Saturday, October 12, 2024
Homeஎழுத்தாக்கங்கள்باب الصيام - பாபுஸ் ஸியாம் - நோன்பின் பாடம்.

باب الصيام – பாபுஸ் ஸியாம் – நோன்பின் பாடம்.

தொடர்: 07

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

கடந்த 06வது தொடரில் “நான் உங்கள் போன்ற மனிதன்தான்” என்று மக்கள் மத்தியில் நீங்கள் கூறுங்கள் என்று அல்லாஹ் கண்மணி நாயகம் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களைப் பணித்தான் என்ற விபரம் தொடர்பாகவும் எழுதினேன். அதோடு لَسْتُ مِثْلَكُمْ “நான் உங்கள் போன்றவனல்லன்” என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நபீ தோழர் ஒருவரின் கேள்விக்கு கூறிய பதில் தொடர்பாகவும் தொட்டு வைத்தேன். அதே தொடரில் இங்கும் எழுதுகிறேன்.

“நான் உங்கள் போன்ற மனிதன்தான் என்று சொல்லுங்கள்” என்ற அல்லாஹ்வின் பேச்சுக்கும், “நான் உங்கள் போன்றவனல்ல” என்ற நான் மேலே எழுதிக் காட்டிய கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் பேச்சுக்கும் வெளிப்பார்வையில் முரண்பாடு இருப்பது தொடர்பாகவும் சுருக்கமாக எழுதினேன். இங்கு அதை சற்று தெளிவாக்கி எழுதுகிறேன்.

அல்லாஹ்வின் பேச்சுக்கும், நபீ பெருமானாரின் பேச்சுக்கும் அறிவு குறைந்தவர்களின் பார்வையில் முரண்பாடு இருந்தாலும் அறிவுள்ளவர்களின் பார்வையில் எந்த ஒரு முரண்பாடும் இல்லை.

நாம் எப்போது சாப்பிடுவதாயினும் ருசியான, தரமான சாப்பாடுள்ள ஹோட்டலில் சாப்பிட வேண்டும். சில ஹோட்டல்கள் உள்ளன. அவற்றில் கால் வைப்பதற்கு கூட மனம் பின்வாங்கும். ஆயினும் அதில் ஒரு முறையாவது சாப்பிட்டுப் பார்த்தால்தான் ருசி புரியும். அங்கு சாப்பாட்டு ருசியை நுகர்ந்தவன் அந்த ஹோட்டலுள்ள ஊருக்குச் சென்றானாயின் அங்குதான் சாப்பிடச் செல்வானேயன்றி ஐந்து நட்சத்திர ஹோட்டல் சாப்பாடு இலவசமாக வழங்கப்படுகிறதென்றாற் கூட அங்கு சாப்பிடச் செல்லமாட்டான். நான் குறிப்பிடும் ஹோட்டல் தமிழ் நாடு முத்துப்பேட்டையில் உள்ளது.

ஹோட்டல் என்பது அறிஞர்களையும், சாப்பாடு என்பது அறிவையும் குறிக்கும்.
عَرَفَ مَنْ عَرَفَ، وَجَهِلَ مَنْ جَهِلَ، وَكَمْ مِنْ جَاهِلٍ بِالدِّيْنِ وَبِمَعْرِفَةِ اللهِ عَزَّ وَجَلَّ يُحَوِّلُ النَّاسَ وَيُمِيْلُهُمْ إِلَيْهِ بِلِحْيَتِهِ الْكَثِيْفَةِ الطَّوِيْلَةِ وَعمَامَتِهِ الْكَبِيْرَةِ الْعَظِيْمَةِ، وَالْعَوَامُّ مِنَ النَّاسِ يَغْتَرُّوْنَ بِمَلَابِسِهِ وَصُوَرِهِ، وَيَعْتَقِدُوْنَ بِعَقِيْدَتِهِ الَّتِيْ يَقُوْلُهَا،

மேற்கண்ட திரு வசனம், குறித்த ஹதீதுக்கு எந்த வகையிலும் முரணனானதில்லை என்பதை இங்கு எழுதுகிறேன்.
قل إنما أنا بشر مثلكم
“நான் உங்கள் போன்ற மனிதன்தான் என்று கூறுங்கள்” என்ற திரு வசனத்தில் வந்துள்ள بشرٌ مثلُكم உங்கள் போன்ற மனிதன்தான் என்ற வசனத்துக்கு “ஷக்ல்” அல்லது “ஸூறத்” தோற்றத்தில் அல்லது உருவத்தில் உங்கள் போன்ற மனிதன் என்று பொருள் கொள்ள வேண்டுமேயன்றி எதார்த்தத்திலும், அந்தஸ்த்திலும், ஆன்மிகப் படித்தரங்களிலுமில்லை என்று பொருள் கொண்டு அவர்கள் நம் போன்ற சாதாரண மனிதன் என்று முடிவு செய்தல் கூடாது.

மேற்கண்ட திரு வசனத்திற்கு இவ்வாறு விளக்கம் கொள்ளாமல் வஹ்ஹாபீகள் சொல்வது போன்று நபீமணி அவர்கள் சாதாரண மனிதன் என்று விளக்கம் கொண்டால் மட்டும்தான் இத்திரு வசனம் لَسْتُ مِثْلَكُمْ என்ற நபீ மொழிக்கு முரண்படும். இன்றேல் முரணாகாது.

மேற்கண்ட திரு வசனத்துக்கு உங்கள் போன்ற “சாதாரண” மனிதன் என்று வஹ்ஹாபீகள் பொருள் கொண்டதினால்தான் அவர்களைக் கீழ்த்தரமாகவும், மற்றும் மச்சான், நண்பர்களைப் பற்றிப் பேசுவது போலும் பேசுகிறார்கள். அல்லாஹ் இவர்களுக்கு நல்வழி காட்டுவானாக! இவர்களுக்கு “நஸீப்” நற்பாக்கியமிருந்தால்.

வஹ்ஹாபீகள் சொல்வது போல் அவர்களைச் “சாதாரண” மனிதன் என்று சொல்வதற்கு திருக்குர்ஆனிலோ, நபீ மொழிகளிலோ ஒரு சிறு வசனமாவது உள்ளதா என்று ஆய்வு செய்தால் இல்லவே இல்லை. இது வஹ்ஹாபீகளின் நரித் தந்திரமும், சூட்சியும், சதியுமேயாகும்.

வஹ்ஹாபீகள் சொல்வது போல் அவர்கள் நம் போன்ற சாதாரண மனிதனாயிருந்தால் அவர்கள் நான்கிற்கு மேற்பட்ட திருமணம் செய்தது போல் இவர்களும் செய்யலாமல்லவா? இதுவரை இவர்களில் எவரும் செய்ததாக அறிய முடியவில்லை. ஒருவேளை எமக்குத் தெரியாமல் ரிஸ்வீ அவர்கள் போல் வெளிநாடுகளில் பல பெண்களைத் திருமணம் செய்துள்ளார்களோ என்னவோ?!

“விஸால்” நோன்பு தொடர்பாக நபீகளார் அலைஹிஸ்லாது வஸ்ஸலாம் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அது கூடாதென்று அவர்கள் பதில் கூறிய போது, யா றஸூலல்லாஹ்! நீங்கள் தொடராக நோன்பு நோற்கிறீர்களே என்று ஒரு தோழர் சொன்ன போது لَسْتُ مِثْلَكُمْ நான் உங்கள் போன்றவனல்லன் என்று பதில் கூறினார்கள். இந்த பதில் ஆன்மீக படித்தரத்தைச் சுட்டிக் காட்டிய பதிலேயன்றி உடலமைப்பைச் சுட்டிக்காட்டிய பதில் இல்லை. இதை விளங்கிக் கொள்ள வேண்டும். இதையும் சரியாக விளங்கி, إنما أنا بَشَرٌ مثلكم நான் உங்கள் போன்ற மனிதன்தான் என்ற திருவசனம் ஆன்மிக படித்தரத்தைக் காட்டாமல் மனித உடலமைப்பையே காட்டுகிறது என்றும் சரியாக விளங்கிக் கொண்டால் திரு வசனம் நபீ மொழிக்கு முரணாகிறது, அல்லது நபீ மொழி திரு வசனத்திற்கு முரணாகிறது என்ற பேச்சுக்கே இடமில்லாமற் போய் விடும்.

நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் உடலமைப்பில் ஏனைய மனிதர்கள் போன்றவர்கள் என்பதையும், ஆன்மிக படித்தரத்தில் ஏனைய மனிதர்கள் போன்றவர்களில்லை என்பதையும் நிறுவுவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றைத் தேவையான இடத்தில் எழுதுவோம்.

நபீ பெருமான் அலைஹிஸ்லாது வஸ்ஸலாம் அவர்கள் போல் ஆன்மீகப் படித்தரத்தில் உச்ச நிலையடைந்த எவரும் வாழ்ந்ததற்கு வரலாறில்லை. மனித இனத்தில் “அல் இன்ஸானுல் காமில்” சம்பூரண மனிதன் என்று அல்லாஹ்வினாலும், மற்றவர்களாலும் சுட்டிக் காட்டப்படுபவர்கள் அண்ணலெம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மட்டுமேயாவர். மனித இனத்தில் ஒரு குறை கூட இல்லாத முழு மனிதரும், “அவ்வலிய்யதுர் றூஹ்” முதல் உயிரும் அவர்களேயாவர்.

பெருமானார் அவர்களின் ஆன்மிகப் பலம் அதன் உச்சியை அடைந்திருந்ததாலும், அதேபோல் أُعْطِيْتُ قُوَّةَ أَرْبَعِيْنَ فِى الْبَطْشِ وَالنِّكَاحِ (தபறானீ அவர்களின் “அல்முஃஜமுல் அவ்ஸத்” எனும் நூலில் பதிவாகியுள்ள பின்வரும் நபீ மொழியின் படி) பெருமானார் அவர்கள் உடலுறவு விடயத்திலும், வலிமையிலும் நாற்பது பேர்களின் சக்தி வழங்கப்பட்டவர்களாயிருந்ததாலும் அவர்கள் அனைத்திலும் பூரணமானவர்களேயாவார்கள்.

எனவே, لست مثلكم நான் உங்கள் போன்றவனல்லன் என்ற வசனம் ஆன்மிகப் பலம், ஆன்மிகப் படித்தரம் போன்றவற்றையும், உடலுறவின் சக்தி, உடற்பலம் போன்றவற்றையும் கருத்திற் கொண்டு சொல்லப்பட்ட வசனமென்று விளங்கிக் கொள்ள வேண்டும். உடலமைப்பையும், உறுப்புக்களின் அமைப்பையும் கருத்திற் கொண்டு சொல்லப்பட்டதல்ல.
لست مثلكم
“நான் உங்கள் போன்றவனல்லன்” என்ற அதே கருத்தை உள்வாங்கியதாக வேறு வசனங்களும் பல நபீ மொழிகளில் வந்துள்ளன. உதாரணமாக لَسْتُ كَأَحَدٍ مِنْكُمْ , لَسْتُ كَهَيْئَتِكُمْ என்பன போன்று. வசனங்கள் பலவாயினும் கருத்து ஒன்றுதான்.

தொடராக நோன்பு நோற்பது தங்களுக்கு ஆகும் என்று கூறிய நபீ பெருமான் அலைஹிஸ்லாது வஸ்ஸலாம் அவர்கள் இதைத் தொடர்ந்து لِيْ مُطْعِمٌ يُطْعِمُنِيْ وَسَاقٍ يَسْقِيْنِيْ எனக்கு உணவு தருபவன் ஒருவன் இருக்கிறான். அவன் எனக்கு உணவு தருவான் என்றும், எனக்கு குடிக்கத் தருபவன் ஒருவன் இருக்கிறான் அவன் எனக்கு குடிக்கத் தருவான் என்றும் கூறினார்கள்.

பெருமானார் அவர்களின் இவ்வசனம் அவர்கள் தொடர்ந்து நோன்பு நோற்றாலும் கூட அல்லாஹ் அவர்களுக்கு உணவு கொடுக்கிறான், குடிக்க கொடுக்கிறான் என்ற கருத்தை காட்டுகிறது. அவ்வாறாயின் “ஷரீஆ”வின் சட்டப்படி நோன்பாளி சாப்பிட்டால், அல்லது குடித்தால் நோன்பு முறிந்துவிடுமென்று சொல்லப்பட்டிருக்கும் நிலையில் பெருமானார் அவர்கள் சாப்பிடுவதால், அல்லது குடிப்பதால் அவர்களின் நோன்பு முறிந்துவிட்டதா?

இல்லை முறிந்த விடாது. ஏனெனில் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் மேற்கண்ட ஹதீதில் சுட்டிக் காட்டியது நாம் சாப்பிடும் சாப்பாட்டையோ, நாம் குடிக்கும் பானத்தையோ அல்ல. அவர்கள் சுட்டிக் காட்டிய சாப்பாடும், பானமும் اَلطَّعَامُ النُّوْرَانِيْ ஒளியுணவையும், اَلشَّرَابُ النُّوْرَانِيْ ஒளிப் பானத்தையுமே குறிக்கும்.

நபீமாருக்கும், “விலாயத்” ஒலித்தனத்தின் உச்சியை அடைந்த குத்புமாருக்கும் ஒளி உணவாகிறது என்பதையும், அதேபோல் ஒளி குடிபானமாகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இத்தன்மை பெற்ற மகான்கள் முஸ்லிம்களிலும், முஸ்லிமல்லாதவர்கள் என்று முஸ்லிம்கள் நினைக்கின்றவர்களிலும் இருந்துள்ளார்கள்.

ஒளியுணவு சாப்பிடுவதாலோ, ஒளிப்பானம் அருந்துவதாலோ நோன்பு முறிந்து விடாது. இவ்வாறுதான் சுவர்க்க உணவுகள் உட்கொள்வதாலும், பானங்கள் பருகுவதாலும் நோன்பு முறிந்து விடாது. இத்தகைய குறிப்புகளையும், தகவல்களையும் “ஷரீஆ” தொடர்பான நூல்களில் காண முடியாது. இறையருள் பெற்ற வலீமார்களாலும். ஸூபீ மகான்களாலும் எழுதப்பட்ட நூல்களிலும் மட்டுமே காண முடியும். அல்லது அவர்களின் திருவாய்களால் வெளியாகும் தத்துவங்கள் மூலமே அறிய முடியும்.

“பனா” நிலையடைந்த, “கஷ்பு”, “இல்ஹாம்” எனும் அற்புதமான ஞானம் வழங்கப்பட்டவர்கள் பேசுவார்களாயின் அவர்கள் மூலம் பேசுகின்றவன் அல்லாஹ்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

“ஷரீஆ”வோடு மட்டும் நின்று கொண்டு “தரீகா”, “ஹகீகா”, “மஃரிபா” எனும் முப்பெரும் தத்துவங்களை மறுக்கும் உலமாஉகள் இலங்கையில் மட்டுமன்றி எல்லா நாடுகளிலும் உள்ளார்கள். இவர்களிற் சிலர் அறியாமை இருள் சூழ்ந்தவர்களாவர். இன்னும் சிலருளர். இவர்கள் அறியாமை இருளில் இருப்பதுடன் ஆன்மிகத்திற்கு எதிரானவர்களாவர். ஆன்மிக அறிவில் ஒரு சொட்டேனும் ருசிக்காத நாத் திமிர்த்தவர்கள், கடும் காய்ச்சலால் – ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களாவர். இவர்களுக்கு சீனியும் கசக்கத்தான் செய்யும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments