Home எழுத்தாக்கங்கள் ஹுதன் லில் முத்தகீன்

ஹுதன் லில் முத்தகீன்

0
356

தொடர் 03

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
الٓمٓ، ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ
 
“அலிப் லாம் மீம்” தாலிகல் கிதாபு லா றைப பீஹி, ஹுதன் லில் முத்தகீன்.
“அலிப் லாம் மீம்” இதற்கான விளக்கம் இத் தொடரில் இடம் பெறும்.
 
“தாலிகல் கிதாபு லா றைப பீஹி” அந்த வேதத்தில் சந்தேகமே இல்லை. “ஹுதன் லில் முத்தகீன்” பய பக்தியுள்ளவர்களுக்கு நேர்வழி காட்டும்.
 
“அலிப் லாம் மீம்” தொடர்பாக கடந்த தொடர்களில் நான் விளக்கமாக எழுதியுள்ளேன். விபரம் தேவையானோர் நான் எழுதிய கடந்த தொடர்களை வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

திருக்குர்ஆனின் 29 அத்தியாயங்களின் தொடக்கத்தில் الم، حمعسق போன்று வருகின்ற வசனங்களுக்கு தமிழ் மொழியில் “தர்ஜமதுல் குர்ஆன்” என்ற பெயரில் திருக்குர்ஆன் வசனங்களை மொழியாக்கம் செய்தவர்களும், அறபு மொழியில் “தப்ஸீறுல் குர்ஆன்” என்ற பெயரில் திருக்குர்ஆனுக்கு விரிவுரை எழுதியவர்களும் மொழியாக்கம் செய்யவுமில்லை, விளக்கம் கூறவுமில்லை. இது தொடர்பாக எனது கருத்துக்களை கடந்த தொடர்களில் எழுதியிருந்தேன்.
திருக்குர்ஆனில் வருகின்ற 114 அத்தியாயங்களில் 29 அத்தியாயங்களின் தொடக்கத்தில் வருகின்ற الم، حمعسق போன்ற வசனங்களுக்கு حُرُوْفٌ مُقَطَّعَةٌ என்று சொல்லப்படும்.
தலைப்பில் நான் எழுதியுள்ள “அலிப் லாம் மீம், தாலிகல் கிதாபு லா றைப பீஹி, ஹுதன் லில் முத்தகீன்” என்ற வசனத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்.
ذَلِكَ الْكِتَابُ
“அந்த வேதம்” என்ற வசனத்தில் மொழியிலக்கணத்தோடு தொடர்புள்ள விளக்கம் உண்டு. இவ்விளக்கம் பொது மக்களுக்கு தேவையில்லை. ஆயினும் உலமாஉகளுக்கும், அறபுக் கல்லூரிகளில் மொழியிலக்கணம் கற்கும் மாணவர்களுக்கும் இவ் விளக்கம் அவசியமாதலால் அவர்களின் நலன் கருதி சுருக்கமாக விளக்கி வைக்கிறேன். பொது மக்கள் வாசித்து இது “என்ன பாஷை” என்று என்னைக் குறை கூற வேண்டாம்.
“ذا” வின் விளக்கம்:
ذَلِكَ
என்ற இச் சொல் اِسْمُ الْإِشَارَةِ – சுட்டிக் காட்டுவதற்கு பயன்படுத்தப்படுகின்ற ஒரு சொல் எனப்படும். இச் சொல்லை மொழியும் போது “ ذ “ “தால்” என்ற எழுத்தின் பின்னால் ஓர் “அலிப்” இருப்பது போல் விளங்கும். அவ்வாறு விளங்கினாலும் எழுதும் போது “தால்” என்ற எழுத்தின் பின்னால் “அலிப்” எழுதக் கூடாது. உதாரணமாக ذَالِكَ என்று எழுதாமல் ذَلِكَ என்று எழுத வேண்டும்.
இந்த ذ – “தால்” என்பது அறபு மொழி இலக்கணத்தில் பக்கத்தில் – கிட்டத்தில் – உள்ள ஒன்றைச் சுட்டிக் காட்டுவதற்கு பயன்படுத்தப்படுகின்ற சொல்லாகும். தூரத்தில் உள்ளதையல்ல. தூரத்தில் உள்ளதை சுட்டிக் காட்டுவதாயின் ذَلِكَ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். அதாவது ذ “தால்” என்ற எழுத்தின் பின் “லாம், காப்” இரு எழுத்துக்களையும் சேர்க்க வேண்டும். உதாரணமாக ذَلِكَ என்று சொல்வது போன்று.
இவ் விபரத்தின்படி “அந்தப் புத்தகம்” என்று சமீபத்தில் உள்ளதைச் சுட்டிக் காட்ட முடியாது. இந்தப் புத்தகம் என்று தூரத்தில் உள்ளதை சுட்டிக் காட்ட முடியாது.
கிட்டத்தில் உள்ளதைச் சுட்டிக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற ذَا என்ற சொல்லின் இருமைச் சொல் ذَانِ என்றும், ذَيْنِ என்றும் சொல்லப்படும்.
ذَا
என்ற சொல் சுட்டிக் காட்டுவதற்கு பயன்படுத்தப்படாத நிலையில் “இஸ்திப்ஹாம்” கேள்வியின் போது பயன்படுத்தப்படுகின்ற “மா, மன்” என்ற இரண்டு எழுத்துகளுக்குப் பின்னால் ذَا என்பது வந்தால் அதற்கு الَّذِيْ என்ற சொல்லுக்குரிய பொருள் வரும். உதாரணமாக مَاذَا فَعَلْتَ நீ என்ன செய்தாய்? مَنْ ذَا فِى الدَّارِ வீட்டில் யார்? என்பன போன்று. இவ்விரு உதாரணங்களிலும் முந்தின உதாரணத்தில் “மா” என்ற “இஸ்திப்ஹாம்” என்பதற்குப் பின்னால் ذا என்ற சொல் வந்திருப்பதாலும், பிந்தின உதாரணத்தில் مَنْ என்ற “இஸ்திப்ஹாம்” என்பதற்குப் பின்னால் ذا என்ற சொல் வந்திருப்பதாலும் ذا என்ற சொல்லுக்கு الّذيْ என்ற சொல்லின் அர்த்தம் கொள்ள முடியும்.
மேற்கண்ட இரு உதாரணங்களில் முந்தின உதாரணத்திற்கு مَا الَّذِيْ فَعَلْتَ நீ என்ன செய்தாய்? என்றும், பிந்தின உதாரணத்திற்கு مَنِ الَّذِيْ فِى الدَّارِ வீட்டில் யார்? என்றும் பொருள் வரும்.
இவ்விரு உதாரணங்களிலும் ذا என்ற சொல் அதற்கு கூறப்பட்ட விதிப்படி “இஸ்மு இஷாறா” வாக பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ذا “இஸ்திப்ஹாம்” உடைய “மா” உடனும் சேர்ந்து வரும். உதாரணமாக لِمَاذَا تَرَكْتَنَا எங்களை எதற்காக விட்டாய்? என்பது போன்று. இவ் உதாரணத்தில் ذا என்ற சொல் “இஸ்திப்ஹாம்” கேள்வி கேட்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற “மா” என்ற சொல்லுடன் சேர்ந்து வந்துள்ளது.
இந்த ذا என்ற சொல்லுடன் ك “காப்” என்ற சொல்லைச் சேர்த்து ذَاكَ என்று சொன்னால் இது மிகத் தூரத்திலுமில்லாத, மிக கிட்டத்திலுமில்லாத நடுத்தர தூரத்தில் உள்ள ஒன்றை சுட்டிக் காட்டுவதற்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு வரும் கட்டத்திலும் அந்த ذَا உடன் எச்சரிக்கைக்குரிய “ஹா” என்ற சொல்லைச் சேர்த்து பாவிக்கவும் முடியும். உதாரணமாக هَذَاكَ என்பது போன்று. ذَلِكَ என்ற சொல் தூரத்தில் உள்ளதை சுட்டிக் காட்டுவதற்கு பயன்படுத்தப்படும்.
இதுவரை ذَلِكَ الْكِتَابُ என்ற திரு வசனத்தில் வந்துள்ள ذا “தா” தொடர்பான மொழியிலக்கணச் சட்டத்தை எழுதினேன்.
இப்போது அல்லாஹ் هَذَا الْكِتَابُ இந்த வேதம் என்று சொல்லாமல் ذلك الكتاب அந்த வேதம் என்று ஏன் சொன்னான்? என்பதற்கான காரணத்தை எழுதுகிறேன்.
நான் மேலே ஒரு விபரம் எழுதியுள்ளேன். அதாவது அண்மையில் – கிட்டத்தில் – இருக்கின்ற ஒன்றைச் சுட்டிக் காட்டுவதற்கு هَذَا என்ற சொல்லும், தூரத்தில் இருப்பதைச் சுட்டிக் காட்டுவதற்கு ذلك என்ற சொல்லும் பயன்படுத்தப்படுவது அறபு இலக்கண விதிகளில் ஒன்றாகும். ذلك الكتاب அந்த வேதம் என்று கூறியவன் அல்லாஹ்தான். அவனுக்கு தூரம், சமீபம் என்ற கட்டுப்பாடுகள் இல்லாதிருக்கும் நிலையில் தூரத்திலுள்ள ஒன்றைச் சுட்டிக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற ذَلِكَ என்ற சொல்லை அவன் பயன்படுத்தியதற்கான காரணம் என்னவென்றும், அவ்வாறு அவன் சுட்டிய நேரம் சுட்டப்பட்ட அவ் வேதம் எங்கே இருந்ததென்றும் ஆய்வு செய்ய வேண்டும்.
அல்லாஹ்வுக்கு அவன் படைப்புகளில் தூரமானதென்று சொல்வதற்கோ, சமீபமானதென்று சொல்வதற்கோ ஒன்றுமே இல்லை. ஏனெனில் படைப்புகள் எல்லாமே அவனாயிருக்கும் நிலையில் அது தூரம், இது சமீபம் என்று சொல்வதற்கு முடியாது. அவ்வாறு சொல்வதும் அர்த்தமற்றதாகிவிடும்.
அல்லாஹ் திருக்குர்ஆனின் பல இடங்களில் அவன் படைப்புகளுக்கும், அடியார்களுக்கும் நெருங்கியிருப்பதாகக் கூறியுள்ளான்.
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ
அவன் மனிதனுக்கு அவனின் பிடரி நரம்பு நெருங்கியிருப்பதை விட அதிகம் நெருங்கியிருப்பதாக கூறியுள்ளான். (50-16)
பிடரி நரம்பானது மனிதனின் ஓர் அங்கமாக – அவனின் உறுப்புக்களில் ஒன்றாக இருக்கும் நிலையில் அதை விட மனிதனுக்கு அவன் அதிகம் நெருங்கியுள்ளான் என்ற அவனின் கூற்று அவன் மனிதன் தானாக, அல்லது அவன் படைப்பு தானாக உள்ளான் என்பதையே காட்டுகிறது.
மனிதனை விட்டும் வோறானதாக, அவனை விட்டும் பிரிந்ததாக அவனின் பிடரி நரம்பு இருக்குமாயின் ஒரு வகையில் அதை விட அவனுக்கு அல்லாஹ் நெருங்கியுள்ளான் என்று சொன்னால் அச் சொல்லை ஜீரணிப்பதற்கு ஒரு வகையில் வாய்ப்பு உண்டு. ஆயினுமவன் மனிதனிலுள்ள பிரதான உறுப்பு ஒன்றை குறிப்பிட்டு அதை விட நெருங்கியிருப்பதாக சொல்லியிருப்பது மனிதன் தானாகவே அல்லது படைப்பு தானாகவே அவன் உள்ளான் என்பதை ஐயமறத் தெளிவாகக் கூறுகிறது.
“பிடரி நரம்பு” என்பது மனிதனின் நடு முதுகில் அமைந்துள்ள, பிடரி முதல் மூலம் வரை நீண்டுள்ள எலும்பை குறிக்கும் என்பதே ஆய்வாளர்களில் அதிகமானோரின் அபிப்பிராயமாகும். குறித்த இந்த எலும்பு மனித படைப்பின் – உடலின் நடுவில் இருக்கும் நிலையில் இதை விட மனிதனுக்கு அல்லாஹ் நெருங்கியுள்ளான் என்று சொல்வது மனிதன் தானாகவே அல்லாஹ் உள்ளான் என்பதை சூசகமாகச் சொல்வதேயன்றி வேறென்ன?
நூலுக்கு அதன் மூலமான பஞ்சு நெருங்கியுள்ளது, நகைக்கு அதன் மூலமான தங்கம் நெருங்கியுள்ளது, குடத்துக்கு அதன் மூலமான மண் நெருங்கியுள்ளது என்று ஒருவன் சொன்னால் அவன் என்ன சொல்கிறான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அவன் நூல் என்பது பஞ்சுதான் என்றும், நகை என்பது தங்கம்தான் என்றும், குடம் என்பது மண்தான் என்றும் சொல்கிறான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ் نحن أقرب إليه من روحه، نحن أقرب إلى الإنسان من روحه நாங்கள் மனிதனுக்கு அவனின் உயிர் நெருங்கியிருப்பதை விட அதிகம் நெருங்கியிருக்கிறோம் என்று சொல்லவில்லை. அவன் இவ்வாறு சொல்லாமல் பிடரி நரம்பை – முதுகெலும்பை கூறியது சடமுள்ளவனாகவும் அவனே உள்ளான் என்பதை வரண்டு போன மண்டைகளுக்கு உணர்த்துவதற்கேயாகும். ஏனெனில் பிடரி நரம்பு என்பது சடமுள்ளதேயன்றி “றூஹ்” உயிர் போல் சடமற்றதில்லையாதலால்தான்.
இதே கருத்தை – அதாவது அல்லாஹ் சடமற்றவனாக இருப்பது போல் சடமுள்ளவனாகவும் உள்ளான் என்பதை உணர்த்துவதற்காகவே பின்வருமாறு ஹதீதுக் குத்ஸீயை அமைத்துள்ளான்.
وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ: كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا،
அடியான் “நப்ல்” ஆன – “ஸுன்னத்”தான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டே இருப்பான். நான் அவனை நேசிக்கும் வரை. நான் அவனை நேசித்தால் அவன் கேட்கும் கேள்வியாக நான் ஆகிவிடுவேன். அவன் பார்க்கும் பார்வையாகவும் ஆகிவிடுவேன். அவன் பிடிக்கும் கையாகவும் ஆகிவிடுவேன். அவன் நடக்கும் காலாகவும் ஆகிவிடுவேன் என்று அல்லாஹ் “ஹதீதுக்குத்ஸீ”யில் கூறியுள்ளான்.
இந்த “ஹதீதுக் குத்ஸீ”யில் நான்கு விடயங்களை அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். அவை கேள்வி, பார்வை, கை, கால் என்பனவாகும். இந் நான்கையும் ஏன் குறிப்பிட்டான் என்றால் அவன் சடமற்ற புலன்களாகவும், சடமுள்ளவையாகவும் வெளியாகியுள்ளான் – தோற்றுகிறான் என்பதை வரண்டு போன மண்டைகளுக்கு உணர்த்துவதற்கேயாகும்.
 
இந்த ஹதீதுக் குத்ஸீயின் சாரம் நான் மனிதனுக்கு சடமுள்ள அவனின் பிடரி நரம்பை விட நெருங்கியுள்ளேன் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருப்பது ஆய்வாளர்களுக்கு மறைவானதல்ல.
 
எனவே, சடமில்லாத, சடமுள்ள அனைத்துமாய் அவனே வெளியாகியிருப்பதால் அவனுக்கும், அவனது படைப்புக்கும் இடத்தைப் பொறுத்த நெருக்கமோ, தூரமோ இல்லை என்பதையும், கருத்தைப் பொறுத்த நெருக்கமும், தூரமும் தான் உண்டு என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
 
எனவே, ذلك الكتاب அந்த வேதம் என்று அது தூரத்திலிருப்பது போல் கூறியிருப்பது தூரத்தைக் கவனித்தல்ல என்று விளங்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறாயின் அவன் ஏன் அவ்வாறு சுட்டிக் காட்டினான் என்பதற்கான சுருக்கமான விடை வேதத்தை – திருக்குர்ஆனை கண்ணியப்படுத்துவதற்கேயாகும். கண்ணியம், கௌரவம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு சமீபத்திலுள்ளதை தூரப்படுத்தியும், தூரத்திலுள்ளதை சமீபப்படுத்தியும் சொல்வது அறபு மொழி நடையிலுள்ள ஒன்றேயாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ் ذلك الكتاب அந்த வேதம் என்று சுட்டிய நேரம் அந்த வேதம் எங்கே இருந்தது என்பது பற்றிய விபரம் அடுத்த தொடரில் இடம் பெறும்.
 
தொடரும்…
 
வரண்டு போன தலைகள் – தரைகள் இனியாவது செழிக்கட்டும்!
மலட்டு மண்டைகள் இனியாவது கர்ப்பமாகட்டும்!

NO COMMENTS