தொடர் 01:
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“தும்மல்” என்பது மூக்கினுள் ஏற்படும் அரிப்பினால் அல்லது ஜல தோஷத்தால் – தடிமலால் மூக்கிலிருந்து பலத்த சத்தத்தோடு வெளிப்படும் மூச்சுக் காற்று.
இது தொடர்பான ஏனைய விபரங்கள் வைத்தியர்களுக்கே தெரியும்.
தும்மல் ஏற்படுதல் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுமென்று வைத்திய மேதைகளிற் பலர் கூறியுள்ளார்கள். இது உண்மையான தகவலா? இல்லையா? என்பதை நாமே பரீட்சித்துப் பார்க்கலாம்.
ஒருவன் உடல் சோர்வாக இருக்கும் வேளை தும்மல் தானாக வந்து தும்மினால் அந்தச் சோர்வு அகன்று சுறு சுறுப்பும், உற்சாகமும் வருவதை உணர முடியும். இதை நான் உணர்ந்துதான் எழுதுகிறேன்.
தும்மல் ஏற்படுவது பொதுவாக நல்லதேயாகும். إِنَّ الْعُطَاسَ سَبَبُهُ مَحْمُوْدٌ இவ்வாறு வைத்தியர்கள் கூறியுள்ளார்கள். لِأَنَّهُ يُضْعِفُ الشَّهْوَةَ وَيُسَهِّلُ الطَّاعَةَ தும்மல் சிற்றின்ப வேகத்தைக் குறைக்கும் என்றும், இறை வழிபாட்டிற்கு உதவும் என்றும் வைத்தியர்கள் சொல்லியுள்ளார்கள்.
தும்மினால் என்ன சொல்ல வேண்டும்?
عن أبي هريرة عن النبيّ صلى الله عليه وسلم قال: ‘ إذا عَطَسَ أََحَدُكُمْ فَلْيَقُلْ: الحَمْدُ لِلَّهِ، وَلْيَقُلْ لَهُ أخُوهُ أوْ صَاحبُهُ: يَرْحَمُكَ اللَّهُ، فإذَا قالَ لَهُ: يَرْحَمُكَ اللَّهُ، فَلْيَقُلْ: يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بالَكُمْ ‘ قال العلماء: بالكم: أي شأنكم.
“உங்களில் யாராவது தும்மினால் அவன் “அல்ஹம்து லில்லாஹ்” எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று சொல்ல வேண்டும். அவன் இவ்வாறு சொன்னதை செவியேற்பவன் “யர்ஹமுகல்லாஹ்” அல்லாஹ் உனக்கு அருள்புரிவானாக! என்று அவனுக்காக “துஆ” பிரார்த்திக்க வேண்டும். இவன் சொல்வதை செவியேற்கும் தும்மினவன் தனக்குப் பிரார்த்தித்தவனுக்காக يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ அல்லாஹ் உனக்கு நல்வழி காட்டுவானாக! உன் உள்ளத்தை, உன் கருமத்தை சீராக்கி வைப்பானாக! என்று சொல்ல வேண்டும்” என்று பெருமானார்அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம்: புகாரீ, அறிவிப்பு: அபூ ஹுறைறா
அல் அத்கார், பக்கம்: 220
சுருக்கம்: ஒருவன் தும்மி “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொன்னால் அதைக் கேட்டவன் அல்லது கேட்டவர்கள் “யர்ஹமுகல்லாஹ்” என்று அவனுக்காக “துஆ” பிரார்த்திக்க வேண்டும். அதைச் செவியேற்கும் தும்மினவன் يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ என்று அவர்களுக்கு “துஆ” செய்ய வேண்டும்.
இஸ்லாம் கூறும் இந்த நடைமுறை எந்த ஒரு சமயத்திலும் இருப்பதாக நான் அறியவில்லை. நபீ பெருமானின் வழிகாட்டலை என்னென்பது?!
தும்மியவுடன் “அல்ஹம்து லில்லாஹ்” சொல்லி அல்லாஹ்வைப் புகழ்வதேன்?
اَلْعُطَاسُ مِنَ الرَّحْمَنِ، وَالتَّثَائُبُ مِنَ الشَّيْطَانِ
தும்மல் அல்லாஹ்வில் நின்றுமுள்ளது, கொட்டாவி “ஷெய்தான்” ஷாத்தானில் நின்றுமுள்ளதென்று எம் பெருமானார் வைத்தியக் கலாநிதி அருளினார்கள். தும்மல், கொட்டாவி இரண்டும் எதனால் ஏற்படுகின்றன என்பதை எம் பெருமானார் எந்தப் பல்கலைக் கழகத்தில், எந்த மருத்துவ பீடத்தில் கற்றுக் கொண்டார்களோ! ஸுப்ஹானல்லாஹ்! “அல்லாஹ்” எனும் பல்கலைக் கழகத்திலேதான் கற்றார்கள். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமே இல்லை.
இதே நொடி வரை தோன்றிய, இன்னும் உலக முடிவு வரை தோன்றவுள்ள அனைத்து விஞ்ஞானிகளினதும் அறிவை 1400 ஆண்டுகளுக்கு முன்னேயே தெரிந்து கொண்ட “மீம்” இல்லாத அஹ்மத் என்ற இத் திருத்தூதர் போன்ற ஒருவரை இவ்வுலகம் இனிக் காணவே காணாது.
அல்லாஹ் அவனின் திருக்கரத்தை அண்ணலெம்பிரானின் இரு மார்புகளுக்குமிடையில் வைத்த போது عَلِمْتُ عِلْمَ الْأَوَّلِيْنَ وَالْآخِرِيْنَ முன்னோர், பின்னோர் அனைவரின் அறிவையும் அறிந்து கொண்டேன் என்று கூறிய முஹம்மத் அல்லவா அவர்கள்! عَلَّامُ الْغُيُوْبِ மறைவான இரகசியங்களையும்அறிந்த “புறொபஸர்” இன் “ஸ்டுடன்” அல்லவா ஏந்தல் அவர்கள்? அவர்கள் விடயத்தில் அவர்களுக்கு எது தெரியும்? எது தெரியாது? என்ற கேள்விக்கே இடமில்லாத சர்வகலா வல்லவர் அவர்கள்தான்.
இவர்கள் பற்றிப் புகழ்ந்து பாடிய இமாம் பூஸீரீ என்று ஸுன்னீகளாலும், “பூசாரி” என்று வஹ்ஹாபிகளாலும் அழைக்கப்படுகின்ற “புர்தா” காப்பியத்தின் உரிமையாளர் அவர்கள் எங்களின் உத்தம புத்திரர் உம்மி நபீ பற்றிப் புகழ்கையில்
فَإِنَّ مِنْ جُوْدِكَ الدُّنْيَا وَضَرَّتَهَا – وَمِنْ عُلُوْمِكَ عِلْمَ اللَّوْحِ وَالْقَلَمِ
இவ்வுலகும், மறுவுலகும் நபீயே நீங்கள் வழங்கிய கொடை என்றும், “லவ்ஹு” எனும் அனைத்து ஏற்பாடுகளின் பதிவேட்டினதும், அதில் எழுதும் எழுதுகோலினதும் அறிவு உங்களின் அறிவில் சிலதென்றல்லவா புகழ்ந்துவிட்டார்கள். இந்தச் சிறப்பிற்குரியவர்களின் அறிவு ஞானத்தை என்னென்று வர்ணிப்பது?!
இமாம் பூஸீரீ அவர்கள் இவ்வாறு சொன்னதினால்தான் அவர்கள் மீது அடங்காத ஆத்திரம் கொண்ட, “ஈமான்” எனும் விசுவாசத்தை அரிக்கும் கறையான்கள் அவர்களை صَنَمٌ كَبِيْرٌ பெரிய விக்கிரகம் என்றும், “பூஸீரீ” என்ற சொல்லை “பூசாரி” என்று மாற்றியும் இழித்துரைக்கின்றன. இக்கறையான்கள் “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி” என்று சாலைகளில் சத்தமிட்டு அலையும் காலம் வெகு தெலைவில் இல்லை. இது ஒரு சிக்னல் புரிந்து கொண்டவர்கள் சுவனம் செல்வர்.
அல்லாஹ் தனது அடியார்களுக்கு வழங்கிய “துன்யா – ஆகிறா” இவ் உலகும், மறு உலகும் என்ற இரு பெரும் கொடைகளையும் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் வழங்கியதாகச் சொல்கிறாரே பூஸீரீ என்பதுதான் கறையான்களின் குற்றச் சாட்டு.
இமாம் பூஸீரீ அவர்கள்,
فَإِنَّ مِنْ جُوْدِ اللهِ الدُّنْيَا وَضَرَّتَهَا
இவ் உலகும், மறு உலகும் அல்லாஹ் வழங்கிய நன் கொடைகள் என்று சொல்லியிருந்தார்களாயின் அவர்கள் கறையான்களுக்கு இமாம் பூஸீரீதான். பூசாரியல்ல.
இதேபோல் இமாம் பூஸீரீ அவர்கள் பெருமானாரின் அறிவு பற்றிப் புகழ்கையில் وَمِنْ عُلُوْمِكَ عِلْمَ اللَّوْحِ وَالْقَلَمِ விதிகளின் பதிவேடான “லவ்ஹ்” எனும் பலகையின் அறிவும், அதன் எழுதுகோலான “கலம்” உடைய அறிவும் நபீ பெருமானின் அறிவில் நின்றுமுள்ளதென்று சொல்லாமல் முஹம்மத் அவர்களின் அறிவு அவ்விரண்டின் அறிவில் நின்றுமுள்ளதென்று சொல்லியிருந்தால் கறையான்களுக்கு அவர்கள் இமாம் பூஸீரீதான். கறையான்களின் புற்றுகளில் எல்லாம் “கஸீததுல் புர்தா” ஒலித்திருக்கும்.
தும்மியவன் அல்லாஹ்வைப் புகழ வேண்டுமென்று நபீகளார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் கூறினார்களேயன்றி அதற்கான காரணத்தை விபரமாகச் சொன்னதாக என்னால் அறிய முடியவில்லை.
எனினும் இது தொடர்பாக வைத்திய மேதைகளிற் சிலர் என்னிடம் கூறிய தகவல்களை இங்கு எழுதுகிறேன்.
ஒருவன் தும்மியவுடன் அதன் அதிர்ச்சியால் அவனின் “ஹார்ட்” இதயம் ஒரு “செக்கன்” நொடி நேரத்தை அறுபதாகப் பங்கிட்டு வருகின்ற ஒரு பங்கின் நேரமளவு செயலிழந்து விடுகிறதாம். அது மீண்டும் செயல்படாமல் போனால் அவன் மூச்சடைத்து மரணித்து விடுவான். அது மீண்டும் செயல்படத் தொடங்கினால் அது அல்லாஹ் அவனுக்கு செய்த அருளேயாகும். அதற்காக “அல்ஹம்து லில்லாஹ்” எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று சொல்லுமாறு விஞ்ஞானியும், மெய்ஞ்ஞானியுமான உள்ளமையின் ஒளிச்சுடர் உத்தம நபீ அவர்கள் கூறினார்கள்.
விஞ்ஞானிகள், மருத்துவ மேதைகள் இன்று கண்டுபிடித்துள்ள தத்துவத்தை எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னேயே கண்டு பிடித்து விட்டார்கள்.
“தஷ்மீத்”
“தஷ்மீத்” என்றால் தும்மின ஒருவன் “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொன்னதைச் செவியேற்றவன் அவனுக்காக يَرْحَمُكَ اللهُ அல்லாஹ் உனக்கு அருள் செய்வானாக என்று பிரார்த்திப்பதைக் குறிக்கும். இது தொடர்பாக வந்துள்ள நபீ மொழிகள்.
عن أنس رضي الله عنه قال: ‘ عَطَسَ رَجُلَانِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ‘ فَشَمَّتَ أَحَدَهُمَا، وَلَمْ يُشَمِّتِ الْآخَرَ، فَقَالَ الَّذِيْ لَمْ يُشَمِّتْهُ: عَطَسَ فُلَانٌ فَشَمَّتَّهُ، وَعَطَسْتُ فَلَمْ تُشَمِّتْنِيْ، فَقَالَ: هَذَا حَمِدَ اللَّهَ تَعالى، وَإنَّكَ لَمْ تَحْمَدِ اللَّهَ تَعالى ‘
நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் சபையிலிருந்த நபீ தோழர்கள் இருவர் தும்மினார்கள். அவர்களில் ஒருவர் தும்மிய பின் “அல் ஹம்து லில்லாஹ்” என்று கூறி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். மற்றவர் புகழவில்லை. தும்மிய பின் அல்லாஹ்வைப் புகழ்ந்தவருக்காக நபீகளார் “யர்ஹமுகல்லாஹ்” அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக! என்று “துஆ” பிரார்த்தனை செய்தார்கள். மற்றவருக்காக அவ்வாறு அவர்கள் பிரார்த்திக்கவில்லை.
அப்போது பெருமானார் அவர்கள் பிரார்த்தனை செய்யாத அத் தோழர் பெருமானார் அவர்களிடம் (ஒருவர் தும்மினார். அவருக்காக நீங்கள் “துஆ” செய்தீர்கள். நான் தும்மினேன். எனக்காக நீங்கள் “துஆ” செய்யவில்லை என்று சொன்னார். அப்போது நபீ பெருமானார் அவர்கள், அவர் தும்மிய பின் அல்லாஹ்வைப் புகழ்ந்தார். அதனால் அவருக்காக “துஆ” செய்தேன். நீங்கள் தும்மிய பின் அல்லாஹ்வைப் புகழவில்லை. அதனால் உங்களுக்காக நான் “துஆ” செய்யவில்லை) என்று கூறினார்கள்.
ஆதாரம், புகாரீ, முஸ்லிம், அறிவிப்பு: அனஸ் றழியல்லாஹு அன்ஹு
இந்த நபீ மொழி மூலம் யாராவது தும்மிய பின் அவர் “அல்ஹம்து லில்லாஹ்” என்று அல்லாஹ்வைப் புகழ்ந்தால் மட்டும் தான் “யர்ஹமுகல்லாஹ்” என்று அவருக்காக “துஆ” செய்ய வேண்டும் என்று விளங்கப்படுகிறது. இன்றேல் தேவையில்லை.
இந்த நபீ மொழி மூலம் இன்னுமொரு விடயமும் தெளிவாகிறது. அதாவது ஒருவரின் நடவடிக்கையில் – சொல்லில் அல்லது செயலில் – சந்தேகம் அல்லது வினக்கமின்மை யாருக்காவது ஏற்பட்டால் அவர் யாராயிருந்தாலும் அவரிடமே அதற்கான விளக்கத்தை கேட்டறிந்து கொள்ள வேண்டும் என்பதாகும்.
தும்மிய பின் அல்லாஹ்வைப் புகழாத நபீ தோழரை நபீகளார் புறக்கணித்த பாணியில் நடந்து கொண்டாலும் அவர் நபீ பெருமானார் அவர்கள் மீது தப்பெண்ணம் கொள்ளாமல் அவர்களிடமே தனது சந்தேகத்தை கூறி விளக்கம் பெற்றக் கொண்டது ஒரு நல்ல செயல் என்பதும் இந்த நபீ மொழி மூலம் தெளிவாகிறது.
ஒருவன் தும்மிய பின் அல்லாஹ்வைப் புகழவில்லையானால் அவனுக்காக “யர்ஹமுகல்லாஹ்” என்று பிரார்த்தனை செய்வது “ஸுன்னத்” நபீ வழியல்ல என்பதும் இந்த நபீ மொழி மூலம் விளங்கப்படுகின்றது.
وروينا في ‘ صحيحيهما ‘ عن أبي هريرة عن النبيّ صلى الله عليه وسلم قال: ‘ حَقُّ المُسْلِمِ على المُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلامِ، وَعِيادَةُ المَرِيض، وَاتِّباعُ الجَنائِز، وإجابَةُ الدَّعْوَةِ وَتَشْمِيتُ العاطِس ‘وفي رواية لمسلم ‘ حَقُّ المُسْلِمِ على المُسْلِمِ سِتٌّ: إذَا لَقِيتَهُ فَسَلِّمْ عَلَيْهِ، وَإِذَا دَعَاكَ فأجِبْهُ، وَإِذَا اسْتَنْصَحَكَ فَانْصَحْ لَهُ، وَإِذَا عَطَسَ فَحَمِدَ اللَّه تَعالى فَشَمِّتْهُ، وَإِذَا مَرِضَ فَعُدْهُ، وَإِذَا مَاتَ فَاتَّبِعْهُ ‘.
(ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. ஸலாம் சொன்னால் பதில் சொல்லுதல், நேயாளியைப் பார்த்து விசாரித்தல், ஜனாஸா – மரணச் சடங்கில் கலந்து கொள்ளுதல், அழைப்புக்கு விடை சொல்லுதல், தும்மினவனுக்கு “துஆ” செய்தல்) என்று நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்)
ஆதாரம்: புகாரீ, அறிவிப்பு: அபூ ஹுறைறா றழியல்லாஹு அன்ஹு.
முஸ்லிம் என்ற நூலில் இவ் ஐந்து அம்சங்களுடன், அவன் ஆலோசனை கேட்டால் ஆலோசனை வழங்குதல் என்றும் வந்துள்ளது.
மேற்கண்ட நபீ மொழியில் حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய “ஹக்” கடமை என்ற கருத்தில் நபீ மொழி வந்திருந்தாலும் இவையாவும் “ஸுன்னத்” நபீ வழி வந்த நற்காரியமேயன்றி கடமையல்ல என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது.
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ‘ إنَّ اللَّهَ تَعالى يُحِبُّ العُطاسَ، وَيَكْرَهُ التَثاؤُبَ، فإذا عَطَسَ أحَدُكُمْ وَحَمِدَ اللَّهَ تَعالى، كان حَقّاً على كُلّ مُسْلِمٍ سَمِعَهُ أنْ يقول له: يرحمك الله. وأمَّا التَّثَاؤُبُ، فإنَّما هُوَ مِنَ الشَّيْطان، فإذا تَثَاءَبَ أحَدُكُمْ، فَلْيَرُدَّهُ ما اسْتَطاعَ، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَثاءَبَ ضَحِكَ مِنْهُ الشَّيْطانُ ‘.
(அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கின்றான். உங்களில் யாராவதொருவன் தும்மி அல்லாஹ்வைப் புகழ்ந்தானாயின் அதைச் செவியேற்ற முஸ்லிம்கள் மீது அவனுக்காக يَرْحَمُكَ اللهْ அல்லாஹ் உனக்கு அருள் செய்வானாக! என்று பிரார்த்தனை செய்வது கடமையாகும். ஆயினும் கொட்டாவி என்பது “ஷெய்தான்” ஷாத்தானில் நின்றுமுள்ளதாகும். உங்களில் யாருக்காவது கொட்டாவி வந்தால் முடிந்தவரை அதைத் தடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் உங்களில் யாராவது கொட்டாவி விட்டால் அவனைப் பார்த்து ஷெய்தான் சிரிக்கின்றான்) என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம்: புகாரீ, அறிவிப்பு: அபூ ஹுறைறா றழியல்லாஹு அன்ஹு
அல் அத்கார்: பக்கம் 220
மேற்கண்ட இந்த நபீ மொழி மூலம் அல்லாஹ் தும்மலை விரும்புகிறான் என்பதும், கொட்டாவியை வெறுக்கிறான் என்பதும் விளங்கப்படுகிறது. தும்மலை விரும்புகிறான் என்றால் தும்மல் தானாக வருவதையே விரும்புகிறான். இதனால் மூக்கினுள் துரும்பைச் செலுத்தி நமது விருப்பத்தின் படி தும்மலை வரவைப்பது அல்லாஹ் விரும்பும் தும்மலில் அடங்காது.
பெருமானார் அவர்களின் காலத்தில் “முனாபிக்” நயவஞ்சகர்கள் – முஸ்லிம்கள் போல் நடிக்கும் ஏனையோர் அவர்களின் சபையிலிருந்து கொண்டு மூக்குத் துவாரத்தில் துரும்பை செலுத்தி தும்மலை வரவழைத்து விட்டு “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்வார்கள். எதற்காக இவ்வாறு செய்வார்கள் என்றால் நபீயவர்கள் “யர்ஹமுகல்லாஹ்” அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக என்று சொல்லிவிட்டால் தமக்கு அருள் கிடைத்து விடும் என்பதை எதிர்பார்த்துச் செய்வார்கள். இது தொடர்பாக வந்துள்ள ஒரு ஹதீதை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
روينا في سنن أبي داود والترمذي وغيرهما بالأسانيد الصحيحة عن أبي موسى الأشعري رضي الله عنه قال: ‘ كان اليهودُ يتعاطسُونَ عندَ رسول الله صلى الله عليه وسلم يَرْجُون أن يقولَ لهم: يرحمُكُم اللَّهُ فيقولُ: يَهديكُم اللَّهُ وَيُصْلِحُ بالَكُمْ ‘ قال الترمذي: حديث حسن صحيح.
நபீ தோழர் அபூ முஸல் அஷ்அரீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். (யஹூதீகள் – யூதர்கள் நபீ பெருமானின் சபைக்கு வந்து தாமாக தும்மலை வரவழைத்து தும்மிவிட்டு “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்வார்கள். பெருமானார் “யர்ஹமுகுமுல்லாஹ்” அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக என்று சொல்ல வேண்டும் என்பதை எதிர்பார்த்துச் சொல்வார்கள். ஆனால் அண்ணல் அவர்களோ அவ்வாறு சொல்லாமல் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ அல்லாஹ் உங்களுக்கு நெர்வழி காட்டுவானாக! உங்களின் உள்ளங்களை சீர் செய்வானாக! என்று சொல்வார்கள்)
யூதர்களின் தந்திரம் நபீ பெருமானுக்கு தெரியாமற் போகாதல்லவா? அதனால்தான் அவ்வாறு “துஆ” செய்தார்கள்.
இந்த ஹதீது சரியானதென்று இமாம் துர்முதீ உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
ஆதாரம்: ஸுனன் அபூதாவூத், ஸுனன் துர்முதீ, அறிவிப்பு: அபூ மூஸல் அஷ்அரீ
அத்கார் நவவீ – பக்கம் 223
தொழுகையில் தும்முதல்:
தொழுகின்ற ஒருவனுக்கு தும்மல் வந்தால் அவன் தும்மலாம். அதை அடக்கத் தேவையில்லை.
தொழுககையில் எந்தக் கட்டத்திலும், எந்த நிலையிலும் தும்மலாம். அதன் பின் “அல்ஹம்து லில்லாஹ்” என்றும் சொல்ல முடியும். அது பிழையாகாது.
எனினும் தொழுகையில் “பர்ழ்” கடமையான ஓதல்கள் இரண்டு மட்டுமே உள்ளன. ஒன்று “பாதிஹா ஸூறா” மற்றது “அத்தஹிய்யாத்” ஓதல். இவ் இரு ஓதல்கள் தவிர ஏனைய ஓதல்கள் யாவும் “ஸுன்னத்” ஆன ஓதல்கள்தான்.
கடமையான ஓதல்கள் ஓதிக் கொண்டிருக்கையில் – ஓதலின் நடுவில் தும்மினால் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லாவிட்டால் அவ் ஓதலை தொடர்ந்து ஓதிக் கொண்டே போகலாம். ஆயினும் ஓதலின் நடுவில் தும்மினவன் அதற்காக “அல்ஹம்து லில்லாஹ்” என்று வாயால் சொன்னானாயின் அவ் ஓதலை திரும்ப ஆரம்பத்திலிருந்து ஓத வேண்டும். தும்மியதற்காக “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொன்னவன் அதன் பின் தொடர்ந்து ஓதினால் தொழுகை வீணாகிவிடும்.
உதாரணமாக தொழுகின்ற ஒருவன் “பாதிஹா ஸூறா” ஓதும் போது “மாலிகி யவ்மித்தீன்” என்ற வசனத்தை ஓதி முடித்தவுடன் தும்மி “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்லிவிட்டானாயின் அவன் தொடர்ந்து “இய்யாக நஃபுது” என்று ஓதுதல் கூடாது. தும்மினாலும் “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்லவில்லையானால் மட்டும் அவன் தொடர்ந்து ஓதலாம்.
இவ்வாறுதான் “அத்தஹிய்யாத்” ஓதும் போதும் செய்து கொள்ளுதல் வேண்டும். குறிப்பிட்ட இரு ஓதல்கள் தவிர ஏனைய ஓதல்களின் போது இவ்விதி பேணப்படத் தேவையில்லை.
தொழுகையில் அல்லாஹ்வையும், கண்மணி நாயகம் அவர்களையும் தவிர வேறு எவரை முன்னிலைப் படுத்தினாலும் தொழுகை வீணாகிவிடும். இது பொதுவான சட்டம். இச்சட்டத்தின் படி தொழுகின்ற ஒருவன் தும்மிவிட்டு “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொன்ன ஒருவனின் சத்தம் கேட்டு அவனுக்காக பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காக يَرْحَمُكَ اللهُ அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக என்று முன்னிலைப்படுத்திச் சொன்னால் சொன்னவனின் தொழுகை வீணாகிவிடும். தொழுகின்றவன் தும்மிவிட்டு அல்லாஹ்வைப் புகழ்ந்தவனுக்காக பிரார்த்திக்க விரும்பினால் அவனை முன்னிலைப் படுத்தாமல் படர்க்கை வசனத்தில் பிரார்த்திக்க முடியும். உதாரணமாக يَرْحَمُهُ اللهُ அவனுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! என்பது போன்று.
اتفق العلماء على أنه يُستحبّ للعاطس أن يقولَ عقب عطاسه: الحمد لله، فلو قال: الحمد لله ربّ العالمين كان أحسنَ، ولو قال: الحمد لله على كُلّ حالٍ كان أفضلَ.
தும்மினவன் தும்மியவுடன் “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்வது “ஸுன்னத்” நபீ வழியாகும். அவன் “அல்ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்” என்றும், சொல்ல முடியும், “அல்ஹம்து லில்லாஹி அலா குல்லி ஹால்” என்றும் சொல்ல முடியும். பிந்திய இவ்வசனங்கள் இரண்டும் முந்திய வசனத்தை விடச் சிறந்தது.
ஆதாரம்: அல் அத்கார், , ஆசிரியர்: இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ், பக்கம்: 221
பலர் இருக்கின்ற இடத்தில் ஒருவன் தும்மி “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்வதை அனைவரும் கேட்டால் அவனுக்காக “துஆ” செய்வது அனைவருக்கும் “ஸுன்னத்” ஆனதேயாகும். அக் கூட்டத்தில் ஒருவராவது அவனுக்காகப் பிரார்த்தித்தால் அவன் பொருட்டால் அனைவருக்கும் நன்மை உண்டு. ஒருவருமே அவனுக்காக பிரார்த்திக்கவில்லையானால் அனைவரும் கேள்விக்குரியவர்களாவர்.
தும்மிவிட்டு “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்பவனோ, அவனுடைய சொல்லுக்கு “யர்ஹமுகல்லாஹ்” என்று சொல்பவனோ முடிந்தவரை தமது சத்தத்தை தாழ்த்திக் கொள்வது சிறந்தது.
ஒருவன் தும்மிவிட்டு “அல்ஹம்து லில்லாஹ்” என்ற வசனத்தை சொன்னால் மட்டும் தான் அவருக்காக “யர்ஹமுகல்லாஹ்” என்று பிரார்த்திக்க வேண்டும். வேறு வசனங்கள் பாவித்தால் அவருக்காக “துஆ” செய்வது நபீ வழியாகாது.
عن أبي هريرة رضي الله عنه قال: ‘ كان الله صلى الله عليه وسلم إذا عطَس وضعَ يدَه أو ثوبَه على فمه، وخفضَ أو غضّ بها صوتَه
நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு தும்மல் வந்தால் தங்களின் வாய் மீது தங்களின் கையை அல்லது துணியை வைத்து சத்தத்தை தாழ்த்தி தும்முவார்கள்.
ஆதாரம்: துர்முதீ, அறிவிப்பு: அபூ ஹுறைறா றழியல்லாஹு அன்ஹு
அத்கார், பக்கம்: 222
முஸ்லிம்களில் சிலர் உளர். அவர்களுக்கு தும்மல் வந்தால் தமது முழுப் பலத்தையும் பயன்படுத்தி தும்முவார்கள். அதனால் உறங்கிக் கொண்டிருக்கின்ற பாலருந்தும் பச்சிளங் குழந்தைகள் பயந்து நடுங்கி அழுவதை நான் நேரில் கண்டிருக்கிறேன். இது ஒழுக்கமற்ற செயலாகும். இவ்வாறு ஏப்பம் விடுபவர்களும் உள்ளனர். இதேபோல் கொட்டாவி விடுபவர்களும் உள்ளனர். இப்பழக்கம் தவிர்க்கப்பட வேண்டும்.
இக்கட்டுரையில் நான் குறிப்பிட்டுள்ள நபீ மொழிகளில் விளக்கம் சொல்ல வேண்டியவையும் உள்ளன. கட்டுரை பெரிதாகிப் பார்ப்பவர்களுக்கு சடைவு ஏற்பட்டுவிடுமென்பதற்காக இதோடு நிறுத்திக் கொள்கிறேன். தொடராக வரும் கட்டுரைகளில் இது பற்றி எழுதுவேன். இன்ஷா அல்லாஹ்!
இக்கட்டுரையை வாசிப்பவர்கள் எனது உடலாரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் பிரார்த்திப்பார்கள் என்று நம்புகிறேன்.