தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
ஒரு முழுக்காளி – அதாவது “ஹலால்” மார்க்கம் அனுமதித்த வழியிலோ, “ஹறாம்” அது விலக்கிய வழியிலோ அல்லது உறக்கத்திலோ, அல்லது காம உணர்வின் மூலமோ ஒருவனுக்கு “நுத்பா” விந்து வெளியானால் அவன் இஸ்லாம் கூறும் “ஷரீஆ” சட்டப்படி உரிய முறைப்படி – அதாவது “நிய்யத்” வைத்து குளிக்க வேண்டும். இது அவனின் கடமை.
இக்கடமையை அவன் நிறைவேற்றும் வரை அவன் முழுக்காளியாகவே “ஷரீஆ”வின் பார்வையில் இருப்பான். இவன் மேற்கண்டவாறு, சட்டம் பேணி குளிக்காதவரை அவன் பல காரியங்கள் செய்வது “ஷரீஆ”வின் விதிப்படி “ஹறாம்” தண்டனைக்குரிய குற்றமாகும்.
அவை தொழுதல், திருக்குர்ஆன் ஓதுதல், அதன் அச்சுப் பிததியை தொடுதல், சுமத்தல், திருக் “கஃபா”வை “தவாப்” சுற்றுதல், பள்ளிவாயல் எல்லையில் தங்கி இருத்தல் என்பனவாகும்.
மறதி காரணமாக ஏழு நாட்கள் குளிக்காதிருந்த ஒரு முழுக்காளி எட்டாம் நாள் தான் குளிக்கவில்லை என்று அவனுக்கு நினைவு வந்தால் அவன் உடனே முறைப்படி குளிக்கவும் வேண்டும், தான் குளிப்பதற்கு முன்னுள்ள கடமையான தொழுகைகளை திரும்பத் தொழவும் வேண்டும். அவன் அக்கால கட்டத்தில் திருக்குர்ஆன் ஓதியிருந்தால், அல்லது தொட்டிருந்தால், பள்ளிவாயலில் தரித்திருந்திருந்தால், திருக் “கஃபா”வை சுற்றியிருந்தால் அத்தகைய பாவங்களுக்காக அவன் பாவ மன்னிப்பு கேட்பது அவசியமாகாது. ஆயினும் அவன் செய்த “தவாப்” நிறைவேறமாட்டாது.
மேற்கண்ட சட்டங்கள் யாவும் மறதி காரணமாக குளிக்காமல் இருந்த முழுக்காளிக்கேயாகும்.
மறதி காரணமின்றி மன முரண்டாக குளிப்பும், களிப்பும் என்று நையாண்டி செய்து குளிக்காமல் விட்டவன் “ஷரீஆ” சட்டப்படி பெரும்பாவியாவான். சில வேளை அவன் “காபிர்” ஆவதற்கும் வாய்ப்பு உண்டு. ஏனெனில் மார்க்க சட்டங்களை நையாண்டி செய்வது மத மாற்றத்தை ஏற்படுத்தவும் கூடும். “ஷரீஆ” சட்டங்களை நையாண்டி செய்யாமல் அவற்றைப் பேணாமல் இருந்தானாயின் அவன் பாவி மட்டும்தான். மதம் மாறியவனாகமாட்டான். இது தொழுகையை மறுக்காமல் அதை விட்டவனுக்குள்ள சட்டம் போன்றதாகும். தொழாமலிருப்பவன் பாவிதான். அவன் “காபிர்” அல்ல. ஆயினும் அதை மறுத்தவனும், தொழுகையும், கழுதையும் என்று அதை நையாண்டி பண்ணியவனும் “காபிர்” ஆகிவிடுவான்.
மறதிக்கு மன்னிப்பு உண்டு என்ற வகையில் மறந்து முழுக்கு இறுக்காமல் – குளிக்காமல் இருந்தவன் மன்னிக்கப்படுவானாயினும் அவன் முழுக்கோடு இருந்த நாட்களின் தவறிய தொழுகைகளை முறைப்படி குளித்த பின் திரும்பத் தொழுதல் வேண்டும். இவன் மறந்து செய்தவனாகையால் தண்டிக்கப்பட மாட்டான்.
ஓர் “ஒபிஸர்” அலுவலகங்களில் கடமை செய்பவர், அல்லது கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கும் ஓர் ஆசிரியர் தான் முழுக்காளி என்பதை மறக்காது போனாலும் நேரமின்மை காரணமாக குளிக்காமல் தனது கடமைக்குச் செல்ல முடியுமா? என்று ஒருவர் கேட்பாராயின் ஆம் முடியும். அது “ஹறாம்” தண்டனைக்குரிய குற்றமல்ல என்று நாம் சொல்வோம். எனினும் அவர் “ளுஹ்ர்” தொழுவதாயின் அது “கழா” ஆகுமுன் – “அஸ்ர்” தொழுகைக்கான நேரம் வருமுன் குளித்து “ளுஹ்ர்” தொழ வேண்டும்.
முழுக்குள்ள ஒருவன் “தாரிகுஸ்ஸலாத்” அறவே தொழாதவனாயின் அவனுக்கு குளிப்பு கடமைதான். அவன் எந்நேரமும் குளிப்பான். பல நாட்கள் கடந்தும் குளிப்பான்.
முழுக்கானவன் குளிக்காமல் உண்பதும், பருகுவதும் ஆகும். எனினும் தவிர்ப்பது சிறந்ததே! ஒரு முழுக்காளி சாப்பிடுமுன், குடிக்கு முன் “பிஸ்மி” சொல்வதும், அதன் பின் “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்வதும், தும்மினால் “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்வதும், கொட்டாவி விட்டால் “அஊது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் றஜீம்” என்று சொல்வதும், ஒருவரைக் காணும் போது அவருக்கு “ஸலாம்” சொல்வதும், “ஸலாம்” சொன்னவருக்கு பதில் சொல்வதும் ஆகும். ஆகுமானவையாக இருந்தாலும் கூட இவற்றைத் தவிர்த்துக் கொள்வது சிறந்ததேயாகும். அதாவது முழுக்கான உடனேயே குளிப்பதன் மூலம் தவிர்ந்து கொள்வது நல்லது. தவிர்க்காமல் செய்தல் தண்டனைக்குரிய குற்றமாகாது.
ஒரு “ஒபிஸர்” அலுவலர் ஒன்பது மணிக்கு தனது அலுவலகம் செல்ல வேண்டும். அவர் காலையில் 08.30 மணிக்கே உறக்கத்திலிருந்து விழித்தார். அவர் முழுக்காளியாகவும் இருந்தார். அவர் குளித்து விட்டு அலுவலகம் செல்வதற்கு நேரமில்லாத நிலையில் அவர் குளிக்காமலேயே அலுவலகம் செல்ல ஆயித்தமானார். எதிர் பாராமல் அவரின் அடுத்த வீட்டில் ஒருவர் மரணித்து விட்டார். இவ்வாறான கட்டத்தில் அவர் குளிக்காமல் “ஜனாசா” வீட்டிற்கு சென்று “ஜனாசா”வை பார்ப்பது ஆகுமா? ஆம், ஆகும். اللهم اغفر له وارحمه என்று சொல்வதும் குற்றமாகாது.
ஒரு பள்ளிவாயலின் இமாம் ஓர் இரவு முழுக்காளியாகிவிட்டார். காலையில் “ஸுப்ஹ்” தொழுகைக்கு முன் எழுந்து முறைப்படி குளித்துவிட்டு தொழுகை நடத்தப் போவதென்று உறங்கினார். உரிய நேரத்திற்கு விழிப்பு வரவில்லை. பள்ளிவாயலில் மக்கள் தொழுகைக்காக கூடி விட்டார்கள். தொழுகை நடத்த யாருமில்லை. தொழ வந்தவர்களில் ஒருவர் பள்ளிக்குப் பக்கத்திலிருந்த இமாம் அவர்களின் வீட்டுக் கதவை தட்டி இன்று வெள்ளிக்கிழமை “ஸுப்ஹ்” தொழுகைக்காக மக்கள் பள்ளிவாயலில் உங்களைக் காத்திருக்கின்றார்கள். தொழுகை நடத்த அவசரமாக வாருங்கள் என்று அழைத்தார். போகாவிட்டால் தலைவர் தன்னை கடமையிலிருந்து நீக்கிவிடுவார் என்ற பயம் ஒரு பக்கம். முழுக்கோடு தொழுகை நடத்துவது பெரும்பாவம் என்ற பயம் மறு பக்கம். என்ன செய்வதென்று யோசித்து குளிக்காமலேயே பள்ளிவாயல் சென்று தொழுகை நடத்தினார் இமாம். இவர் செய்தது சரியா? பிழையா?
நூறு வீதமும் பிழைதான். இமாமின் தொழுகையும் நிறைவேறாது, இவர் முழுக்கோடு தொழுகை நடத்துகிறார் என்பதை அறிந்து கொண்டு அவரைப் பின்பற்றி தொழுதவர்களின் தொழுகையும் நிறைவேறாது. அறியாமல் தொழுதவர்களின் தொழுகை மட்டும் நிறைவேறும். இமாம் பல “ஹறாம்”களை ஒரே நேரத்தில் செய்த குற்றவாளியாவார். அவரும் அத் தொழுகையை “கழா” திரும்பத் தொழ வேண்டும். அதேபோல் அவரின் நிலைமையை அறிந்து கொண்டு தொழுதவர்களும் திரும்பத் தொழ வேண்டும். இமாம் அவர்கள் தான் செய்த தப்புக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும். இமாம் அவர்கள் மீண்டும் இப்படியொரு தவறைச் செய்யாமல் இருக்கவும் வேண்டும். பள்ளிவாயல் தலைவர் இமாமை எச்சரிக்க வேண்டும். அல்லது விலக்கிவிட வேண்டும். ஒரு மௌலவீ என்னதான் நடந்தாலும் முழுக்குடன் தொழுகை நடத்த முன்வருவாரா? என்று கேட்காமலிருப்பது நல்லது.
ஒரு பள்ளிவாயலின் இமாம் – தொழுகை நடத்துபவர் “ஹனபீ மத்ஹப்” ஐ பின்பற்றுபவராக இருந்தால் அவரின் உடல் திரையின்றி அவரின் மனைவியின் உடலில் படுமாயின், அவளும் “ஹனபீ மத்ஹப்”ஐ பின்பற்றுபவளாக இருந்தால் இருவரின் “வுழூ”வும் முறிந்து விடாது. இருவரில் ஒருவர் “ஷாபிஈ மத்ஹப்”ஐ பின்பற்றுபவராக இருந்தால் அவரின் “வுழூ” மட்டும் முறிந்து விடும். மற்றவரின் “வுழூ” முறியாது.
ஒரு முழுக்காளி உரிய முறையில் குளிப்பதற்கு முன் அவருக்கு “பாங்கு” சொல்லும் சத்தம் கேட்டால் அவர் வழமை போல் அதற்கு பதில் சொல்ல முடியும். அதுவும் குற்றமாகாது. எனினும் தவிர்த்துக் கொள்வது சிறந்தது.
ஒருவன் முழுக்காளியாக இருக்கிறான். அவனைத் தேடி அவனின் இல்லத்திற்கு மார்க்கப் பெரியார், அல்லது அவனின் ஞான குரு வந்தால் அவன் முறைப்படி குளிக்காமல் அவர்களைச் சந்திக்கலாம். அது பிழையாகாது. அவர்களுடன் “முஸாபஹா” கை கொடுக்கலாம். இதுவும் பிழையாகாது. “ஹறாம்” என்றோ, “மக்றூஹ்” என்றோ சொல்ல முடியாது. எனினும் “அதப்” மரியாதைக் குறைவு என்று மட்டுமே சொல்ல முடியும்.
முழுக்காளி உண்பதற்கு “ஹலால்” அனுமதிக்கப்பட்ட கால் நடைகளையும், பறவைகளையும் அறுப்பது ஆகும். தடையில்லை. அதன்போது “பிஸ்மி” சொல்லவும் முடியும். தடையில்லை.
முழுக்காளியின் உடல், “காபிர்” உடைய உடல் இரண்டும் சுத்தமானவையே. அசுத்தமானவையல்ல. முழுக்காளியின் உடலோ, காபிருடைய உடலோ முஸ்லிமின் உடலோடு திரையின்றிப் பட்டாலும் முஸ்லிமின் உடல் அசுத்தமாகாது. “காபிர்” கொள்கை அசுத்தமானவனே தவிர உடல் அசுத்தமானவனில்லை. ஒரு முஸ்லிம் “காபிர்” ஐ வெறும் மேனியோடு கட்டிப் பிடித்து ஆலிங்கனம் செய்வதும் ஆகும்.
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ
ஆதமின் மக்களை நாங்கள் சங்கைப் படுத்தியுள்ளோம். (திருமறை 17-70) என்ற வசனத்தின் படி முஸ்லிம், மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரின் உடல்களும் சுத்தமானவையே. மனிதன் யாராயிருந்தாலும் அவன் ஆதம் நபீ அவர்களின் பிள்ளையாகவே இருப்பான்.
ஆதமின் மக்களை நாம் சங்கைப் படுத்தியுள்ளோம் என்ற திருமறை வசனத்திற்கு بِطَهَارَةِ أَبْدَانِهِمْ அவர்களின் உடல்கள் சுத்தமானவை என்று கருத்துக் கொள்ள வேண்டும்.
உயிரினங்கள் எதுவாயினும் அதன் “நுத்பா” விந்து – இந்திரியம் சுத்தமானதேயாகும். சுத்தமானதென்பதால் அதைச் சாப்பிடலாம் என்று கருத்தல்ல. ஒரு வஸ்த்து சுத்தமாயினும் அது அருவருப்பானதாயின் அதைச் சாப்பிடுவது விலக்கப்பட்டதாகும். அதாவது “ஹறாம்” ஆகும். மூக்குச் சீழ், விந்து, காதுப் பீ, மூக்குப் பீ, உடலில் உருட்டி எடுக்கும் அழுக்கு போன்று.
ஒருவரின் வீட்டுக்குச் செல்லும் வழி “மஸ்ஜித்” பள்ளிவாயலினூடாக இருக்குமானால் வீட்டுக்காரன் முழுக்காளியாயிருந்தாலும் அவ்வழியால் செல்ல முடியும். ஆகும். எனினும் விரைவாகச் செல்வது விரும்பத்தக்கது.
முழுக்காளி திருக்குர்ஆன் ஓதவும் கூடாது. திருக்குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட “முஸ்ஹப்” ஐ தொடவும் கூடாது. ஆயினும் பிறர் திருக்குர்ஆன் ஓதும் சத்தத்தை கேட்பது விலக்கப்பட்டதல்ல. கேட்க முடியும்.
“முழுக்காளி” பெருந் தொடக்குள்ளவன் என்றும், “வுழூ” எனும் சுத்தமில்லாதிருப்பவன் சிறு தொடக்காளி என்றும் “ஷரீஆ” கூறும்.
முழுக்காளிக்கு எதெல்லாம் தடையோ அத்தடைகள் யாவும் அவன் உரிய முறைப்படி குளிப்பதன் மூலம் நீங்கிவிடும். பெரும் தொடக்கால் எதுவெல்லாம் தடையாயிருந்ததோ அதெல்லாம் நீங்கிவிடும். சிறு தொடக்கால் எதுவெல்லாம் தடை செய்யப்பட்டிருந்ததோ அதெல்லாம் “வுழூ” செய்வதன் மூலம் நீங்கிவிடும்.
ஒரு தரம் விந்து வெளியாகி முழுக்காளியான ஒருவன் முறைப்படி குளிக்குமுன் மீண்டும் இரண்டாம் முறையாக விந்து வெளியானால் இருமுறை குளிக்க வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. பல முறை வெளியானாலும் சட்டம் ஒன்றுதான். ஒருவனுக்கு விந்து வெளியாகாமல் குளிப்பு கடமையாவதற்கு – அவன் முழுக்காளியாவதற்கு வாய்ப்பு உண்டா? ஆம் உண்டு.
அதெவ்வாறெனில் ஒருவன் மனைவியுடன் உடலுறவு கொள்வதற்காக தனது ஆண்குறியின் “ஹஷபத்” (மொட்டு) எனும் பகுதியை மட்டும் உட் செலுத்தினான். எனினும் ஏதோ ஒரு காரணத்தால் உடலுறவை தொடராமல் நிறுத்த வேண்டியேற்பட்டால் அவன் முழுக்கு கடமையானவன்தான். விந்து வெளியாகாவிட்டாலும் சரியே! ஆண்குறி முழுமையாக உட்செல்லாவிட்டாலும் சரியே! இவன் விந்து வெளியாகவில்லையே என்று அவன் உரிய முறைப்படி குளிக்காமல் இருத்தல் கூடாது. அவன் முறைப்படி குளிக்கவே வேண்டும். குளித்தால் மட்டும்தான் அவன் முழுக்கிலிருந்து விடுபடுவான். இன்றேல் அவன் ஆயிரம் வருடம் வாழ்ந்தாலும் முழுக்காளிதான்.
“ஹஷபத்” என்றால் ஆண்குறியில் வெட்டப்பட்டு அடையாளமுள்ள அதன் நுணிப்பகுதியாகும். ஒருவன் முழுக்காளியாவதாயின் குறைந்த அளவு ஆண்குறியின் சொல்லப்பட்ட பகுதி மட்டும் உட் சென்றால் போதும்.
“நுத்பா” விந்து – இந்திரியம் என்பது “ஷரீஆ”வின் பார்வையில் சுத்தமானதேயன்றி சலம் போல் அசுத்தமானதல்ல. அது உடலிலோ, உடையிலோ பட்டால் அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
ஒரே ஆண்குறியால் வருகின்ற பல பொருட்களில் ஒன்றான “நுத்பா” இந்திரியம் சுத்தமானதாயும், சலம், மதி, வதி போன்றவை அசுத்தமானவையாயும் இருப்பது வியப்பான விடயமேயாகும். அல்லாஹ்வின் அறிவை என்னென்பது?
“நுத்பா” விந்தும் அசுத்தமானதென்றிருந்தால் விந்தினால் படைக்கப்பட்ட மனிதனும் அசுத்தமானவனென்றே சொல்ல வேண்டும். சொல்லாவிட்டாலும் அது ஒரு நகைப்பிற்குரியதாகவே இருக்கும்.
மருத்துவ விஞ்ஞானம் இன்னும் பல படிகள் உயரச் சென்றால் ஒரு வழியால் வெளியாகும் சலம் அசுத்தமானதற்கும், விந்து சுத்தமானதற்குமான காரணத்தை கண்டறிய முடியும். இஸ்லாமிய எந்தவொரு சட்டமாயினும் அது ஒரு தத்துவத்தை கருவாகக் கொண்டதாகவே இருக்கும். அதை நாம் புரிந்து கொள்ள வில்லையென்பதால் அச்சட்டம் பிழையானதென்றோ, தத்துவமற்றதென்றோ முடிவு செய்தல் கூடாது.
ஸுப்ஹானல்லாஹ்! இஸ்லாம் மார்க்கத்தின் மகிமைதான் என்னே! அதன் தத்துவம்தான் என்னே!
اللهم أحيني على الإسلام، وأمتني على الإسلام، واحشـرني غدا مع أهل الإسلام، اللهم عاقب قوما كفّروني وكفّروا طائفتي بعقاب شديد، واஷئت بهم عند قدميّ مقهورين ومدحورين، مذمومين ومذعونين، اللهم اهد قوما كفّروني وكفّرو طائفتي بفتواهم أو عاقبهم ببلاء عظيم وآفة عجيبة تكون عبرة لغيرهم، يا أحكم الحاكمين،