Sunday, October 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்باب الصيام - பாபுஸ் ஸியாம் - நோன்பின் பாடம்.

باب الصيام – பாபுஸ் ஸியாம் – நோன்பின் பாடம்.

தொடர்: 08

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

فُرُوْضُ الصِّيَامِ اِثْنَانِ، تَبْيِيْتُ النِّيَّةِ، وَالْإِمْسَاكُ عَنِ الْمُفْطِرَاتِ،
நோன்பின் “பர்ழ்” கடமைகள் இரண்டு. ஒன்று – இரவில் “நிய்யத்” செய்தல். அல்லது வைத்தல். இரண்டு – “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் முதல் “மக்ரிப்” தொழுகைக்கான நேரம் வரை நோன்பை முறிக்கும் காரணங்கள் அனைத்தையும் தவிர்த்திருத்தல்.

இவ்விரண்டும் கடமைகளாகும். இவ்விரண்டில் எது தவறினாலும் நோன்பு நிறைவேறாது. இது தொடர்பான விபரங்கள் கடந்த பதிவொன்றில் எழுதிய நினைவு எனக்கு உள்ளது. எனினும் வாசிக்கத் தவறியவர்களின் நன்மை கருதி மீண்டும் எழுதுகிறேன் சுருக்கமாக.

“தப்யீத்” – تَبْيِيْتْ என்ற சொல்லுக்கு இரவில் “நிய்யத்” வைத்தல் என்று பொருள். இரவில் “நிய்யத்” வைத்தால் மட்டுமே நோன்பு நிறைவேறும். இரவில் “நிய்யத்” வைக்க மறந்து பகலில் “நிய்யத்” வைத்தால் நோன்பு நிறைவேறாது. தவறிய இந்த நோன்பை “றமழான்” மாதம் முடிந்த பின் “கழா” செய்ய வேண்டும். அதாவது திரும்ப நோற்க வேண்டும்.

இரவில் “நிய்யத்” வைக்க வேண்டுமென்பதால் “ஸஹர்” செய்த பின்புதான் வைக்க வேண்டுமென்பது அவசியமில்லை. இரவில் எந்நேரத்திலும் “நிய்யத்” வைக்கலாம். “ஸஹர்” செய்தபின் “நிய்யத்” வைத்தல் தொன்று தொட்டு வந்த வழக்கமேயன்றி அது கடமையல்ல. எனினும் அது ஒரு வகையில் சிறப்பென்று மட்டும் கூறலாம்.

பொதுவாக மார்க்க அடிப்படையில் இரவு என்பது தினமும் “மக்ரிப்” தொழுகைக்கான நேரத்திலிருந்து “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வரையாகும்.

“மக்ரிப்” தொழுகைக்கான நேரம் வருமுன் நோற்ற நோன்பை திறப்பதும், “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வந்த பின் “நிய்யத்” வைப்பதும், உண்பதும், பருகுவதும், மற்றும் நோன்பை முறிக்கும் கருமங்கள் செய்வதும் கூடாது. செய்தால் நோற்ற நோன்பு நிறைவேறாது. அந்த நோன்பு “கழா” திரும்ப நோற்க வேண்டும்.
تَعْجِيْلُ الْفِطْرِ سُنَّةٌ
நோன்பு திறப்பதை அவசரப்படுத்துவது “ஸுன்னத்” ஆகும். அதாவது “மக்ரிப்” தொழுகைக்கான நேரம் வந்த பின் நோன்பு திறப்பதை பிற்படுத்தாமல் இருப்பது நல்லது. இதனால் “மக்ரிப்” தொழுகைக்கான நேரம் வருமுன் நோன்பு திறப்பது கூடாது.

எனினும் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தால், தன்னிடம் நோன்பு திறப்பதற்கான – அதாவது உண்ணக் கூடிய அல்லது பருகக் கூடிய எதுவும் இல்லாதிருந்தால் அவர் தனது வசதிக்கேற்ப நோன்பு திறக்கலாம். குற்றமில்லை. நோன்பு திறப்பதற்கான எல்லா வசதியும் இருக்கும் நிலையில் காரணமின்றி பிற்படுத்துதல் விரும்பத்தக்கதல்ல.

இரவில் “நிய்யத்” வைக்க வேண்டுமென்பது கடமையாகும். அதாவது நான் மேலே எழுதியதுபோல் “மக்ரிப்” தொழுகைக்கான நேரத்திற்கும், “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரத்திற்கும் இடைப்பட்ட நேரம்தான் “ஷரீஆ” அடிப்படையில் இரவாகும். ஆகையால் இரவில் எந்த நேரத்திலும் “நிய்யத்” வைக்கலாம்.

ஒருவன் நோன்பு நோற்ற பின் “நிய்யத்” வைக்க விரும்பினாலும் வைத்துக் கொள்ளலாம். “இஷா” தொழுத பின் “நிய்யத்” வைக்க விரும்பினாலும் வைத்துக் கொள்ளலாம். இரவில் எந்நேரம் “நிய்யத்” வைத்தாலும் “நிய்யத்” வைத்த பின் “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வரும் வரை சாப்பிடுதல், குடித்தல் உள்ளிட்ட நோன்பை முறிக்கும் எந்தக் காரியமும் செய்யலாம். இவ்வாறு செய்வதால் முன்பு வைத்த “நிய்யத்” முறிந்து விடாது. அந்த “நிய்யத்”திற்கு எந்தப் பிழையும் ஏற்படமாட்டாது. அவ்வாறு “நிய்யத்” வைத்த ஒருவன் அதன் பின் “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வருமுன் மனைவியுடன் உடலுறவும் கொள்ளலாம். இதனால் முன்னர் வைத்த “நிய்யத்”திற்கு எந்த ஒரு பங்கமும் ஏற்படமாட்டாது. அவன் திரும்ப “நிய்யத்” வைக்க வேண்டிய அவசியமும் இல்லை. இவ்வாறுதான் “நிய்யத்” வைத்தபின் இரவில் சாப்பிடுவதும், குடிப்பதுமாகும்.

நமது இலங்கைத் திரு நாட்டில் பல நூறு வருடங்களாக றமழான் மாதத்தில் பள்ளிவாயலில் நடக்கின்ற “தறாவீஹ்” தொழுகையின் பின்னும், இதேபோல் தனியார் வீடுகளில் பெண்களுக்கு நடக்கின்ற “தறாவீஹ்” தொழுகையின் பின்னும் நோன்புக்கான “நிய்யத்” சொல்லிக் கொடுக்கப்படும்; அனைவரும் சொல்வார்கள். இந்த “நிய்யத்” நோன்பு நோற்பதற்குப் போதும். இவர்கள் “ஸஹர்” செய்தபின் மீண்டும் “நிய்யத்” வைக்கத் தேவையில்லை. அவசியமில்லை. ஒருவர் மீண்டும் வைத்துக் கொண்டாலும் அது பிழையாகாது.

எனினும் ஆண்களுக்கு பள்ளிவாயலில் அல்லது பெண்களுக்கு தனியார் வீடுகளில் “நிய்யத்” சொல்லிக் கொடுக்கப்படும் போது நோன்பு நோற்கும் நோக்கமில்லாதவர்கள் பிறர் தம்மை “நோட்” பண்ணுவார்கள் என்பதற்காக “நிய்யத்” சொல்லிவிட்டு நோன்பு நோற்காமல் விட்டால் அவர் குற்றவாளியாவார். ஆகையால் நோன்பு நோற்கும் நோக்கமில்லாதவர்கள் பிறர் தம்மை தப்பாக நினைப்பார்கள் என்பதற்காக “நிய்யத்” சொல்லிவிட்டு நோன்பு நோற்காமல் விடுவது பிழையாகும்.

ஒரு நோன்பாளி பகலில் நோன்புக்கான “நிய்யத்” சொன்னால் நோற்ற நோன்பு முறிந்து விடுமென்று பொது மக்கள் சொல்வது அர்த்தமற்றதாகும்.

நிய்யத்:

نَوَيْتُ صَوْمَ غَدٍ عَنْ أَدَاءِ فَرْضِ رَمَضَانِ هَذِهِ السَّنَةِ للهِ تَعَالَى،
என்று அறபியில் நினைத்துக் கொண்டால் போதும். தமிழில் நினைக்க வேண்டியது அவசியமில்லை. எனினும் ஒருவன் “இந்த வருடத்து றமழான் மாதத்தின் பர்ழான நோன்பை “அதா”வாக நாளைக்குப் பிடிக்க “நிய்யத்” வைக்கிறேன்” என்று நினைப்பது தவறுமில்லை. “நிய்யத்” என்பது மனதோடு தொடர்புடையதாகையால் நினைத்தால் போதும். மொழியத் தேவையில்லை, மொழிவது “ஸுன்னத்” ஆகும்.

இரவில் எந்த நேரம் “நிய்யத்” வைத்துக் கொண்டாலும் “நிய்யத்” வைத்தபின் “ஸுப்ஹ்” தொழுகைக்கான நேரம் வருமுன் சாப்பிடுவதாலோ, குடிப்பதாலோ, அல்லது நோன்பை முறிக்கும் கருமங்கள் செய்வதாலோ ஏற்கனவே வைத்துக் கொண்ட “நிய்யத்” பிழையாகிவிடாது. அந்த “நிய்யத்”தோடு நோன்பு நோற்கலாம். மீண்டும் “நிய்யத்” வைக்க வேண்டிய அவசியமில்லை. வைத்துக் கொண்டாலும் அது பிழையுமில்லை.

ஒருவன் இரவில் “நிய்யத்” வைப்பதற்கு தவறி அன்றுப் பகல் அவனுக்கு நினைவு வந்தால் அன்று அவன் நோன்பாளியாக இருப்பதுடன் அந்த நோன்பை “கழா” திரும்ப நோற்க வேண்டும்.

இதுவரை நோன்பின் “பர்ழ்” கடமைகளில் ஒன்றான “நிய்யத்” தொடர்பான முக்கிய குறிப்புகளை எழுதினேன். மற்றக் கடமை நோன்பை முறிக்கும் கருமங்களை செய்யாமல் இருப்பதாகும். இதன் விபரம் பின்னால் எழுதப்படும். இப்போது நோன்பு கடமையாவதற்குள்ள நான்கு நிபந்தனைகள் பற்றி எழுதுகிறேன்.

ஒரு மனிதனுக்கு நோன்பு கடமையாவதாயின் அவனில் நான்கு நிபந்தனைகள் இருக்க வேண்டும்.

ஒன்று – اَلْبُلُوْغُ – “அல்புலூக்G” பருவ வயதை அடைந்திருத்தல். இரண்டு – “முஸ்லிம்” ஆக இருத்தல். மூன்று – اَلْعَقْلُ – புத்தியுள்ளவனாயிருத்தல். நான்கு – நோன்பு நோற்பதற்கு சக்தியுள்ளவனாயிருத்தல்.

மேற்கண்ட நான்கு நிபந்தனைகளும் ஒரே நேரத்தில் எவனில் உள்ளதோ அவன் மீது நோன்பு நோற்பது கடமையாகும். நான்கில் ஒரு நிபந்தனையேனும் இல்லாமற் போனால் அவன் மீது நோன்பு கடமையாகாது.

விளக்கம்:

பருவ வயதை அடைந்திருத்தல். அதாவது வயது வந்தவனாயிருத்தல். ஓர் ஆணோ, பெண்ணோ வயது வந்தவர்கள் என்று கணிப்பதற்கு இரண்டு அடையாளங்கள் இஸ்லாமிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளன. ஒன்று வயது. வயதைக் கொண்டு கணிப்பதாயின் 15 வயதை அடைந்திருத்தல். இதன்படி ஆணோ, பெண்ணோ 15 வயதை அடைந்திருந்தால் அவர் வயது வந்தவர்தான். அதாவது بَالِغٌ – பாலிக்G அதாவது பருவமடைந்தவர்தான். அவளும் பருவமடைந்தவள்தான். இது ஓர் அடையாளம். மற்ற அடையாளம் ஆணாயின் “நுத்பா” இந்திரியம் வெளியாதல். பெண்ணாயின் தீட்டு ஏற்படுதல்.

இந்த விதிப்படி வயது வராதவன் மீது நோன்பு கடமையாகாது.

لَا يَجِبُ الصِّيَامُ عَلَى الصَّبِيِّ

பருவமடையாத ஆண் صَبِيٌّ என்றும், பெண் صَبِيَّةٌ என்றும் சொல்லப்படுவர். ஓர் ஆண் 15 வயதை அடைந்தும் அவருக்கு இந்திரியம் வராது போனாலும் அவர் வயது கொண்டு பருவமடைந்தவராகவே ஷரீஆவில் கணிக்கப்படுவார். இவ்வாறுதான் ஒரு பெண்ணும். அவள் 15 வயதை அடைந்தும் அவளுக்கு மாதத் தீட்டோ, இந்திரியமோ வரவில்லையானால் அவளும் வயது கொண்டு பருவமடைந்தவளாகவே கணிக்கப்படுவாள்.

ஓர் ஆண் 15 வயதை அடையுமுன், அல்லது ஒரு பெண் 15 வயதை அடையுமுன் அவர்களுக்கு இந்திரியம் வெளிப்படுமாயின் அவர்கள் அது கொண்டு வயது வந்தவர்களாகவே கணிப்படுவர். ஒரு பெண் 15 வயதை அடையுமுன் அவளுக்கு தீட்டு வந்தாலும் அவளும் வயது வந்தவளாகவே கணிக்கப்படுவாள்.

கூறப்பட்ட எந்த அடையாளம் கொண்டேனும் ஓர் ஆணோ, பெண்ணோ பருவமடைந்திருத்தல் நோன்பு கடமையாவதற்கு ஓர் நிபந்தனையாகும்.

وَلَا يَجِبُ الصِّيَامُ عَلَى الصَّبِيِّ أَيْ غَيْرِ الْبَالِغِ، وَلَكِنْ يُؤْمَرُ بِهِ لِسَبْعِ سِنِيْنَ إِنْ أَطَاقَهُ، وَيُضْرَبُ عَلَى تَرْكِهِ لِعَشْرِ سِنِيْنَ،

பருவ வயதை அடையாத சிறுவன், சிறுமி மீது நோன்பு கடமையாகாது. எனினும் சிறுவர், சிறுமியர் ஏழு வயதை அடைந்தால் பெற்றோர், அல்லது பாதுகாவலர் மீது அவர்களை நோன்பு நோற்குமாறு பணிப்பது அவசியம். ஆனால் அடித்தல் கூடாது. ஏழு வயதை அடைந்தவர்களை பெற்றோர் அல்லது பொறுப்பானவர்கள் பணிப்பதாயினும் சிறுவர். சிறுமியர் நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். ஆணாயினும், பெண்ணாயினும் ஏழு வயதுள்ள அனைவரும் நோன்பு நோற்க சக்தியுள்ளவர்களா என்பதை அறிந்துதான் பணிக்க வேண்டும். நோன்பு நோற்குமாறு பணிப்பதாயினும் தொடராக றமழான் மாதம் முழுவதும் நோற்குமாறு பணித்தல் நல்லதன்று. ஒரு வாரத்தில் ஒரு நாள், அல்லது இரு வாரத்தில் ஒரு நாள் நோற்குமாறு பணிக்க வேண்டும். சிறுவர். சிறுமிகளின் உடல் நிலைக்கேற்ப பணிக்கலாம். சிறுவர், சிறுமியர் 10 வயதை அடைந்தால் பணிப்பதோடு மட்டும் நின்று விடாமல் அதை விட ஒரு படி மேலே சென்று அடிக்கவும் வேண்டும். அடிப்பதாயினும் இரத்தம் வராத வகையிலும், காயம் ஏற்படாத வகையிலும் அடிக்க வேண்டும். மாட்டுக்கும், வெறி நாய்க்கும் அடிப்பது போல் அடித்தலாகாது. அவ்வாறு அடித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

நான் சிறுவனாயிருந்த காலத்தில் – அதாவது சுமார் பத்து வயதுடையவனாக இருந்த கால கட்டத்தில் (1950 -1955) காலப்பகுதியில் என் தந்தை என்னை ஊஞ்சல் தூணில் கயிறால் கட்டி வைத்து விட்டு அடிப்பார்கள். அவ்வாறு அடிப்பது பொருத்தமற்றதாயினும் – பிழையாயினும் அவ்வாறு அடித்து வளர்த்ததினால்தான் நான் இன்று ஓர் ஆலிமாக உள்ளேன்.

رَبِّ ارْحَمْ أَبِيْ كَمَا رَبَّانِيْ صَغِيْرًا، وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَسْكِنْهُ الْفِرْدَوْسَ مَعَ أَسْعَدِ الْمَخْلُوْقَاتِ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَعَ أَعْجَبِ الْأَقْطَابِ سَيِّدِنَا الشَّيْخِ الْأَكْبَرِ ابْنِ عَرَبِيْ رَضِيَ اللهُ عَنْهُ،

தொடரும்….

RELATED ARTICLES

Most Popular

Recent Comments