Saturday, October 12, 2024
Homeஎழுத்தாக்கங்கள்باب الصيام - பாபுஸ் ஸியாம் - நோன்பின் பாடம்.

باب الصيام – பாபுஸ் ஸியாம் – நோன்பின் பாடம்.

தொடர்: 04

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

கடந்த 03ம் தொடரில் நோன்பு கடமை என்பதற்கான ஆதாரங்களைக் கூறினேன். இத் தொடரில் நோன்போடு தொடர்புள்ள தத்துவங்களிற் சிலதை எழுதுகிறேன்.

சென்ற தொடரில்,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
“விசுவாசிகளே! உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் அது கடமையாக்கப்பட்டுள்ளது” என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு மேற்கண்டவாறு மேலோட்டமாகப் பொருள் எழுதினேன். தவிர அது தொடர்பான நுட்பங்களையோ, அதிலுள்ள தத்துவங்களையோ நான் எழுதவில்லை.

எவ்வளவுதான் விளக்கம் எழுதினாலும் அதோடு இறைஞான தத்துவம் ஒரு சொட்டேனும் கலக்கப்படவில்லையானால் அது உப்பும், உறைப்புமில்லாத உணவு போன்றே இருக்கும். ஸூபிஸ சமூகத்தவர்களுக்கு அது சுவையாகாது. ருசிக்கவுமாட்டாது. அவர்களின் ஞானப் பசியை தீர்க்கவுமாட்டாது.

ஏனெனில் ஸூபிஸ சமூகம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கல்பு – உள்ளத்துக்கு ருசியான, சுவையான, ஆன்மாவுக்கு சத்தான ஆன்மீக உணவுகள் உட்கொண்டு பழக்கப்பட்டவர்களாதலால் அவர்களுக்காக நோன்போடு தொடர்புள்ள சத்துணவுகளிற் சிலதை தருகிறேன்.

அல்லாஹ் மேற்கண்ட திரு வசனத்தில் நபீ பெருமானார் அவர்களின் “உம்மத்” சமூகத்தவர்களை விழித்து “உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு – முந்தின நபீமாரின் சமூகத்தவர்களுக்கு நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் அது கடமையாக்கப்பட்டுள்ளதென்று” கூறியுள்ளான்.

அவனுடைய இக் கூற்றின் மூலம் நபீ பெருமானார் அவர்களுக்கு முன்வாழ்ந்த ஏனைய சமூகத்தவர்களுக்கும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளதென்ற கருத்து விளங்கப்படுகின்றது. இதன்படி நோன்பு என்பது நபீ பெருமானார் அவர்களின் சமூகத்திற்கு மட்டும் “குஸூஸிய்யத்” விஷேடமானதல்ல என்பது தெளிவாகிறது. இந்நிலையில் நோன்பு என்ற வணக்கம் நபீ பெருமானாரின் சமூகத்துக்கு மட்டும் விஷேடமானதென்று சொல்லவும் முடியாது. கொள்ளவும் முடியாது. மகான்களிற் சிலர் நோன்பு என்பது நபீ பெருமானார் அவர்களின் சமூகத்துக்கு மட்டும் விஷேடமானதென்று சொல்வது பொய்யாகிவிடும்.

அல்லாஹ் كَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கும் அது கடமையாக்கப்பட்டது போல் என்று கூறாமலிருந்தால் இந்தப் பிரச்சினைக்கு இடமில்லாமற் போயிருக்கும். இந்தப் பிரச்சினையை ஏற்படுத்துவது திரு வசனத்தில் வந்துள்ள كَمَا كُتِبَ “கடமையாக்கப்பட்டது போல்” என்ற வசனமேயாகும்.

எனவே, இன்று உலகிலுள்ள அறிஞர்கள் சொல்வது போல் நோன்பு என்பது பெருமானார் அவர்களின் சமூகத்திற்கு மட்டும் விஷேடமானதென்று நிறுவுவதற்கும், உங்களுக்கு முன்னுள்ளவர்களுக்கு கடமையாக்கப்பட்டதென்ற அல்லாஹ்வின் கூற்றுக்கும் நாம் விளக்கம் காண வேண்டும். இதிலுள்ள சந்தேகம் நீங்கி தெளிவு காண வேண்டும்.

இந்தச் சிக்கல் நீங்கி தெளிவு கிடைக்க வேண்டுமாயின் திரு வசனத்தில் வந்துள்ள كَمَا – “கமா” என்பது தொடர்பாக நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

திரு வசனத்தில் வந்துள்ள كَمَا – “கமா” என்ற சொல்லுக்கு போன்று, போல என்று பொருள் வரும். இங்கு “தஷ்பீஹ்” ஒப்பாக்குதல் என்ற பொருளுக்கு இடமுண்டு. இது அது போன்று அல்லது அது இது போன்று என்று சொல்வது போன்று.

நாம் இங்கு இரண்டு விடயங்களை அறிந்து கொள்ள வேண்டும். அதாவது كَمَا – “கமா” என்ற சொல்லில் வந்துள்ள “க” என்ற எழுத்துதான் “போல” அல்லது “போன்று” என்ற பொருளைத் தருகிறது.

“க” என்ற இவ் எழுத்துக்கு مَثَلْ “மதல்”, مِثْلْ “மித்ல்” என்ற இரு சொற்களில் எச் சொல்லின் பொருளையும் கொடுக்கலாம். சாத்தியமுண்டு. مَثَلْ – “மதல்” என்றால் உதாரணம் என்று பொருள். مِثْلْ – “மித்ல்” என்றால் நிகர் என்று பொருள்.

ஒரு வஸ்த்து இன்னொரு வஸ்த்துக்கு நிகரானதென்று சொல்வதாயின் இரண்டு வஸ்த்துக்களும் தோற்றம் – உருவம் முதல் மற்றுமுள்ள எல்லா அம்சங்களிலும், தன்மைகளிலும் ஒன்று போல் இருக்க வேண்டும். எந்தவொரு அம்சத்திலும் எள்ளளவேனும் வித்தியாசம் இருத்தலாகாது. இருந்தால் நிகர் கூற முடியாது. இதனால்தான் அல்லாஹ்வுக்கு நிகர் இல்லையென்று நாம் சொல்கிறோம். இது مِثْلْ – “மித்ல்” என்று அறபியில் சொல்லப்படும். இதேபோல் كُفوٌ – “குப்வுன்”, نَظِيْرٌ “நளீருன்” என்ற சொற்களும் பயன்படுத்தப்படும்.

ஒரு வஸ்த்து இன்னொரு வஸ்த்துக்கு அதன் தோற்றம் உள்ளிட்ட அதன் தன்மைகள், அம்சங்கள் அனைத்திலும் ஒன்றுபோல் இல்லாது போனாலும் அதன் அம்சங்கள், தன்மைகளில் ஏதாவதோர் அம்சத்திலாவது மட்டும் ஒன்றுபோல் இருந்தால் அது مَثَلْ – “மதல்” என்று அறபியில் சொல்லப்படும். இதனால் தான் அல்லாஹ்வுக்கு “மதல்” உதாரணம் உண்டு என்று நாம் சொல்கிறோம்.

அல்லாஹ்வுக்கு ஒரு நாட்டின் ஜனாதிபதி, மன்னர் போன்றோரை உதாரணமாகக் கூறலாம். நிகராக கூற முடியாது. ஏனெனில் அல்லாஹ்வின் எல்லா அம்சங்களிலும், தன்மைகளிலும் அவனுக்கு நிகர் இருக்க முடியாது. இருப்பதாக நினைப்பதே “ஷிர்க்” இணை வைத்தலாகிவிடும்.

மேற்கண்ட விளங்க்கங்கள் மூலம் “மித்ல்” என்பதற்கும், “மதல்” என்பதற்கும் இடையிலுள்ள வேறுபாட்டைத் தெரிந்த கொண்ட நாம் அல்லாஹ்வின் மேற்கண்ட திரு வசனத்தில் வந்துள்ள كَمَا كُتِبَ “கமா குதிப” என்ற வசனம் நிகரைக் குறிக்குமா? உதாரணத்தைக் குறிக்குமா? என்பதை தெரிந்த கொள்ள வேண்டும்.

குறித்த திரு வசனம் நிகரைக் குறிக்குமென்று வைத்துக் கொண்டால் முன்னோர்களுக்கு கடமையாக்கப்பட்ட நோன்பும், பெருமானார் அவர்களின் சமூகத்துக்கு கடமையாக்கப்பட்ட நோன்பும் எல்லா அம்சங்களிலும், தன்மைகளிலும் ஒன்று போன்றதேயாகும் என்று முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு முடிவு செய்தால் பெருமானாரின் சமூகத்துக்கு கடமையாக்கப்பட்ட நோன்பு அவர்களுக்கு விஷேடமானதென்று கூற முடியாமற் போகும். அவர்களின் நோன்பும், இவர்களின் நோன்பும் ஒரே மாதிரியானவை என்ற முடிவு வந்துவிடும். இந்த முடிவு பெருமானார் அவர்களின் சமூகத்தக்கு சிறப்பைப் பெற்றுத் தராது.

எனவே, திரு வசனத்தில் கூறப்பட்ட كَمَا – “கமா” என்பது உதாரணத்தைக் குறிக்கும் مَثَلْ – “மதல்” என்று விளங்க வேண்டுமேயன்றி நிகரைக் குறிக்கும் مِثْلْ “மித்ல்” என்று விளங்கக் கூடாது. இவ்வாறு விளங்கினால் பெருமானாரின் பெருமை உணரப்படாது.

நபீ பெருமானார் அவர்களின் சமூகத்துக்கு “றமழான்” மாதத்தில் மட்டுமே நோன்பு கடமையாக்கப்பட்டது. முந்தின நபீமாரின் சமூகத்திற்கு நோன்பு இன்ன மாதமென்று குறிக்கப்படாமல் பல மாதங்களிலும் கடமையாக்கப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் இரு சமூகத்தவர்களின் நோன்புக்கும் இடையில் வேறுபாடு உண்டு. வித்தியாசப்படுகின்ற அம்சங்களில் இதுவும் ஒன்று.

றமழான் மாத பிறை கண்டதிலிருந்து மறு பிறையான ஷவ்வால் மாதத்துக்கான பிறை காணும் வரை முப்பது நாட்கள் அல்லது இருபத்தொன்பது நாட்கள் நோன்பு கடமை என்ற கட்டுப்பாடு பெருமானார் அவர்களின் சமூகத்திற்கு மட்டுமுள்ளதேயன்றி முந்தின சமூகத்திற்கு நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தாலும் கூட அவர்களின் நோன்பின் எண்ணிக்கையில் வித்தியாசமுண்டு. வித்தியாசப்படுகின்ற அம்சங்களில் இதுவும் ஒன்று.

பெருமானார் அவர்களின் சமூகத்தவர்களுக்கு நோன்பு கடமையாக்கப்பட்ட நேரம் பகலில் “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் ஆரம்பித்ததிலிருந்து “மக்ரிப்” தொழுகைக்கான நேரம் ஆரம்பிக்கும் வரையான நேரமாகும். முந்தின நபீமாரின் சமூகத்தவர்களுக்கு நோன்பின் நேரம் மாறுபட்டதாக இருந்துள்ளது. வித்தியாசப்படுகின்ற அம்சங்களில் இதுவும் ஒன்று.

பெருமானார் அவர்களின் சமூகத்தவர்களின் நோன்பு எக்காரணங்களால் முறிந்துவிடுமென்று கூறப்பட்டுள்ளதோ அக்காரணங்களே முந்தின நபீமாரின் சமூகத்தவர்களின் நோன்பு முறிவதற்கும் காரணங்களாகும் என்பதிலும் வித்தியாசமுண்டு. வித்தியாசப்படுகின்ற அம்சங்களிலும் இதுவும் ஒன்று.

எனவே, “ஸியாம்” நோன்பு என்ற பெயரில் மட்டும்தான் பெருமானாருடைய சமூகத்தவர்களின் நோன்பும், முந்தின நபீமாரின் சமூகத்தவர்களின் நோன்பும் ஒன்று பொலிருந்ததேயன்றி முழு அம்சங்களிலும் ஒன்று போலிருக்கவில்லை. ஆகையால் மேற்கண்ட விபரங்கள் மூலம் திரு வசனத்தில் வந்துள்ள كَمَا “கமா” என்பது உதாரணமேயன்றி அது நிகரல்ல என்ற உண்மையும், பெருமானார் அவர்களின் சமூகத்தவர்களின் நோன்பு அவர்களுக்கும், அவர்களின் சமூகத்து மக்களுக்கும் விஷேடமானதென்பதும் தெளிவாகிறது. நிரூபணமாகின்றது.

அல்லாஹ் குறித்த திரு வசனத்தில் உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல் என்ற வசனத்தை வேறென்ன காரணத்துக்காக கூறினான் என்பதற்கான விளக்கத்தை அடுத்த தொடரில் காணலாம்.

தொடரும்….

RELATED ARTICLES

Most Popular

Recent Comments