தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
1965ம் ஆண்டு நான் மார்க்க கல்வி கற்பதற்காக இந்தியா – தமிழ் நாடு மாயவரம், நீடூர் “மிஸ்பாஹுல் ஹுதா” அறபுக் கல்லூரிக்குச் சென்றேன். தப்ஸீர் பைழாவீ, அகாயிதுன் நஸபீ இரு நூல்களிலும் நேர்முகப் பரீட்சையில் சித்தி பெற்று இறுதி ஆண்டு மௌலவீ வகுப்பில் சேர்ந்து கல்வி கற்கத் தொடங்கினேன். ஒரு வருடம் தொடர்ந்து அதே வகுப்பில் கல்வி கற்றேன். மௌலவீ பட்டமளிப்பு விழாவில் கலந்து “மௌலவீ மிஸ்பாஹீ” பட்டமும் பெற்றேன். எனது வகுப்பில் 13 மாணவர்கள் இருந்தார்கள். என்னுடன் இலங்கை மாணவர் ஒருவரும் இருந்தார். ஏனைய மாணவர்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். பட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. “மௌலவீ மிஸ்பாஹீ” தராதரப்பத்திரமும் கிடைத்தது.
நான் கல்வி கற்ற காலத்தில் “ஸத்றுல் முதர்ரிஸீன்” தலைமை ஆசிரியராக கேரளா, புது நகரத்தைச் சேர்ந்த அஷ்ஷெய்கு அப்துல் ஹமீத் பாகவீ றஹிமஹுல்லாஹ் அவர்களும், தமிழ் நாடு மாங்குடியைச் சேர்ந்த அஷ்ஷெய்கு ஷம்ஸுல் ஹுதா பாகவீ றஹிமஹுல்லாஹ் அவர்களும், தமிழ் நாடு நாச்சி குளம் அஷ்ஷெய்கு செய்னுத்தீன் மிஸ்பாஹீ – பாகவீ றஹிமஹுல்லாஹ் அவர்களும், இன்னும் பலரும் துணை ஆசிரியர்களாக இருந்தனர். மேலே நான் பெயர் குறிப்பிட்டவர்களிடம் நான் கல்வி கற்றேன். இவர்கள் அனைவரும் மரணித்து விட்டார்கள். اللهم اغفر لهم وارحمهم
நான் இந்தியாவில் கற்கச் செல்லுமுன் இலங்கை, காலி “பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா” அறபுக் கல்லூரியில் 1958 முதல் 1964 வரை கல்வி கற்றேன். அதிபராக அஷ்ஷெய்கு அப்துல் ஹமீத் பஹ்ஜீ றஹிமஹுல்லாஹ் அவர்களும், துணை ஆசிரியர்களாக அஷ்ஷெய்கு அப்துஸ்ஸமத் பஹ்ஜீ – பலகீ அவர்களும், அஷ்ஷெய்கு முஹம்மத் தாலிப் அவர்களும், அஷ்ஷெய்கு அஜ்வாத் ஆலிம் பஹ்ஜீ அவர்களும் இருந்தார்கள். இவர்கள் அனைவரும் மரணித்துவிட்டார்கள். றஹிமஹுமுல்லாஹ். اللهم اغفر لهم وارحمهم
நான் இந்தியா மிஸ்பாஹுல் ஹுதாவில் கல்வி கற்று முடிந்த பின் வேலூர் “பாகியாதுஸ் ஸாலிஹாத்” அறபுக் கல்லூரி சென்று அங்கு உர்து மொழி கற்பதற்கும், “மன்திக்”, “மஆனீ” கற்பதற்கும் விரும்பி அதற்கான ஏற்பாடு செய்ததை அறிந்த “மிஸ்பாஹுல் ஹுதா” அறபுக் கல்லூரி அதிபர் என்னை அழைத்து நீங்கள் மௌலவீ மிஸ்பாஹீ ஆகிவிட்டீர்கள். நீங்கள் இன்னும் ஒரு வருடம் இங்கேயே தங்கியிருந்து “மௌலவீ பாஸில்” வகுப்பில் கற்றீர்களாயின் நல்லது என்று ஆலோசனை வழங்கினார். அவரின் ஆலோசனைப் படி மீண்டும் ஒரு வருடம் அங்கேயே தங்கியிருந்து “ஸிஹாஹ் ஸித்தா” எனும் ஸஹீஹான ஆறு கிரந்தங்களையும் கற்று முடித்து “மௌலவீ பாஸில்” பட்டமும் பெற்றேன். அல்ஹம்துலில்லாஹ்!
தமிழ் நாட்டில் இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. எனினும் “உர்து” மொழி கற்க வேண்டும் என்ற விருப்பம் என்னை விடவில்லை. எங்கு சென்று “உர்து” மொழி கற்றுக் கொள்ளலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது பெங்களூர் “ஸபீலுர் றஷாத்” கல்லூரி சென்றால் கற்றுக் கொள்ள முடியும் என்று சிலர் ஆலோசனை கூறினார்கள். அதன்படி அங்கு சென்றேன். அங்கு சென்ற பிறகுதான் அது “தப்லீக் மத்ரஸா” என்பது எனக்கு தெரிய வந்தது. அங்கு கல்வி கற்க விரும்பாத நான் ஐந்து நாட்கள் மட்டும் அங்கு தங்கியிருந்து வகுப்புகளுக்குச் சென்று அவதானித்த வகையில் அது வஹ்ஹாபிஸத்திற்கு ஆதரவான கல்லூரி என்பது எனக்குத் திட்டமானது.
அங்கிருந்து வெளியேறி வேலூர் “பாகியாதுஸ் ஸாலிஹாத்” அறபுக் கல்லூரி வருவதற்கு விரும்பினேன். அந்நேரம் என் கையில் பயணத்திற்கான பண வசதி கூட இருக்கவில்லை. சுமார் 15 ரூபாய் மட்டும் இருந்தால் பயணிக்கலாம். யாரிடம் கேட்பது? யார் தருவார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அவ்வேளை என்னிடம் புதிதாக வாங்கிய, பாவிக்காத இரு “டவல்”கள் இருந்தன. அவ்விரண்டையும் பத்து ரூபாவிற்கு வாங்கியிருந்தேன். அவற்றை எட்டு ரூபாய்க்கு விற்றேன். பயணிக்க பணம் போதாமலிருந்தது.
பெங்களூர் புகையிரத நிலையம் வந்தேன். “டிக்கட்” எடுப்பதற்கு 15 ரூபாய் தேவையாயிருந்தது. ரயில் நிலையத்தில் இந்து மத குடும்பம் ஒன்று ஏதோ ஒரு ரயிலை எதிர்பார்த்து இருந்தார்கள். அவர்களை அணுகி எனது தேவையைக் கூறினேன்.
குடும்பத் தலைவன் உங்களிடம் உள்ள சிறிய தொகைப் பணத்தை செலவுக்காக வைத்துக் கொள்ளுங்கள். நான் பயணச் சீட்டு எடுத்து தருகிறேன் என்று கூறி எடுத்துத் தந்தார். அல்லாஹ் ஒரு இந்துவின் தோற்றத்தில் வெளியாகி உதவினான். அல்ஹம்து லில்லாஹ்!
வேலூர் “பாகியாதுஸ் ஸாலிஹாத்” அறபுக் கல்லூரிக்கு வந்தேன். கல்லூரி மூடப்பட்டிருந்தது. ஊரிலுள்ள ஹோட்டல்கள், கடைகளும் மூடப்பட்டிருந்தன. வினவினேன். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ் நாட்டில் நடைபெற்று வருகின்றது என்றும், முடியும் வரை கடைகள் மூடப்பட்டே இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.
சாப்பிடுவதற்கு ஹோட்டல்கள் இல்லை. தங்குவதற்கும் இடமில்லை. மலசலம் கழிப்பதற்கும் இடமில்லை. இந்நிலையில் “முஸாபிர் கானா”வில் இடமிருந்ததால் அங்கு சென்று ஏழு நாட்கள் தங்கியிருந்தேன். ஒரு வேளை உணவு மட்டும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. பசியோடும், தாகத்தோடும் ஏழு நாட்கள் நகர்ந்தன. பின்னர் ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது. அன்று என்னைப் பிரிந்த உயிர் என்னிடம் வந்தது போல் இருந்தது. கல்லூரி திறக்கப்ட்டது. அங்கு என் பெயரைப் பதிவு செய்து மாணவனாகச் சேர்ந்து கொண்டேன். என்னிடம் மௌலவீ தராதரப் பத்திரமும், மௌலவீ பாஸில் தராதரப் பத்திரமும் இருந்ததால் “முதவ்வல்” வகுப்பில் சேர்ந்து கற்றுக் கொள்ளுமாறு “உஸ்தாது”மார்கள் ஆலோசனை கூறினார்கள். எனினும் அதை நான் விரும்பவில்லை. நான் அதிபரிடம் சென்று, நான் எந்த வகுப்பிலும் சேராமல் நான் விரும்பிய பாடங்களுக்கு மட்டும் சென்று அவற்றைக் கற்றுக் கொள்வதற்கும், உர்து மொழி கற்பதற்கும் விரும்புகிறேன் என்று கூறினேன். அவர் அனுமதி வழங்கினார். நான் எனக்கு விருப்பமான வகுப்புகளுக்கு மட்டும் சென்று “மன்திக்” கலையிலும், “மஆனீ” கலையிலும் ஓரளவு கற்றேன். அதோடு “உர்து” மொழியையும் ஓரளவு கற்றுக் கொண்டேன். ஒரு வருடம் வரை அங்கு கற்றேன்.
இவ்வாறு மூன்றாண்டுகள் கடந்து விட்டன. கடந்த மூன்றாண்டுகளிலும் தமிழ் நாட்டில் அடக்கம் பெற்றுள்ள வலீமாரின் தரிசனத்திற்காகவும் சென்றுள்ளேன்.
முதலில் திருச்சியில் அடக்கம் பெற்றுள்ள “றூம்” ரோமாபுரி மன்னர் தப்லே ஆலம் பாதுஷா றஹிமஹுல்லாஹ் அவர்களின் தரிசனத்திற்காக திருச்சி சென்று “தர்ஹா”வை அடைந்தேன். அங்கு சில மணி நேரங்கள் தங்கியிருந்து அவர்களைத் தரிசித்தேன்.
இவர்கள் ரோமாபுரி மன்னர். மன்னராயிருந்தாலும் இவர்களை இறை காதல் ஆட்கொண்டது. ஒரு நாள் தனது அரண்மனை மாடியிலிருந்த வேளை பாதையில் ஒரு “ஜனாஸா” பிரேதத்தை மக்கள் தூக்கிச் செல்வதைக் கண்டு தானும் என்றாவதொரு நாள் மரணிக்கவே போகின்றேன், இவ்வாறு சுமக்கப்படவே போகிறேன் என்றுணர்ந்தார்கள். நாள் செல்லச் செல்ல அவர்களின் அவ் உணர்வு வலுப்பெற்று செயலில் இறங்கத் தொடங்கினார்கள்.
ஒரு நாள் தப்லே ஆலம் பாதுஷா நடு நிசியில் எழுந்து தனது தாயாரின் படுக்கை அறை வந்து தாயே! நான் மன்னர் பதவியைத் துறந்து துறவியாகப் போகிறேன் என்று அழுகை குரலில் கூறினார்கள். ஏன் மகனே! உனக்கு என்ன நடந்தது? என்று வினவினார் தாய். அதற்கவர்கள் தாயே! நான் அல்லாஹ்வின் பால் செல்வதற்கு முடிவு செய்து விட்டேன். என்னை வாழ்த்தி அனுப்புங்கள் என்று தாயின் மடி பிடித்து வேண்டி நின்றார். அல்லாஹ்வின் பாதையில் செல்ல நாடியவருக்கு தான் தடையாக இருக்கக் கூடாதென்று உணர்ந்த தாய் அன்பு மகனே! சென்று வாரீர்! வெற்றி பெற்று வாழ்வீர் என்று வாழ்த்தினார்.
தப்லே ஆலம் பாதுஷா வழமையான அரச உடையின்றி தனது தோற்றத்தையும், உடையையும் மாற்றிக் கொண்டு ஒரு “பகீர்” இன் கோலத்தில் காவற் காரர்களின் கண்களை கட்டிவிட்டு வெளியேறி நாடுகள் பலவும், காடுகள் பலவும் கடந்து இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள திருச்சி நகர் வந்து அங்குள்ள மலையொன்றில் ஏறி தவமிருந்தார்கள்.
இந்து ஞானியின் சீற்றம்!
அந்த மலை மீது நீண்ட காலமாக இந்து மத ஞானியொருவர் தவமிருந்து வந்தார். இவர் ஆறு மாதத்தில் ஒரு தரம் கண் திறந்து பார்த்து விட்டு மீண்டும் மூடிக் கொள்வார் என்று சொல்லப்படுகிறது. இவர் கண் விழிக்கும் நேரம் காத்திருந்து இவருக்குப் பால் பழம் கொடுப்பதற்காக பக்தர்கள் திரண்டு நிற்பார்களாம். தனக்கு வைக்கப்பட்டுள்ள பால் கோப்பைகளில் தான் விரும்பிய ஒரு கோப்பையை குடித்துவிட்டு மீண்டும் கண்ணை மூடிக் கொள்வார் அந்த ஞானி.
ஒரு தரம் கண் விழித்த ஞானி கண்ணை அகல விரித்து மலையைப் பார்த்தார். அங்கு முஸ்லிம் ஞானியொருவர் தவம் இருப்பது கண்டு கோபமுற்று முஸ்லிம் ஞானியிடம் இது எனக்குரிய மலை, நீங்கள் எங்காவது சென்று தவமிருங்கள். இங்கு இருக்க வேண்டாம் என்று கடிந்து கொண்டார். அதற்கு தப்லெ ஆலம் பாதுஷா நான் ஒரு பரதேசி. எனக்கு இங்கு சொந்தமான இடம் ஒன்றுமே கிடையாது. நான் எங்கே இருப்பது? என்று அவர்களும் சூடாக பதில் கொடுத்தார்கள்.
இறுதியில் இவ்விவகாரம் திருச்சியை அவ்வேளை ஆட்சி செய்து கொண்டிருந்த இந்து மன்னனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. முஸ்லிம் ஞானி மலையிலிருந்து வெளியேற வேண்டும் என்று அரசன் கட்டளை பிறப்பித்தான். அரச கட்டளையை அலட்சியம் செய்தது போல் அசையாமல் இருந்தார்கள் மன்னர் பாதுஷா. அவன் படைகளை அனுப்பி மலையை விட்டும் விலகிச் செல்லுமாறு கட்டளையிட்டான். அவ்வாறே செய்தனர் படை வீரர்கள். படைகளாலும் அவரை வெளியேற்ற முடியாமற் போனதால் அரசன் குதிரை மீதேறி மலைக்கு வந்தான். அவனிடம் உனது நாட்டில் ஆறடி நிலம் தந்தால் நான் வெளியேறுவேன். இன்றேல் ஓர் அங்குலம் கூட அகலமாட்டேன் என்றார் பாதுஷா.
நல்லது தருகிறேன். எந்த இடம் வேண்டுமென்று அரசன் கேட்க, தனது கையிலிருந்த ஜெப மாலையை – தஸ்பீஹ் மாலையை சுட்டி இதை நான் எறிகிறேன். இது எங்கு விழுகிறதோ அவ்விடம் எனக்குத் தரப்பட வேண்டும் என்று கேட்டார் பாதுஷா. அரச ஒப்பந்தம் எழுதப்பட்டது.
தப்லே ஆலம் பாதுஷா தனது கையிலிருந்த ஜெபமாலையை ஒரு விரலால் சுழற்றி எறிந்தார்கள். திருச்சி மா நகரமே நடுங்கும் வகையில் அந்த ஜெப மாலை பறந்து சென்று அன்று திருச்சியிலிருந்த மிகப் பெரிய கோவில் ஒன்றில் நுழைந்து தலைமைத் தெய்வமாக மதிக்கப்பட்டு வந்த சிலையின் கழுத்தில் மாலையாய் விழுந்தது.
ஸுப்ஹானல்லாஹ்! இவ்வுலகில் ஆன்மிகத்தை எதிர் கொண்டு வென்றவர் யார்? பாதுஷாவின் ஜெப மாலையே திருச்சி நகர் வாழ்ந்த பல்லாயிரம் மக்களை ஏகமுமாய்த் தோற்றும் இணையற்ற அல்லாஹ்வின் பக்கம் திருப்பி விட்டது. அப் பிரதேசத்தின் அரசன் செய்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
தப்லே ஆலம் பாதுஷா தனது விரலால் சுழற்றி எறிந்த ஜெபமாலை – தஸ்பீஹ் – எந்தக் கோவிலின் சிலையின் கழுத்தில் விழுந்ததோ அக்கோவிலும், அதன் வளாகமும் பாதுஷா அவர்களுக்கு சொந்தமாயிற்று. பாதுஷா அவர்கள் அதைத் தனது இல்லமாக ஆக்கி மீண்டும் அங்கேயே தியானத்தில் இறங்கினார்கள்.
இப்போதும் அந்தக் கோவில் கட்டிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் கோவில் கட்டிடமாகவே உள்ளது. பாதுஷா அவர்களால் பெரிய சிலைகள் மட்டுமே உடைக்கப்பட்டுள்ளன. சிறிய சிலைகள் இப்போதும் இருப்பதைக் காணலாம். நான் பதின்முறை சென்றிருக்கிறேன். அங்கு பல இரவுகள் தங்கியும் உள்ளேன்.
கோவில் கட்டிடத்தின் நடுப்பகுதியிலேயே பாதுஷா அவர்களின் புனித சமாதி அடக்கத்தலம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்குப் பக்கத்தில் அவர்கள் வளர்த்த பச்சைக் கிளியும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்கிளி திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த கிளி என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும்….