Sunday, October 13, 2024
Homeஎழுத்தாக்கங்கள்باب الصيام - பாபுஸ் ஸியாம் - நோன்பின் பாடம்.

باب الصيام – பாபுஸ் ஸியாம் – நோன்பின் பாடம்.

தொடர்: 09

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

நோன்பு கடமையாவதற்கு நான்கு அம்சங்கள் வேண்டும். அவற்றில் ஒன்று بُلُوْغْ – பருவமடைந்திருத்தல். தொடர் 08ல் இதன் விபரம் எழுதியுள்ளேன்.

ஆகையால் வயது வராத சிறுவர், சிறுமிகள் மீது நோன்பு கடமையாகாது. ஆயினும் சிறுவர்கள் 7 வயதாகும் போது நோன்பு நோற்குமாறு பெற்றோர் அவர்களை அடிக்காமல் பணிக்க வேண்டும். இவ்வாறு செய்தல் அவர்களுக்கு வழங்கும் பயிற்சியாகும். முழு நோன்பையும் நோற்காமல் ஒரு வாரத்தில் ஒன்று, இரண்டு வாரங்களில் ஒன்று நோற்குமாறு ஏவுதல் வேண்டும். ஆயினும் அவர்கள் 10 வயதை அடைந்தால் அடித்துச் சொல்ல வேண்டும். அடிப்பதாயினும் இரத்தக் காயம், அல்லது சிரங்கு ஏற்படாமலும், நோவு, வலி ஏற்படாமலும் அடிக்க வேண்டும். படிப்பறிவில்லாத, அல்லது பொது அறிவில்லாத பெற்றோர், மற்றும் குடிப் பழக்கமுள்ள தந்தை தமது பிள்ளைகளின் வயது, உடல் நிலை போன்றவற்றைக் கவனியாமல் – கருத்திற் கொள்ளாமல் ஆடு, மாடு, நாய் போன்றவற்றுக்கு அடிப்பது போல் அடிக்கிறார்கள். அறிவில்லாத, இரக்கமில்லாத இவர்கள் இனியாவது தமது பிள்ளைகளை மனிதாபிமானத்தோடு வளர்க்க தெரிந்து கொள்ள வேண்டும்.

10 வயது வந்தால் பெற்றோர் தமது பிள்ளைகளை அடித்து அவர்களைத் திருத்த வேண்டுமென்று மார்க்கம் சொல்வதால் மார்க்கம் தானே சொல்கிறதென்று அவர்களைக் கண்ட மாதிரியெல்லாம் அடித்துவிடலாகாது. அடிக்கலாம் என்றாலும் கூட அதற்கும் ஒரு முறையுண்டு. ஓர் அளவுண்டு.

இரும்புக் கம்பியால் அடித்தாலும், மாட்டுக்கு அடிக்கும் கம்பால் அடித்தாலும், பிரம்பால் அடித்தாலும், துணியால் அடித்தாலும் அடித்தல் என்றே சொல்லப்படும். மார்க்கம் அடிக்குமாறு சொல்லிவிட்டதென்று பிள்ளைகளை மிருகங்களையும், விஷஜந்துக்களையும் அடிப்பது போல் அடிக்கலாகாது. கையால் அடித்தாலும் அது அடிதான் என்பதையறிந்து கையால் ஒரு தட்டுத் தட்டுவதும் அடிதான் என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்.

சிறுவர்கள் வரம்பை மீறி அடித்துத் துன்புறுத்தப்படும் வழக்கம் அநேகமாக சில கிராமப் புறங்களிலும், படிப்பறிவில்லாத குடும்பங்களிலும், குடிப்பழக்கமுள்ளவர்களிடமும் இருப்பதை நாம் காண்கிறோம்.

கிராமத்திலோ, பட்டணத்திலோ, பட்டிக்காட்டிலோ யாராவது தமது சிறார்களை மனிதாபிமானமின்றி அடித்து துன்புறுத்துவதை, அல்லது மனைவிக்கு அடித்து துன்புறுத்துவதை அறிந்தால் எவருக்கும் தெரியாமல் இரகசியமாக பொலீஸ் நிலையத்தில் புகார் செய்துவிட்டு மௌனிகளாயிருக்க வேண்டும். இது நன்மையான காரியமேயன்றிப் பாவமான காரியமல்ல.

பயனுள்ள பாடம்:

1968-69 களில் நான் கிழக்கு மாகணத்திலுள்ள ஓர் ஊரில் இருந்தேன். அவ் ஊரிலுள்ள ஒரு வம்பன் 85 வயதுள்ள தனது தாயை மரத்தில் கயிற்றால் கட்டி வைத்து அத் தாயை அடித்து துன்புறுத்தி வருகிறான் என்ற செய்தியை அவனின் பக்கத்து வீட்டார் என்னிடம் இரகசியமாக கூறினார்கள். நான் அவர்களிடம், நானும் ஒரு தரமாவது நேரில் பார்க்க வேண்டும். அவ்வாறு ஒரு சம்பவம் நடந்தால் எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி வைத்திருந்தேன்.

ஒரு நாள் அவனின் அயல் வீட்டுக் காரன் என்னிடம் வந்து அவசரமாக வாருங்கள் என்று அழைத்தான். நான் அங்கு சென்று ஒழிந்திருந்து பார்த்த போது அந்த வம்பன் தன்னைப் பெற்று வளர்த்த 85 வயது மதிக்கத்தக்க தாயின் கையை தனது முழங்காலில் வைத்து இரண்டாக முறிக்கிறான். கை இரண்டாக முறிந்து தொங்குகிறது. இதைக் கண்ட என் மனம் வெடித்துச் சிதறியது போல் இருந்தது. நான் அவ் ஊரின் பொலீஸ் நிலையம் சென்று அதிகாரியிடம் விடயத்தை விளக்கமாகக் கூறினேன். அவர் அக்கணமே “ஜீப்” வண்டியை எடுத்துக் கொண்டு வந்து அவனைக் கைது செய்தார். சில நாட்கள் சிறை வாசம் செய்த அந்த வம்பன் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி தாயின் கையை முறித்த தனது கையை இழந்து தெருவெல்லாம் யாசகம் செய்து மாண்டு போனான்.

எவனாயினும் எவருக்காயினும் அநீதி செய்தானாயின் அநீதி செய்தவன் அல்லாஹ்வால் நிச்சயமாக தண்டிக்கப்படுவான் என்பதை எவரும் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பெற்றோர் தமது பிள்ளைகளை மார்க்கப்பற்றுள்ளவர்களாகவும், ஒழுக்கமுள்ளவர்களாகவும், நற் பழக்கமுள்ளவர்களாகவும் வளர்க்க வேண்டும் என்பதற்காக அவர்களை மிருகங்களை அடிப்பது போல் அடித்து வளர்ப்பதை கட்டாயம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிறுவர்கள் செய்யும் சிறிய குற்றங்களுக்காக அவர்களைப் பல நாட்கள் கட்டிப் போட்டு உண்ணக் கொடுக்காமலும், குடிக்கக் கொடுக்காமலும், காலையும், மாலையும் அடித்தும், ஏசியும், சபித்தும் வளர்ப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

எதனால் வெல்ல முடியாத எதுவாயினும் அதை அன்பால், இரக்கத்தால், பாசத்தால், பணிவால், மதி நுட்பத்தால் வெல்ல முடியும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.

நான் எனது வாழ்வில் இவ்வழி சென்று பல பாடங்கள் படித்துள்ளேன். பல அனுபவங்களும் பெற்றுள்ளேன்.

பெற்றோர் தமது பிள்ளைகள் ஏழு வயதை அடையும் வரை அவர்களிடம் மார்க்கம் தொடர்பான எந்தவொரு விடயத்தையும் ஏசியும், அடித்தும் திணிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏழு வயது முதல் பத்து வயது வரை ஓர் அடியேனும் அடித்து அவர்களைத் துன்புறுத்தாமல் அன்பால், அரவணைப்பால், பண்பால், பாசத்தால் அவர்களை வசப்படுத்த வேண்டும்.

பத்து வயது அடைந்த பிறகுதான் தொழ வேண்டுமென்றும், நோன்பு நோற்க வேண்டுமென்றும் அடித்துச் சொல்ல வேண்டும்.

لَا يَجِبُ الصَّوْمُ عَلَى الصَّبِيِّ، وَلَكِنْ يُؤْمَرُ بِهِ لِسَبْعِ سِنِيْنَ إِنْ أَطَاقَهُ، وَيُضْرَبُ عَلَى تَرْكِهِ لِعَشْرِ سِنِيْنَ،

பருவமடையாத சிறுவன் மீது நோன்பு கடமையாகாது. ஆயினும் அவன் ஏழு வயதையடைந்து நோன்பு நோற்பதற்கு சக்தியுள்ளவனாகவும் இருந்தால் நோன்பு நோற்குமாறு அவனை ஏவ வேண்டும். சொல்ல வேண்டும். அடித்தலாகாது. ஆயினும் அவன் பத்து வயதை அடைந்ததும் நோன்பு நோற்காதிருந்தால் அடித்துச் சொல்லலாம்.

நபீ மொழிகளிலும், சட்ட நூல்களிலும் அடித்தல் என்ற பொருளுக்குரிய ضَرْبْ என்ற அறபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதால் இது பற்றி ஆழமாக ஆய்வு செய்யாமலும், அடிக்க வேண்டுமென்றால் எதனால், எவ்வாறு, எந்த இடத்தில் அடிக்க வேண்டுமென்ற விபரத்தை தெரிந்து கொள்ளாமலும் சிறுவர்களைப் பெற்றோர் அல்லது கற்றுக் கொடுப்பவர் கயிறால் கட்டி வைத்து மாடுகளை அடிக்கும் கம்பால் இரத்தக் காயம் வரும் வரை சிறுவர்களை அடிப்பது அறியாமையும், வடிகட்டிய முட்டாள் தனமுமேயாகும்.

ஒரு காலத்தில் குர்ஆன் மத்ரஸாவில் ஓதும் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பாடம் சொல்லத் தவறினால், அல்லது மத்ரஸாவுக்கு வரத் தவறினால் அச்சிறுவர்களை “குத்தியில் போடுதல்” என்ற வழக்கம் இருந்து வந்துள்ளது. நான் சிறுவனாயிருந்த காலத்தில் இவ்வழக்கம் பரவலாக இருந்து வந்தது. நமதூரான காத்தான்குடியிலும் இருந்தது.

குத்தியில் போடுதல் என்றால் சுமார் 4 அங்குல அகலமும், 10 அல்லது 12 அங்குல நீளமும் உள்ள, சுமார் ஐந்து கிலோவுக்கும் மேற்பட்ட பாரமுள்ள ஒரு மரக் குத்தியை எடுத்து அதில் சுமார் ஐந்து அடி நீளமான ஒரு சங்கிலியின் ஒரு தொங்கலை ஆணி அடித்து பதித்து அதன் மறு தொங்கலை சிறுவனின் கரண்டைக் காலில் பூடடுப் போட்டு வைத்தலாகும்.

அச்சிறுவன் காலை, மாலை குர்ஆன் மத்ரஸாவுக்கு வீட்டிலிருந்து வரும்போதும், மீண்டும் வீட்டுக் போகும் போதும் அந்த மரக் குத்தியை தனது தோழில் சுமந்து செல்ல வேண்டும். தண்டனைக்குரிய காலம் முடியும் வரை இவ்வாறே அச்சிறுவன் இருக்க வேண்டும்.

இந்த விலங்குடனும், சுமையுடனும் ஓதிக் கொடுக்கின்ற ஆலிமின் பிரம்படியையும் தாங்கிக் கொள்ள வேண்டும்.

இவ்வழக்கம் எக்காலம் ஆரம்பமானதோ எனக்குத் தெரியவில்லை. எனினும் சுமார் 1950ம் ஆண்டு காலப் பகுதியில் நமது காத்தான்குடியில் இவ்வழக்கம் இருந்ததை நான் அறிவேன். ஆயினும் குத்தியில் போடப்பட வேண்டிய நான் அதில் போடப்படவில்லை. இதற்குக் காரணம் எனது தந்தை கற்றுக் கொடுத்த “அல்மத்றஸதுர் றப்பானிய்யா” குர்ஆன் பாடசாலையில் இவ்வழக்கம் இருக்கவில்லை.

அக்கால கட்டத்தில் சிறுவர்களைத் தண்டித்தவர்கள் ஓதிக் கொடுத்த ஆலிம்கள்தான். இந்நாடகத்தை – சித்திரவதையை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் ஆலிம்கள்தான். ஆலிம்களும், படித்தவர்களும் பலர் இருந்தார்களாயினும் அவர்களில் எவரும் இவ்வழக்கத்தை பிழையானதென்று கருதவில்லை.

இக்காலம் வரை “குத்தி” வழக்கம் தொடர்ந்திருந்தால் இவ் ஊரில் குர்ஆன் ஓதத் தெரிந்தவர்கள் மிகக் குறைவாகவே இருந்திருப்பார்கள். அல்லாஹ் காப்பாற்றிவிட்டான்.

நான்கு அம்சங்களில் இரண்டாவது:

நோன்பு கடமையாவதற்கு நான்கு நிபந்தனைகள் என்று கூறிய நான் அதன் முதல் அம்சம் பருவ வயதை அடைந்திருத்தல் என்று எழுதி அது தொடர்பான விபரங்களையும் எழுதினேன். இப்போது இரண்டாவது நிபந்தனை தொடர்பாக எழுதுகிறேன்.

நான்கில் இரண்டவாது நிபந்தனை,
الثاني الإسلام، فلا يجب على الكافر

இரண்டாம் நிபந்தனை நோன்பு கடமையாவதாயின் அவன் “முஸ்லிம்” ஆக இருக்க வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்வதாயின் அவன் “லாஇலாஹ இல்லல்லாஹ்” அல்லாஹ் அல்லாத ஒன்றுமே இல்லை என்றும், முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் என்றும் நம்பினவனாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனையின் படி “காபிர்” மீது நோன்பு கடமையில்லை.

மூன்றாம் நிபந்தனை “அல் அக்ல்” புத்தியுள்ளவனாயிருத்தல் வேண்டும்.

الثالث العقلُ، فلا يجب على المجنون، إلّا إن كان زوالُ عقلِه بِتَعَدِّيْهِ، فإنّه يلزَمُه قضائُه بعد الإفاقة، ومِثلُه السَّكْرَانُ إن كان مُتعدِّيًا بسكره، فيلزمُه قضائُهُ، وإن كان غيرَ مُتَعَدٍّ كما إذا شرِبَ مِن إناءٍ يظنُّ أنّ فيه ماءًا، فإذا به خمرٌ سكِرَ منه، فإنّه لا يُطالَبُ بقضاءٍ زمنَ السكر، أمّا المُغمَى عليه فيجِبُ عليه القضاءُ مطلقا، أي سواءٌ أكان مُتعدِّيًا بسبب الإغماء أم لا،

மூன்றாம் நிபந்தனை “அல்அக்ல்” புத்தியுள்ளவனாயிருத்தல். இவ்விடயத்தில் புத்தியுள்ள வனாயிருத்தல் என்பது பைத்தியமில்லாதவனாக இருப்பதைக் குறிக்குமேயன்றி மடையன் – புத்தி குறைந்தவனைக் குறிக்காது. பைத்திய காரனுக்கே நோன்பு கடமையில்லையே தவிர புத்தி குறைந்த மடையனுக்கு கடமைதான். ஒருவன் புத்திக் காரனா? மடையனா? பைத்திக்காரனா? என்பதை வைத்திக் கலையோடு தொடர்புள்ள ஒருவரே தீர்மானிக்க வேண்டும்.

மனிதர்களில் பல ரகமுள்ளவர்கள் உள்ளனர். ஒருவன் கூரிய புத்தியுள்ளவன். இவனுக்கு நோன்பு கடமை என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை. இன்னொருவன் கூரிய புத்தியில்லாதவன். அதாவது புத்தி குறைந்தவன். இவனை சமூகம் மடையன் என்று சொல்லுமேயன்றி பைத்தியக் காரன் என்று சொல்லாது. இவனுக்கும் நோன்பு கடமைதான். இன்னொருவன். இவனை சமூகம் “பேயன்” என்று சொல்லும். இவன் பைத்திக்காரன் பட்டியலில்தான் சேர்க்கப்படுவான். இவன் மீது நோன்பு கடமையாகாது.

பைத்தியக்காரனிலும் இரண்டு வகை. ஒருவன் நோயால் பைத்தியமானவன். அதாவது இயற்கையில் பைத்தியமானவன். இதை விடவும் தெளிவாகச் சொல்வதாயின் இவனின் பைத்தியத்திற்கு இவனால் எந்த ஒரு காரணமும் இல்லாதவன். இவன் மீது நோன்பு கடமையில்லை. இவன் பைத்தியமாக இருந்த காலத்தில் தவறிய நோன்புகளை இவன் தெளிவு பெற்றபின் – பைத்தியம் சுகமானபின் “கழா” திரும்ப நோற்க வேண்டிய அவசியம் இல்லை.

இன்னொரு பைத்திய காரன் உள்ளான். இவனுக்குப் பைத்தியம் இயற்கையானதல்ல. பைத்தியத்தை இவனாகத் தேடிக் கொண்ட பைத்திய காரன். உதாரணமாக போதைப் பொருள் அளவு கடந்து பாவித்ததால் பைத்தியமானவன். இவனின் பைத்தியத்திற்கு இவனின் பங்களிப்பும் உள்ளவன். இவன் பைத்தியமாயிருக்கும் காலத்தில் தவறிய நோன்புகளை பைத்தியம் சுகமானபின் “கழா” செய்வது இவனின் கடமையாகும்.

இவ்வகையில் பைத்தியமானவன் வைத்தியம் மூலமோ, அல்லது வேறு வழியிலோ தெளிவு பெற்றானாயின் தனக்குத் தவறிய நோன்புகளை “கழா” செய்ய வேண்டும். இவன்தான் பைத்திய காரனாயிற்றே இவனுக்கு எத்தனை நோன்பு தவறியதென்று தெரியாதாகையால் தனது உறவினர், தனது நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து அவற்றை “கழா” செய்ய வேண்டும்.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மலிந்து போன இக்கால கட்டத்தில், போதைப் பொருள் என்ற பெயரில், என்ன தோற்றத்தில், என்ன பெயரில் இருந்தாலும் அது போதையை ஏற்படுத்துமாயின் அது போதைப் பொருளிலேயே சேரும்.

வெளிநாடுகளிலிருந்து வருகின்ற “விற்றமின் டொனிக்” சத்துள்ள பானங்களிற் சில பானங்களில் “நொன் அல்கோஹோல்” மதுச் சத்து இல்லாதது என்று “சீல்” குத்தப்பட்டுள்ளது. இதைப் பாவிப்பது தவறாகாது. எனினும் ஒரு தரமான டொக்டரிடம் ஆலோசனை பெறுவது விரும்பத்தக்கது.

சில பானங்களும், உணவுப் பொருட்களும் உள்ளன. இவை போதைப் பொருட்களில் சேர்ந்தவையல்ல. எனினும் இவற்றை அதிகமாகப் பாவிப்பதால் போதை ஏற்படுகிறது. உதாரணமாக தேன், பேரீத்தம்பழம், விற்றமின் பாணிகள், மாத்திரைகள் போன்று. இவற்றைப் பாவிப்பது தொடர்பாக “பிக்ஹ்” சட்டக்கலைப் பண்டிதர்களிடமிருந்து ஆதாரங்களுடன் பதிலை எதிர்பார்க்கிறோம்.

தொடரும்..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments