Saturday, October 12, 2024
Homeஎழுத்தாக்கங்கள்باب الصيام - பாபுஸ் ஸியாம் - நோன்பின் பாடம்.

باب الصيام – பாபுஸ் ஸியாம் – நோன்பின் பாடம்.

தொடர்: 02

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

மேற்கண்ட தலைப்பில் தொடர் ஒன்றில் ஹனபீ, ஹன்பலீ மத்ஹபுகள் இரண்டிலும் நோன்பு நோற்பதற்கு “நிய்யத்” அவசியமில்லை என்று எழுதியிருந்தேன்.

இமாம் அபூ ஹனீபா, இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் இருவரும் ஹனபீ மத்ஹபினதும், ஹன்பலீ மத்ஹபினதும் தாபகர்களாவர். இவ்விருவருக்கும் إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ அமல்கள் – வணக்கங்கள் யாவும் “நிய்யத்”தைக் கொண்டேயாகும் என்ற பெருமானார் அவர்களின் “ஹதீது” அருள் மொழி கிடைக்கவில்லையா என்று ஒரு வாசக நேயர் கேட்க நினைத்தாராயின் அவருக்குப் பின்வருமாறு விளக்கம் கூறலாம்.

நான்கு மத்ஹபுகளின் தாபகர்கள் நால்வரும் ஏனைய இமாம்கள் போன்றவர்களல்லர். இவர்கள் நால்வரும் திருக்குர்ஆன் வசனங்களையும், நபீ மொழிகளையும் அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டு அவற்றை ஆய்வு செய்து “ஷரீஆ” சட்டங்கள் கூறும் திறமையுள்ளவர்களாவர். அதாவது “முஜ்தஹிது”களாவர். இஸ்லாமிய வரலாற்றில் இமாம்கள் என்று அறிமுகமான அனைவரும் இந் நான்கு பேர்களின் தரத்தையுடையவர்களல்லர். இவர்கள் இமாம்கள் மட்டுமல்ல.

இவர்கள் நால்வரும் திருக்குர்ஆன் வசனங்களையும், நபீ மொழிகளையும் அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டு சட்டங்கள் இயற்றியுள்ளார்கள் என்றால், هُمْ رِجَالٌ وَنَحْنُ رِجَالٌ அவர்களும் மனிதர்கள்தான், நாங்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கு சட்டங்கள் இயற்ற முடியுமென்றால் ஏன் எமக்கு இயற்ற முடியாதென்று வஹ்ஹாபீகள் கேட்பார்களாயின் இவர்கள் போன்ற بُلْهُ கள் உலகில் வேறெவர்களும் இருக்க முடியாது. ஆண்குறி இயக்கமில்லாதவன் திருமணம் செய்ய நினைப்பது அறியாமையா இல்லையா?

ஒவ்வொரு வேலைக்கும் அதற்குரிய தரம் வேண்டும். திறமை இருக்க வேண்டும். ஒருவர் திருக்குர்ஆன் வசனங்களையும், நபீ மொழிகளையும் அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டு அவற்றை ஆய்வு செய்து சட்டங்கள் இயற்றுவதாயின் அதற்கான திறமை அவரிடம் இருக்க வேண்டும். அவர் திறமையுள்ளவர் என்பதை அறிவுலகம் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். முஜ்தஹிதுகளுக்குரிய நிபந்தனைகளும், விதிகளும் அதிகம் உள்ளன. அவற்றை பொருத்தமான இன்னொரு இடத்தில் எழுதுவோம்.

நான்கு மத்ஹபுடைய இமாம்கள் நால்வரும் ஆய்வுத் திறமையுள்ளவர்களாயிருந்தார்கள் என்பதை வஹ்ஹாபிகள் தவிர உலகின் ஏனைய அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட பகிரங்க உண்மையாகும்.

நான்கு மத்ஹபுகளுடைய நான்கு இமாம்களில் எவரையும் பிரசித்தி பெற்ற, தரமான அறிஞர்களில் எவரும் குறை கண்டதற்கு வரலாறைக் காணவில்லை. வஹ்ஹாபீகளையும், அவர்களின் தலைவர்களையும் தவிர. அன்றைய வஹ்ஹாபீகளுக்கும், இன்றைய வஹ்ஹாபீகளுக்கும் வித்தியாசமுண்டு. இவர்கள் கடும் போக்குடையவர்களாவர். கொள்கையை எதிர்ப்பதுடன் ஆளையும் இல்லாமற் செய்வதற்கு தயங்காதவர்களாவர்.

எனவே, மத்ஹபுடைய நான்கு இமாம்களில் எவரையும் குறை காண்பது அறிவின்மையாகும். இவர்களின் தாற்பரியம் புரியாதவர்கள் மௌனிகளாயிருப்பது அவர்களின் ஈடேற்றத்திற்கு வழி செய்யும்.

إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ

“செயல்கள் – அமல்கள் யாவும் எண்ணங்களைக் கொண்டேயாகும்” என்ற நபீ மொழி குறித்த நான்கு இமாம்களுக்கும் தெரியாத ஒன்றல்ல. அவர்கள் அந்த நபீ மொழிக்கு விரிவுரை எழுதிய மேதைகளாவர். எனினும் அவர்கள் ஆய்வு செய்த வகையில் – அவர்கள் “இஜ்திஹாத்” செய்த வகையில் அவர்களுக்கு கிடைத்த முடிவை அவர்கள் கூறியுள்ளார்கள்.

மேற்கண்ட இந்த நபீ மொழியில் மொழியிலக்கணத்தோடு தொடர்புள்ள ஒரு சட்டம் உண்டு. அதை என்னால் முடிந்தவைர எழுதுகிறேன். மிக அவதானத்தோடு வாசிக்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கண்ட நபீ மொழிக்கு சட்டப்படி பொருள் சொல்வதாயின் “செயல்கள் எல்லாம் “நிய்யாத்” எண்ணங்களைக் கொண்டு” என்று மட்டுமே சொல்ல வேண்டும். இவ்வாறு சொல்வதால் பொருள் பூரணமாகவுமாட்டாது. விசயம் விளங்கவும் மாட்டாது. எண்ணங்களைக் கொண்டு என்று சொல்வதோடு நின்று கொள்ள வேண்டும். இந்த வசனத்தின் பொருள் பூரணமாவதாயின் மொழியிலக்கணச் சட்டத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

மொழியிலக்கண விளக்கம்:

அதாவது بِالنِّيَّاتِ என்று ஒரு சொல் குறித்த நபீ மொழியில் வந்துள்ளது. இதற்கு எண்ணங்களைக் கொண்டு என்று மட்டுமே பொருள் கூற வேண்டும். இவ்வாறு பொருள் சொல்வதால் பொருள் பூரணமாகவுமாட்டாது. விஷயம் விளங்கவும் மாட்டாது. எவ்வாறாயினும் நபீ மொழியின் பொருள் பூரணமடைய வேண்டும். நிறைவு பெற வேண்டும்.

இதற்கு என்ன வழியென்று ஆய்வு செய்தால் ஒரு வழியுண்டு. அதாவது بِالنِّيَّاتِ – “எண்ணங்களைக் கொண்டு” என்ற சொல்லில் ஒரு “பே” வந்துள்ளது. இது மொழியிலக்கண விதிப்படி تَصِحُّ அல்லது تَكْمُلُ என்ற, நபீ மொழியில் கூறப்படாத, அவ்வசனத்தில் மறைந்துள்ள ஒரு சொல்லுடன் தொடர்புள்ளதாக நாம் அமைக்க வேண்டும். அச் சொல் “முதஅல்லக்” مُتَعَلَّقٌ என்றும், நபீ மொழியில் வந்துள்ள “பே” என்ற எழுத்து முதஅல்லிக் – مُتَعَلِّقٌ என்றும் சொல்லப்படும். இவ்விரண்டையும் தொடர்பு படுத்தினால் மட்டுமே பொருள் பூரணமாகும். இதுவே இங்குள்ள மொழியிலக்கணச் சட்டமாகும்.

இச்சட்டத்தின் படி “பே” என்ற எழுத்து தொடர்பாகக் கூடிய “முதஅல்லக்” என்பது நான் மேலே கூறிய تَصِحُّ அல்லது تَكْمُلُ என்ற சொல்லாக இருக்க வேண்டும். இவ்விரு சொற்களில் எதை எடுத்துக் கொண்டாலும் அது பொருத்தமானதேயாகும்.

இந்த வசனத்தின் படி “பே” என்ற எழுத்து தொடர்பாகும் வசனம் تَصِحُّ என்று வைத்துக் கொண்டால் செயல்கள் யாவும் எண்ணங்களைக் கொண்டே சரியாகும் – நிறைவேறும் என்று கருத்து வரும். تَكْمُلُ என்று வைத்துக் கொண்டால் அவை பூரணம் பெறும் என்று கருத்து வரும். சட்டப்படி இரண்டு விதமாக அமைப்பதற்கும் சாத்தியம் உண்டு.

எனவே, இந்த நபீ மொழியை ஆய்வு செய்த ஹனபீ மத்ஹபின் தாபகர் இமாம் அபூ ஹனீபா அவர்களும், ஹன்பலீ மத்ஹபின் தாபகர் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களும் “பூரணமாகும்” என்ற பொருளுக்குரிய تَكْمُلُ என்ற சொல்லை பொருத்தமானதென்று விளங்கி செயல்கள் எல்லாம் எண்ணங்களைக் கொண்டு பூரணமாகுமேயன்றி அவை நிறைவேறுவதற்கு எண்ணங்கள் அவசியமில்லை என்று முடிவு செய்து எந்த வேலையாயினும் – அமலாயினும் அது நிறைவேறுவதற்கு “நிய்யத்” அவசியமில்லை என்று தீர்ப்புக் கூறினார்கள்.

நால்வரில் மாலிக் மத்ஹபின் தாபகர் இமாம் மாலிக் அவர்களும், ஷாபிஈ மத்ஹபின் தாபகர் இமாம் ஷாபிஈ அவர்களும் ஆய்வு செய்த வகையில் நிறைவேறும் என்ற பொருளுக்குரிய تَصِحُّ என்ற சொல் அல்லது تَنْعَقِدُ என்ற சொல் பொருத்தமானதென்று விளங்கி செயல்கள் எல்லாம் எண்ணங்களைக் கொண்டே நிறைவேறும் என்று முடிவு செய்து எந்த ஓர் அமலாயினும் அது நிறைவேறுவதாயின் “நிய்யத்” அவசியமென்று தீர்ப்புக் கூறினார்கள்.

எனவே இமாம்களின் ஆய்வு பிழையென்று சொல்வதை விட்டு அவர்களின் தீர்வை சரிகாண வேண்டும்.

ஒரு வணக்கம் நிறைவேறும் என்று சொல்வதற்கும், அது பூரணமாகும் என்று சொல்வதற்கும் வித்தியாசமுண்டு. நிறைவேறும் என்ற பொருளுக்கு تَصِحُّ என்ற சொல்லை அல்லது تَنْعَقِدُ என்ற சொல்லை “புகஹாஉ”கள் – சட்ட மேதைகள் பயன்படுத்துவார்கள். பூரமணாகும் என்ற பொருளுக்கு تَكْمُلُ என்ற சொல்லை பயன்படுத்துவார்கள்.

تَصِحُّ
நிறைவேறும் என்றால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற கருத்தும், تَكْمُلُ பூரணமாகுமென்றால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் குறையுள்ளதாயிருக்கும் என்ற கருத்தும் வரும். நிறைவேறாதென்ற கருத்து வராது.

மேற்கண்ட இவ் விபரங்களை அடிப்படையாகக் கொண்டே மத்ஹபுடைய நான்கு இமாம்களில் இருவர் எந்த அமலாயினும் – செயலாயினும் அதற்கு “நிய்யத்” எண்ணம் அவசியமென்றும், இன்னும் இருவர் அவசியமில்லை என்றும் கூறினார்கள். இமாம்களின் கூற்று சரியானதென்பதே எனது கருத்தாகும்.

எனினும், தொன்று தொட்டு ஏதேனும் ஒரு “மத்ஹப்”ஐ பின்பற்றிச் செயல்பட்டு வந்தவன் தனது சுய நலனுக்காக மட்டும் இன்னொரு மத்ஹபை பின்பற்றிவிட்டு மீண்டும் தானிருந்த முந்தின மத்ஹபுக்கு மாறுதல் கூடாது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

உதாரணமாக நெடுங்காலமாக “ஷாபிஈ மத்ஹப்” வழி நடந்து வந்த ஒருவன் “வுழூ” உடன் இருக்கும் போது, ஹனபீ மத்ஹபின்படி அந்நிய பெண்களைத் தொட்டால் “வுழூ” முறியாதென்ற அடிப்படையில் தனது மனைவியை முத்தம் கொடுத்து விட்டு “ஷாபிஈ” முறைப்படி அதே “வுழூ” உடன் தொழுவது போன்றாகும். இது தவறு. ஒருவன் நான்கு மத்ஹபுகளில் தான் விரும்புகின்ற மத்ஹபைப் பின்பற்றலாம். அது ஆகுமானதேயாகும். ஆயினும் சந்தர்ப்ப வாதியாக அவன் மாறுதல் கூடாது.

மேற்கண்ட “நிய்யத்” தொடர்பான நபீ மொழிக்குரிய மேலதிக விளக்கம் தேவையானோர் எம்முடன் கடிதம் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நோன்பின் “பர்ழ்” கடமை இரண்டு மட்டுமேயாகும். தொழுகைக்கே 19 “பர்ழ்”கள் வேண்டும்.

இரண்டில் ஒன்று: “நிய்யத்” வைத்தல். இது தொடர்பாக தொடர் ஒன்றில் சில குறிப்புகள் எழுதியுள்ளேன். எனினும் இத் தொடரில் சில குறிப்புகளை மட்டும் தருகிறேன்.

றமழான் மாதம் ஒவ்வோர் இரவும் “நிய்யத்” வைத்தல் அவசியம். தவறினால் நோன்பு நிறைவேறாது. அந்த நோன்பு “களா” திரும்ப நோற்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் மறதியும், மன முரண்டும் ஒன்றுதான்.

“நிய்யத்” வைப்பதற்கான நேரம் இரவு நேரமாகும். “ஷரீஆ” அடிப்படையில் இரவு என்பது “மக்ரிப்” தொழுகைக்கான நேரம் முதல் “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வரையாகும். இரு தொழுகைகளுக்குமிடைப்பட்ட எந்த நேரத்திலும் “நிய்யத்” வைக்க முடியும்.

“நிய்யத்” என்பது மனதால் நினைப்பதேயன்றி வாயால் மொழிவது மட்டுமல்ல. மனதால் நினைப்பது மட்டுமே அவசியம். வாயால் மொழிவது விரும்பத்தக்கது.

மனதால் நினைப்பதாயினும் பக்தியுடனும், உள்ளச்சத்துடனும் நினைக்க வேண்டும். அறபிகளின் ஆடம்பர குடும்பத்தைச் சேர்ந்த சில பெண்கள் டீவியைப் பார்த்துக் கொண்டு நோன்புக்கான “நிய்யத்” வைப்பது போல் வைப்பது கூடாது.

“நிய்யத்” என்பது “கல்பு” உள்ளத்தோடு சம்பந்தப்பட்டது. பின்வருமாறு மனதால் நினைத்தால் போதும். வாயால் மொழிவது அவசியமில்லை. ஆயினும் மனதால் நினைப்பதுடன் வாயால் மொழிவது நல்லதே.

نَوَيْتُ صَوْمَ غَدٍ عَنْ أَدَاءِ فَرْضِ رَمَضَانِ هَذِهِ السَّنَةِ للهِ تَعَالَى،
“இந்த வருடத்து றமழான் மாதத்தின் “பர்ழ்” ஆன நோன்பை “அதா”வாக நாளைக்குப் பிடிக்க “நிய்யத்” வைக்கிறேன்” என்று நினைத்தால் போதும்.

நோன்பின் மேற்கண்ட “நிய்யத்”தை நோன்பாளி பகலில் மொழிந்தால் நோன்பு முறிந்துவிடும் என்பது மூட நம்பிக்கையாகும். ஆயிரம் தரம் மொழிந்தாலும் நோன்பு முறியாது.

إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ
என்ற வசனத்திற்கு “முதஅல்லிக்” என்றும், “முதஅல்லக்” என்றும் ஒரு விளக்கம் எழுதினேன். இதேபோன்ற ஒரு விளக்கம் بسم الله الرحمن الرحيم என்ற வசனத்திற்கும் உண்டு. இதன் பொருள் சுருக்கமாக “அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் எனும் திரு நாமம் கொண்டு” என்பதாகும். இவ்வாறு பொருள் சொன்னால் பொருள் பூரணமாகாது. இப் பொருள் பூரணமாவதாயின் بِسْمِ என்ற சொல்லில் வந்துள்ள “பே” என்ற எழுத்துக்கு மேலே நான் சொன்னது போல் ஒரு “முதஅல்லக்” இருக்க வேண்டும். “அல்லாஹ் எனும் திரு நாமம் கொண்டு” என்ற பொருளை அந்த “முதஅல்லக்” என்பதுடன் தொடர்பு படுத்தினால் மட்டுமே பொருள் பூரணமாகும்.

உதாரணமாக அல்லாஹ் எனும் திரு நாமம் கொண்டு “ஆரம்பம் செய்கிறேன்” என்று அல்லது இடத்திற்குப் பொருத்தமாக ஒரு “முதஅல்லக்” என்பதை நாம் அமைக்க வேண்டும். ஆரம்பம் செய்கிறேன் என்று அமைப்பதாயின் أَبْدَأُ என்ற ஒரு சொல்லை நாம் அமைக்க வேண்டும். இவ்வாறு இடத்திற்குப் பொருத்தமான ஒரு சொல்லை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக குடிக்கும் போது أَشْرَبُ என்றும், உறங்கும் போது أَنَامُ என்றும், எழுதும் போது أَكْتُبُ என்றும் நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

மேலே நான் எழுதி வந்த மொழியிலக்கணச் சட்டம் எல்லோராலும் விளங்கிக் கொள்ளக் கூடியதல்ல. ஆகையால் படிப்பறிவும், அறபு மொழித் தொடர்பும் இல்லாதவர்கள் மேற்கண்ட இவ்விளக்கத்தை விஷயம் தெரிந்த ஒரு மௌலவீ மூலம் தெரிந்து கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

தொடரும்…

RELATED ARTICLES

Most Popular

Recent Comments