தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «أَشَدُّ النَّاسِ بَلَاءً الْأَنْبِيَاءُ، ثُمَّ الْعُلَمَاءُ، ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ»
கடும் சோதனைக்குட்பட்டவர்கள் நபீமார்களாவர். இவர்களை அடுத்தவர்கள் பதவியில் இவர்களை அடுத்த உலமாஉகள் – மார்க்க அறிஞர்களாவர். இவர்களை பதவியில் அடுத்தவர்கள் இவர்களை அடுத்தவர்களாவர். இவர்களை பதவியில் அடுத்தவர்கள் இவர்களை அடுத்தவர்களாவர் என்று நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். (ஆதாரம்: அல்முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன் லில் ஹாகிம்)
“பலாஉன்” – بَلَاءٌ என்ற சொல்லுக்கு சோதனை என்று பொருள் சொல்லப்பட்டாலும் இச் சொல் பொதுவாக துன்பம், துயரம், கஷ்டம், நஷ்டம், நோய், வறுமை போன்ற மனதுக்கு கவலை தருகின்ற அனைத்தையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும். இது தவிர இது நோயை மட்டும் குறிக்காது. சிலர் இச் சொல்லுக்கு நோய் என்று மட்டும் பொருள் கூறுவர். இது தவறு.
மனிதர்களில் மிகச் சிறந்தவர்களும், அதியுயர் பதவியில் உள்ளவர்களும் நபீமார்தான். இவர்களை அடுத்தவர்கள் மார்க்க அறிஞர்கள் – உலமாஉகளாவர். அதாவது அல்லாஹ்வும், றஸூல் அவர்களும் எவர்களை “உலமாஉ”கள் என்று கருதுகிறார்களோ அவர்களாவர். உலமாஉகள் என்று நாம் சொல்பவர்களல்லர். உலமாஉகளை அடுத்து பதவிகளில், படித்தரங்களில் உயர்ந்தவர்களாவர்.
இம் மூன்று பிரிவினரும் கடுமையான சோதனைகளுக்குட்பட்டவர்களாவர் என்று முன்னறிவிப்புச் சொன்னவர்கள் எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களேயாவர்.
நபீமார் மனிதர்களாயிருந்தாலும் கூட அவர்களுக்கு குஷ்டம், பைத்தியம், முடம் போன்ற பயங்கர வியாதிகளும், மனிதர்கள் நெருங்க விரும்பாத அருவருக்கத்தக்க நோய்களும் ஏற்படமாட்டா. இது ஒரு பொது விதி.
எனினும் தடிமல், காய்ச்சல், பல் வலி, வயிற்று வலி போன்ற சிறிய நோய்கள் வரலாம்.
ஆகையால் நபீமார் சோதனை கடுமையானவர்கள் என்றால் அவர்கள் பயங்கர, அருவருக்கத்தக்க நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்று விளங்கிக் கொள்வது தவறாகும்.
நபீ யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களின் அருமை மகன் யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை இழந்ததால் அவர்கள் அழுதழுது அவர்களின் கண் பார்வை இல்லாமற் போய் அவர்கள் குருடனாகிவிட்டார்கள் என்று வரும் வசனத்துக்கு அவ்வாறே பொருள் கொள்ளாமல் பார்வையில் சற்றுத் தெளிவின்மை ஏற்பட்டது என்று பொருள் கொள்வதே பொருத்தமானதாகும். குருடாகிவிட்டார் என்று பொருள் கொள்வது “அகீதா” கொள்கைக்கு முரணானதாகும்.
நபீமார் வரலாறுகளில் எவரும் குருடாயிருந்ததாகவோ, ஊமையாயிருந்ததாகவோ, குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவோ நம்பத் தகுந்த எந்த ஓர் ஆதாரமும் கிடையாது.
நபீ ஐயூப் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொறி, சிரங்கு ஏற்பட்டு உடல் அழுகி அதில் புழுக்கள் ஏற்பட்டதாகவும், சில வேளை புழுக்கள் தவறிக் கீழே விழுந்தால் அவற்றை எடுத்து மீண்டும் உடலில் வைத்துக் கொண்டதாகவும், அவர்களின் உடலில் துர் நாற்றம் வீசியதாகவும், இதனால் மக்கள் அவர்களை நெருங்கவில்லை என்றும் பொய்யான வரலாறொன்று சிலரால் சொல்லப்படுகிறது. இது “அகீதா” இஸ்லாமிய கொள்கைக்கு முற்றிலும் முரணானதாகும். இவ்வாறான வரலாறுகளை வாசித்து நபீமார் மீது தவறான எண்ணம் கொள்வது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
திருக்குர்ஆனில்,
وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
“இன்னும் ஐயூப் நபீ தம் இறைவனிடம் இறைவா! நிச்சயமாக என்னை ஒரு கஷ்டம் தொட்டு விட்டது. நீ இரக்கமுள்ளவர்களில் மிகவும் இரக்கமுள்ளவனாக உள்ளாய் என்று பிரார்த்தித்த போது” என்று திருக்குர்ஆனில் ஒரு வசனம் வந்துள்ளது. இவ்வசனம் “அன்பியா” அத்தியாயம் 83வது வசனமாகும்.
இவ்வசனத்திற்கு விளக்கம் எழுதிய சிலர் மேற்கண்டவாறு – அதாவது அவர்களின் மேனி புழுத்ததாக விளக்கம் எழுதியிருப்பது தவறாகும். இது “அகீதா” கொள்கைக்கு முரணான விளக்கமாகும்.
திரு வசனத்தில் வந்துள்ள “அழ்ழுர்று” என்ற சொல் கஷ்டம், சங்கடம் என்ற பொருளுக்குரியதாகும். திரு வசனத்தில் அது என்ன கஷ்டம் என்ற விபரம் கூறப்படவில்லை. யாரோ ஒருவர் இதை இழிவான, பயங்கர நோயென்று எழுதியுள்ளார் போலும். யாரால் எழுதப்பட்டிருந்தாலும் இஸ்லாமிய “அகீதா” கொள்கைக்கு முரணான எந்த ஒரு வரலாறையும் ஏற்றுக் கொள்ள முடியாதென்பதே கொள்கை பேசும் அறிஞர்களின் முடிவாகும்.
நபீமார் கடுமையான சோதனைக்குள்ளானவர்கள் என்பது உண்மைதான். ஆயினும் அச்சோதனை அவர்களின் எதிரிகளால் ஏற்பட்ட துன்பங்களையும், துயரங்களையும், வன்முறைகளையும், அடக்கு முறைகளையும் குறிக்குமேயன்றி இழிவான பயங்கர நோய்களைக் குறிக்காது.
நபீமாருக்கு அவர்களின் எதிரிகளால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கும், துன்ப துயரங்களுக்கும் காரணம் பொறாமையும், நபீமாரின் ஏகத்துவப் பிரச்சாரமுமேயாகும்.
எந்த ஒரு நபீயாயினும் அவர்களின் “உம்மத்” சமூகம் தாம் கண்டதையெல்லாம் வணங்கி வழிபட்டவர்களாகவே இருந்தார்கள். சிலர் சூரியனை வணங்கி வழிபட்டு வந்தார்கள். இன்னும் சிலர் நெருப்பை வணங்கி வழிபட்டு வந்தார்கள். வேறு சிலர் சிலைகளை வணங்கி வழிபட்டு வந்தார்கள்.
இவ்வாறான சூழலில் அல்லாஹ்வால் அனுப்பி வைக்கப்பட்ட நபீமார் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாவையே தமது இலட்சியமாகக் கொண்டு செயல்படலானார்கள்.
நபீ பெருமானாருக்கு முன் வந்த நபீமார் அனைவரும் அறபிகளாகவே இருந்தார்கள் என்பது கருத்தல்ல. அவர்களிற் பலர் பல்வேறு மொழி பேசுபவர்களாக இருந்துள்ளார்கள் என்பதற்கு வரலாறுண்டு.
எந்த நபீ என்ன மொழி பேசுபவராக இருந்தாலும் அவருக்கு வழங்கப்பட்ட திருக்கலிமா அறபு மொழியிலேயே அருளப்பட்டது. அதுவே, لا إله إلّا الله “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனமாகும்.
நபீ பெருமானார் அவர்களும், அவர்களுக்கு முன் தோன்றிய நபீமாரும் ஏகத்துவத்தை நிலை நாட்ட பயன்படுத்திய வசனம் மேற்கண்ட இவ்வசனமேதான். உலகில் தோன்றிய ஓர் இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபீமார்களும் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்தை மொழிந்தவர்கள் மட்டுமன்றி அதை தமது ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு அத்திவாரமாகவும் அமைத்துக் கொண்டர்களுமேயாவர். நானும், எனக்கு முன் வாழ்ந்த நபீமாரும் சொன்ன வசனங்களில் மிகச் சிறந்த வசனம் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற நபீ மொழி இதை உறுதி செய்கிறது.
நபீமார் தமது எதிரிகளால் கடும் சோதனைக்குள்ளானதற்கான பிரதான காரணம் அவர்கள் கூறிய இறை தத்துவமேயாகும். இதை மையமாகக் கொண்டுதான் எதிர்ப்பு ஏற்பட்டதேயன்றி நபீமார் நீதி, நியாயம் இல்லாதவர்கள் என்றோ, அநீதியாளர்கள் என்றோ, சுய நலவாதிகள் என்றோ எதிரிகள் அவர்களைக் குறை கூறவுமில்லை. எதிர்க்கவுமில்லை. கொள்கை ஒன்று மட்டுமே எதிரிகளுக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தது.
ஏன் அவர்களுக்கு நபீமாரின் கொள்கை பிடிக்கவில்லை என்றால் அவர்கள் அனைவரும் “லா இலாஹ இல்லல்லாஹ்” எல்லாம் அவனே என்ற தத்துவத்தை பிழை என்று கருதியதேயாகும். இன்று வாழும் உலமாஉகளிற் பலரும், பொது மக்களில் அதிகமானோரும் அவர்கள் கருதியது போன்றே கருதுகிறார்கள். இதனால்தான் திருக்கலிமாவுக்கு நான் இன்று சொல்லிக் கொண்டிருக்கின்ற “எல்லாம் அவன்” என்ற ஸூபிஸ தத்துவத்தை மறுத்து வருவது மட்டுமன்றி என்னையும், நான் கூறி வருகின்ற தத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களையும் மதம் மாறியவர்கள் என்றும், எம்மனைவரையும் கொலை செய்ய வேண்டுமென்றும் கூறுகிறார்கள். என்னுடனிருந்த மௌலவீ பாறூக் காதிரீ என்பவரை கொலை செய்தும் காட்டிவிட்டார்கள். இன்றும் என்னுடன் இருப்பவர்களை கொன்றொழிக்கவும் நினைக்கிறார்கள். ஆனால் அவர்களால் முடியாமலேயே உள்ளது.
நபீமாரை எதிர்த்தவர்களால் அவர்கள் கூறிய தத்துவத்தை நம்ப முடியாமற் போனதற்குப் பல காரணங்கள் கூறலாம். அவற்றில் ஒன்று அறியாமை எனலாம். ஸூபீகள் கூறிய இந்த தத்துவத்தையே இன்றுள்ள முஸ்லிம்களில் அதிகமானோர் மறுத்தும், எதிர்த்தும் வருகிறார்கள். இதற்கு அறியாமை காரணம் என்பது உண்மைதான். ஆயினும் இது மட்டுமே காரணமாயிருந்தது என்றும், இருக்கிறது என்றும் கொள்ளவும் முடியாது, சொல்லவும் முடியாது.
ஏனெனில் عَوَامْ பொது மக்கள், அல்லது சாதாரண மக்கள் என்று சமூகம் அழைக்கின்ற ஒரு கூட்டம் எக்காலத்திலும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
“அவாம்” சாதாரண மக்கள் என்று படிக்காதவர்களும், குறிப்பாக மார்க்க அறிவு தெரியாதவர்களுமே கருதப்படுகிறார்கள். கணிக்கப்படுகிறார்கள். இப் பொது மக்கள் தமக்கு விளங்காதவற்றை மட்டும் மறுப்பதில்லை. இதை மறுப்பதோடு நின்றுவிடாமல் சமூகத்தில் பொதுவாக படித்தவர்கள் என்றும், மார்க்க வாதிகள் – உலமாஉகள் என்றும் கருதப்படுபவர்கள் மறுப்பதையும் மறுப்பவர்களாகவே உள்ளார்கள். இதை நாம் இக்காலத்தில் பொதுவாக எல்லா விடயங்களிலும், குறிப்பாக இவ்விடயத்திலும் காண்கிறோம். ஏனெனில் பொது மக்கள் பொதுவான அறிஞர்களையும், மார்க்க அறிஞர்களையும் நம்புவதேயாகும்.
அப்துல்லாஹ் காக்கா ஆனாவும் தெரியாத, அலிபும் தெரியாத ஒரு பாமரன். தினமும் கைத் தொழில் செய்து கஷ்டங்களை அனுபவித்து வாழ்ந்து வருபவன். தனது வறுமை காரணத்தால் தொழுகை போன்ற தன் மீது கடமையானதைக் கூட செய்ய முடியாத சூழ் நிலையில் வாழ்ந்து வருபவன். சிந்தனை என்றாலே என்னவென்று தெரியாதவன்.
இவனிடம் அப்துஸ்ஸமது காக்கா சென்று றஊப் மௌலவீ “எல்லாம் அல்லாஹ்” என்று சொல்கிறார். இதனால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று சொன்னால் ஆனாவும், அலிபும் தெரியாத அப்துல்லாஹ் காக்கா வலது பக்கமும், இடது பக்கமும் பார்த்து விட்டு அவ்வாறு சொன்ன சமது காக்காவிடம் நாயும், பூனையும் கூட அல்லாஹ் என்றா சொல்கிறார் என்று வியந்தவனாக கேட்கிறான். அதற்கு சமது காக்காவும் இவன் போல் வலதிலும், இடதிலும் பார்த்து விட்டு ஆம், மலத்தையும், சலத்தையும் மட்டுமல்ல. எல்லாமே அல்லாஹ்தான் என்று சொல்கிறார் என்று சொன்னான்.
ஆனாவும் தெரியாத, அலிபும் தெரியாத அப்துல்லாஹ் காக்கா அதே நேரத்திலிருந்து றஊப் மௌலவீக்கு எதிரியாக மாறிவிட்டார்.
இவ்வாறு தான் ஆனாவும், அலிபும் தெரியாதவர்கள் சமது காக்கா போன்ற உலமாஉகளாலும், எனது எதிரிகளாலும் மாற்றப்பட்டுமுள்ளார்கள். மாற்றப்பட்டும் வருகின்றார்கள்.
அப்துல்லாஹ் போல் ஆனாவும், அலிபும் தெரியாதவர்களில் நூறு வீதமானோர் இவ்வாறு மாற்றப்பட்டவர்களேயாவர்.
இன்னும் சிலர் உளர். இவர்கள் மார்க்கம் கற்ற ஆலிம்கள் அல்லர். எனினும் பொதுவாகப் படித்தவர்கள். சிந்திக்கக் கூடியவர்கள். ஆய்வு செய்பவர்கள். இவர்களிலும் சிலர் மார்க்க அறிவோடு தொடர்புள்ளவர்கள். இவர்கள் சிந்திக்கின்றார்கள். ஆய்வு செய்கிறார்கள். எனினும் தமது ஆய்வில் நான் கூறும் தத்துவம் 50 வீதம் சரி என்று விளங்கினாற் கூட சமூகத்தைப் பயந்து சந்தர்ப்ப சூழ் நிலைக்கேற்றவாறு நடந்து கொள்வார்கள். சுருங்கச் சொல்வதாயின் 70 வீதம் என்னைப் பிழை காண்பவர்களுடன் சேர்ந்து செயல்படுவார்கள்.
மார்க்கம் கற்ற உலமாஉகளில் 90 வீதமானோர் வெளிப்பார்வையில் என்னைப் பிழை காண்பவர்களாகவே உள்ளனர். எனினும் இவர்களிற் சிலர் பகிரங்கமாக எனக்கு ஆதரவாளர்களாகவும், பலர் மறைமுக ஆதரவாளர்களாகவும் உள்ளனர். இவர்களில் மிகக் குறைவானவர்கள் எவருக்கும் தெரியாமல் இரகசியமாக என்னிடம் வந்து குறித்த தத்துவத்தை கற்றுக் கொள்பவர்களாகவும் உள்ளனர்.
நான் பேசுவது பிழை என்றும், நானும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா “பத்வா” வழங்கியதால் பொது மக்களில் அதிகமானோர் உலமா சபையின் கருத்தை சரி காண்பவர்களாகவே உள்ளனர். இது மனித சுவாபமேயாகும். இதனால் பொது மக்களைக் குறை காண முடியாதுள்ளது.
ஒரு விடயம் எதார்த்தத்தில் பிழையாக இருந்தாலும் கூட மக்களில் அதிகமானோர் அதை ஆதரிப்பார்களாயின் அந்தப் பக்கம் அதிகமானோர் சாய்ந்து போவதும், சார்ந்து போவதும் உலக வழக்கிலுள்ள ஒன்றாகிவிட்டது. மனிதர்கள் சாய்ந்தால் சாயிற பக்கம் சாயிற செம்மறி ஆடுகள் போன்றவர்கள் என்ற ஒரு கவிஞனின் கவி கருத்தாழம் நிறைந்ததாகும்.
ஒரு மனிதன் நடக்கும் போது தனது இரு கைகளையும் முன்னும், பின்னும் ஆட்டி அசைத்து நடப்பதும் இது போன்ற கதையேதான். நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களின் மனைவியும் தமது கைகளை ஆட்டி அசைத்து நடந்ததினால் அவர்களின் பிள்ளைகளும் அவ்வாறு நடக்கிறார்கள் போலும்.
«أَشَدُّ النَّاسِ بَلَاءً الْأَنْبِيَاءُ، ثُمَّ الْعُلَمَاءُ، ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ»
என்ற நான் தலைப்பில் எழுதியுள்ள நபீ மொழி மார்க்க விடயத்தில் எதிரிகளால் சோதிக்கப்பட்டவர்கள் சிறந்தவர்கள் என்பதற்கான பெருமானார் அவர்களின் சுபச் செய்தியாகும். இந்த வகையில் நான் நபீ பெருமானின் சுபச் செய்தி பெற்றவன் என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். அல்ஹம்து லில்லாஹ்!
السامي – لفظ مشتقّ من سَمَا يَسْمُو، المراد بِفُومي – القلب