Sunday, October 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்(فِرُّوْا مِنَ الشَّيَاطِيْنْ) ஷெய்தான் - ஷாத்தான்களை விட்டும் விரண்டோடுங்கள்!

(فِرُّوْا مِنَ الشَّيَاطِيْنْ) ஷெய்தான் – ஷாத்தான்களை விட்டும் விரண்டோடுங்கள்!

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)

فِرُّوْا مِنَ الشَّيَاطِيْنْ – ஷெய்தான் – ஷாத்தான்களை விட்டும் விரண்டோடுங்கள்!

“ஷயாதீன்” ஷாத்தான்கள் சாகும் வரை சத்தமிட்டாலும் சத்தியம் சத்தியமே! அது அசத்தியமாகாது.

“எல்லாம் அவனே” எனும் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவம் “லா இலாஹ இல்லல்லாஹ்” எனும் இஸ்லாமிய மூல மொழி தருகின்ற தங்கப் பஸ்பம் கலந்த “பாலுதா”வாகும்.

“ஹக்” வேறு, “கல்க்” வேறு என்பவன் வாழை இலை சாப்பிட்டு வாழும் புழு போன்றவனாவான். அவ்விரண்டும் ஒன்று என்பவன் வாழைப்பூவில் தேன் சுவைக்கும் தேனீ போன்றவனாவான்.

அன்புத் தோழா! நீ வாழை இலை சாப்பிடும் புழுவாயிருக்க விரும்புகிறாயா? அல்லது வாழைப் பூவில் தேன் சுவைக்கும் தேனீயாக இருக்க விரும்புகிறாயா? உனக்கு எது விருப்பம்? தயங்காமல் சொல். அதற்கு வழிகாட்டுகிறேன்.

நீ தேனீயாகி தேன் சுவைக்க விரும்பினால் காத்தான்குடி வந்து பிரதான வீதியில் அமைந்துள்ள “பஸ்மலா” சந்தியில் நின்று மேற்கு திசையைப் பார். விண்ணைத் தொடும் பள்ளிவாயல் “மனாறா” ஒன்று உன் கண்ணைக் கவரும். அதை நோக்கி நடை போடு. “மொறோக்கோ” கட்டிடக் கலையை நினைவூட்டும் ஒரு கட்டிடம் உன் கண்ணைக் கவரும். அதுவே காத்தான்குடி பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலின் எழில்மிகு தோற்றமாகும்.

இங்குதான் இலை மறை காய் போல் வாழ்ந்த இறைநேசர் அல்ஹாஜ், அல் ஆலிமுல் பாழில், அல் வலிய்யுல் வாஸில் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் துயில்கின்றார்கள்.

முதலில் அவர்களின் காலடி சென்று உன்னை அவர்களுக்கு காணிக்கையாக்கு. فِدَاكَ رُوْحِيْ وَجِسْمِيْ என் உயிரும், உடலும் உங்களுக்கே அர்ப்பணம் என்று கூறு. இதன் பின்

اِفْتَحْ قَلْبِيْ يَا وَلِيَّ اللهْ! أَنْتَ مِنَ الْأَبْدَالْ، وَقَدْ حَضَرَ صَلَاةَ جَنَازَتِكَ وَلِيٌّ مِنَ الْأَبْدَالْ، كَمَا بَشَّرَ بِهَذِهِ الْبُشْرَى أَحَدُ الْأَبْدَالِ مِنْ أَهْلِ الْهِنْدِ، اَلسَّيِّدُ الشَّيْخُ عَبْدُ الرَّحْمَنْ أَمْبَا، نَوَّرَ اللهُ ضَرِيْحَهُ بِأَنْوَارِهِ،

என்று பிரார்த்தி.

இதன் பின் என் மீது உனக்கு நல்லெண்ணம் இருந்தால் மட்டும் என்னைச் சந்தி. நான் பள்ளிவாயலுக்கு சுமார் 10 மீற்றர் தூரத்திலேயே இருக்கிறேன். என்னைச் சந்திக்க வரும் போது எவரிடமும் வழி கேட்காதே! ஏனெனில் வழிகாட்டுபவர்களில் நல்லவர்கள் போல் நடந்து குறுக்கு வழி காட்டும் ஷாத்தான்களும் உள்ளனர். இது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளன.

வெளியூர்களில் இருந்து என்னைச் சந்திக்க வந்த சிலருக்கு என் வீட்டுக்கு வழி காட்டுவதாகக் கூறி காத்தான்குடியை அடுத்துள்ள இந்துக்கள் வாழும் ஆரையம்பதி என்ற ஊருக்கு வழிகாட்டிய நல்ல மனிதர்களும் இவ்வூரில் வாழ்கிறார்கள். இவர்கள்தான் “பத்வா” குழுவின் அடியாட்கள்.

இதனால்தான் எவரிடமும் வழி கேட்காமல் வர வேண்டும் என்பதற்காக சில அடையாளங்களைக் கூறினேன். அல்லாஹ் இன்னோருக்கு நல்லறிவை வழங்கி அவர்கள் மனிதர்களாக வாழ்வதற்கு வழி செய்வானாக!

இதன் பிறகு என்னைச் சந்திக்க வா. ஒரு சில மணி நேரங்கள் என்னைச் சந்திப்பதால் மட்டும் நான் பேசி வருகின்ற “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே எனும் இறையியலை நூறு வீதமும் உன்னால் விளங்கிக் கொள்ள முடியாது. என்னால் விளக்கி வைக்கவும் முடியாது. இதனால் சந்திப்பு பயனற்றதாகிவிடும்.

ஆகையால் நான் கூறும் இறைஞானத்தை நீ இலகுவாக விளங்கிக் கொள்ள விரும்பினால் எனது ஆலோசனைப்படி செயல்படு.

நான் கடந்த காலங்களில் பல தலைப்புக்களில் பேசிய உரைகளை CD மூலம் நீ கேள். 1000க்கும் அதிக பேச்சுக்களை உள்ளடக்கிய இறுவெட்டுக்களை உனக்கு அன்பளிப்பாக தருகிறேன். அவற்றைச் செவியேற்ற பின் மீண்டும் ஒரு முறை என்னைச் சந்தி.

நான் இவ்வாறு சொல்வதற்கான காரணம் “வஹ்ததுல் வுஜூத்” ஞானம் தொடர்பான முன்னறிவை நீ அறிந்து கொள்ள வேண்டும் என்பதேயாகும். இவ் அறிவு உனக்குத் தெரியுமாயின் நான் நேரில் கூறும் கருத்துக்களை மிக எளிதில் உன்னால் புரிந்து கொள்ள முடியும். காலமும், நேரமும் வீணாகாது.

அன்புத் தோழா! اَلْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ “ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரன்” என்ற நபீ மொழியின் படி நீ என்னுடன் பிறக்காத இஸ்லாமிய சகோதரன்தான்.

இன்னும் நபீ பெருமானின் اَلْخَلْقُ عِيَالُ اللهِ “படைப்பு அல்லாஹ்வின் குடும்பம்” என்ற நபீ மொழியின் படி நீயும் எனது குடும்பத்தவன்தான். நானும் உனது குடும்பத்தவன்தான்.

எனவே, உனது நல் வாழ்வை எனது நல்வாழ்வாக நான் கருதுகிறேன். உனக்கும், எனக்கும் இரத்த உறவு இல்லாது போனாலும் கூட அதைவிடப் பெரிய உறவு எமக்கிடையில் உண்டு என்பதை நீ நம்பு.

உனக்கும், எனக்கும் மூலக் கருவான அல்லாஹ்வின் “தாத்” உள்ளமையின் வெளிப்பாடுதான் நாமிருவரும் என்பதை விளங்கிக் கொள். இவ் உறவு இரத்த உறவை விடச் சிறந்ததென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

நீ இவ் அகமியத்தை விளங்காமல் என்னை விட்டும் தூரம் செல்வது, அல்லது சில அறிவிலிகளின் உளறல்களைக் கேட்டு ஏமாந்து என்னை “முர்தத்” என்று நீ ஓதுக்கி வைப்பது எனது உடலில் ஒரு பகுதி என்னிலிருந்து பிரிந்து செல்வதாக நான் உணர்கிறேன்.

எனவே, அல்லாஹ் உன்னை எதற்காக படைத்தான்? அவனின் இலட்சியம் என்ன? அதிலுள்ள இரகசியம் என்ன? என்பவற்றை நீ அறிந்து கொள்ளாமல் நீ வாழ்ந்து மரணித்தால் நீ மறுவுலகில் இறைவனால் தண்டிக்கப்படுவாய் என்பதை நிச்சயமாக நீ நம்பு. ஏனெனில் நீ பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதன். பகுத்தறிவு வழங்கப்படாத ஏனைய உயிரினங்கள் போன்றவனல்ல. ஆகையால் இறை தண்டனையிலிருந்து நீ தப்பிக் கொள்ள வழி தேடு.

உன்னை அவன் படைத்தான் என்றால் ஸூபீ மகான்களின் கருத்தின் படி அவனே உன்னாக வெளியானான் என்பதாகும். இதை நீ விளங்கி வாழ்ந்து கொள்.

அவன் உன்னாக வெளியானதற்கான காரணம் அவன் “நீ எனும் கண்ணாடியில் அவன் தன்னைக் கண்டு மகிழ்வதற்கேயாகும்”. படைப்புக்கள் என்பன அவன் அவற்றின் மூலம் தன்னைக் கண்டு மகிழ்வதற்காக அவன் அவையாக வெளியான கண்ணாடிகளேயாகும். இதுவே படைப்பின் ரகசியம். இதுவே அவனின் இலட்சியம். இதை நீ அறியாதிருப்பதும், அதற்கேற்ப செயல்படாதிருப்பதும் நீ செய்யும் தவறேயன்றி வேறென்ன?

அவன் தன்னைக் கண்டு மகிழும் கண்ணாடியாக உன்னாக வெளியானானே இது அவன் உனக்குச் செய்த பேருபகாரம் என்பதை எண்ணி அவனை உள்ளத்தால் மட்டுமன்றி உனது அனைத்து உறுப்புக்களாலும் நீ அவனைப் புகழ்ந்தாலும் அப்புகழ் அவனின் உதவிக்கு – அருளுக்கு நிகராகாதென்பதை விளங்கிக் கொள்.

நீ என்னைச் சந்திக்கும் போது மீண்டும் ஒரு முறை என்னைச் சந்தித்து என்னுடன் குறைந்தது மூன்று நாட்களேனும் இராப்பகலாக தங்கியிருப்பதற்கு அனுமதி பெற்றுக் கொள்.

இஸ்லாமிய அறிஞர்களில் இஸ்லாமிய கொள்கை தெரியாத கொள்கை குருடர்கள் உள்ளார்கள் என்பதை மறந்து விடாமல் அவர்களை இனங்கண்டு அவர்களின் தொடர்பை துண்டித்துக் கொள்.

صُحْبَةُ الْأَخْيَارِ تُوْرِثُ حُسْنَ الظَّنِّ بِالْأَشْرَارِ، وَصُحْبَةُ الْأَشْرَارِ تُوْرِثُ سُوْءَ الظَّنِّ بِالْأَخْيَارِ،

நல்லோரை நட்பு வைத்தல் தீயோர் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தும், தீயோருடன் நட்பு வைத்தல் நல்லோர் மீது கெட்டெண்ணத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்.

என்னையும், நான் கூறிய ஞான மகான்களினதும், வலீமார்களினதும் ஞான அகமியங்களை ஏற்றுக் கொண்டவர்களையும் சட்ட விரோதமாகவும், அநீதியாகவும் மதம் மாற்றிய போலிகளை நம்பாதே! அவர்களுக்கும், இறைஞானத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்து கொள். அல்லாஹ் நாடினால் சந்திப்போம்.

உன்னை உயிராக்க விரும்பும் அன்பன்.

குறிப்பு: நீ என்னிடம் தங்கியிருக்கும் நாட்களில் உனக்காக மூன்று வேளை உணவும், மற்றும் குடிபானங்களும், தங்குமிட வசதியும் அன்பளிப்பாக வழங்கப்படும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments