Home எழுத்தாக்கங்கள் அல்லாஹ் தனது ‘ஹபீப்’ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை எப்போதாவது அல்லாஹ் என்று சொல்லியுள்ளானா? எம்...

அல்லாஹ் தனது ‘ஹபீப்’ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை எப்போதாவது அல்லாஹ் என்று சொல்லியுள்ளானா? எம் பெருமான் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களை எப்போதாவது அல்லாஹ் என்று சொல்லியுள்ளார்களா?

0
141

தொடர் 02

அல்லாஹ் தனது ‘ஹபீப்’ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை எப்போதாவது அல்லாஹ் என்று சொல்லியுள்ளானா?
எம் பெருமான் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களை எப்போதாவது அல்லாஹ் என்று சொல்லியுள்ளார்களா?
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
மேற்கண்ட தலைப்பில் அல்லாஹ் நபீகள் பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் என்று கூறியுள்ளான் என்பதற்கு
وَمَا رَمَيْتَ إِذْ رَمَيْتَ وَلَكِنَّ اللَّهَ رَمَى
“முஹம்மதே! ஹபீபே! நீங்கள் எறிந்த நேரம் நீங்கள் எறியவில்லை. அல்லாஹ்தான் எறிந்தான்” (திருக்குர்ஆன் 8-17) என்ற வசனத்தை சென்ற தொடரில் ஆதாரமாக எழுதினேன்.
நிலத்திலிருந்து மண்ணை கையால் எடுத்தவர்களும், அதை எதிரிகள் பக்கம் எறிந்தவர்களும் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்தான் என்பதில் எவருக்கும் எந்த ஒரு சந்தேகமும் இருக்க வாய்ப்பு இல்லை. அவ்வாறிருந்தும் கூட எதார்த்தத்திற்கு முரணாக அல்லாஹ் அவ்வாறு சொன்னது ஆழமான பேச்சேயாகும்.
இவ்வாறிருந்தும் கூட எதார்த்தத்தில் மண் எறிந்த எம் பெருமானை நேரில் விழித்து நீங்கள் எறிந்த நேரம் நீங்கள் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான் என்று அல்லாஹ் சொல்லியுள்ளான். இதன் மூலம் எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல் அல்லாஹ்தான் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களாக உள்ளான் என்ற தத்துவம் உணரப்படுகிறது. விளங்கப்படுகிறது.
அல்லாஹ் வேறு, நபீ வேறு – அவன் வேறு, அவர்கள் வேறு என்றிருந்தால் மேற்கண்டவாறு சொல்லியிருக்கமாட்டான். அல்லாஹ்வின் இக்கூற்று غيريّة “ஙெய்ரிய்யத்” வேற்றுமையை நீக்கிவிட்டது.
இவ்விடயத்தை அல்லாஹ்வுக்கும், றசூலுக்கும் இடையில் நடந்த விடயமாக நோக்காமல் மனிதர்கள் இருவருக்கு இடையில் நடந்த விடயமாக நோக்கி சிந்தனை செய்து பார்ப்போம்.
முசம்மில் என்பவன் அப்துல்லாஹ் என்பவனுக்கு கல்லால் எறிந்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொருவன் எறிந்த முசம்மிலிடம் நீ எறியவில்லை, நான்தான் எறிந்தேன் என்று சொன்னால் இவ்வாறு சொன்னவனை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து அங்கோடை மருத்துவ மனைக்கே அனுப்பி வைப்பார்கள். இது எறிந்த முசம்மில் எறியப்பட்ட அப்துல்லாஹ்வுக்கு வேறான ஒருவனாக இருந்தால் மாத்திரம்தான். இதற்கு மாறாக எறிந்த முசம்மில் பலரின் உருவத்தில் தோற்றும் வல்லமை உள்ளவனாக இருந்தால், இதை ஊர் மக்களும் அறிந்திருந்தால் எறிந்தவனை அங்கோடைக்கு அனுப்பமாட்டார்கள். வியந்து பாராட்டுவார்கள்.
இத்திரு வசனத்தில் கூறப்பட்டுள்ள கருத்தை ஒருவன் ஏற்றுக் கொள்வதாயின் அல்லாஹ்தான் படைப்பாக வெளியாகியுள்ளான் என்ற தத்துவத்தை ஆதாரங்களோடு அறிந்து நம்பினவனாக இருத்தல் வேண்டும். இவ்வாறு நம்பினவன் மட்டும் குறித்த திரு வசனம் தருகின்ற இக்கருத்தை நம்புவான். இவ்வாறு நம்பாதவன் இத்திரு வசனத்தை ஏற்றுக் கொள்ளமாட்டான். திருக்குர்ஆனின் ஒரு வசனத்தைக் கூட ஏற்றுக் கொள்ளாதவன் விசுவாசியாயிருக்கமாட்டான். அல்லாஹ் படைப்பாக “தஜல்லீ” வெளியாகி உள்ளான் என்பதை நம்பாததினால்தான் எல்லாம் அவனே என்ற கருத்தை தருகின்ற திருவசனங்களில் பலதை பலர் நம்பாமல் உள்ளனர்.
இத்திரு வசனத்தில் இன்னும் ஒரு நுட்பம் உண்டு. இந்த நுட்பத்தை சரியாக விளங்கிக் கொள்ளாத “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைக்கு எதிரானவர்கள் நான் எழுதப் போகின்ற தத்துவத்தை தமக்குச் சாதகமானதென்று எண்ணி ஏமாந்து போயுள்ளார்கள். அதை இங்கு எழுதி அவர்களை இலவு காத்த கிளிகளாக்கி வைக்கிறேன்.
“நபீயே! நீங்கள் எறிந்த போது நீங்கள் எறியவில்லை. அல்லாஹ்தான் எறிந்தான்” என்ற வசனத்தில் رَمَيْتَ நீங்கள் எறிந்தீர்கள் என்ற சொல்லுக்கு முன்னால் مَا – மா என்று ஒரு சொல் வந்துள்ளது. இது மொழியிலக்கணக் கலையில் نَافِيَةٌ “நாபியா” என்று சொல்லப்படும். இந்த “மா” இல்லை என்ற பொருளுக்குப் பயன்படுத்தப்படும். இதன்படி مَا رَمَيْتَ என்றால் நீங்கள் எறியவில்லை என்று பொருள் வரும்.
இவ்வசனத்தில் مَنْفِيٌّ – “மன்பீ” – இல்லை என்று சொல்லப்பட்டது (நபீF செய்யப்பட்டது) எறிதல் என்ற செயலேயன்றி எறிந்த நபீயவர்களை அல்ல. இதன் சுருக்கம் என்னவெனில் எறிதல் என்ற செயல் அல்லாஹ்வுக்குரியதேயன்றி நபீ பெருமான் அவர்களுக்குரியதல்ல என்பதாகும். இத்திரு வசனத்தின் மூலம் நபீகள் நாயகம் அவர்களுக்கு செயல் இல்லையென்றுதான் கூறப்பட்டுள்ளதேயன்றி அவர்கள் அல்லாஹ் என்று கூறப்படவில்லை. ஆயினும், “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைவாதிகள் எல்லாம் அவனே என்ற தமது கொள்கையை நிலை நாட்டுவதற்காகவும், அல்லாஹ்தான் முஹம்மதாக வெளியாகியுள்ளான் என்பதை நிறுவுவதற்காகவும் இத்திரு வசனத்தை பயன்படுத்துகிறார்கள் என்று “வஹ்ததுல் வுஜூத்” பிழை என்போர் கூறுகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு தெளிவாக்கி கொடுப்பானாக!
நீங்கள் எறிந்த போது நீங்கள் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான் என்ற திரு வசனம் எறிதல் என்ற செயல் அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமானதென்ற கருத்தை உணர்த்தும் வசனம் என்பதை நாங்களும் – “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைவாதிகள் – ஏற்றுக் கொள்கிறோம். இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
ஆயினும் செயல்கள் எல்லாம் அல்லாஹ்வின் செயல்கள் என்பதால் அச் செயல்கள் உருவான – வெளியான “மள்ஹர்” பாத்திரம் அல்லாஹ்வின் செயலில்லை என்று விளங்கிக் கொள்வதே பிழையாகும்.
ஏனெனில் அல்லாஹ் தனது செயல்கள் கொண்டு “படைப்பு” என்ற பாத்திரம் மூலம் வெளியாவதை ஏற்றுக் கொள்ளும் ஒருவர் அந்தப் பாத்திரமான “மள்ஹர்” என்பதும் அவன் வெளிப்பாடு என்றே நம்ப வேண்டும். அது இன்னொருவன் வெளிப்பாடு என்றோ, அல்லது அது அல்லாஹ்வுக்கு வேறான, சுயமான வெளிப்பாடு என்றோ விளங்கிக் கொள்ளுதல் கூடாது.
ஏனெனில் படைப்புகளில் சடமுள்ளவையோ, சடமில்லாதவையோ எதுவாயினும் அது அல்லாஹ்வின் உள்ளமை என்று சொல்லப்படுகின்ற “தாத்” அல்லது “வுஜூத்” உடைய வெளிப்பாடேயாகும்.
படைப்புகள் மூலம் வெளியாகும் செயல்கள் அல்லாஹ்வின் செயல்கள் என்றால் – அவன் தானானவை என்றால் படைப்புக்கள் அவன் தானானவையா? இல்லையா? இக்கேள்விக்கு செயல்கள் அவன் தானானவையாக இருப்பது போல் அச் செயல்கள் வெளியாதவற்கு “மள்ஹர்” பாத்திரமாக இருந்தவர்களும், இருந்தவைகளும் அவன் தானானவர்களும், தானானவையுமேயாகும். எந்தவொரு படைப்பாயினும் அது படைத்தவனின் நேரடி வெளிப்பாடு என்பதில் எதார்த்தவாதிகளிடம் கருத்து வேறுபாடு இல்லவே இல்லை.
ஆகையால் எறிதல் எனும் செயல் அல்லாஹ்வின் செயல் என்றால் அச் செயல் வெளியான படைப்பு அவன் தானானதேயன்றி அவனுக்கு வேறான ஒன்றல்ல.
எனவே, நீங்கள் எறிந்த போது நீங்கள் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான் என்ற வசனம் செயல் எதுவாயினும் அது அல்லாஹ்வின் செயலாக இருப்பது போல் – அதாவது அவன் தானானதாயிருப்பது போல் அச் செயல் வெளியான இடமும் அவன் தானானதென்று விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு விளங்கிக் கொண்டவன் அல்லாஹ் தவிர எதுவுமே இல்லை என்று சொல்வது வியப்பான ஒன்றல்ல. அது எதார்த்தமேதான்.
“ளாஹிர்” வெளியானது என்றும், “மற்ஹர்” வெளியான இடம் என்றும் இரு பெயர்களில் அழைத்துக் கொண்டாலும் இரண்டும் ஒன்றுதான். இரண்டிற்கு இடமே கிடையாது.
உதாரணமாக தங்க மோதிரம் என்றும், தங்கச் சவடி என்றும் நாம் சொல்கிறோம். இவ்வாறு நாம் சொல்லும் போது இரண்டு வஸ்த்துக்களின் பெயர்கள் சொல்லப்பட்டாலும் ஒரேயொரு வஸ்த்து மட்டுமே இருக்கும்.
தங்க மோதிரம் என்று சொல்லும் போது தங்கம் என்றும், மோதிரம் என்றும் இரு வஸ்த்துக்களின் பெயர்கள் சொல்லப்பட்டாலும் இருக்கும் வஸ்த்து ஒன்றே ஒன்றுதான். அதுதான் தங்கம். மோதிரம் என்று தங்கத்திற்கு வேறான ஒரு வஸ்த்து இருக்காது. இவ்வாறுதான் தங்கச் சவடி என்பதுமாகும்.
ظَاهِرْ
“ளாஹிர்” என்றால் வெளியானது என்று பொருள். مَظْهَرْ “மள்ஹர்” என்றால் வெளியான இடம் என்று பொருள். தங்கம் “ளாஹிர்” வெளியானதென்றும், மோதிரம் “மள்ஹர்” வெளியான இடம் என்றும், தங்கம் “ளாஹிர்” வெளியானதென்றும், சவடி “மள்ஹர்” வெளியான இடம் என்றும் சொல்லப்படும். இவை போன்றுதான் படைத்தவனை خَالِقْ “காலிக்” என்றும், படைப்பை مَخْلُوْقْ “மக்லூக்” என்றும் சொல்லப்படும். படைத்தவன் “ளாஹிர்” வெளியானவன் என்றும், படைப்பு “மள்ஹர்” வெளியான இடம் என்றும் சொல்லப்படும்.
தங்கம் வேறு, மோதிரம் வேறு என்றும் தங்கம் வேறு, சவடி வேறு என்றும் சொல்ல முடியாதது போல் அல்லாஹ் வேறு, படைப்பு வேறு என்றும் சொல்ல முடியாது.
அவ்வாறு சொன்னால் இரண்டு உள்ளமை தேவையாகிவிடும். ஒன்று தங்கம். மற்றது மோதிரம் போன்றும், ஒன்று தங்கம், மற்றது சவடி போன்றுமாகும். இவ்விரு உதாரணங்களிலும் இருப்பது தங்கம் மட்டுமேயாகும். ஆகையால் தங்கத்திற்கு மட்டுமே உள்ளமை உண்டு. மோதிரத்துக்கும் உள்ளமை இல்லை, சவடிக்கும் உள்ளமை இல்லை.
 
الأفعال كلها لله، لا لغيره، لأنّ الغير معدوم، والمعدوم لا يتعلّق به الأمر والنّهي
 
படைப்புகளின் எச் செயலாயினும் அச் செயல் படைப்பு என்ற பாத்திரம் மூலம் வெளியாவதால் அச் செயலை அதன் பக்கம் சேர்த்து கத்தி வெட்டியது, நெருப்புச் சுட்டது, மிளகாய் உறைத்தது, சீனி இனித்தது, அவன் குடித்தான், இவன் அடித்தான் என்று செயல்களை படைப்புகள் பக்கம் சேர்த்துச் சொல்வது உலக நடைமுறையேயன்றி எதார்த்தம் அதுவல்ல. எதார்த்தம் செயல்கள் எல்லாம் அவனுக்குரியவையேயாகும்.
ஒரு படைப்பின் மூலம் வெளியாகும் செயல்கள் யாவும் அல்லாஹ்வின் செயல்களாயிருப்பது போல் அந்தப் படைப்பும் அவன் செயலேதான். அவன் வெளிப்பாடேதான்.
“றசூல்” என்ற “மள்ஹர்” மூலம் எறிதல் என்ற செயல் வெளியானதால் றசூல் அவர்கள் எறிந்தார்கள் என்று உலக நடைமுறையின் படி தாராளமாக சொல்ல முடியும். ஆயினும் அல்லாஹ் அச் செயலை றசூல் பக்கம் சேரக்காமல் தன் பக்கம் சேர்த்துச் சொன்னது செயலுக்குரியவன் தானேதான் என்பதை அடியார்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காகவேயாகும்.
எனவே, றசூல் அவர்களின் எறிதல் என்ற செயல் அல்லாஹ்வின் செயல் என்றால் றசூல் அவர்கள் யார்?
 
الموجودات كلها شؤونات الحق تعالى الخارجيّة، والشؤونات كلها ملابس الحق تعالى، واللهُ محيطٌ بكلِّ شيءٍ إحاطةَ الذّهب بالسِّوار، وإحاطةَ القطن بالقميص، وإحاطة الخشب بالكرسيّ، لا كإحاطة القميص باللّابس، ولا كإحاطة الخاتم بالأنملة،
 
படைப்புகள் எல்லாம் அல்லாஹ்வின் “தாத்” அல்லது “வுஜூத்” உள்ளமையிலிருந்து அதை விட்டும் பிரியாமல் வெளியான பின் அவை ஸூபீ மகான்களின் கலைச் சொல்லில் الشؤونات الخارجيّة என்றும், அவ்வாறு வெளியாகுமுன் அவை الشؤونات الذاتيّة என்றும் சொல்லப்படும். அவ்வேளை படைப்புகள் அவனின் உள்ளமையில் மை கூடில் இருக்கின்ற மையில் எழுத்துக்கள் இருந்தது போல் இருந்தன என்று புரிந்து கொள்ள வேண்டும்.
தலைப்பிலுள்ள முதலாம் கேள்விக்கு விடை வந்து விட்டது.
 
தொடரும்…

NO COMMENTS