தொடர் 01
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
இவ்விரு வினாக்களுக்கும் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களும், நபீ மொழிகளும் விடைகளாக அமையும்.
திருக்குர்ஆன் வசனங்கள்:
وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى
நபீயே! நீங்கள் எறிந்த போது நீங்கள் எறியவில்லை. எனினும் அல்லாஹ்தான் எறிந்தான்.
(திருக்குர்ஆன்: 8-17)
ஒரு சமயம் நபீ பெருமானார் அவர்களை எதிரிகள் சூழ்ந்து கொண்ட போது நபீகளார் ஒரு பிடி மண் எடுத்து அதை எதிரிகள் பக்கம் எறிந்தார்கள். அவ்வேளை எதிரிகளின் பார்வைகள் செயலிழந்து விட்டன. அவர்களால் பார்க்க முடியாமற் போயிற்று.
இந்த நிகழ்வின் போதே மேற்கண்ட திரு வசனம் அருளப்பட்டது. நடந்த நிகழ்விற்கும், அருளப்பட்ட வசனத்திற்கும் பொருத்தம் உண்டு. எந்த ஒரு நிகழ்வாயினும் அந்நிகழ்வுக்கு பொருத்தமாகவே திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டன.
மேற்கண்ட திரு வசனம் வெளிப்பார்வையில் எதார்த்தத்திற்கு முரணான, உண்மைக்குப் புறம்பான கருத்தைக் கூறும் பாணியில் அமைந்திருந்தாலும் இது அல்லாஹ்வின் வாக்காயிருப்பதால் இவ் வாக்கை எவரும் அர்த்தமற்ற, சாதாரண வாக்காக எண்ணிக் கொள்ளாமல் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். எவ்வாறு ஆய்வு செய்தாலும் அல்லாஹ்வின் வாக்கிற்கு விளக்கம் கூற அவனால் மட்டுமே முடியும். வேறு எவராலும் முடியாது. ஆயினும் “இல்ஹாம்”, “கஷ்பு” எனும் இறையுதிப்பு வழங்கப்பட்ட வலீமார் தவிர. இவர்களாலும் “தப்ஸீர்” விரிவுரை செய்யலாம். ஏனையோர் செய்வது “தர்ஜமா” மொழியாக்கமேயன்றி விரிவுரையல்ல.
மேற்கண்ட ما رميت إذ رميت، ولكنّ الله رمى என்ற வசனம் பின்வருமாறு அருளப்பட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு அருளப்படவில்லை. இதற்கான காரணம் பின்னால் எழுதப்படும்.
مَا رَمَى مُحَمَّدٌ إِذْ رَمَى، وَلَكِنَّ اللهَ رَمَى
“முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் எறிந்த நேரத்தில் அவர்கள் எறியவில்லை. எனினும் அல்லாஹ்தான் எறிந்தான்” என்று மேற்கண்ட வசனம் வந்திருக்கலாம். இவ்வாறு வந்திருந்தாலும் பொருளில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது.
அல்லது مَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ، وَلَكِنِّيْ رَمَيْتُ என்றும் வந்திருக்கலாம். இவ்வாறும் வரவில்லை. இதன் பொருள் “நீங்கள் எறிந்த நேரம் நீங்கள் எறியவில்லை. நான்தான் எறிந்தேன்” என்பதாகும். இவ்வாறு வந்திருந்தாலும் பொருளில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது.
மேற்கண்ட இரு வசன அமைப்புக்களிலும் அருளப்படாமல் விட்டதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக ஆராய்வோம்.
நான் மேலே எழுதிக் காட்டிய இரு வசனங்களில் முந்தின வசன அமைப்பு غَائِبْ – படர்க்கை அமைப்பில் உள்ளது, பிந்தின வசனம் مُخَاطَبْ – முன்னிலை அமைப்பில் உள்ளது.
அல்லாஹ் தெரிவு செய்துள்ள وما رميت إذ رميت ولكن الله رمى என்ற வசன அமைப்பும், நான் எழுதிக் காட்டிய இரு வசன அமைப்புக்களும் ஒரே கருத்தை உணர்த்தினாலும் கூட அல்லாஹ் தெரிவு செய்த அமைப்பு ஏனைய இரு அமைப்புக்களை விடவும் பொருள் நயத்தால் சிறந்ததாகும்.
இதிலுள்ள தத்துவம் “இல்ஹாம்” – இறை உதிப்பு வழங்கப்பட்ட ஆய்வாளர்களுக்கு மறையாதாகையால் அது தொடர்பாக நான் எழுதவில்லை.
பொதுவாக “ஙாயிப்” படர்க்கை வசனத்தை விட “முகாதப்” முன்னிலை வசனம் பலம் கூடியதேயாகும். இதை விளங்கிக் கொண்டால் போதும்.
இவ்வசனம் தருகின்ற சுருக்கம் என்னவெனில் முஹம்மத் எனும் “மள்ஹர்” பாத்திரத்தில் அல்லது உடையில் அல்லது தோற்றத்தில் அல்லாஹ்தான் எறிந்தான் என்பதாகும்.
அல்லாஹ்வுக்கு தனிப்பட்ட, குறிப்பான உருவம் எதுவுமில்லையாதலால் அவன் நாடிய – விரும்பிய “சூறத்” உருவத்தில் வெளியாகுவான். “தஜல்லீ” ஆகுவான்.
அவனுக்கு குறிப்பான ஓர் உருவம் இருந்திருந்தால் மட்டும்தான் அவன் அதுவல்லாத வேறோர் உருவத்தில் வெளியாக மாட்டான். அவனுக்கென்றுள்ள தனியான உருவத்தில் வெளியாகுவான். எனினும் எதார்த்தத்தில் எல்லாமாயும் அவனே வெளியாகியிருக்கும் நிலையில் அவனின் உருவம் எத்தனையென்று எவரால் சொல்ல முடியும்?
எதிரிகளை நோக்கி மண்ணை எறிந்த வேளை اَلصُّوْرَةُ الْمُحَمَّدِيَّةُ முஹம்மத் என்ற உருவத்தில் வெளியாகி எறிந்தவனும் அவன்தான். இதுவே உண்மையும், எதார்த்தமுமாகும்.
அல்லாஹ் பல உருவங்களில் வெளியாகுவானா? என்று ஒருவர் கேட்பாராயின் அவருக்குப் பின்வருமாறு பதில் கூறுவேன்.
அல்லாஹ்வின் திரு நாமங்களில் “அந்நூர்” என்பதும் ஒன்று. இதன் பொருள் “ஒளி” என்பதாகும்.
ஒளிக்கு ஒரு தன்மை உண்டு. அது எந்த உருவத்திலும் வெளியாகும் வல்லமை உள்ளதாகும். அல்லாஹ் இயற்கையிலேயே அதை அவ்வாறுதான் படைத்துள்ளான்.
اَلنُّوْرُ يَتَشَكَّلُ بِأَشْكَالٍ مُخْتَلِفَةٍ
ஒளி என்பது பலதரப்பட்ட உருவங்களில் தோற்றும் தன்மை உள்ளதாகும். அது எத்தனை உருவங்களில் தோற்றினாலும் கூட அது அழிந்து போவதுமில்லை, மாறுபடுவதுமில்லை, விகாரப்படுவதுமில்லை. அதன் இயற்கை அமைப்புக்கு எந்தக் குறையும் ஏற்படுவதுமில்லை. விளக்கம் தெரியாத பலர் இதைத் தவறாக விளங்கிக் கொண்டு நாம் கூறும் தத்துவத்தை மறுக்கின்றனர்.
இவ்வாறுதான் அல்லாஹ்வின் ஒளியுமாகும். இதை பல உதாரணங்கள் மூலம் விளக்கி வைக்க முடியும். இங்கு இரு உதாரணங்கள் கூறி விளக்கி வைக்கிறேன்.
மலக்குகள் – அமரர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள். அவர்களில் ஒருவர்தான் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
இவர்களும் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள்தான். இவர்களுக்கு வர்ணிக்க முடியாத வலுப்பமான, விசாலமான இரு இறக்கைகள் உள்ளன. இதேபோல் வர்ணனைக்கு உட்படாத ஒளி உடலும் உண்டு.
இத்தகு வலுப்பமுள்ள ஜிப்ரீல் அவர்கள் நபீ பெருமானாரிடம் வரும் போது மனித உருவத்தில் வருவார்கள். குறிப்பாக “திஹ்யதுல் கல்பீ” என்ற நபீ தோழரின் உருவத்தில் வருவார்கள். சில சமயம் எவருக்கும் அறிமுகமில்லாத தோற்றத்திலும் வருவார்கள். இரண்டு அல்லது மூன்று தடவைகள் மட்டுமே ஜிப்ரீல் தனது இயற்கை ஒளியுடல் அமைப்பில் நபீகளாரிடம் வந்ததாக ஆதாரம் உள்ளது.
இவ்வாறு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனித உருவமெடுத்து வருவதால் அவர்களின் இயற்கையான ஒளி உடலமைப்பு அழிந்து போவதோ, மாறு பட்டுப் போவதோ, விகாரப்பட்டுப் போவதோ இல்லை. அவர்களின் ஒளியுடல் எவ்வாறிருந்ததோ அவ்வாறே அது இருக்கும் நிலையில் அவர் இன்னோர் தோற்றத்தில் வருவது போன்றே அல்லாஹ்வுமாவான். அவன் எத்தனை கோடி உருவங்கள், தோற்றங்களில் “தஜல்லீ” வெளியானாலும் அவனின் “தாத்” – உள்ளமை அழிவதுமில்லை, மாறுபடுவதுமில்லை, விகாரப்படுவதுமில்லை. அது எவ்வாறிருந்ததோ அவ்வாறே இருக்கும் நிலையில்தான் பல கோடி வெளிப்பாடுகளாக அது வெளியாகிறது. அல்லாஹ்வின் வல்லமை என்றால் இதுதான்.
سُئل القطب محي الدين ابن عربي كم ترجع صورالتّجلي الإلهيّ إلى مرتبة من العدد، قال الشّيخ فى الباب الثامن والتسعين ومأة، أنّها ترجع كلّها إلى صورتين، صورة تنكر وصورة تعرف، ولا ثالث لها، قال: وقد ورد أنّ الله تعالى لمّا كلّم موسى عليه الصلاة والسلام تجلّى له فى اثني عشـر ألف صورة، وفى كلّ صورة يقول له يا موسى! لينتبه موسى فيعلم أنّه لو كان جميع التّجلّى بصورة واحدة لم يقل له فى كل صورة كلمة يا موسى،
اليواقيت والجواهر، ج أوّل، ص 112، المبحث الثاني والعشرون)
அஷ்ஷெய்கு முஹ்யித்தீன் இப்னு அறபீ அவர்களிடம், இறைவன் எத்தனை உருவத்தில் “தஜல்லீ” வெளியாகலாம் என்று கேட்கப்பட்ட போது பின்வருமாறு விடை பகர்ந்தார்கள்.
எத்தனை உருவத்தில் அவன் வெளியானாலும் அனைத்து உருவங்களும் இரண்டில் அடங்கிவிடும். ஒன்று அறிமுகமில்லாத உருவம். மற்றது அறிமுகமான உருவம். மூன்றாம் வகை இல்லை.
அல்லாஹ் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடன் பேசிய போது 12 ஆயிரம் உருவங்களில் “தஜல்லீ” வெளியாகி பேசினான். ஒவ்வொரு “தஜல்லீ”யின் போதும் “யா மூஸா!” என்று அழைத்தான். இவ்வாறு அவன் அழைத்தது அவனின் “தஜல்லீ” ஒவ்வொன்றும் தனித்தனியானது என்பதை நபீ மூஸா புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவேயாகும்.
ஆதாரம்: அல்யாகீத், பாகம் 01, பக்கம் 112
ஆசிரியர்: இமாம் ஷஃறானீ
ஒரு சமயம் நபீ தோழர்கள் நபீ பெருமானாரிடம் أَيْنَ كَانَ الرَّبُّ قَبْلَ خَلْقِ الْخَلْقِ படைப்புக்களைப் படைக்குமுன் அல்லாஹ் எங்கே இருந்தான்? என்று கேட்டபோது, كَانَ فِى عَمَاءٍ அவன் “அமா”வில் இருந்தான் என்று பதில் கூறினார்கள். சில அறிவிப்புக்களில் كَانَ فِى عَمىً என்றும் வந்துள்ளதாகச் சொல்லப்படுகின்றது. “அமா” என்ற சொல்லுக்கு இருள் என்ற பொருளும் உண்டு, இப் பொருளின் வெளிரங்கத்தை கருத்திற் கொண்டே எனது நண்பர் அன்பிற்குரிய நாகூர் சலீம் அவர்கள் “இருட்டில் இருந்தான் இறைவன் நபீ இங்கே பிறந்திட முன்பு, அறிந்திட வைத்தார் அண்ணல் அவர் அற்புதம் தெரிந்தது பின்பு” என்று பாடினார்கள் போலும். “அமா” என்பது இருளுமில்லை, குருடுமில்லை. அது அறியப்படாத அல்லாஹ்விற்குரிய ஒரு “மகாம்” அந்தஸ்த்து என்று விளங்கிக் கொள்ள வேண்டும். இது பற்றி ஆராய முற்படாமல் இருப்பது சிறந்தது.
இது குறித்து குணங்குடி அப்துல் காதிர் ஆலிம் புலவர் கூறுகையில்,
மஹ்ழியத்தான தாதுல் கிப்ரியாவில்
மறைந்த கன்சுல் மக்பியாம்
மஸ்கூது அன்ஹுல் கதீமுல் அமாவான
மவ்ஜூத் எனும் ஸிர்பிலே
என்று பாடினார்கள்.
இடைக்குறிப்பு: கண்ணியத்திற்குரிய ரிஸ்வீ சாஹிபு அவர்களும், “பத்வா” குழுவினரும் தம்மிடமுள்ள “அனானிய்யத்” நான் எனும் கர்வத்தையும், “அன்னிய்யத்” நான் எனும் உணர்வையும் பாம்பு சட்டை கழற்றுவதுபோல் கழற்றினால் மட்டுமே தமது கண் திறக்கும் என்பதை உணர்ந்து சரியான வழிக்கு வர வேண்டும். (இடைக்குறிப்பு முடிந்தது)
“அமா” என்ற சொல்லுக்கு எவ்வாறு பொருள் வைத்துக் கொண்டாலும் அவன் அப் பொருளுக்கும் அப்பாற் பட்டவனாவான். சொற்களால் அவனை சூழ்ந்து கொள்ள முடியாது. கட்டுப்படுத்தி விடவும் முடியாது.
அதே சமயம் அல்லது இன்னொரு சமயம் நபீ பெருமானாரிடம் كَيْفَ كَانَ الرَّبُّ بَعْدَ خَلْقِ الْخَلْقِ படைப்புகளை படைத்த பின் அல்லாஹ் எவ்வாறு இருந்தான் என்று தோழர்கள் கேட்ட போது هُوَ الْآنَ كَمَا كَانَ அவன் படைப்புகளை படைக்குமுன் எவ்வாறு இருந்தானோ அவ்வாறே படைப்புகளை படைத்த பின்னும் உள்ளான் என்று பதில் கூறினார்கள்.
மேற்கண்ட விபரங்கள் மூலம் அல்லாஹ் எத்தனை கோடி உருவங்களிலும், தோற்றங்களிலும் வெளியானாலும் கூட அவன் அழிவதுமில்லை, மாறுபடுவதுமில்லை, விகாரப்படுவதுமில்லை. அவனின் உள்ளமைக்கு எந்தவொரு குறையும் ஏற்படப் போவதுமில்லை. அல்லாஹ்வின் “தஜல்லீ” வெளிப்பாடு பற்றி இவ்வாறுதான் விளங்க வேண்டும். இதேபோல் இன்னுமோர் உதாரணம் எழுதுகிறேன்.
மேலே எழுதிய உதாரணமும், இப்போது எழுதப் போகின்ற உதாரணமும் அல்லாஹ் எத்தனை கோடி உருவங்களில் “தஜல்லீ” வெளியானாலும் அதனால் அவனின் “தாத்” உள்ளமைக்கு எந்தவொரு குறையும் ஏற்படமாட்டாது என்பதற்கான ஆதாரமாகும்.
டீவீயில் நாம் காணும் காட்சிகள் யாவும் ஒளி உருவங்களேயாகும். ஒளியானது பல்வேறு உருவங்களிலும், தோற்றங்களிலும் வெளியாகும் தன்மை உள்ளதென்று மேலே நான் எழுதியுள்ளேன்.
எனவே, ஒளியானது தொலைக் காட்சிப் பெட்டியில் மலையாக, கடலாக, பெருங் கட்டிடமாக வெளியாவதால் – தோற்றுவதால் அந்த ஒளி அழிவதுமில்லை, மாறுபடுவதுமில்லை, விகாரப்படுவதுமில்லை என்பது போல் அல்லாஹ் எத்தனை கோடி உருவங்களில் வெளியானாலும் அவனின் “தாத்” உள்ளமை இருந்தவாறே இருக்கும் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் எறிந்த போது அவர்களின் உருவத்தில் – தோற்றத்தில் அல்லாஹ்தான் எறிந்தான் என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வுக்கென்று சில தன்மைகள் உள்ளன. அவை அவனுக்கு மட்டும் சொந்தமானவையாகும். அவை படைப்பில் இருக்கமாட்டா. இதேபோல் படைப்புகளுக்கென்று சில தன்மைகள் உள்ளன. அவை படைப்புகளுக்கு மட்டும் சொந்தமானவையாகும். அவை அல்லாஹ்வில் இருக்கமாட்டா. இதுவே பொதுவான “அகீதா” கொள்கையாகும்.
ஆயினும் சில சமயம் அல்லாஹ்வின் பண்பு – தன்மை படைப்பிலும், படைப்பின் தன்மை அல்லாஹ்விலும் வெளியாகலாம். பின்வரும் வசனங்களைக் கவனிக்கவும்.
فاعلم أنّ فى هذا البرزخ يتّصفُ الحقّ تعالى بصفات العبد من الضّحك والبكاء والبشاشة والفرح والمكر والإستهزاء والمرض والجوعِ والعطشِ وما أشبَهَ ذلك،
والعبد يتّصف بصفات الحقّ تعالى من الحياة والعلم والإرادةِ والقدرة والسمع والبصـر والكلام والإحياء والإماتة والإنبساط والإنقباضِ والتصرّف فى الأكوان وغير ذلك،
(مرآة العارفين، ص 37-38، للشّيخ محي الدين ابن عربي)
ஆன்மிகத்தில் ஒரு “மகாம்” உண்டு. அதாவது ஓர் அந்தஸ்த்து உண்டு. அந்த இடத்தில் அல்லாஹ் அடியானின் தன்மைகள் உள்ளவனாக வெளியாகுவான். அவை சிரித்தல், அழுதல், முக மலர்ச்சியாயிருத்தல், மகிழ்ச்சியாயிருத்தல், சூட்சி செய்தல், பகடி செய்தல், நோய், பசி, தாகம் முதலானவையும், இவை போன்றவையும் உள்ளவனாக அல்லாஹ் இருத்தல்.
இதேபோல் அடியான் அல்லாஹ்வின் தன்மைகள் உள்ளவனாக ஆகுவதும் உண்டு. அதாவது அவனில் அல்லாஹ்வின் தன்மைகள் வெளியாகும். உதாரணமாக உயிர், அறிவு, நாட்டம், சக்தி, கேள்வி, பார்வை, பேச்சு, உயிர்ப்பித்தல், மரணிக்கச் செய்தல், தயாள குணம், உலோபித் தனம், உலக ஆட்சி என்பன போன்று. (ஆதாரம்: மிர்ஆதுல் ஆரிபீன், பக்கம் 37 – 38, ஆசிரியர்: இப்னு அறபீ)
ஒவ்வொரு மனிதனிலும் உள்ள ஏழு தன்மைகள் எதார்த்தத்தில் அல்லாஹ்வுக்குரியவைதான். அவை மனிதனுக்குச் சொந்தமானவை அல்ல. எனினும் அவை மனிதனுக்கு காலம் குறித்து இரவலாக வழங்கப்பட்டுள்ளன. அவை படைப்பின் மூலம் வெளியாகும்.
அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். இதை நாம் மறுக்கவில்லை. ஆயினும் அது “தன்ஸீஹ்” உடைய நிலையில் மட்டுமேயாகும். “தஷ்பீஹ்” உடைய நிலையில் அவனுக்கு எல்லாமே உண்டு. وَلَهُ كُلُّ شَيْءٍ அவனுக்கு எல்லாம் உண்டு என்பது இறை வாக்கு. (திருமறை 27-91) பொதுவாக உலமாஉகளிலும், குறிப்பாக தம்மை ஸூபீகள் என்று சொல்லும் உலமாஉகளிலும் அல்லாஹ்வுக்குரிய “தன்ஸீஹ் – தஷ்பீஹ்” என்ற இரு நிலைகளின் விளக்கம் தெரியாதவர்களே அதிகமாக உள்ளனர். இதற்கான பிரதான காரணம் இவர்கள் “வஹ்ததுல் வுஜூத்” தொடர்பான எந்தவொரு நூலையும் கற்றுக் கொள்ளாமலும், வாசிக்காமலும் விட்டதேயாகும். குறைந்தபட்சம் “அல்ஹிகம்” என்ற நூலை மட்டுமாவது அவர்கள் கற்றிருந்தால் “பத்வா” வழங்கியிருக்கவுமாட்டார்கள். பாறூக் மௌலவீ அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கவும் மாட்டார்கள். முஸ்லிம்களின் ஒரே குடும்பத்தில் பிளவும், பிரச்சினையும், மனக்கசப்பும் ஏற்பட்டிருக்கவும் மாட்டாது.
எனினும் உலமாஉகளின் குறுகிய மனப்பான்மையும், பொறாமையும், அவசரப் புத்தியும், சமயோசித புத்தி இன்மையும் அவர்களை படுகுழியில் தள்ளிவிட்டன.
“பத்வா” வோடு அப்துர் றஊப் படுத்துவிடுவார், அல்லது பங்கறுள் பதுங்கிவிடுவார், அல்லது பறந்தே போய் விடுவார் என்றெல்லாம் அவர்கள் நினைத்தார்கள் போலும். والله خير الماكرين அல்லாஹ் அவர்களின் கனவுகளை தலை கீழாய் மாற்றிவிட்டான்.
உலமாஉகளின் “பத்வா” பிழையாயினும் அது ஒரு வகையில் மா பெரும் அருள் என்றே கொள்ள வேண்டும்.
ஏனெனில் அவர்கள் “பத்வா” வழங்கியதால்தான் இன்று உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்திற்கு ஆதரவு பெருகியுள்ளது. ஆதரவாளர்களும் பெருகியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்கின்ற பல நாட்டவர்களில் தமிழ் மொழியே தெரியாதவர்கள் கூட தமது மொழிக்கு நான் கூறி வரும் கருத்துக்களை மொழியாக்கம் செய்து உண்மையான தத்துவத்தை புரிந்து என்னுடன் தொடர்பாக உள்ளனர். எந்தளவு பற்றுள்ளவர்களாக மாறியுள்ளார்கள் என்றால் பெங்களூரைச் சேர்ந்த உர்து மொழி பேசும் ஒருவர் தனது மகனுக்கு என் பெயரைச் சூட்டுமளவு பக்தியுள்ளவராக மாறியுள்ளார்.
இது மட்டுமல்ல. இந்நாட்டவர்களிலும், வெளிநாட்டவர்களிலும் பலர் இலங்கை உலமா சபையுடன் விவாதிக்குமளவு கொள்கையில் மகாத்மாக்களாகிவிட்டார்கள். இறைஞானம் இந்த அளவு வளர்வதற்கும், பரவுவதற்கும் பிரதான காரணம் “பத்வா” ஒன்றேதான். எனவே, “பத்வா” வழங்கி இறைஞானம் பரவுவதற்கு உதவிய “பத்வா” குழு உறுப்பினர்களுக்கும், அதன் மகா தலைவர் ரிஸ்வீ மௌலானா அவர்களுக்கும், மற்றும் “பத்வா” எழுதுபவர்களுக்கு விளக்குப் பிடித்தவர்களுக்கும் ஸூபிஸ சமூகம் சார்பில் நன்றி கூறிக் கொள்கிறேன்.
நீங்கள் எறிந்த நேரத்தில் நீங்கள் எறியவில்லை. அல்லாஹ்தான் எறிந்தான் என்ற இறை வசனம் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்தான் என்ற கருத்தை காட்டுகிறது. அல்லாஹ் நபீ பெருமானார் அவர்களுக்கு நீங்கள் நானே என்று மறைமுகமாக கூறியுள்ளான் என்பது தெளிவாகிவிட்டது.
தொடரும்…