தொடர் 02
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
திருக்குர்ஆன் 114 அத்தியாயங்களில் 29 அத்தியாயங்களின் தொடக்கத்தில் வந்துள்ள “யாஸீன்”, “அலிப் லாம் மீம்”, “ஹாமீம் ஐன் ஸீன் காப்” போன்ற வசனங்களுக்கு ஸஊதி நாட்டிலிருந்து வெளியான ترجمة القرآن – தர்ஜமதுல் குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு நூலிலும் பொருள் எழுதப்படவில்லை. இன்னும் சிலர் திருக்குர்ஆனுக்கு எழுதிய மொழிபெயர்ப்பு நூல்களிலும் பொருள் எழுதப்படவில்லை.
இமாம்களால் அறபு மொழியில் எழுதப்பட்ட “தப்ஸீறுல் குர்ஆன்” குர்ஆன் விரிவுரை நூல்களிலும் கூட விளக்கம் எழுதப்படவில்லை.
எனினும் அறபு மொழியில் எழுதப்பட்ட தப்ஸீர் நூல்களில் اللهُ أعلمُ بمرادِه بذلك என்று மட்டும் எழுதப்பட்டுள்ளது. இதன் பொருள் “இவ்வாறான வசனங்களுக்குரிய பொருள் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்” என்பதாகும்.
29 அத்தியாயங்களின் தொடக்கத்தில் வந்துள்ள 30 வசனங்களுக்கும் திருக்குர்ஆன் வசனங்களை மொழி பெயர்த்தவர்களும், திருக்குர்ஆன் வசனங்களுக்கு “தப்ஸீர்” விரிவுரை, விளக்கம் எழுதியவர்களும் ஒரு விளக்கமும் எழுதாமல் அவற்றுக்குரிய விளக்கத்தை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று மட்டும் எழுதினால் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக வழங்கப்பட்ட திருக்குர்ஆனின் அகமியத்தை அவர்கள் எவ்வாறு விளங்குவது? ஏவ்வாறு அறிவது? அவற்றின் பொருள் அல்லாஹ்வுக்கு மட்டுமே விளங்கும் என்றிருந்தால் மனிதர்களுக்காக அருளப்பட்ட வேதத்தில் எதற்காக இவ்வசனங்கள் இடம் பெற்றன.
அல்லாஹ் சில நபீமாருக்கு வேதங்களை வழங்கியும், நபீ முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு திருக்குர்ஆனை வழங்கியும், அவற்றை மக்களுக்கு விபரமாக எடுத்துக் கூறுமாறு அவர்களுக்கு ஏவியும் இருக்கும் நிலையில் வேத வசனங்களை மறைப்பதும் அவற்றுக்கு விளக்கம் கூறாமலிருப்பதும் எந்த வகையில் நியாயமாகும்? எவர் சிந்திக்காது போனாலும் மார்க்க அறிஞர்கள் சிந்திக்க வேண்டும்.
அறபு மொழியில் “தப்ஸீர்” திருக்குர்ஆன் விளக்கம் எழுதிய இமாம்கள் அவ்வாறு ஏன் எழுதியுள்ளார்கள் என்பது எமக்குப் புரியவில்லை. அவர்களிடம் நேரில் கேட்பதற்கும் வாய்ப்பு இல்லை. அவர்கள் உயிருடன் இல்லை. ஆகையால் அவர்கள் மீது நாம் தப்பான எண்ணம் கொள்ளாமல் ஏதோ ஒரு நன்மை கருதி அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள் என்று அவர்கள் மீது நல்லெண்ணம் கொள்வோம்.
இவ்வாறுதான் திருக்குர்ஆன் வசனங்களுக்குரிய உட் பொருளையும், உள் விளக்கத்தையும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களிற் பலர் எழுதவில்லை. மறைத்து விட்டார்கள்.
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் திருக்குர்ஆனுக்கு உள் விளக்கமும், வெளி விளக்கமும் உண்டு என்று சொல்லியிருக்கும் நிலையில் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களிற் பலர் அதன் வெளி விளக்கத்தை மட்டும் எழுதிவிட்டு அதன் உள் விளக்கத்தை எழுதாமல் விட்டு விட்டார்கள். மறைத்து விட்டார்கள். ஏன் மறைத்தார்களோ எனக்குப் புரியவில்லை.
قال النبي صلّى الله عليه وسلّم: إِنَّ لِلْقُرْآنِ ظَهْرًا وَبَطْنًا
நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் “திருக்குர்ஆனுக்கு முதுகும் உண்டு, வயிறும் உண்டு” என்று கூறியுள்ளார்கள். அவர்களின் இக் கூற்றின் படி திருக்குர்ஆனுக்கு உள் விளக்கமும், வெளி விளக்கமும் உண்டு என்ற உண்மை புரிகிறது.
மேற்கண்ட இந்த நபீ மொழி இன்னோர் அறிவிப்பில் وَلِكُلِّ بَطْنٍ سَبْعُوْنَ بَطْنًا என்றும் வந்துள்ளது. அதாவது ஒவ்வோர் உள் விளக்கத்திற்கும் எழுபது உள் விளக்கங்கள் உள்ளன என்பதாகும்.
எனினும் “முகாஷபீன்” “கஷ்பு”டைய ஞானம் வழங்கப்பட்டவர்களும், “முல்ஹமீன்” “இல்ஹாம்” உடைய ஞானம் வழங்கப்பட்டவர்களும் தமது நூல்களில் மேற்கண்ட வசனங்களுக்கு விளக்கம் எழுதியுள்ளார்கள். இதேபோல் உள் விளக்கமுள்ள வசனங்களுக்குரிய உள் விளக்கத்தையும் கூறியுள்ளார்கள்.
எனினும் தப்ஸீர் ஜலாலைன், தப்ஸீர் ஸாவீ, தப்ஸீறுல் காஸின், தப்ஸீறுல் ஜமல், தப்ஸீர் பஙவீ, தப்ஸீர் கபீர் முதலான அநேக உலமாஉகளுக்கு அறிமுகமான தப்ஸீர்களில் நாம் பேசி வருகின்ற தலைப்பிற்குரிய திருக்குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் எழுதப்படவில்லை.
ஆயினும் தப்ஸீர் றூஹில் பயான், தப்ஸீர் இப்னு அறபீ முதலான நூல்களிலும், இன்னும் இதுபோன்ற “விலாயத்” ஒலித்தனம் பெற்றவர்களால் எழுதப்பட்ட நூல்களிலும் மட்டுமே குறித்த திரு வசனங்களுக்கும், உள் விளக்கமுள்ள வசனங்களுக்கும் விளக்கம் எழுதப்பட்டுள்ளது.
உதாரணமாக பின்வரும் திரு வசனத்திற்கு விளக்கம் எழுதப்பட்டிருப்பது போன்று.
அல்லாஹ் திருக்குர்ஆனில்,
لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ، أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ
வானங்கள் மற்றும், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் நாடியவற்றை அவன் படைக்கிறான். அவன் நாடியவர்களுக்கு பெண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான். அவன் நாடியவர்களுக்கு ஆண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான். அல்லது ஆண் மக்களையும், பெண் மக்களையும் கலந்தே கொடுக்கிறான். அன்றியும் அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கி வைக்கிறான். நிச்சயமாக அவன் நன்கறிந்தவன். மிக்க ஆற்றலுடையவன். (திருக்குர்ஆன் அஷ்ஷூறா 49,50)
மேற்கண்ட இவ்விரு வசனங்களிலும் அல்லாஹ் தான் நாடியவாறு மனிதர்களுக்கு பிள்ளைகளை கொடுக்கிறான் என்ற விபரத்தை கூறியுள்ளான்.
சிலருக்கு பெண் பிள்ளைகளையே கொடுக்கிறான். இன்னும் சிலருக்கு ஆண் பிள்ளைகளையே கொடுக்கிறான். இன்னும் சிலருக்கு பெண் மக்களையும், ஆண் மக்களையும் கொடுக்கிறான். இன்னும் சிலரை மலடாகவும் ஆக்கி வைக்கிறான்.
இவ்வாறு “ஷரீஆ”வுடைய உலமாஉகள் மேற்கண்ட இரு வசனங்களையும் மொழி பெயர்த்துள்ளார்கள்.
ஆயினும் ஸூபீகளான இறைஞானிகள் இவ்விரு வசனங்களுக்கும் பின்வருமாறு விளக்கம் கூறியுள்ளார்கள்.
பெண் மக்கள் என்றால் “ஷரீஆ” வின் அறிவைக் குறிக்குமென்றும், ஆண் மக்களென்றால் “தரீகா”வின் அறிவைக் குறிக்குமென்றும், பெண் மக்களும், ஆண் மக்களும் என்றால் மேற் சொன்ன இரு அறிவுகளை குறிக்குமென்றும், மலடு என்றால் எந்த ஓர் அறிவுமில்லாத மடமையை குறிக்குமென்றும் விளக்கம் எழுதியுள்ளார்கள்.
இரண்டாவதாகச் சொல்லப்பட்ட விளக்கம் இறைஞானிகளின் விளக்கமாகும். “ஷரீஆ”வில் மட்டுமே ஊறிப் போன வெளிரங்க உலமாஉகளில் இறை ஞானிகள் கூறிய விளக்கத்தை சிலர் ஆதரித்தாலும், அவர்களிற் பலர் மறுப்பார்கள். மறுப்பது மட்டுமல்ல தமது “ஹமாகத்” மடத்தனத்தால் பின்வரும் நபீ மொழியை ஆதாரமாகக் கூறி அவ்வாறு பொருள் சொல்பவர்கள் நரகவாதிகள் என்றும் சொல்லிவிடுவார்கள்.
قال النبي صلى الله عليه وسلّم مَنْ فَسَّرَ الْقُرْآنَ بِرَأْيِهِ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ
எவன் திருக்குர்ஆனுக்கு தன்னிச்சையாக விளக்கம் சொல்கிறானோ அவன் நரகத்தில் தனக்கென்று ஓர் இடத்தை தயார் செய்யட்டும். எடுத்துக் கொள்ளட்டும் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளியுள்ளார்கள்.
ஞான மகான்களின் கருத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் தமது வாதத்தை நிறுவ மேற்கண்ட இந்த நபீ மொழியை ஆதாரமாக கூறி வருகிறார்கள்.
من فسّر القرآن برأيه
“யாராவது தனது அபிப்பிராயம் கொண்டு – தன்னிச்சையாக திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொன்னால்” என்ற இவ்வசனத்தின் கருத்து என்னவெனில் விளக்கம் சொல்கின்றவன் எவனாயினும் அவன் சொல்கின்ற விளக்கத்திற்கு திருக்குர்ஆனில் இருந்து அல்லது நபீ மொழிகளிலிருந்து ஆதாரம் கூற வேண்டும். இதற்கு மாறாக எந்தவொரு ஆதாரமுமின்றிச் சொல்லப்படும் விளக்கமே தன்னிச்சையாக சொல்லப்படும் விளக்கமாகும். இவ்வாறு சொல்லாமல் ஏதாவதோர் ஆதாரத்தைக் கொண்டு சொல்லப்படும் விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதேயாகும்.
நபீமாருக்கும், வலீமாருக்கும் “இல்ஹாம்” என்று ஓர் அறிவுண்டு. இவ் அறிவு “கஷ்பு” என்றும், “இல்முல்லதுன்னீ” என்றும் சொல்லப்படும். “முல்ஹமூன்” என்று வலீமாரில் பலர் இருப்பார்கள். இவர்கள் “இல்ஹாம்” வழங்கப்பட்டவர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்களில் ஒருவர் “கழிர்” அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களாவர்.
அல்லாஹ் திருக்குர்ஆனில்
وَعَلَّمْنَاهُ مِنْ لَدُنَّا عِلْمًا
நாங்கள் கழிர் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு “மின்லதுன்னா” எங்களிடமிருந்து அறிவைக் கற்றுக் கொடுத்தோம் என்று கூறியுள்ளான். (திருக்குர்ஆன் 18-65)
ஸூபீ மகான்கள் مِنْ لَدُنَّا என்ற சொல்லில் இருந்து “இல்முல் லதுன்னீ” என்று கூறுகிறார்கள்.
“கழிர்” அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபீ என்றும், வலீ என்றும் இரண்டு அபிப்பிராயம் உண்டு. நாம் எவ்வாறு வைத்துக் கொண்டாலும் அவர்களுக்கு “இல்ஹாம்” அறிவு இருந்தது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.
இந்த அறிவு مَلَكُ الْإِلْهَامِ இல்ஹாம் உடைய “மலக்” மூலம் கற்றுக் கொடுக்கப்படும் அறிவாகும்.
قَال النبي صلى الله عليه وسلّم: مَنْ عَمِلَ بِمَا عَلِمَ وَرَّثَهُ اللهُ عِلْمَ مَا لَمْ يَعْلَمْ
யாராவதொருவன் தானறிந்த அறிவு கொண்டு “அமல்” செய்வானாயின் அல்லாஹ் அவனுக்கு அவன் அறியாத அறிவை அவனே கற்றுக் கொடுப்பான் என்று நபீ பெருமான் அலைஹிஸ்லாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
இந்த நபீ மொழிக்கு مِنْ غَيْرِ وَاسِطَةِ مُعَلِّمٍ எந்த ஓர் ஆசிரியரின் உதவியுமின்றி அல்லாஹ்வே ஆசிரியராயிருந்து கற்றுக் கொடுப்பான் என்று அறிஞர்களிற் பலர் கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு கிடைக்கின்ற அறிவுதான் “இல்ஹாம்” எனப்படுகின்றது. வலீமாரில் அதிகமானோர் இவ்வழியில் அறிவு ஞானம் பெற்றவர்களேயாவர்.
عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ نَبِيٍّ إِلَّا وَفِي أُمَّتِهِ مِنْ بَعْدِهِ مُعَلَّمٌ، أَوْ مُعَلِّمٌ، فَإِنْ يَكُنْ فِي أُمَّتِي مِنْهُمْ أَحَدٌ فَهُوَ عُمَرُ بْنُ الْخَطَّابِ، إِنَّ الْحَقَّ عَلَى لِسَانِ عُمَرَ وَقَلْبِهِ» (فضائل الصحابة لأحمد بن حنبل)
ஏந்த ஒரு நபீயாயினும் அவர்களுக்குப் பின் அவர்களின் சமூகத்தில் கற்றுக் கொடுக்கப்பட்ட ஒருவர் இருப்பார். அல்லது கற்றுக் கொடுக்கக் கூடிய ஒருவர் எனது “உம்மத்” சமூகத்தில் ஒருவர் இருப்பாராயின் அவர் உமர் இப்னுல் கத்தாப் அவர்கள்தான். நிச்சயமாக சத்தியம் என்பது உமரின் நாவிலும், அவரின் உள்ளத்திலும் உள்ளது என்று எம் பெருமான் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம்: பழாயிலுஸ்ஸஹாபா
ஆசிரியர்: இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் றஹிமஹுல்லாஹ்
ஆறிவிப்பு: ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா
عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُ كَانَ فِيمَا خَلَا قَبْلَكُمْ نَاسٌ يُحَدَّثُونَ، فَإِنْ يَكُنْ فِي أُمَّتِي مِنْهُمْ أَحَدٌ فَهُوَ عُمَرُ بْنُ الْخَطَّابِ» . قَالَ إِسْحَاقُ: فَقُلْتُ لِأَبِي ضَمْرَةَ: مَا مَعْنَى يُحَدَّثُونَ؟ قَالَ: يُلْقَى عَلَى أَفْئِدَتِهِمُ الْعِلْمُ. (فضائل الصحابة لأحمد بن حنبل)
உங்களுக்கு முன் சென்ற காலத்தில் சில மனிதர்கள் இருந்தனர். அவர்களுக்கு செய்தி அறிவிக்கப்படும். எனது “உம்மத்” சமூகத்தில் அவர்களில் ஒருவர் இருப்பாராயின் அவர் உமர் இப்னுல் கத்தாப் ஆகவே இருப்பார் என்று பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
இஸ்ஹாக் என்பவர் அபூ ழம்றா என்பவரிடம் செய்தி அறிவிக்கப்படும் என்றால் என்ன என்று கேட்ட போது அவர்களின் உள்ளங்களில் அறிவு கொடுக்கப்படும் என்று பதில் கூறினார்கள்.
ஆதாரம்: பழாயிலுஸ்ஸஹாபா
ஆசிரியர்: இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் றஹிமஹுல்லாஹ்
அறிவிப்பு: ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா
மேற்கண்ட இரண்டு நபீ மொழிகள் மூலமும் “இல்ஹாம்” என்று ஓர் அறிவு உண்டு என்பது விளங்கப்படுகிறது.
“இல்ஹாம்” அறிவு தொடர்பாக மேற்கண்ட விபரங்களை நான் எழுதியதற்கான காரணம் என்னவெனில் திருக்குர்ஆன் வசனத்திற்கு வெளிப் பொருள் இருப்பது போல் உட் பொருளும் இருப்பதால் அந்த உட் பொருள் “இல்ஹாம்” எனும் அறிவின் மூலம் ஒரு வலிய்யுல்லாஹ்வுக்கு கிடைத்து அவர் அதைச் சொல்லும் போது “ஷரீஆ”வின் அறிவோடு மட்டும் நின்று கொள்ளும் உலமாஉகள் அதை ஜீரணிப்பதில்லை. சிலரைத் தவிர.
இதனால் அவர்கள் ஸூபீ மகான்கள் திருக்குர்ஆன் வசனங்களுக்கு கூறி வருகின்ற உள்ளர்த்தங்களையும், தத்துவங்களையும் மறுத்தும், மறைத்தும் வருகின்றனர். இத்தகைய குறையறிவாளர்களால்தான் இஸ்லாமிய அந்தரங்க அகமியங்கள் மறைக்கப்பட்டன. மறுக்கப்பட்டும் வருகின்றன.
எனவே, “ஷரீஆ” எனும் கோட்டைக்குள் மட்டும் நின்று கொண்டு கும்மாளமடிக்கும் உலமாஉகளும், “ஷரீஆ” எனும் குண்டாஞ்சட்டிக்குள் குதிரையோட்டும் மௌலவீகளும் அதன் வெளியே உள்ள தரீகா, ஹகீகா, மஃரிபா எனும் ஆன்மிக கலைகள் கற்று தமது மனக் கண்களை அகலவிரித்து அல்குர்ஆனை ஆராய வேண்டும். ஒரு நாட்டில் வாழும் பல்லாயிரம் உலமாஉகளிற் சிலர் மட்டுமாவது திருக்குர்ஆனில் குளியோட முன்வர வேண்டும். இதேபோல் “தரீகா”வின் ஷெய்குமாரும், கலீபாக்களும் களத்தில் இறங்க வேண்டும். ஆன்மிகக் கடலை அடித் தடியால் அளப்பதற்கு முன்வருவதை நிறுத்த வேண்டும்.
مَنْ تَشَرَّعَ وَلَمْ يَتَحَقَّقْ فَقَدْ تَفَسَّقْ
وَمَنْ تَحَقَّقَ وَلَمْ يَتَشَرَّعْ فَقَدْ تَزَنْدَقْ
“ஷரீஆ”வை மட்டும் கற்று இறைஞானம் கற்காதவன் “பாஸிக்” கெட்டவனாகிவிட்டான், இறைஞானம் மட்டும் கற்று “ஷரீஆ”வை கற்காதவன் “சிந்தீக்” ஆகிவிட்டான் என்ற ஸூபிஸ மகான்களின் மூல மந்திரத்தை மூளை எனும் தராசில் நிறுத்திப் பார்த்து செயல்பட வேண்டும்.
கண்ணை மூடிக் கொண்டும், “கல்பை” பூட்டிக் கொண்டும் இஸ்லாமிய தத்துவங்களை மறுக்காமல் ஆன்மிகவாதிகளால் எழுதப்பட்ட நூல்களையும், அவர்களால் பேசப்பட்ட தத்துவங்களையும் தாமும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுத்து “வஹ்ததுல் வுஜூத்” எனும் பேரின்ப பெரு வெள்ளத்தில் நீந்தி விளையாட வேண்டும்.
அல்லாஹ் சிலருக்கு “ஷரீஆ”வின் கதவை மட்டும் திறந்து விடுகிறான். அதில் அவர்கள் நுழைந்து விடுகிறார்கள். இன்னும் சிலருக்கு “தரீகா”வின் கதவை மட்டும் திறந்து காட்டுகிறான். அதில் அவர்கள் பிரவேசிக்கிறார்கள். இன்னும் சிலருக்கு ஷரீஆ, தரீகா இரு கதவுகைளயும் திறந்து விடுகிடுகிறான். அவர்கள் அவ்விரண்டிலும் இன்பம் பெறுகின்றனர். இன்னும் சிலரை இரு கதவுகளில் ஒரு கதவையும் திறந்து காட்டாமல் அறிவிலிகளாக ஆக்கிவிடுகிறான். இது அவனின் நியதி.
قال الإمام القطب الأكبر أبو الحسن على الشّاذلي رحمه الله: مَنْ لَمْ يَتَغَلْغَلْ فِى عِلْمِنَا هَذَا مَاتَ مُصِرًّا عَلَى الْكَبَائِرِ مِنْ حَيْثُ لَا يَشْعُرُ
“எவன் ஒருவன் எங்களின் இந்த அறிவில் தனது தாகம் தீரக் குடிக்கவில்லையோ அவன் தானறியாமலேயே பெரும் பாவியாக மரணிப்பான்” என்ற ஷாதுலிய்யா தரீகாவின் தாபகர் அல்குத்புல் அக்பர் அபுல் ஹஸன் ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய இத் தத்துவத்தை அனைவரும் அறிந்து செயல்பட வேண்டும். எவர் அறியாது போனாலும் அவர்களின் “தரீகா”வை வளர்த்து வரும் ஷெய்குமார்களும், கலீபாக்களும் அறிந்து செயலாற்ற வேண்டும்.
இதேபோல் ஒவ்வொரு “தரீகா”வின் ஷெய்குமார்களும், கலீபாமார்களும் செயலாற்ற வேண்டும். நானும், இலங்கையிலுள்ள தரீகாக்களின் ஷெய்குமாரும், கலீபாக்களும் இணைந்து செயல்பட்டால் எதிர்காலத்தில் வழிகேடுகளும், வஹ்ஹாபிஸமும் இலங்கையிலிருந்து கப்பலேறிவிடும் என்பதில் எனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இலங்கை வாழ் ஷாதுலிய்யா தரீகாவின் ஷெய்குமார்களே! கலீபாக்களே! காதிரிய்யா தரீகாவின் ஷெய்குமார்களே! கலீபாக்களே! ரிபாஇய்யா தரீகாவின் ஷெய்குமார்களே! கலீபாக்களே! சிஷ்திய்யா தரீகாவின் ஷெய்குமார்களே! கலீபாக்களே! மற்றும் ஏனைய தரீகாக்களின் ஷெய்குமார்களே! கலீபாக்களே!
நான் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தொடர்பாக உங்களில் யாருக்காவது தெளிவின்மை இருக்குமாயின் என்னிடம் வாருங்கள். நான் அறிந்ததைச் சொல்கிறேன். நான் கூறும் கொள்கை “ஷரீஆ”வுக்கு முரணானதென்று நீங்கள் கருதினால் என்னை விட்டு விடுங்கள். நீங்கள் சரி கண்டால் மட்டும் என்னுடன் இணைந்து செயல்படுங்கள்.
صدق سيّد الوجود والشهود سيدنا محمد صلى الله عليه وسلّم فى أقواله، وصدق الأولياء والمشائخ فى أقوالهم،
وكلّ خير فى اتّباع من سلف، وكلّ شرٍّ فى ابتداع من خلف