தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
யார் ஞானம் பேசினாலும் அந்த ஞானம் திருக்குர்ஆனுக்கோ, நபீ மொழிகளுக்கோ, இஸ்லாமிய “அகீதா” கொள்கைக்கோ முரணானதாயின் அது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இவ்வாறு ஞானம் பேசுகின்றவரும் போலியாகவே இருப்பார். “ஷரீஆ”வுக்கு முரணான ஞானமும் இல்லை, ஞானத்திற்கு முரணான “ஷரீஆ”வும் இல்லை.
“ஷரீஆ”வுக்கு முரணான ஞானத்தில் ஒன்று “யகீன்” அல்லாஹ்வின் நம்பிக்கை அல்லது அவனின் ஞானம் ஏற்பட்டால் தொழத் தேவையில்லை என்பது. இது குருட்டு ஞானங்களில் ஒன்றாகும்.
இவ்வாறு ஞானம் பேசுவோர் எல்லா நாடுகளிலும் உள்ளார்கள். நான் இந்தியாவில் இருந்த காலத்தில் அவர்களிற் சிலருடன் தொடர்புள்ளவனாக இருந்துள்ளேன். இதனால் அவர்களின் கொள்கைகள் எனக்கு நன்றாகத் தெரியும்.
இதற்கு குருட்டு ஞானிகள் கூறும் ஆதாரம்
وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ
“உங்களுக்கு “யகீன்” வரும் வரை உங்களின் இரட்சகனை வணங்குங்கள்” என்ற திருமறை வசனமாகும். (திருமறை 15-99)
இவ்வசனத்தில் “யகீன்” என்று ஒரு சொல் வந்துள்ளது. இதற்கு நம்பிக்கை என்று பொருள் கொண்டு நம்பிக்கை வரும் வரைதான் தொழ வேண்டும் அல்லது இறைஞானம் வரும் வரைதான் தொழ வேண்டும். அது வந்து விட்டால் தொழத் தேவையில்லை என்று குருட்டு ஞானிகள் கூறுகிறார்கள். இதுவே இவர்களின் ஆதாரம்.
குருட்டு ஞானிகள் சொல்வது சரியென்று வைத்துக் கொள்வதாயின் மேற்கண்ட திரு வசனம் وَصَلِّ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِيْنُ என்று வந்திருக்க வேண்டும். அதாவது وَاعْبُدْ நீ வணங்கு என்ற சொல் வந்துள்ள இடத்தில் وَصَلِّ நீ தொழு என்ற சொல் வந்திருக்க வேண்டும்.
இக்குருட்டு ஞானிகளுக்கு அறபு மொழி தெரியாதாகையால் وَاعْبُدْ நீ வணங்கு என்ற சொல்லுக்கு நீ தொழு என்று பொருள் வைத்துக் கொண்டார்கள். இந்த ஞானிகளுக்கு وَاعْبُدْ என்ற சொல்லுக்கும், وَصَلِّ என்ற சொல்லுக்கும் பொருளில் வித்தியாசம் இருப்பது விளங்காமற் போயிற்று. وَاعْبُدْ என்றால் நீ வணங்கு என்றும், وَصَلِّ என்றால் நீ தொழு என்றும் பொருள் வரும்.
وَاعْبُدْ
நீ வணங்கு என்ற சொல் தொழுகை உள்ளிட்ட அனைத்து வணக்கங்களையும் உள்வாங்கிய சொல்லாகும். وَصَلِّ என்ற சொல் தொழுகையை மட்டும் குறிக்கும் சொல்லாகும். குறித்த திரு வசனத்தில் وَاعْبُدْ நீ வணங்கு என்றுதான் வந்துள்ளதேயன்றி وَصَلِّ நீ தொழு என்று வரவில்லை.
குருட்டு ஞானிகள் சொல்வது போல் நம்பிக்கை வரும் வரை தொழு, நம்பிக்கை வந்த பின் தொழுகையை விட்டு விடு என்று வைத்துக் கொள்வதாயினும் குறித்த திரு வசனம் وَصَلِّ رَبَّكَ என்றுதான் வந்திருக்க வேண்டும். அவ்வாறு வராமல் وَاعْبُدْ رَبَّكَ என்றுதான் வந்துள்ளது.
குருட்டு ஞானிகள் சொல்வதை நாம் சரிகாண்பதாயின் தொழுகையை மட்டும் விடாமல் “இபாதத்” வணக்கம் என்று சொல்லப்படுகின்ற அனைத்தையும் விட வேண்டும். இதுவே சரி. தொழுகையை மட்டும் விட்டு விட்டு இது தவிரவுள்ள ஏனைய எந்த ஒரு வணக்கமும் செய்யலாகாது.
எனவே, இவர்கள் சொல்வதை சரிகாண்பதாயின் وَصَلِّ رَبَّكَ உனது இரட்சகனை தொழு என்று திரு வசனம் இறங்கியிருக்க வேண்டும். “ஷரீஆ”வின் ஆழ, நீளமும், பாரதூரமும் தெரியாத இக் குருடர்கள் தமது வாதத்தைச் சரியாக்குவதற்காக இவர்களாக وَصَلِّ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِيْنُ என்று ஒரு வசனத்தை அமைத்து அதை 6667ம் வசனமாக பிரகடனம் செய்ய வேண்டும். இது அல்லாஹ்வின் பேச்சு என்று ஆதாரங்களுடன் நிறுவவும் வேண்டும். இதற்கு அவர்களால் முடியாது போனால் தொழுபவர்களை நையாண்டி பண்ணும் வகையில் தொழுகை என்றால் அது என்ன சாமான்? என்று கேட்பதை விட வேண்டும்.
“யகீன்” இறைஞானம் வந்து விட்டால் – இறை விசுவாசம் ஏற்பட்டு விட்டால் தொழத் தேவையில்லை என்று தொழுகையை மட்டும் குறித்துப் பேசாமல் – உளறித் திரியாமல் பொதுவாக “இபாதத்” வணக்கம் அனைத்தையும் விட வேண்டும் என்று சொல்லி அவர்களும் அனைத்து வணக்கங்களையும் விட வேண்டும்.
ஒரு முஸ்லிமை சந்தித்தால் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்வது உள்ளிட்ட, சாப்பிட்ட பின் “அல்ஹம்துலில்லாஹ்” என்று சொல்வது வரையிலான அனைத்து வணக்கங்களையும், மற்றும் மனைவி மக்களை முத்தமிடுவதையும், மனைவியருடன் உடலுறவு கொள்வதையும், மனைவி மக்களுக்காக உழைப்பதையும் நிறுத்த வேண்டும். குறித்த குருடர்கள் இவற்றை விடுவார்களா? நிறுத்துவார்களா?
திருக்குர்ஆன் வசனங்கள் அறபு மொழியில் உள்ளதால் அறபு மொழி தெரிந்த அனைவராலும் இதற்கு விளக்கம் சொல்ல முடியும் என்று கூறுவதும், வாதிடுவதும் அறியாமையாகும்.
மேற்கண்ட وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِيْنُ உங்களின் இரட்சகனை “யகீன்” வரும் வரை வணங்குங்கள் என்ற வசனத்தில் வந்துள்ள “யகீன்” என்ற சொல்லுக்கு “மவ்த்” மரணம் என்று பொருள் கொண்டு குறித்த திருவசனம் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
அதாவது ஒருவன் தனக்கு மரணம் வரும் வரை அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்றும், “ஷரீஆ”வை பேண வேண்டும் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
குருட்டு ஞானிகள் பின்வருமாறு எம்மிடம் ஒரு கேள்வி கேட்கலாம். அதாவது நீங்கள் சொல்வது போல் “யகீன்” என்ற சொல்லுக்கு மரணம் என்று பொருள் கொண்டு உங்களுக்கு மரணம் வரும் வரை உங்கள் இரட்சகனை வணங்குங்கள் என்று விளக்கம் கொள்வது பிழையாகும்.
ஏனெனில் ஒருவனுக்கு மரணம் ஏற்பட்டால் அவனின் வணக்கம் தானாக நின்று விடுமேயன்றி அவனாக அதை நிறுத்துவதில்லையாகையால் وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِيْنُ “உங்கள் இரட்சகனை உங்களுக்கு மரணம் வரும் வரை வணங்குங்கள்” என்று சொல்லத் தேவையில்லை என்று குருட்டு ஞானி ஒருவர் கூறுவாராயின் அவருக்கு நான் கூறும் சுருக்கமான பதில் இதுதான்.
அல்லாஹ் அவ்வாறு சொன்னது உங்கள் போல் திருவசனத்திற்குப் பிழையான கருத்துச் சொல்பவர்களின் நன்மை கருதியேயாகும்.
ஏனெனில் நீங்கள் மரணிக்குமுன் உங்களுக்கு ஞானம் வந்து விட்டால் தொழாமல் விட்டு பாவியாகி விடுவீர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்கும், நீங்கள் நரகம் செல்லாமல் இருப்பதற்குமேயாகும்.
“யகீன்” என்ற சொல்லின் பொருள் மரணம் என்றிருந்தால் குறித்த வசனம் وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْمَوْتُ உங்களுக்கு மரணம் வரும் வரை உங்களின் இரட்சகனை வணங்குங்கள் என்றல்லவா வந்திருக்க வேண்டும். ஏன் அவ்வாறு வரவில்லை? ஆகையால் “யகீன்” என்ற சொல்லை மரணம் என்ற பொருளுக்கு பாவிக்காமல் நம்பிக்கை – இறைஞானம் என்ற பொருளுக்கே பாவிக்க வேண்டுமென்று தமது வாதத்தை நிறுவமுற்படுவர்.
இவர்களுக்கு நான் கூறும் பதில் என்னவெனில் திருக்குர்ஆன் அல்லாஹ்வின் “கலாம்” பேச்சாகும். அது மொழி நாகரிகத்தின் உச்சக்கட்ட அமைப்பில் அருளப்பட்டதுமாகும். அந்த நாகரிக அமைப்பில் உள்ள ஒன்றுதான் மரணத்திற்கு “யகீன்” என்று சொல்வது. மரணம் என்பது உயிரினங்களுக்கு நிச்சயமான ஒன்று என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. ஆகையால் நிச்சயமாக நடக்கும் ஒன்றுக்கு நிச்சயமானது, உறுதியானது என்ற பொருளுக்குரிய “யகீன்” எனும் சொல்லைப் பாவிப்பது நாகரிகமாகும். “யகீன்” கொண்டு மரணம்தான் கருதப்பட்டுள்ளது என்று விளங்கிக் கொள்ள வேண்டும். இது திருக்குர்ஆனின் நாகரிக நடையாகும்.
وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ
என்ற வசனத்தில் வந்துள்ள “யகீன்” என்ற சொல் மரணத்தைக் குறிக்கும் என்றால் அல்லாஹ் மரணம் என்பதற்கு அனைவரும் அறிந்த “மவ்த்” என்ற சொல்லைத்தானே அல்லாஹ் பாவித்திருக்க வேண்டும். அதிகமானவர்களுக்குத் தெரியாத “யகீன்” என்ற சொல்லை ஏன் பாவித்தான்? என்று குருட்டு ஞானி கேட்கலாம். அவருக்கு நான் கூறும் பதில் அவர் திருக்குர்ஆனின் நாகரிக நடையை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகும்.
குருட்டு ஞானி அறபு மொழியே தெரியாதவராயிருந்தால் அவருக்கு அதிலுள்ள நாகரிக நடையை எவ்வாறு கற்றுக் கொடுக்க முடியும்? அவர் எவ்வாறு கற்றுக் கொள்ளவும் முடியும்?
எனவே, அவர் திருக்குர்ஆனின் நாகரிக நடையை அறிய விரும்பினால் முதலில் அறபு மொழியை மட்டும் அறிந்து அதன் பின் நாகரிகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறாயின் அவர் அல்ஜாமிஅதுர் றப்பானிய்யா அறபுக் கலாபீடத்தில் மாணவனாக சேர்ந்து அறபு மொழி கற்க வேண்டும்.
“யகீன்” என்ற சொல்லுக்கு மரணம் என்று பொருள் கொள்ளாமல் ஞானம் என்று பொருள் கொள்ளும் மகா வித்துவான்கள் ஓர் அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். அது புரியாது போனால் எல்லாமே கோணல்தான்.
அது என்னவெனில் திருக்குர்ஆனில் சில சொற்கள் உள்ளன. அவற்றுக்கான வெளிப்படையான, அனைவரும் அறிந்த பொருள் கொள்வதால் ஏற்படுகின்ற முரண்பாடு “ஷரீஆ”வுக்கும் முரண்பாடாகிவிடும். ஆகையால் அச் சொல்லுக்கு வேறு பொருள் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். அவ்வேளை ஒவ்வொருவரும் தனது விருப்பத்திற்கேற்றவாறு விளக்கம் கொள்ளாமல் நபீ தோழர்கள், தாபியீன்கள், மற்றும் இமாம்கள், அறிவுலக மேதைகள், அல்லாஹ்வின் அருள் பெற்ற வலீமார் எவ்வாறு பொருள் கொண்டுள்ளார்கள் என்பதையும் கவனத்திற் கொண்டுதான் செயல்பட வேண்டும். இன்றேல்
مَنْ فَسَّرَ الْقُرْآنَ بِرَأْيِهِ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
எவன் தனது விருப்பத்தின்படி திருக்குர்ஆனுக்கு விரிவுரை கூறினானோ அவன் நரகத்தில் தனக்கென்று ஓர் இடத்தை தயார் செய்து கொள்ளட்டும் என்ற நபீ மொழியின் படி அவன் நரகம் செல்ல நேரிடும்.
நம்மில் ஒருவர் உள்ளார் என்று வைத்துக் கொள்வோம். அவர் சாதாரண ஓர் ஆலிம் மட்டுமேயன்றி இமாம்கள் போல் பரவலான அறிவுள்ளவரல்ல. ஆயினும் இறையச்சம், இறை பக்தி, மார்க்கப்பற்று உள்ளவர்.
இவர் திருக்குர்ஆன் வசனத்திற்கு ஒரு விளக்கம் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இவர் கூறும் விளக்கம் இமாம்களால் எழுதப்பட்ட எந்த ஓர் “தப்ஸீர்” நூலிலும் இல்லை என்றும் வைத்துக் கொள்வோம். கருத்துச் சொன்னவரிடம் அது பற்றி வினவினால் அது என் மனதில் உதித்த கருத்தேயன்றி எவரும் தனக்குச் சொல்லித் தந்த கருத்தோ, எந்த ஒரு நூலிலும் நான் கண்ட கருத்தோ அல்ல என்றும் சொல்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம். இந்நிலையில் அவர் கூறும் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா என்று என்னிடம் ஒருவர் கேட்டால் அவருக்கு பின்வருமாறு நான் பதில் சொல்வேன்.
அவர் கூறும் கருத்து சரியானதா? பிழையானதா? என்று நிறுத்துப் பார்க்கும் தராசு அல்லது உரைத்துப் பார்க்கும் உரை கல் திருக்குர்ஆனும், ஹதீதுகளுமேயாகும்.
கருத்துக் கூறியவன் எவனாயினும் அவனின் கருத்து மேற்கண்ட இரு மூலாதாரங்களில் ஒன்றுக்கேனும் மாற்றமில்லாதிருந்தால் மட்டும்தான் அது ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்தாகும். அவன் கூறிய அதே கருத்தை இன்னொருவர் சொல்லியிருக்க வேண்டுமென்பது அவசியமில்லை.
ஏனெனில் எழுத, வாசிக்கத் தெரியாத, எவரிடமும் கால் மடித்துப் படிக்காத பலர் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களாகவும், ஹதீதுக்கலை மேதைகளாகவும், இறைஞானத்துறையில் பேரறிஞர்களாகவும் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு பலரின் வரலாறுகள் ஆதாரங்களாக உள்ளன.
ஆகையால் கல்லூரிகள் சென்று கல்வி கற்காத, எவரிடமும் கால் மடித்து கல்வி கற்காத “இல்ஹாம்” மூலமும், “கஷ்பு” மூலமும் இறைஞானம் பெற்ற பலர் “குத்பிய்யத்” பதவி பெற்றும், “விலாயத்” எனும் ஒலித்தனம் பெற்றும் வாழ்ந்ததற்கு வரலாறுகள் உள்ளன.
எம் பெருமானார் முஹம்மத் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை விட அறிவிலும், ஆன்மிகப் படித்தரங்களிலும் சிறந்த ஒரு நபரை அல்லாஹ் படைக்கவே இல்லை. அத்தகைய சிறப்புக்குரியவர்களே தொழுகையைப் பேணி வந்துள்ளார்கள் என்றால், அதையே அல்லாஹ்வின் வலீமார்களும் பேணி வழ்ந்துள்ளார்கள் என்றால் நாம் எம்மாத்திரம்?
எனவே, குருட்டு ஞானம் துறந்து உண்மையான மெய்ஞ்ஞான வழி சென்று வாழ்வோம்.
முற்றும்.