தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
முஹர்றம் மாதம் இஸ்லாமிய புது வருடத்தின் முதல் மாதம். இம்மாதத்தின் முந்திய பத்து நாட்களும் மிக விஷேடமான நாட்களாகும். இம்மாதத்தின் 9ம் நாள் “தாஸூஆ” என்றும், பத்தாம் நாள் “ஆஷூறா” என்றும் அழைக்கப்படும். இவ்விரு நாட்களும் நோன்பு நோற்பது “ஸுன்னத்” என்று “ஷரீஆ”வின் சட்டம் கூறுகிறது.
இம்மாதம் “முஹர்றம்” என்று அழைக்கப்படும். இதன் பொருள் “ஹறாம்” ஆக்கப்பட்டது – விலக்கப்பட்டது என்பதாகும். ஏனெனில் 12 மாதங்களில் நான்கு மாதங்கள் யுத்தம் செய்வது விலக்கப்பட்ட மாதங்களாகும். அல்லாஹ் திருக்குர்ஆனில்
إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ
அல்லாஹ்விடம் மாதங்கள் 12 ஆகும். அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் 12 மாதங்கள்தான். அவற்றில் 4 மாதங்கள் யுத்தம் செய்வது விலக்கப்பட்ட மாதங்களாகும். (திருக்குர்ஆன் 9-36)
நான்கு மாதங்களில் மூன்று மாதங்கள் தொடராக வருகின்ற மாதங்களும், அவற்றில் ஒன்று மட்டும் தனியே வருகின்ற மாதமுமாகும். இதனால் وَاحِدَةٌ فَرْدٌ وَثَلَاثَةٌ سَرْدٌ என்று சொல்லப்படுகிறது. அவை றஜப் மாதம். இது தனியே இடையில் வருகின்ற மாதம். மற்றவை துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்றம். இவை தொடரான மாதங்களாகும்.
இந் நான்கு மாதங்களில் செய்யப்படுகின்ற நல்லமல்களுக்கு – நற் காரியங்களுக்கு அதிக நற் கூலியும், தீய காரியங்களுக்கு அதிக தண்டனையும் கிடைக்கும்.
الطاعات فيها أكثر ثوابا – والمعاصي أعظم عقابا
முஹர்றம் மாதம்:
இம்மாதத்தின் முதல் நாள் அறபு அரசர்களிடம் கண்ணித்திற்குரிய நாளாகும். இதனால் நாட்டு மக்களிடமிருந்து அவர்கள் வாழ்த்துக்களை எதிர்பார்த்து மாளிகையை திறந்து வைத்திருப்பார்கள்.
இம்மாதத்தின் ஏழாம் நாளில்தான் நபீ யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீனின் வயிற்றிலிருந்து வெளியான நாளாகும். இதன் வரலாறை எழுதாமல் சுருக்கிக் கொண்டேன்.
இம்மாதத்தின் பத்தாம் நாள் சமய வேறுபாடின்றி உலகில் வாழ்கின்ற அனைவரும் கண்ணியம் செய்கின்ற, செய்ய வேண்டிய நாளாகும்.
ஏனெனில் இந்நாளில்தான் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் செய்த பாவத்திற்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்டு அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்த நாளாகும். தந்தை செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்ட இந்நாளில் அவர்களின் மக்களாகிய நாமும் ஒன்று கூடி பாவ மன்னிப்புக் கேட்போம். அன்று இரவு பத்ரிய்யா தளத்தில் ஒன்று கூடுவோம். நபீமார் அனைவரும் مَعْصُوْمُوْنَ பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களாயிருக்கும் நிலையில் நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பாவம் செய்தார்கள் என்று சொல்வது எந்த வகையில் சரியாகும் என்பது தொடர்பாக நான் இங்கு விளக்கம் எழுதவில்லை. இதற்கான விளக்கம் இன்னோர் இடத்தில் எழுதப்படும்.
இன்றுதான் நபீ நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கப்பல் “ஜூதீ” மலையில் தரை தட்டியது. இன்றுதான் நபீமார்களான மூஸா, ஈஸா இருவரும் பிறந்தார்கள். இன்றுதான் நும்றூத் என்ற கொடிய அரசன் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நெருப்புக்குழியில் எறிந்த போது அது அவர்களைச் சுடாமல் குளிரானது. இன்றுதான் நபீ யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகத்தை விட்டும் வேதனை நீக்கப்பட்டது. இன்றுதான் நபீ ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுகம் பெற்றார்கள். இன்றுதான் நபீ யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மங்கிய கண் பார்வை நீங்கி தெளிவான பார்வை பெற்றார்கள். இன்றுதான் நபீ யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பாலடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்டார்கள். இன்றுதான் நபீ ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. இன்றுதான் நபீ சகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நபீ யஹ்யா அலைஹிஸ்ஸலாம் மகனாக வழங்கப்பட்டார்கள். இன்றுதான் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களை எதிர்த்த சூனியக் காரர்களை வெற்றி கொண்டார்கள்.
மேற்கண்ட சிறப்புக்கள் முஹர்றம் மாதத்தின் பத்தாம் நாளான “ஆஷூறா” நாளுக்கு இருப்பதால் நாம் அனைவரும் அன்று பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் ஒன்று கூடி நம் நாட்டங்களைப் பெறுவோம்.
இம்மாதத்தின் பத்தாம் நாளன்று – ஆஷூறா தினத்தன்று நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் திரு மதீனா நகருக்கு வந்தபோது மதீனாவில் வாழ்ந்த யஹூதிகள் – யூதர்கள் நோன்பு நோற்றிருந்தது கண்டு அது பற்றி வினவிய போது, இன்றுதான் நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “பிர்அவன்” என்ற தனது வில்லனை வெற்றி கொண்டு அவன் கடலில் மூழ்கி இறந்த நாளாகையால் அல்லாஹ்வுக்கு நன்றி செய்யும் வகையில் இன்று நோற்கப்படுகின்றது என்று விளக்கம் சொல்லப்பட்டது. அப்போது நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்
أَنَا أَوْلَى بِمُوسَى مِنْهُمْ
நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கிடைத்த வெற்றிக்காக யஹூதிகளை விட இறைவனுக்கு நன்றி சொல்வதற்கு நானே மிகத் தகுதியானவன் என்று கூறி அவர்களும் அன்று நோன்பு நோற்றுக் கொண்டார்கள். ஏனைய முஸ்லிம்களையும் அன்று நோன்பு நோற்குமாறு பணித்தார்கள். ஆயினும் அவர்களால் 09ம் நாளான “தாஸூஆ” அன்று நோன்பு நோற்க முடியாமற் போய்விட்டது. இருப்பினும் அடுத்த வருடம் நான் உயிருடன் இருந்தால் முஹர்றம் 09ம் நாளும் நேன்பு நோற்பேன் என்று கூறினார்கள். ஆயினும் அதற்கு முன் அவர்கள் “வபாத்” ஆகிவிட்டார்கள்.
وكان الإسلاميّون يعظّمون هذا الشّهر بأجمعهم، حتّى اتّفق فى هذا اليوم قتلُ الحسين رضي الله عنه مع كثير من أهل البيت،
இந்த நிகழ்வின் பின் உலகில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அனைவரும் இந்நாளைக் கொண்டாடி வருகின்றார்கள். இந்நாளில் நோன்பு நோற்பதால் மட்டும் இதைக் கண்ணியப்படுத்தியதாகாது. பள்ளிவாயல்களை மின் குமிழ்களால் அலங்கரித்தல், மார்க்கம் அனுமதித்த விளையாட்டு நிகழ்வுகளை நடத்தி சிறுவர்களை மகிழ்வித்தல், பெற்றோர், மற்றும் வலீமார்களை “ஸியாறத்” தரிசித்தல் போன்றவையும் இந்நாளை கண்ணியப்படுத்துவதில் அடங்கும்.
மேற்கண்ட விஷேடங்கள் யாவும் “ஆஷூறா” தினம் நடந்த நிகழ்வுகளாகும். அவற்றில் ஒவ்வொன்றுக்கும் வரலாறுண்டு. கட்டுரையை சுருக்க வேண்டும் என்பதற்காக அவற்றைத் தொட நான் விரும்பவில்லை.
பெருமானார் அவர்களின் அருமைப் பேரர் ஸெய்யிதுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அவர்களும், “அஹ்லுல் பைத்” என்று சொல்லப்படுகின்ற நபீ குடும்பத்தவர்களில் அதிகமானோரும் முஹர்றம் 10ம் நாளான ஆஷூறா தினத்தன்றே கொலை செய்யப்பட்டார்கள். “இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்”
“கர்பலா” என்ற இடத்திலேயே நபீ பேரர் ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்களின் புனித உடல் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் தலை அங்கிருந்து சிரியா நாட்டின் தலை நகரான “திமஷ்க்” – டமஸ்கஸ் நகருக்கு கொண்டு வரப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
مَقْبَرَةُ رُؤُوْسِ الشُّهَدَاءِ
“ஷுஹதாஉகளின் தலைகள் அடக்குமிடம்” என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. நானும், அல்ஹாஜ் MCM ஹுஸைன் அவர்களும், அல்ஹாஜ் நசார் அவர்களும் அங்கு சென்று “துஆ” ஓதிவிட்டு வந்தோம்.
ஆஷூறா தினம் இமாம் ஹுஸைன் அவர்களின் நினைவு தினமாயிருப்பதால் அன்று இமாம் அல் ஆலிமுல் அறூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் றஹிமஹுல்லாஹ் அவர்களால் இயற்றப்பட்ட மௌலித் பாடலை வீட்டில் பாடி ஏழைகளுக்கு உணவு வழங்கி அன்றைய நாளை கண்ணியப் படுத்தினால் அல்லாஹ் எம்மை நேசிப்பான். ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் அன்பும், அருளும் எமக்கு கிடைக்கும்.
நானும், மேலே பெயர் குறிப்பிட்ட இருவரும் ஒரு சமயம் ஒரு மாத காலம் இறாக் – பக்தாதில் தங்கியிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த “குர்திஷ்” ஹோட்டலுக்கும், குத்பு நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களின் உறங்குமிடத்திற்கும் ஒரு சில மீற்றர் தூரமே இருந்தது. தினமும் செல்வோம். அருளும் பெற்றோம். ஆன்மிக மகான்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அபார சக்திகள் கண்டு வியந்தோம். வியர்வையால் நனைந்தோம்.
இம்மாதம் 16ம் நாள்தான் தொழுகையின் போது முன்னோக்கப்படுகின்ற “கிப்லா” “கஃபா”வின் பக்கம் மாற்றப்பட்டது. 17ம் நாள்தான் “கஃபா”வைத் தாக்குவதற்காக வந்த யானைப் படை “அபாபீல்” பறவைகளால் நசுக்கி நாசமாக்கப்பட்டன.
அன்புள்ள முரீதீன்களே! முஹிப்பீன்களே!
நானும், நீங்களும் “ஷரீஆ”வை பேணுவதுடன் ஆன்மிகம் கற்று அவ்வழியில் வெற்றி நடை போட்டு எமது இலட்சியத்தை வென்றெடுக்கத் துணிவோம்.
நாம் இம்மாதம் 10ம் நாள் வரை “அஹ்லுல் பைத்” பெருமானார் அவர்களின் குடும்பத்தவர்கள் கொண்டு “வஸீலா” தேடி அவர்களின் அருள் பெற்று மகிழ்வோம். பின்வரும் பாடலை தினமும் ஓதிப்பாடி பாதுகாப்பு பெறுவோம்.
لِيْ خَمْسَةٌ أُطْفِيْ بِهَا حَرَّ الْوَبَاءِ الْحَاطِمَةْ – اَلْمُصْطَفَى وَالْمُرْتَضَى وَابْنَاهُمَا وَالْفَاطِمَةْ
இதன் பொருளை எழுதுகிறேன். இதை மனதிற் கொண்டு நள்ளிரவில் நடு நிசியில் கண்ணீர் மல்கிப் பாடுங்கள்.
“எனக்கு ஐவர் உள்ளனர். அவர்களைக் கொண்டு துன்புறுத்தும் – வேதனை தரும் பயங்கர நோயின் சூட்டை அணைக்கிறேன். அவர்கள் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம், ஸெய்யிதுனா அலீ, அவ்விருவரின் இரு ஆண் மக்கள், அன்னை பாதிமா றழியல்லாஹு அன்ஹும் ஆகியோர்”
இவ்வாறு பாடுகின்றவன் “அஹ்லுல் பைத்” என்று பிரசித்தி பெற்ற எம் பெருமானார் முஹம்மத் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம், ஸெய்யிதுனா அலீ றழியல்லாஹு அன்ஹு, ஸெய்யிதுனா ஹஸன் றழியல்லாஹு அன்ஹு, ஸெய்யிதுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு, அன்னை பாதிமா றழியல்லாஹு அன்ஹா ஆகியோர்களைக் கொண்டு தனக்கு பொல்லாத, பயங்கர நோய்கள் வராமல் “வஸீலா” உதவி தேடுகிறான்.
கற்றறிந்த உலமாஉகளுக்காகவும், அறபுக் கல்லூரிகளில் அறபு மொழியிலக்கணம் கற்றுக் கொண்டிருப்பவர்களுக்காகவும் மட்டும் சில வரிகள் எழுதுகிறேன். ஏனையோர் இவ்வரிகளை வாசிக்கத் தேவையில்லை.
لِيْ خَمْسَةٌ
– கபர் முகத்தம், முப்ததா முஅக்கர், اُطْفِيْ பிஅல் ழமீர் பாயில், بها பா ஜார், ஹா மஜ்றூர், حر الوباء الحاطمة ஹர்ற மப்ஊல் முழாப், அல்வபாஇ முழாப் இலைஹி, அல்ஹாதிமா ஸிபத்.
المصطفى
அல் முஸ்தபா பதல், والمرتضـى வாவு அத்ப், அல் முர்தழா மஃதூப், وابناهما வாவு அத்ப், இப்னா மஃதூப் முழாப், ஹுமா முழாப் இலைஹி, والفاطمة வாவு அத்ப், அல் பாதிமா மஃதூப்.
وابناهما
என்ற வசனத்தில் ابنا என்ற சொல் அதற்கு முன்னாலுள்ள அல் முஸ்தபா வல் முர்தழா எனும் “றப்உ” செய்யப்பட்ட இஸ்ம்கள் மீது அத்பு செய்யப்பட்டதாகும். றப்உச் செய்யப்பட்ட ஒன்றில் அத்பு செய்யப்பட்டது “றப்உ” செய்யப்பட்டதாகவே இருக்கும். இதன்படி இப்னா என்ற சொல் றப்உ செய்யப்பட்டதாக உள்ளது. அது இப்னுன் என்ற சொல்லின் தத்னியா – இருமையாயிருப்பதால் இப்னா என்று அலிபைக் கொண்டு றப்உ செய்யப்பட்டுள்ளது. இச் சொல் இப்னானி என்றுதான் வர வேண்டும். அவ்வாறு வராமல் விட்டதற்கான காரணம் இச் சொல் ஹுமா என்ற சொல்லுடன் இழாபத் செய்யப்பட்டுள்ளதால் முழாப் என்பதில் நூன் வருவது பிழை என்ற அடிப்படையில் அந்த நூன் நீக்கப்பட்டுள்ளது. والفاطمة அத்பும், மஃதூபுமாகும்.
இப்னா என்றால் இரு ஆண் மக்கள் என்று பொருள். ஸெய்யிதுனா ஹஸன் என்பவர்களும், ஸெய்யிதுனா ஹுஸைன் என்பவர்களும் அலீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் இரு ஆண் மக்களேயன்றி நபீ பெருமான் அவர்களுக்கு அவ்விருவரும் மக்களல்லர். பேரர்கள்தான்.
இப்பாடலில் இப்னாஹுமா என்ற சொல்லில் வந்துள்ள ஹுமா என்ற சொல் பெருமானார் அவர்களையும், அலீ அவர்களையுமே குறிக்கும்.
இங்கு கேள்வி என்னவெனில் ஹஸன், ஹுஸைன் இருவரும் நபீ பெருமானாருக்கு பேரர்களாயிருக்கும் நிலையில் அவர்களின் ஆண் மக்கள் என்று சொல்லலாமா என்பதேயாகும். பதில் ஆகும் என்பதே. ஏனெனில் அறபு மொழியில் பேரனுக்கு மகன் என்று சொல்லும் வழக்கம் அறபு மக்களிடம் உண்டு.
முற்றும்.