தொடர்: 06
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
நபீ பெருமான் அவர்கள் தோழர்களிடம் صَوْمُ الْوِصَالْ நோற்ற நோன்பை திறக்காமலும், அடுத்த நோன்புக்காக “ஸஹர்” செய்யாமலும் தொடராக நோன்பு நோற்க வேண்டாம் என்றும் கூறிய போது தோழர்களிற் சிலர் அல்லது ஒருவர் அல்லாஹ்வின் றஸூலே! நீங்கள் அவ்வாறு தொடராக நோன்பு நோற்கிறீர்களே! என்று கேட்டதற்கு
لَسْتُ مِثْلَكُمْ، لِيْ مُطْعِمٌ يُطْعِمُنِيْ وَسَاقٍ يَسْقِيْنِيْ
நான் உங்கள் போன்றவனல்லன், எனக்கு உணவு தருபவன் ஒருவன் இருக்கிறான். அவன் எனக்கு உணவு தருவான், எனக்கு குடிக்கத் தருபவன் ஒருவன் இருக்கிறான், அவன் எனக்கு குடிக்கத் தருவான் என்று பதில் கூறினார்கள்.
நான் உங்கள் போன்றவனல்லன் என்று ஹதீதில் வந்துள்ள வசனமும்,
قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ
“நான் உங்கள் போன்ற மனிதன் என்று நீங்கள் சொல்லுங்கள்” என்று திருக்குர்ஆனில் வந்துள்ள வசனமும் ஒன்றுக்கு மற்றது முரண்படுவதுபோல் உள்ளது.
இங்கு முரண்பாட்டுக்கு இடமே இல்லை. இரண்டுக்கும் விளக்கம் உண்டு.
திரு வசனத்தில் “குல்” முஹம்மதே நீங்கள் சொல்லுங்கள்! என்றுதான் அல்லாஹ் சொல்லியுள்ளானேயன்றி பெருமானார் அவர்கள் மற்றவர்கள் போன்ற மனிதர் என்று அவன் சொல்லவில்லை. அவன் அவ்வாறு சொல்வதாயின் “குல்” சொல்லுங்கள் என்று சொல்லாமல் إِنَّمَا مُحَمَّدٌ بَشَرٌ مِثْلُكُمْ முஹம்மத் அவர்கள் உங்கள் போன்ற மனிதன் என்று அவனே சொல்லியிருப்பான்.
இதன் மூலம் பெருமானார் அவர்கள் மற்றவர் போன்ற மனிதன் என்று அல்லாஹ் சொல்ல விரும்பாததால் உங்களுக்குத் தேவையாயின் நீங்களே அவ்வாறு சொல்லுங்கள் என்ற பாணியில் கூறியுள்ளான்.
இக்கருத்தை ஓர் உதாரணம் மூலம் தெளிவாக்குவதாயின் பின்வருமாறு கூறலாம்.
“குத்புஸ்ஸமான்” எனும் மகான் ஒருவருக்கு ஒரு “முரீத்” சிஷ்யன் இருந்தார். அந்த சிஷ்யன் “விலாயத்” எனும் ஒலித்தனம் பெற்றவர். மக்கள் அவரை கண்ணியம் செய்து குத்பு, குத்பு என்று புகழ்ந்து வந்தார்கள். ஒரு சமயம் அந்த முரீது தனது ஷெய்கு குருவிடம் வந்து மக்கள் என்னை “குத்பு” என்று அழைக்கிறார்கள், புகழ்கிறார்கள், கண்ணியம் செய்கிறார்கள். இவ்வாறு செய்வதை நான் விரும்பவில்லை. ஆகையால் குரு மகானாகிய நீங்கள் மக்களிடம் என்னை குறித்து அவர் உங்கள் போல் மனிதன்தான் என்றும், அவரைப் பெரிதாக கண்ணியப்படுத்த தேவையில்லை என்றும் சொன்னால் உங்கள் சொல்லை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு குரு மகான் அவர்கள் “விலாயத்” ஒலித்தனத்தின் தரத்தை அடைந்துள்ள தனது சிஷ்யனை அவ்வாறு சொல்ல விரும்பாத மகான் தனது சிஷ்யனிடம் அவ்வாறு சொல்ல வேண்டுமாயின் நீங்களே அவ்வாறு சொல்லுங்கள், நான் சொல்லவில்லை என்று சொன்னார். இக்குரு மகான் சொன்னது போன்றதே அல்லாஹ் தனது ஹபீப் பெருமானார் அவர்களுக்கு قل إنما أنا بشرٌ مثلكم நான் உங்கள் போன்ற மனிதன் என்று நீங்களே சொல்லுங்கள் என்று சொன்ன வசனமாகும் என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். மேற்கண்டவாறும் ஒரு விளக்கம் கூறலாம். பின்னால் வருமாறு இன்னொரு விளக்கமும் சொல்லலாம்.
அதாவது நான் உங்கள் போன்ற மனிதன்தான் என்று சொல்லுமாறு அல்லாஹ் ஏன் அவர்களைப் பணித்தான் என்றால், நபீ பெருமானார் அவர்களின் அபார சக்தியையும், “முஃஜிஸத்” அற்புதத்தையும், உயர் பண்பையும் கண்ட மக்க நகர் வாசிகளிற் சிலர் இவர் கடவுளாக அல்லது “மலக்” அமரராக, அல்லது “ஜின்” ஆக, அல்லது சூனியக்காரனாக. அல்லது மந்திர வாதியாக இருப்பாரோ என்று தமக்கிடையே பேசிக் கொண்டார்கள். அவ்வாறு நினைத்தார்கள்.
அவர்களின் சந்தேகங்களை நீக்கி, பெருமானாரின் எதார்த்தத்தை சொல்வதற்காகவே அவ்வாறு கூறுமாறு அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ
நான் உங்கள் போன்ற மனிதன் என்றால் என்ன விடயத்தில் என்ற விபரம் திருவசனத்தில் கூறப்படவில்லை. ஒருவன் பேசும் போது முஸ்தபா என்பவன் முசம்மில் போன்றவன் என்று சொன்னால் என்ன விடயத்தில் என்று கூற வேண்டும். எந்த ஒரு குறிப்புமின்றி பொதுவாக முஸ்தபா முசம்மில் போன்றவன் என்று கூறினால் எல்லா விடயங்களிலும் என்ற கருத்து தெளிவாகச் சொல்லப்படாமலேயே வந்து விடும். இதில் நன்மை, தீமையான எல்லா அம்சங்களும் அடங்கும். ஆகையால் “நான் உங்கள் போன்ற மனிதன்” என்று திரு வசனம் தருகின்ற பொருள் நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் விடயத்தில் பொருத்தமற்றதாகும்.
ஆகையால் எல்லாத் தன்மைகளிலும் என்று பொருள் கொண்டு பெருமானார் அவர்களைச் சாதாரண மனிதனாகப் படம் பிடித்துக் காட்டும் வஹ்ஹாபீகளின் நரகத்திற்குச் சென்றுவிடாமல் நல்ல பண்புகளில் மட்டும் என்று பொருள் கொண்டு பெருமானார் அவர்களுக்கு கண்ணியம் கொடுக்கும் ஸுன்னீகளின் சுவர்க்கம் செல்ல வேண்டும். நான் இப்போது மேலே சொன்ன கருத்தும் ஒரு விளக்கம்தான்.
இதற்கு إنما أنا بشٌر مثلكم நன் உங்கள் போன்ற மனிதன்தான் என்பதற்கு இன்னுமொரு விளக்கம் உண்டு. அதென்னவெனில் நான் உங்கள் போன்ற மனிதன் என்பது தோற்றத்திலும், படை கோலத்திலும் மட்டும்தான் என்று பொருள் கொள்ளவேண்டும். அதாவது اَلْمِثْلِيَّةُ فِى الشَّكْلِ وَالصُّوْرَةِ உங்கள் போன்ற மனிதன் என்ற வசனத்தில் مِثْلُكُمْ “உங்கள் போன்ற” என்ற சொல்லில் சொல்லப்பட்ட “போன்ற” என்ற சொல் தோற்றத்தில் மனிதன் என்ற கருத்துக்கு பொருத்தமானதாகும்.
இவ்வாறு புரிந்து கொண்டால் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தோற்றத்தில் – உருவத்தில் மனிதன் என்ற கருத்து வந்து விடும்.
இத்திரு வசனத்தில் வஹ்ஹாபிஸம் தந்திரமாகத் தலை நுழைப்பது ஆய்வாளர்களுக்கு மறைவானதல்ல. எனினும் சுட்டிக் காட்டுகிறேன். முஹம்மத் அவர்கள் உங்கள் போன்ற மனிதன் என்றுதான் அல்லாஹ் சொல்லியுள்ளானேயன்றி உங்கள் போல் சாதாரண மனிதன்தான் என்று கூறவில்லை. “சாதாரண” என்ற பொருளுக்குரிய அறபுச் சொல் கூட திரு வசனத்தில் இடம்பெறவில்லை. எனினும் வஹ்ஹாபீகள் பெருமானார் அவர்களின் கண்ணியத்தைக் குறைப்பதற்காக “சாதாரண” என்ற ஒரு சொல்லை திருவசனத்தின் தமிழாக்கத்தில் சேர்த்துக் கொண்டார்கள். வஹ்ஹாபீகள் தமது சொந்தக் கடைச் சரக்கில் கலப்படம் செய்வது போல் அல்லாஹ்வின் திரு வசனத்திலும் கலப்படம் செய்து விட்டார்கள். வஹ்ஹாபீகள் கண்மணி நாயகம் அவர்களை தரக் குறைவாகப் படம் பிடித்துக் காட்டுவதற்கு கையாண்ட சூட்சிதான் “சாதாரண” என்ற கிருமி நாசினியாகும். இருட்டடிப்பாகும். வஹ்ஹாபிஸம் எந்த நாட்டில் இருக்கிறதோ அந்த நாடும் முன்னேறாது. எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீடும் முன்னேறாது.
இச்சதி எது போன்றதென்றால் ஒரு நல்ல மனிதனுக்கு கெட்டவன் ஒருவனை ஒப்பிட்டுக் காட்டுவது போன்றாகும்.
உதாரணமாக ஒரு நல்ல மனிதனிடம் أَنْتَ مِثْلُ زَهْرَانْ நீங்கள் ஸஹ்றான் போன்று என்று சொல்வது போன்றதாகும்.
ஒருவனை மனிதன் என்று சொல்வதற்கும், சாதாரண மனிதன் என்பதற்கும் வித்தியாசம் உண்டு. படிப்பறிவு, பொது அறிவு இல்லாத ஒருவன்தான் சாதாரண மனிதன் எனப்படுவான். பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஒரு நபீயும், றஸூலும் ஆவார்கள். அது மட்டுமன்றி முன்னோர், பின்னோர் அனைவரின் அறிவு ஞானங்களையும் அறிந்த பேரறிஞருமாவார்கள். இத்தகைய சிறப்புக்களுக்குரிய பெருமானாரை சாதாரண மனிதன் என்று ஓர் அறிஞன் அல்லது “ஸஆதத்” நற்பாக்கியம் உள்ளவன் ஒருபோதும் சொல்லமாட்டான். விஷேடமாக அவர்களை “நபீ” என்று நம்பினவனும், அவர்களின் வரலாறு அறிந்தவனும் சொல்லவேமாட்டான்.
நபீ பெருமான் அலைஹிஸ்லஸாது வஸ்ஸலாம் அவர்களிடம் அல்லாஹ்வின் றஸூலே! தொடராக நோன்பு நோற்கக் கூடாதென்று எங்களைத் தடை செய்கிறீர்கள். ஆயினும் நீங்கள் அவ்வாறு நோன்பு நோற்கிறீர்கள் என்று நபீ தோழர் கேட்ட போது لَسْتُ مِثْلَكُمْ நான் உங்கள் போன்றவன் அல்ல என்றும், எனக்கு உணவு தருபவன் ஒருவன் இருக்கிறான், அவன் எனக்கு உணவு தருகிறான் என்றும், எனக்கு குடிக்கத் தருபவன் ஒருவன் இருக்கிறான், அவன் எனக்கு குடிக்கத் தருவான் என்றும் விடையளித்தார்கள்.
அவர்களின் இந்த விடை மூலம் அதாவது “நான் உங்கள் போன்றவன் அல்ல” என்ற விடை மூலம் அவர்கள் ஏனைய மனிதர்கள் போன்றவர்கள் அல்ல என்ற தத்துவம் விளங்குகிறது.
إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ
நான் உங்கள் போன்ற மனிதன் என்ற திருக்குர்ஆன் வசனத்திற்கு இந்த நபீ மொழி முரணாகிறது. இவ்விடத்தில் எதை எடுப்பது? எதை விடுவது? என்ற பிரச்சினை உள்ளது. இரண்டில் ஒன்று திருக்குர்ஆன் வசனம். மற்றது “ஸஹீஹ்” பலமான ஹதீது. சட்டப்படி இரண்டையும் எடுக்க வேண்டும். ஒன்றுக்கு மற்றது முரணான இரண்டையும் எடுக்க முடியாது. இரண்டையும் விடவும் முடியாது. இங்கு இன்னுமொரு விடயத்தை கவனிக்க வேண்டும்.
அதாவது சட்டக்கலையில் ஒரு விதி உண்டு. அது إِذَا تَعَارَضَا تَسَاقَطَا என்று சொல்லப்படும். இதன் விபரம் என்னவெனில் ஒரு விடயத்தில் ஒன்றுக்கு மற்றது முரணான இரண்டு சட்டங்கள் கூறப்படுமாயின் இரண்டில் ஒன்றை மட்டும் எடுத்து மற்றதை மட்டும் விடாமல் இரண்டையும் விட்டு விட வேண்டும். இப்பிரச்சினையில் ஒன்றுக்கு மற்றது முரணாக இருப்பது திருக்குர்ஆனாகவும், ஹதீதாகவும் இருப்பதால் இரண்டையும் விடவும் முடியாது. இரண்டில் ஒன்றை விடவும் முடியாது. இரண்டையும் எடுக்கவே வேண்டும். எனவே, எவ்வாறு இப்பிரச்சினையை சமாளிப்பது? விடை அடுத்த தொடரில்…