எழுதியிருந்தேன். அவ்விரண்டில் ஒன்று أَنْ يُمِيْتَكَ الْحَقُّ عَنْكَ அல்லாஹ் உன்னை விட்டும் உன்னை மரணிக்கச் செய்வதாகும் என்று குறிப்பிட்டு அதற்கான விளக்கத்தை சுருக்கமாக எழுதிவிட்டேன்.

ஒருவனிடம் “நான்” என்ற உணர்வு இருக்கும் வரை அவனால் தான் அல்லாஹ்தான் என்று உணர முடியாது. அவனிடமுள்ள “நான்” எனும் அவ் உணர்வு அவனை விட்டும் சென்று விட்டால் மட்டுமே அவன் எதார்த்தத்தைப் புரிந்து கொள்வான்.

1965ம் ஆண்டு காலப் பகுதியில் நான் பாணந்துறை – பள்ளி முல்லை தீனிய்யா அறபுக் கல்லூரியில் மதிப்பிற்குரிய மர்ஹூம் அப்துஸ்ஸமத் ஹழ்றத் றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன். ஒரு நாள் நானும், அங்கு என்னிடம் கல்வி கற்றுக் கொண்டிருந்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மரியாதைக்குரிய ஸெய்யித் அஹ்மத் மௌலானா அவர்களும் வெலிகாமத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மரியாதைக்குரிய ஞான மகான் மர்ஹூம் யாஸீன் மௌலானா றஹிமஹுல்லாஹ் அவர்களைச் சந்திப்பதற்காக பாணந்துறையில் இருந்து வெலிகாமம் சென்றோம். ஸெய்யித் அவர்களின் வீட்டுக் கதவை தட்டினோம். கதவு திறக்கப்பட்டது. ஞான மகான் அவர்களை நான் கண்டதும் எனக்கு எனது தந்தை அவர்களைக் கண்டது போலிருந்தது. என் தந்தை அப்துல் ஜவாத் ஆலிம் அவர்கள் யாஸீன் மௌலானா அவர்கள் மீது நல்லெண்ணம் உள்ளவராக இருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உள்ளே அழைத்து அமரச் செய்து எங்கிருந்து வருகிறீர்கள்? ஏன் வந்தீர்கள்? என்று வினவினார்கள். தங்களைப் பார்த்து அருள் பெறுவதற்கும், மெய்யறிவின் மழைத் துளிகளில் சில துளிகளைப் பெறுவதற்கும் வந்தோம் என்றோம்.

அப்போது அவர்கள்,
إِنْ تَغَيَّبْتُ بَدَا – وَإِنْ بَدَا غَيَّبَنِيْ
என்று ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ அவர்கள் சொல்லியுள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார்கள். இல்லை. நாங்கள் ஓதிக் கொண்டிருக்கும் மாணவர்கள் என்றோம்.

விளக்கம் சொல்லத் தொடங்கினார்கள். إِنْ تَغَيَّبْتُ நான் மறைந்தால் بَدَا அவன் வெளியாகுவான். وَإِنْ بَدَا அவன் வெளியானால் غَيَّبَنِيْ என்னை மறைத்து விடுவான் என்று மேற்கண்ட வசனத்துக்கு பொருள் கூறி விட்டு சுமார் 45 நிமிடங்கள் விளக்கம் கூறினார்கள்.

விளக்கமென்றால் பிரம்மாதம். ஆனால் நாங்கள் இருவரும் சிறுவர்களாகவும், மெய்ஞ்ஞானத்தின் வாடையைக் கூட நுகராதவர்களாகவும், இருந்ததினால் அவர்களின் விளக்கம் எங்களின் மண்டையில் ஏறவில்லை.

இதன்பிறகு அவர்கள் “மிஃறாஜ்” சென்ற வரலாறு பற்றிப் பேசினார்கள். இது தொடர்பாக அவர்கள் கூறிய சாரம் என்னவெனில், “றூஹ்” – உயிர், “ஜஸத்” உடல் இரண்டும் சேர்ந்து “மிஃறாஜ்” செல்வது மட்டுமே பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு மட்டும் சொந்தமானதாகும். அவ்வாறு வேறு எவருக்கும் சொல்ல முடியாது. எனினும் உடல் செல்லாமல் “றூஹ்” மட்டும் செல்வது குத்புமார், மற்றும் வலீமாராலும் முடிந்ததேயாகும். நான் உடலுடன் போகவில்லை. எனது “றூஹ்” மட்டுமே சென்றது. இந்த விபரம் தெரியாத உலமாஉகளே இந்த விடயத்தை பூதாகரமாக்கி “பித்னா” குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று தங்களின் விளக்கத்தை முடித்துவிட்டு “மிஃறாஜ்” பயணம் தொடர்பாக அவர்கள் அறபியில் எழுதிய நூல்களில் இருவருக்கும் தந்தார்கள்.

இமாம் ஜுனைத் அவர்கள் ஸூபிஸம் என்பதற்கு கூறிய வரைவிலக்கணத்தில் முந்தின அம்சம் தொடர்பாக இதுவரை விளக்கம் எழுதினேன். இன்ஷா அல்லாஹ் இரண்டாவது அம்சம் பற்றி அடுத்த தொடரில் எழுதுவேன்.

புதிதாக ஸூபீ ஆனவர்கள் “ஸூபிஸம்” என்றால் என்ன? என்பதை முதலில் விளக்கமாக அறிந்து கொள்வது அவசியமாகும். இவர்கள் இப்னு அதாயில்லாஹ் அவர்களின் “ஹிகம்” எனும் நூலையும், இமாம் ஙஸ்ஸாலீ அவர்களின் “இஹ்யா” எனும் நூலையும், இமாம் அபூ தாலிப் அல் மக்கீ அவர்களின் “கூதுல் குலூப்” எனும் நூலையும் தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்று அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

இரண்டும் வேண்டும்!

ஸூபிஸத்தின் உயிர் நாடியும், உயர் நாடியும் என்னவெனில் “அல்அகீததுஸ்ஸூபிய்யா” ஸூபிஸக் கொள்கையை கற்றுக் கொள்வதும், அதைக் கற்றுக் கொடுப்பதுமாகும்.

வலீமாரின் வதிவிடங்கள் சென்று “சியாறத்” செய்வதும், பாதிஹா ஓதுவதும், அத்தர் தெளிப்பதும், போர்வை போர்த்துவதும் மட்டும் ஸூபிஸம் அல்ல. முந்தினது “பர்ழ்” கடமை. பிந்தினது “ஸுன்னத்”. இரண்டும் வேண்டும்!

(தொடரும்….)

RELATED ARTICLES

Most Popular

Recent Comments