Sunday, October 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்باب الصيام - பாபுஸ் ஸியாம் - நோன்பின் பாடம்.

باب الصيام – பாபுஸ் ஸியாம் – நோன்பின் பாடம்.

தொடர்: 05

باب الصيام – பாபுஸ் ஸியாம்
நோன்பின் பாடம்.

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

(உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு நோன்பு கடமையாக்கப்பட்டது போல்) என்ற அல்லாஹ்வின் பேச்சு இரக்கத்தின் வெளிப்பாடேயாகும்.

தொடர் 04ல் كَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِكُمْ “உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல்” என்ற திரு வசனத்துக்கு விளக்கம் எழுதியிருந்தேன்.

நான் எழுதிய விளக்கத்தின் மூலம் முன் வாழ்ந்த சமூகத்தின் மீது கடமையாக்கப்பட்ட நோன்பும், எம் பெருமானார் கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் சமூகத்தின் மீது கடமையாக்கப்பட்ட நோன்பும் நோன்பு என்ற பெயரில் மட்டும்தான் ஒன்று போன்றதேயன்றி எதார்த்தத்தில் ஒன்றல்ல. முன்னோர்களின் நோன்பை விட பெருமானார் அவர்களின் சமூகத்திற்கு கடமையாக்கப்பட்ட நோன்பு எல்லா அம்சங்களிலும், விஷேடங்களிலும் அவர்களின் நோன்பை விடச் சிறந்ததாகும் என்ற உண்மை தெளிவாகியிருக்குமென்று நான் நினைக்கிறேன். அல்ஹம்து லில்லாஹ்!

“முன் வாழ்ந்தவர்களுக்கு கடமையாக்கப்பட்டது போல்” என்ற அல்லாஹ்வின் பேச்சுக்கு இன்னுமோர் அற்புதமான விளக்கம் உண்டு. அதை இங்கு சுட்டிக் காட்டுகிறேன்.

முதலில் ஓர் உதாரணம் கூறி விளக்கி வைக்கிறேன். ஒரு கடைக்கார முதலாளி ஒருவனைத் தனது கடையில் வேலைக்கு அமர்த்து முன் அவனை அழைத்து அவனுக்குரிய கடமைகள் பற்றி விளக்கி வைத்தான்.

அவ்வேளை அவ்வேலையாளின் மனதில் இத்தனை கடமைகளையும் சுமக்கத் தன்னால் முடியுமா? என்ற சிந்தனை ஏற்பட்டு அவனின் மனம் சோர்ந்து போனதை அவன் முகக் குறி மூலம் புரிந்து கொண்ட முதலாளி அவனிடம் உனக்கு முன் இங்கு வேலை செய்த அனைவரும் நான் கூறிய கடமைகள் யாவையும் ஏற்றுச் செயல்பட்டவர்கள்தான் என்று கூறினான். அப்போது அந்த வேலைக்காரனின் மனம் மாறியது.

நான் கூறவுள்ள விளக்கத்தை இலகுவாக விளங்குவதற்கு மேற்கண்ட உதாரணம் வழி செய்யுமென்று நம்புகிறேன்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ
“விசுவாசிகளே! உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது” என்று மட்டும் அல்லாஹ் சொல்லியிருந்தால் அவனின் அடியார்களில் அதைப் பெரும் சுமையாக நினைத்து மனமுடைந்து போவோரும் இருப்பர் என்பதை அறிந்த அல்லாஹ் அதன் பின்னால் உங்களுக்கு முன்னுள்ளவர்களுக்கும் இவ்வாறான கடமை வழங்கப்பட்டே இருந்தது” என்ற வசனம் மூலம் அத்தகையோருக்கு மன நிறைவையும், நிம்மதியையும் வழங்குவதற்காகவும், குறித்த நோன்பு என்ற வணக்கத்தின் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காகவுமே அவ்வாறு கூறினான்.

இவ்வாறு அவன் கூறியது அவனுக்கு தனது அடியார்கள் மீதுள்ள பெருங்கருணையை வெளிப்படுத்துவதற்கும், அல்லாஹ்வின் அடியார்கள் அவன் மீது நல்லெண்ணம் கொள்ள வேண்டுமென்பதற்குமேயாகும்.

நோன்பு தொடர்பாக எழுத வேண்டிய இன்னும் சில அம்சங்கள் உள்ளன. அவற்றையும் இங்கு சுட்டிக் காட்டுகிறேன்.

قال الله تعالى فى الحديث القدسيّ ‘ اَلصَّوْمُ لِيْ وَأَنَا أَجْزِيْ بِهِ ‘
அல்லாஹ் ஹதீதுக் குத்ஸீயில் பின்வருமாறு கூறியுள்ளான். “நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்” என்று.

இந்த “ஹதீதுக்குத்ஸீ” சில கேள்விகளை எழுப்புகிறது. அவற்றில் ஒன்று என்னவெனில், நோன்பு போன்ற கடமையான வணக்கங்கள்தான் தொழுகை, சகாத், ஹஜ் முதலானவைகளுமாகும். இவையாவும் அல்லாஹ்வுக்குரியனவே தவிர வேறு எவருக்கும் உரியவையல்ல. இந்நிலையில் நோன்பை மட்டும் அல்லாஹ் அவ்வாறு குறிப்பட்டதேன்? இது ஒரு கேள்வி. இன்னுமொரு கேள்வி என்னவெனில் எந்த வணக்கமாயினும் அதை எவர் செய்தாலும் அதற்கு கூலி கொடுப்பவன் அல்லாஹ்வேயன்றி வேறு யாருமில்லை. இந்நிலையில் அல்லாஹ் நோன்பை மட்டும் குறிப்பிட்டு அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்று கூறியதேன்? இது இன்னுமொரு கேள்வி.

இவ்விரு கேள்விகளுக்கும் விரிவாக விளக்கம் சொல்வதாயின் அதிகம் எழுத வேண்டி வரும். எனினும் எவரும் புரிந்து கொள்ளும் வகையில் சுருக்கமாக எழுதுகிறேன்.

அல்லாஹ் اَلصَّوْمُ لِيْ நோன்பு எனக்குரியது என்றுதான் சொன்னானேயன்றி اَلزَّكَاةُ لِيْ “சகாத்” எனக்குரியது என்றோ, اَلْحَجُّ لِيْ “ஹஜ்” எனக்குரியது என்றோ, اَلصَّلَاةُ لِيْ “தொழுகை” எனக்குரியதென்றோ சொல்லவில்லை. இதிலுள்ள தத்துவம் என்ன?

அல்லாஹ் “சகாத்” கொடுப்பதில்லை. அதனால் அது எனக்குரியதென்று சொல்லவில்லை. அவன் “ஹஜ்” செய்வதில்லை. அதனால் அவ்வாறு சொல்லவில்லை. அல்லாஹ் தொழுவதில்லை. அதனால் அவ்வாறு அவன் சொல்லவில்லை.

ஆயினுமவன் உண்பதுமில்லை, குடிப்பதுமில்லை. அவன் காலமெல்லாம் நோன்பாளிதான். அவனின் நோன்பு صَوْمُ الْوِصَالِ தொடரான நோன்பு. நோன்பு திறக்காமலும், “ஸஹர்” செய்யாமலும் நோற்கின்ற நோன்பு “ஸவ்முல் விஸால்” என்று சொல்லப்படும். இவ்வாறு நோன்பு நோற்பது அல்லது நோன்பு திறக்காமல் தொடராக நோன்பு நோற்பது பெருமானாரின் சமூகத்தவர்களுக்கு – முஸ்லிம்களுக்கு கூடாது. ஆயினும் நபீ பெருமானார் அவர்களுக்கு மட்டும் அது கூடும்.

ஒரு சமயம் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தோழர்களில் சிலரை அழைத்து நீங்கள் صَوْمُ الْوِصَالْ தொடராக நோன்பு நோற்பதாக நான் அறிகிறேன். இது தவறு. நீங்கள் நோன்பு நோற்க வேண்டும். அதைத் திறக்கவும் வேண்டும். நோற்ற நோன்பை திறக்காமலும், ஸஹர் செய்யாமலும் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டாம் என்று அருளிய போது தோழர்களில் ஒருவர் அல்லாஹ்வின் திருத்தூதரே! நீங்கள் தொடராக நோன்பு நோற்கிறீர்களே என்று கேட்டார். அதற்கு நபீகளார் சுருக்கமானதும், தத்துவமானதுமான ஒரே பதில் கூறினார்கள்.

لَسْتُ مِثْلَكُمْ، لِيْ مُطْعِمٌ يُطْعِمُنِيْ وَسَاقٍ يَسْقِيْنِيْ
“நான் உங்கள் போன்றவனல்லன். எனக்கு உணவு தருபவன் ஒருவன் இருக்கிறான். அவன் உணவு தருவான். எனக்கு குடிக்கத் தருபவன் ஒருவன் இருக்கிறான். அவன் குடிக்கத்தருகிறான்” என்று பதில் கூற கேட்ட தோழர் மௌனியாகிவிட்டார்.

பெருமானார் அவர்கள் தங்களின் தோழருக்கு கொடுத்த பதில் அவரை மௌனியாக்கிவிட்டது. அவர் மீண்டும் தொடரவில்லை.

பெருமானார் அவர்களின் இப்பேச்சுக்கு வாகசர் ஒருவர் திருப்திப்படுமளவு அவருக்கு விளக்கம் சொல்வதாயின் பல பக்கங்கள் எழுத வேண்டும். எனினும் என்னால் முடிந்த வரை சுருக்கி எழுதுகிறேன். யாருக்காவது இது தொடர்பான விளக்கமான, தெளிவான விபரம் தேவையாயின் நான் பேசிய CD களை கேட்டு அறிந்து கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கண்ட நபீ மொழியில் பெருமானார் அவர்கள் لَسْتُ مِثْلَكُمْ நான் உங்கள் போன்றவனல்லன் என்று தெளிவான வசனத்திலேதான் கூறியுள்ளார்கள்.

ஆனால் அல்லாஹ் நபீகளார் அவர்களுக்கு
قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ
நபீயே! நான் உங்கள் போன்ற மனிதன் என்று மக்களுக்கு நீங்கள் சொல்லுங்கள் என்று கூறியுள்ளான். அல்லாஹ் இவ்வாறு கூறியிருக்கும் நிலையில் நபீ பெருமானார் அவர்கள் “நான் உங்கள் போன்றவனல்லன்” என்று கூறியது வெளிப்பார்வையில் திருக்குர்ஆனுக்கு முரணான பேச்சுப் போன்று தெரிகிறது. விளக்கம் பின்னால் வரும்.

அல்லாஹ் اَلصَّوْمُ لِيْ என்று நோன்பை மட்டும் குறிப்பிட்டதற்கான காரணம் அவன் உண்ணாதவனாயும், பருகாதவனாயும் இருப்பதேயாகும். இவ் அடிப்படையில் மட்டுமே அவ்வாறு சொல்லியுள்ளான் என்று புரிந்து கொள்ள வேண்டும். நாம் நோன்பு நோற்பது போன்று அவனும் நோற்கின்றான் என்ற கருத்தில் அல்லாஹ் அவ்வாறு சொல்லவில்லை.

பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “நான் உங்கள் போன்ற மனிதனென்று” அவர்களாக சொல்லவில்லை. அவ்வாறு சொல்லுமாறு சொல்லிக் கொடுத்தவன் அல்லாஹ்தான் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வசனத்தின் தொடக்கத்தில் قُلْ – “குல்” என்று ஒரு சொல் வந்துள்ளது. இதன் பொருள் “நீங்கள் சொல்லுங்கள்” என்பதாகும். இதன் எதிர்மறைதான் நான் சொல்லமாட்டேன் என்பதாகும்.

பெருமானார் அவர்கள் தங்களை “அல்லாஹ்” என்று சொன்னதற்குப் பின்வரும் ஹதீது ஆதாரமாக உள்ளது.

عَنْ جَابِرٍ، قَالَ: لَمَّا كَانَ يَوْمُ غَزْوَةِ الطَّائِفِ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ مَلِيًّا مِنَ النَّهَارِ، فَقَالَ لَهُ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: يَا رَسُولَ اللهِ لَقَدْ طَالَتْ مُنَاجَاتُكَ عَلِيًّا مُنْذُ الْيَوْمِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَنَا انْتَجَيْتُهُ وَلَكِنَّ اللهَ انْتَجَاهُ»

ஹதீதின் சுருக்கம்:

“தாயிப்” யுத்தம் நடைபெறவிருந்த அன்று பெருமானார் அவர்களும், தோழர்களும் ஓர் இடத்தில் கூடியிருந்தார்கள். அப்போது நபீ பெருமானார் அவர்கள் அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களை மட்டும் அழைத்துக் கொண்டு சற்றுத் தூரம் சென்று அன்று பகல் முழுவதும் பேசிக் கொண்டிருந்தார்கள். இதை அவதானித்துக் கொண்டிருந்த ஸெய்யிதுனா அபூ பக்ர் ஸித்தீக் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வின் றஸூலே! இன்று நீங்கள் அலீ அவர்களுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தீர்கள் என்றார்கள். அதற்கு நபீ பெருமான் அவர்கள் அலீயோடு நான் பேசவில்லை. அல்லாஹ்தான் பேசினான் என்று கூறினார்கள்.

ஆதாரம்: அல்முஃஜமுல் கபீர் லித்தபறானீ.

மேற்கண்ட நபீ மொழி பெருமானார் அவர்கள் தங்களை அல்லாஹ் என்று சொன்னார்கள் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாகும்.

அபூ பக்ர் பெருமானாரிடம் நீங்கள் இன்று அலீ அவர்களுடன் முழு நாளும் பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று சொன்ன போது مَا أَنَا اِنْتَجَيْتُهُ அலீயோடு நான் பேசவில்லை என்று கூறியதோடு பேச்சை நிறுத்தியிருக்கலாம். அவ்வாறு நிறுத்தியிருந்தால் அது விளக்கமற்ற பேச்சாக அமைந்திருக்கும். எனினும் நபீகளார் தங்களின் மூடலான முந்தின வசனத்தை وَلَكِنَّ اللهَ اِنْتَجَاهُ எனினும் அல்லாஹ்தான் அலீயோடு பேசினான் என்ற வசனத்தைக் கூறி தாங்கள் அல்லாஹ் என்று கூறியது ஏனெனில் மார்க்க அறிஞர்களில் வரண்டு போன மூளையுடையோர் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கேயாகும்.

தொடரும்…

RELATED ARTICLES

Most Popular

Recent Comments