Saturday, October 12, 2024
Homeஎழுத்தாக்கங்கள்باب الصيام - பாபுஸ் ஸியாம் - நோன்பின் பாடம்.

باب الصيام – பாபுஸ் ஸியாம் – நோன்பின் பாடம்.

தொடர்: 10

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

ஒருவனுக்கு நோன்பு கடமையாவதாயின் அவனில் நான்கு அம்சங்கள் – நிபந்தனைகள் இருக்க வேண்டும். அவற்றில் மூன்று அம்சங்கள் தொடர்பான விபரங்கள் கடந்த தொடர்களில் எழுதப்பட்டுள்ளன.

இத் தொடரில் நாலாவது அம்சம் தொடர்பாக ஆய்வு செய்வோம்.
الرَّابِعُ الإِطَاقَةُ حِسًّا وشَرْعًا، فلا يجِبُ على مَنْ لمْ يُطِقْهُ لِكِبَرٍ أو مَرَضٍ لا يُرْجَى بُرْئُهُ لِعَجْزِهِ حِسًّا، ولَا عَلَى نَحْوِ حَائِضٍ لِعَجْزِهَا شَرْعًا،

ஒருவனுக்கு நோன்பு கடமையாவதற்கு “ஷரீஆ” சட்டத்தில் கூறப்பட்ட நாலாவது அம்சம் – நிபந்தனை அவன் நோன்பு நோற்பதற்கு மார்க்க ரீதியிலும், உடல் ரீதியிலும் சக்தி பெற்றவனாயிருத்தல் வேண்டும்.

உடல் ரீதியாக சக்தி பெறாதவனாயிருத்தல் என்றால் முதுமை காரணமாக, அல்லது தீராத நோய் காரணமாக நோன்பு நோற்க சக்தியற்றவனாயிருத்தல். இந்நிலையில் உள்ளவனுக்கு நோன்பு கடமையாகாது. முதுமை என்பதற்கு வயதெல்லை கூறப்படவில்லை. 40 வயதுள்ள ஒருவன் அல்லது 25 வயதுள்ள ஒருவன் நோன்பு நோற்காமலிருக்கிறான். அவனிடம் ஏன் என்று கேட்டால் தனக்கு முதுமை என்று சொன்னால் அது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். முதுமைக்கு வயது இத்தனை என்று குறிப்பில்லாதிருப்பதால் இவ்விடயத்தில் படித்த, அனுபவமுள்ள பலர் சொல்வதை ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும்.

நோன்பு கடமையில்லாமற் போவதற்கு நோய் ஒரு காரணமாகும். நோயென்றால் சாதாரண தலைவலி, பல் வலி, வயிற்று வலி, சிறிய காய்ச்சல், தடிமல் போன்றவை நோன்பு கடமையாகாமற் போவதற்கான காரணங்களில்லை.

வயது வந்தவர்களில் மேற்கண்ட சாதாரண நோயுள்ளவர்கள் அந் நோயுள்ள நாட்களில் நோன்பு நோற்க முடியாது போனால் நோயுள்ள நாட்களில் மட்டும் நோன்பு நோற்காமல் விட்டு சுகம் கிடைத்த பின் அதை “கழா” செய்ய வேண்டும்.

எனினும் தீராத நோயுள்ளவனுக்கு இவ்விடயத்தில் சலுகை உண்டு. அவன் நிரந்தர நோயாளியாவான். அவனுக்கு நோன்பு கடமையில்லை.

மாதத்தீட்டுள்ள பெண் தீட்டுள்ள காலத்தில் நோன்பு நோற்பது கூடாது. இவள் உடலால் சக்தி பெற்றவளாயிருந்தாலும் “ஷரீஆ” அடிப்படையில் – மார்க்க அடிப்படையில் நோன்பு நோற்க முடியாதவளாவாள். இவள் தனக்கு தவறிப்போன நோன்புகளை “கழா” செய்ய வேண்டும் – திரும்ப நோற்க வேண்டும். ஆயினும் தீட்டிருந்த காலத்தில் தவறிப்போன தொழுகைகளை “கழா” செய்யத் தேவையில்லை. இது இறைவன் பெண்களுக்கு வழங்கியுள்ள பெரும் சலுகையாகும். எங்கு போனாலும், எவரிடம் போனாலும் பெண்களுக்கு சலுகை இருக்கத்தான் செய்கிறது.

மேற்கண்ட நான்கு நிபந்தனைகளும் ஒருவனுக்கு கடமையாவதற்கான நிபந்தனைகளாகும்.
وَأَمَّا شُرُوْطُ صِحَّتِهِ فَأَرْبَعَةٌ أَيْضًا،
மேற்கண்ட நான்கு நிபந்தனைகளும் உள்ள ஒருவன் நோன்பு நோற்றால் அது நிறைவேறுவதற்கும் நான்கு நிபந்தனைகள் உள்ளன. அவற்றில் ஒன்று.

الأوّلُ: اَلْإِسْلَامُ حَالَ الصِّيَامِ، فَلَا يَصِحُّ مِنْ كَافِرٍ أَصْلِيٍّ وَلَا مُرْتَدٍّ، اَلثَّانِيْ اَلتَّمْيِيْزُ، فَلَا يَصِحُّ مِنْ غَيْرِ مُمَيِّزٍ، فَإِنْ كَانَ مَجْنُوْنًا فَلَا يَصِحُّ صَوْمُهُ،
நோன்பு நோற்கும் நேரம் அவன் “முஸ்லிம்” ஆக இருத்தல் வேண்டும். “காபிர்” நோன்பு நோற்றால், அல்லது “முர்தத்” மதம் மாறியவன் நோன்பு நோற்றால் நோன்பு நிறைவேறாது.

இடைக்குறிப்பு:

நானும், 42 ஆண்டுகளாக நான் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்”, மற்றும் ஸூபிஸ ஞானத்தை ஏற்றுக் கொண்டவர்களும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” வழங்கிய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் “பத்வா”வை “மையித்” பிரேதம் வைக்கும் “சந்தூக்” பெட்டியில் வைத்து காத்தான்குடி பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் இருந்து ஊர் வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று மெத்தைப் பள்ளிவாயல் வழியாக பிரதான வீதிக்கு வந்து “குட்வின்” சந்தியை அடைந்து அதை தீயிட்டு எரித்தோம். இவ் உண்மையை 1979 – 80களில் வாழ்ந்த இவ்வூர் மக்கள் அனைவரும் அறிவர்.

அந்த “பத்வா”வின் மூலம் அவர்கள்தான் எங்களை “முர்தத்” மதம் மாறியவர்களாக ஆக்கி வைத்தார்களேயன்றி நாங்கள் மதம் மாறவில்லை. நாங்கள் மதம் மாறியிருந்தால் 30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகின்ற “ஜும்ஆ”ப் பள்ளிவாயல் எங்களுக்கு எதற்கு? நாங்கள் ஐங்காலமும் தொழுது கொண்டிருக்கின்ற தொழுகை எங்களுக்கு எதற்கு? வாரத்தில் ஒரு முறை “புர்தா” நபீ புகழ் காப்பியம் ஓதி வருகிறோம். இது எங்களுக்கு எதற்கு? மாதத்தில் ஒரு முறை “காதிரிய்யா” றாதிப் நடாத்துகிறோம். இது எங்களுக்கு எதற்கு? ஒரு வருடத்தில் 14 வலீமாரின் பெயர்களால் “மனாகிப்” ஓதி கந்தூரி கொடுக்கிறோம். இது எங்களுக்கு எதற்கு? எங்களின் நிர்வாகத்தின் கீழ் “மன்பஉல் கைறாத்” ஜும்ஆப் பள்ளிவாயலையும், இப்றாஹீமிய்யா பள்ளிவாயலையும் நடாத்தி வருகிறோம். இது எங்களுக்கு எதற்கு? நாங்கள் இப்பள்ளிவாயல்கள் இரண்டிலும் பல்வேறு மார்க்க நிகழ்வுகள் நடத்திக் கொண்டிருக்கிறோம். இவை எங்களுக்கு எதற்கு? நான்கு குர்ஆன் பாடசாலைகள் நடாத்தி வருகிறோம். இது எங்களுக்கு எதற்கு? பாலமுனை கிராமத்தில் ஸூபீ மன்சில் பள்ளிவாயலும், குர்ஆன் மத்ரஸாவும் நடாத்தி வருகிறோம். இது எங்களுக்கு எதற்கு? காத்தான்குடி முஹ்ஸின் மௌலானா மத்ரஸாவும், சியாரமும் எமக்குரியன. இங்கேயும் பல்வேறு மார்க்க நிகழ்வுகள் நடத்தி வருகிறோம். காத்தான்குடி றஹ்மானிய்யா குர்ஆன் மத்ரஸா எங்களுக்குரியது. இங்கும் பலவேறு மார்க்க நிகழ்வுகள் நடத்தி வருகிறோம்.

நாங்கள் “முர்தத்” மதம் மாறியவர்களாயிருந்தால் இவையெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் தொடர்ந்து பல்லாண்டுகளாக இவற்றை நிர்வகித்தும், நிகழ்வுகள் நடத்தியும் வருகிறோம். எங்களின் மார்க்க நடவடிக்கைகளை யஹூதீகள் – யூதர்கள் கண்டால் கூட எங்களை மதம் மாறியவர்கள் என்று கூற முன வரமாட்டார்கள்.

இவ் ஸ்தாபனங்கள் யாவும் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு – ட்றஸ்டுக்கே சட்டப்படி எழுதப்பட்டுள்ளன.

இவ் ஸ்தாபனங்களை உள்வாங்கிய எமது தாய் ஸ்தாபனமான “ட்றஸ்ட்” 2009ம் ஆண்டு 46ம் இலக்க நாடாளுமன்றச் சட்டத்தினால் கூட்டிணைக்கப்பட்டதாகும்.

நாங்களாகவே “முர்தத்” ஆகியிருந்தால் இவற்றில் ஒன்றும் எமக்குத் தேவையில்லை. இந்த நிகழ்வுகளும் தேவையில்லை.

நாங்களோ பரம்பரை பரம்பரையாக ஸுன்னீ முஸ்லிம்களாகவும், ஸூபீ முஸ்லிம்களாகவுமே வாழ்ந்து வருகிறோம்.

ஆயினும் நாம் கூறிய, இதுவரை கூறி வருகின்ற இஸ்லாம் கூறும் ஸூபிஸ தத்துவத்தை பேசியும், எழுதியும் வருகின்றோம். எங்களிடம் – எங்களின் அல்ஜாமிஅதுர் றப்பானிய்யாவில் கல்வி கற்று வெளியான றப்பானீ மெலவீமார் 78 பேர்கள் உள்ளார்கள்.

நாங்கள் உண்மையான பரம்பரை முஸ்லிம்கள். எமது ஞானக்கருத்தை புரிந்து கொள்ளாத உலமா சபையின் “பத்வா குழு” எனக்கும். என்னைச் சார்ந்தவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று சட்டவிரோதமாக, அவர்களுக்கு அவ்வாறு “பத்வா” வழங்க எந்த ஓர் அதிகாரமும் அரசால் வழங்கப்படாத நிலையில் “பத்வா” கொடுத்துவிட்டார்கள். அவர்களின் பொறாமை அவர்களின் அறிவையும், “அக்ல்” ஐயும் மிகைத்துவிட்டது. மறைத்துவிட்டது. செயலிழக்கச் செய்து விட்டது.

இவர்கள் செய்த இத்திரு விளையாடல் பிழை என்றும், சட்ட விரோதமானதென்றும் நான் பல CD கள் பேசியிருக்கிறேன். பல நூல்களும் எழுதியுமிருக்கிறேன்.

இவை போதாதென்று நான் பேசும் கொள்கை தொடர்பாக உங்களுக்கு விளக்கி வைக்கிறேன் என்னிடம் வாருங்கள் என்றும், சில நாட்கள் என்னுடன் தங்கியிருப்பதற்கான வசதிகள் செய்து தருகிறேன் என்றும் இவர்களை அழைத்துமிருக்கிறேன். ஒரு தடவையல்ல. பல தடவைகள் அழைத்துமிருக்கிறேன். இவர்கள் என்னிடம் வரவுமில்லை. எனது அழைப்புக்கு பதில் தரவுமில்லை.

இதனால் இவர்களுடனான சகல தொடர்புகளையும் துண்டித்து, இவர்களைப் பற்றி புகழ்ந்தோ, இகழ்ந்தோ எழுதுவதையும், பேசுவதையும் முற்றாக நிறுத்திவிட்டு நான் குற்றவாளியாயின் அல்லாஹ் என்னைத் தண்டிப்பான், அவர்கள் குற்றவாளிகளாயின் அவர்களைத் தண்டிப்பான் என்ற நம்பிக்கையோடு வல்ல அல்லாஹ்வின் மீது “தவக்குல்” வைத்து எனது பணியை நான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். مالك يوم الدين தீர்ப்பு நாளின் ராஜாவினதும், أحكم الحاكمين அனைத்து நீதிவான்களின் நீதிபதியுமான அல்லாஹ்வின் தீர்ப்பை நம்பினவனாக உள்ளேன்.

“காபிர்” நோற்கும் நோன்பும், “முர்தத்” நோற்கும் நோன்பும் நிறைவேறாது என்ற இஸ்லாமிய சட்டத்தை எழுதிய என் நெஞ்சில் உலமா சபை வழங்கிய “பத்வா”வை விளங்கியோ, விளங்காமலோ ஏற்றுக் கொண்ட அப்பாவி மக்களின் மனதில் ஏற்படுகின்ற கேள்விக்கு விடையாகவே மேற்கண்ட விளக்கம் எழுதியுள்ளேன்.

ஸூபிஸம், வஹ்ததுல் வுஜூத் தத்துவம் பேசிய நாங்கள் “முர்தத்” அல்ல என்றும், சட்டவிரோதமாக உலமாஉகளால் “முர்தத்” மதம் மாறியவர்களாக ஆக்கப்பட்டவர்கள் என்றும் பொது மக்களுக்கு விளக்கி வைப்பதற்காகவே மேற்கண்ட கருத்துக்களை எழுதினேன்.

அரச நீதி அன்று கேட்கும், தெய்வ நீதி நின்று கேட்கும் என்ற முன்னோர்களின் அமுதவாக்கில் எனக்கு நம்பிக்கை உண்டு. அல்லாஹ் أحكم الحاكمين நீதிவான்கள் அனைவரினதும் நீதிவான் என்ற தத்துவத்திலும் நம்பிக்கை உண்டு.

(இடைக்குறிப்பு நிறைவு பெற்றது)

ஒருவன் நோற்கும் நோன்பு நிறைவேறுவதாயின் நான்கு நிபந்தனைகள் உண்டு என்று எழுதிய நான் அவற்றில் முதல் நிபந்தனை அவன் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்று எழுதியிருந்தேன்.

இங்கு இரண்டாம் நிபந்தனையை பற்றி எழுதுகிறேன்.

اَلثَّانِيْ اَلتَّمْيِيْزُ، فَلَا يَصِحُّ مِنْ غَيْرِ مُمَيِّزٍ، فَإِنْ كَانَ مَجْنُوْنًا فَلَا يَصِحُّ صَوْمُهُ، وَإِنْ جُنَّ لَحْظَةً مِنْ نَهَارٍ، وَإِنْ كَانَ سَكْرَانَ أَوْ مُغْمًى عَلَيْهِ لَا يَصِحُّ صَوْمُهُمَا، إِذَا كَانَ عَدَمُ التَّمْيِيْزِ مُسْتَغْرِقًا لِجَمِيْعِ النَّهَارِ، أَمَّا إِذَا كَانَ فِى بَعْضِ النَّهَارِ فَقَطْ فَيَصِحُّ، وَيَكْفِيْ وُجُوْدُ التَّمْيِيْزِ وَلَوْ حُكْمًا، فَلَوْ نَوَى الصَّوْمَ قَبْلَ الْفَجْرِ وَنَامَ إِلَى الْغُرُوْبِ صَحَّ صَوْمُهُ، لِأَنَّهُ مَمَيِّزٌ حُكْمًا،
இரண்டாம் நிபந்தனை اَلتَّمْيِيْزُ “அத்தம்யீஸ்” ஆகும். இதன் விபரம் என்னவெனில் ஒருவன் தனது வலது கை எது? இடது கை எது? என்று அறியும் பருவம். இவள் தாய். இவர் தந்தை என்று அறியும் பருவம். இது பகல், இது இரவு என்று அறியும் பருவம் என்று கூறலாம்.

“தம்யீஸ்” என்ற அறபுச் சொல்லுக்கு “பிரித்தறிதல்” என்று பொருள் வரும். இந்நிலை ஆணாயினும், பெண்ணாயினும் எத்தனை வயதில் ஏற்படுமென்று ஆய்வு செய்தால் கூடியது ஏழு வயது என்று வைத்துக் கொள்ளலாம். எனினும் புத்திக் கூர்மையான பிள்ளைகளுக்கு இந்நிலை ஐந்து வயதிலும் ஏற்படலாம்.

சுமார் 50 வருடங்களுக்கு முன்னுள்ள பிள்ளைகளுக்கும், அதன் பின்னுள்ள பிள்ளைகளுக்கும் சிறிய வித்தியாசம் இருப்பதைக் காண முடிகிறது.

குறிப்பாக கைபேசி “மொபைல் போன்” அமுலுக்கு வந்த பின் இவர்களுக்கு சிறு வயதிலேயே பல்துறை அறிவு ஞானம் வந்துவிடுவதை அறியக்கூடியதாக உள்ளது. 75 வருடங்களுக்கு முன்பிருந்த ஒருவன் தனது 25 வயதில் அறிந்த வியடத்தை அதன் பின் பிறந்த ஒருவன் தனது 15 வயதிலேயே அறிந்து கொள்கிறான்.

தொடரும்….

RELATED ARTICLES

Most Popular

Recent Comments