Saturday, October 12, 2024
Homeஎழுத்தாக்கங்கள்தும்மல் தொடர்பாகவும், தொழுகையில் தும்முதல் தொடர்பாகவும் எழுதப்பட்ட நபீ மொழிகளும், சட்டங்களும்.

தும்மல் தொடர்பாகவும், தொழுகையில் தும்முதல் தொடர்பாகவும் எழுதப்பட்ட நபீ மொழிகளும், சட்டங்களும்.

தொடர் 02:

தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
‘ عن أبي هريرة رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ‘ مَنْ حَدَّثَ حَدِيثاً فَعَطَسَ عِنْدَهُ فَهُوَ حَقُّ ‘ كل إسناده ثقات
ஒருவன் ஒரு செய்தியைச் சொல்லும் போது அவன் தும்மினால் அவன் சொல்லும் அந்தச் செய்தி உண்மையாகும் என்று எம்பிரான் ஏந்தல் முஹம்மத் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
இந்த நபீ மொழியை அறிவித்த அனைவரும் நம்பத்தகுந்தவர்களாகும்.
ஆதாரம்: அல் அத்கார், பக்கம் 223
 
மேற்கண்ட இந்த நபீ மொழியில் مَنْ حَدَّثَ யார் சொன்னாலும் என்று வசனம் வந்திருந்தாலும் கூட எவர்கள் “ஷரீஆ”வுக்கு மாற்றமின்றி வாழ்கிறார்களோ அவர்களையே இந்த நபீ மொழி குறிக்கும் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். ஆகையால் ஓர் ஊரில் “பொய்யன்” என்று பகிரங்கமாக அறியப்பட்ட ஒருவன் ஒரு செய்தி சொல்லப்படும் போது ஆயிரம் தரம் தும்மினாலும் அவனின் பேச்சை நம்புதல் கூடாது.
 
இந்த நபீ மொழியில் ஒரு நுட்பம் உண்டு. அதையும் இங்கு எழுதிக் காட்டுகிறேன். அதாவது மேற்கண்ட ஹதீதில் فَعَطَسَ என்று ஒரு சொல் வந்துள்ளது. இதற்கு தும்மினான் என்று பொருள் வரும். இச் சொல்லில் உள்ள “ஐன்” என்ற எழுத்துக்கு “ஷபத்ஹு”ம், அதேபோல் “தே” என்ற எழுத்துக்கும் “பத்ஹு”ம் வைத்து عَطَسَ என்று வாசித்தால் மட்டும் தான் செய்தி சொல்பவன் தும்மினால் என்று கருத்து வரும். இதற்கு மாறாக “ஐன்”என்ற எழுத்துக்கு “ளம்மு”ம், “தே” என்ற எழுத்துக்கு “கஸ்று”ம் வைத்து فَعُطِسَ என்று வாசித்தால் ஒருவன் ஒரு செய்தியைச் சொல்லும் போது அங்கு இருப்பவர்களில் யாராவதொருவர் தும்மினால் என்று கருத்து வரும். “உதிஸ” தும்மப்பட்டால் என்று பொருள் கொள்ள வேண்டும். இரண்டு விதமாகவும் செய்யலாம். குற்றமில்லை.
 
முஸ்லிம்களிடமும், ஏனையவர்களிடமும் ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. அதாவது ஒருவன் ஒரு செய்தியை சொல்லிக் கொண்டிருக்கும் போது “பல்லி” சத்தமிட்டால் அச் செய்தி உண்மையானதென்று நம்புதல். இந்த நம்பிக்கை பிழையானதாகும். இது உண்மையானதென்பதற்குரிய ஆதாரம் எனக்கு கிடைக்கவில்லை.
எனினும் “பல்லி”யை அடிப்பதால் அடிப்பவருக்கு நன்மையுண்டு என்பதற்கு நபீ மொழிகள் ஆதாரங்களாக உள்ளன. அவற்றை அதற்குரிய இடத்தில் எழுதுவோம். இன்ஷா அல்லாஹ்!
قال رسول الله صلى الله عليه وسلم: ‘ إنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَكْرَهُ رَفْعَ الصَّوْتِ بالتَّثاؤُبِ والعُطاسِ ‘
சத்தமாக கொட்டாவி விடுவதையும், தும்முவதையும் அல்லாஹ் வெறுக்கின்றான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம்: இப்னுஸ்ஸுன்னீ, அறிவிப்பு: அப்துல்லாஹ் இப்னுஸ்ஸுபைர் றழியல்லாஹு அன்ஹு
சத்தமாக கொட்டாவி விடுவதையும், தும்முவதையும் அல்லாஹ் மடடும் வெறுக்கவில்லை. கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும், மற்றும் அறிஞர்களும் வெறுக்கின்றார்கள். குறிப்பாக மக்கள் கூடும் சபைகளில் இவ்விரண்டையும் சத்தத்தை தாழ்த்தியே நடத்த வேண்டும்.
 
إذا تَكرّرَ العطاسُ من إنسان متتابعاً، فالسنّة أن يشمِّته لكل مرّة إلى أن يبلغ ثلاث مرّات.
ஒருவன் தொடராக தும்மிக் கொண்டே இருந்தானாயின் அவனின் மூன்று தும்மல்களுக்கு மட்டுமே “தஷ்மீத்” ஸுன்னத் ஆகும். அதாவது ஒருவனின் மூன்று தும்மல்களுக்கு மட்டுமே “யர்ஹமுகல்லாஹ்” என்று “துஆ” செய்யலாம். அவன் ஆயிரம் தரம் தும்மி ஆயிரம் தரம் “அல்ஹம்து லில்லலாஹ்” என்று சொன்னால் நாமும் அவனுக்கு “துஆ” செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பது கருத்தல்ல. கூடியது ஒருவன் தொடராக மூன்று தரம் தும்மினால் அதற்கு மட்டும் “யர்ஹமுகல்லாஹ்” சொல்லலாம். நாலாம் தரம் அவன் தும்மினால் நீ ஜலதோஷக் காரன், தடிமல் வியாதிக் காரன் என்று அவனிடமே சொல்லிவிடலாம்.
عَطَسَ رجل عندَ رسول الله صلى الله عليه وسلم وأنا شاهدٌ، فقال رسول الله صلى الله عليه وسلم: يَرْحَمُكَ اللَّهُ، ثم عَطَسَ الثانية أو الثالثة، فقال رسول الله صلى الله عليه وسلم: يَرْحَمُكَ اللَّهُ، هَذَا رَجُلٌ مَزْكُومٌ ‘ قال الترمذي: حديث حسن صحيح،
ஸலமத் இப்னுல் அக்வயி றழியல்லாஹு அன்ஹு என்ற நபீ தோழர் பின்வருமாறு சொல்கிறார்கள். நான் பெருமானார் அவர்களோடு இருந்தேன். அப்போது அங்கிருந்த நபீ தோழர் ஒருவர் தும்மி “அல்ஹம்து லில்லாஹ்” என்றார். இது கேட்ட நபீகள் பெருமானார் “யர்ஹமுகல்லாஹ்” என்று பிரர்த்தித்தார்கள். தொடர்ந்து இரண்டாம் முறையாகவும் தும்மினார். அதற்கும் நபீகளார் முதலில் சொன்னது போல் சொன்னார்கள். இவ்வாறு மூன்று தரம் நடந்தது. மூன்றாம் முறையும் அவ்வாறே சொன்ன நபீகளார் هَذَا رَجُلٌ مَزْكُوْمٌ இவர் ஜலதோஷக் காரன் என்று கூறினார்கள்.
நாம் இருக்குமிடத்தில் இன்னொருவர் இருந்த கொண்டு அவர் ஒரு தரம் தும்மி “அல்ஹம்து லில்லாஹ்” என்று கூறினால் அவருக்கு “யர்ஹமுகல்லாஹ்” என்று சொல்ல வேண்டும். இரண்டாம் தரமும் அவ்வாறே செய்ய வேண்டும். மூன்றாம் தரமும் அவ்வாறே செய்ய வேண்டும். அதோடு நிறுத்திக் கொண்டு நீ ஜலதோஷக் காரன் என்று சொல்லிவிட வேண்டும்.
ஆதாரம்: துர்முதீ, அறிவிப்பு: ஸலமத் இப்னுல் அக்வயி, அல்அத்கார் – 222
 
“அத்ததாஉப்” اَلتَّثَاؤُبُ – கொட்டாவி.
கொட்டாவி பற்றி சில வரிகள் எழுதுகிறேன். கொட்டாவி என்பது ஷெய்தானில் நின்றுமுள்ளதாகும் என்றும், தும்மல் என்பது “றஹ்மான்” அல்லாஹ்வில் நின்றுமுள்ளதாகும் என்றும் ஹதீதுகள் உள்ளன.
கொட்டாவி வருவதற்குப் பல காரணங்கள் கூறுவர். அவற்றில் ஒன்று பசி. பசி வந்தால் கொட்டாவி தானாகவே வந்து விடும். இது பசிக் கொட்டாவி எனப்படும். அவற்றில் இன்னுமொன்று மந்தக் கொட்டாவி. வியிறு நிறையச் சாப்பிட்ட பின்னும் கொட்டாவி வரும். இது மந்தக் கொட்டாவி, நித்திரைக் கொட்டாவி என்று சொல்லப்படும். உடற் சோர்வு, சோம்பல் வந்தாலும் கொட்டாவி வரும். கொட்டாவி எக்காரணத்தால் வந்தாலும் கொட்டாவி கெட்ட ஆவிதான். அது ஷெய்தானில் நின்றுமுள்ளதென்று நபீகளார் அவர்களே சொல்லிவிட்டார்கள்.
عن أبي سعيد الخدري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ‘ إذَا تَثاءَبَ أحَدُكُمْ فَلْيُمْسِكْ بِيَدِهِ على فَمِهِ، فإنَّ الشَّيْطانَ يَدْخُلُ ‘.
உங்களில் யாராவது கொட்டாவி விடுவதாயின் அவர் தனது கையை வாயில் வைத்து முடிந்தவரை தடுக்க வேண்டும். ஏனெனில் அவனின் வாய் வழியாக “ஷெய்தான்” ஷாத்தான் உள் நுழைந்து விடுவான் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம், அறிவிப்பு: அபூ ஸயீத் அல்குத்ரீ றழியல்லாஹு அன்ஹு
அல்அத்கார்: 224
கொட்டாவி விடும் போது வாயை முதலை போல் அடித் தொண்டை தெரியும் வரை திறக்காமல் – விரிக்காமல் முடிந்தவரை கொட்டாவியை அடக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். விடுவதாயினும் சத்தத்தை குறைத்து விட வேண்டும். அது ஷெய்தானில் நின்றுமுள்ளதென்று சொல்லப்பட்டுள்ளதால் “அஊது பில்லாஹி மினஷ் ஷெய்தானிர் றஜீம்” என்று சொல்லிக் கொள்வது விரும்பத்தக்கது.
ஆன்மிக சிறு விளக்கம்:
நபீகளார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் العُطاسُ من الرحمن والتثاؤب من الشّيطان தும்மல் “றஹ்மான்” கருணையுள்ள அல்லாஹ்வில் நின்றுமுள்ளதென்றும், கொட்டாவி ஷெய்தானில் நின்றுமுள்ளதென்றும் சொல்லியுள்ளார்கள். அவர்களின் தத்துவமிக்க இக்கருத்தை நூறு வீதம் நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஏற்றுக் கொள்வதும் எமது கடமை. நபித்துவத்தின் பேச்சு பொய்யாகாது. எதார்த்தத்திற்கு முரணாகவுமாட்டாது.
“ஈமான்” விசுவாசம், நம்பிக்கை அடிப்படையில் وًالْقَدْرُ خَيْرُهُ وَشَرُّهُ مِنَ اللهِ تَعَالَى “களா – கத்ர்” தொடர்பாக நன்மையும், தீமையும் அல்லாஹ்வில் நின்றுமுள்ளவை என்றுதான் நம்பியுள்ளோம். இவ்வாறு நம்ப வேண்டுமென்றுதான் ஏவப்பட்டுள்ளோம். இவ்வாறிருக்கும் நிலையில் தும்மல் என்ற நல்லது அல்லாஹ்வில் நின்றுமுள்ளது என்றும், கொட்டாவி என்ற கெட்டது ஷெய்தானில் நின்றுமுள்ளது என்றும் பெருந்தகை பெருமானார் சொல்லியுள்ளார்களே இது தொடர்பாக விளக்கமென்ன என்ற கேள்வி வாசகர்களுக்கு ஏற்படலாம். அவர்களின் நலன் கருதி சில வரிகள் எழுதுகிறேன்.
 
“களா – கத்ர்” மட்டுமன்றி அனைத்துச் செயல்களுக்கும் சொந்தக் காரன் – உரியவன் அல்லாஹ் மட்டும்தான் என்று நம்புவதே சரியான “அகீதா” கொள்கையாகும். اَلْأَفْعَالُ كُلُّهَا للهِ تَعَالَى சகல செயல்களும் அல்லாஹ்வுக்குரியவையே. لَا فَاعِلَ إِلَّا اللهُ செய்பவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை. وَاللهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ அல்லாஹ் உங்களையும் படைத்து உங்களின் செயல்களையும் படைத்தான் என்பது திருக்குர்ஆனின் திரு வாக்கு. இதன் சுருக்கம் அல்லாஹ் உங்களாகவும் வெளியாகி, உங்களின் செயல்களாகவும் வெளியாகி உள்ளான் என்பதாகும்.
அல்லாஹ்வின் படைப்புகள் யாவும் அவனின் செயல்கள் வெளியாகும் “மளாஹிர்” பாத்திரங்களேயாகும். படைப்புகள் அவனின் செயல்கள் வெளியாகும் பாத்திரங்களேயன்றி அவற்றுக்கு செயல் எதுவுமில்லை. செயலுக்குரியவன் அல்லாஹ் மாத்திரமே!
கத்தி வெட்டுவதுமில்லை, நெருப்புச் சுடுவதுமில்லை. வெட்டுதல் என்ற செயலும், சுடுதல் என்ற செயலும் அல்லாஹ்வுக்குரியவையாகும். கத்தி சுயமாக வெட்டுவதுமில்லை. நெருப்பு சுயமாக சுடுவதுமில்லை.
 
கத்தி சுயமாக வெட்டும் என்றிருந்தால் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் மகன் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் கழுத்தை அறுத்த நேரம் அது அறுத்திருக்க வேண்டும். “நும்றூத்” எனும் அரசன் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தீக்கிடங்கில் எறிந்த போது தீ அவர்களைச் சுட்டிருக்க வேண்டும்.
இவ்வரலாறுகள் மூலம் கத்திக்கு சுயமாக வெட்டும் சக்தியுமில்லை, நெருப்புக்கு சுயமாக சுடும் சக்தியுமில்லை என்ற உண்மை தெளிவாகிறது.
இத்தன்மை கத்திக்கும், நெருப்புக்கும் மட்டுமல்ல. படைப்புக்கள் அனைத்திற்கும் உள்ளதேயாகும். இவ்வாறுதான் “ஈமான்” நம்ப வேண்டும். இதற்கு மாறாக படைப்புக்கு சுயமாகச் செய்யும் ஆற்றல் உண்டு என்று நம்புதல் “ஷிர்க்” எனும் இணை வைத்தலுக்கு வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.
அல்லாஹ்வின் சக்திக்கும், படைப்பின் சக்திக்கும் வேறுபாடு உண்டு. வேறுபாடு இருக்கவும் வேண்டும். அல்லாஹ்வின் சக்தியாயினும், அவனின் எச் செயலாயினும் அது அவனுக்கு சுயமானதேயாகும். இதன் கருத்து அவனுக்கு இன்னொருவனால் வழங்கப்பட்டதல்ல. படைப்பின் சக்தியாயினும், அதன் எச் செயலாயினும் அது அதற்கு சுயமானதல்ல. அல்லாஹ்வினால் வழங்கப்பட்டதாகும். ஆகையால் அல்லாஹ்வின் செயலுக்கும், படைப்பின் செயலுக்கும் வேறுபாடு நிச்சயமாக உண்டு. இவ்வாறுதான் “ஈமான்” கொள்ள வேண்டும். இதற்கு மாறாக அல்லாஹ்வின் சக்தி, மற்றும் அவனின் செயல்கள் போல் படைப்பின் சக்தியும், மற்றும் செயல்களும் என்று நம்புதல் “ஷிர்க்” எனும் இணை வைத்தலாகிவிடும்.
எனவே, படைப்புக்குச் சுயமான எதுவுமே இல்லை என்றும், அல்லாஹ்விற்கு மாத்திரமே சுயமான எல்லாம் உண்டு என்றும் நம்புதல் அவசியமாகிறது.
படைப்புகள் எதுவாயினும் சுயமான செயல், சக்தியுள்ள அல்லாஹ்வின் சக்தியும், செயல்களும் வெளியாகும் பாத்திரங்கள் என்று நம்ப வேண்டும்.
இவ் அடிப்படையில் அல்லாஹ்வின் “ஹிதாயத்” நேர்வழி வெளியாவதற்கு எம் பெருமானார் அவர்களைப் பாத்திரமாகவும், அவனின் வழி கேடு வெளியாவதற்கு ஷெய்தான் என்பவனைப் பாத்திரமாகவும் அல்லாஹ் அமைத்து விட்டான்.
இவ் அடிப்படையில் “உதாஸ்” தும்மல் எனும் நற் செயல் வெளியாவதற்கு பெருமானார் அவர்களைப் பாத்திரமாகவும், கொட்டாவி எனும் தீச் செயல் வெளியாவதற்கு ஷெய்தான் என்பவனைப் பாத்திரமாகவும் அமைத்துக் கொண்டான்.
இவ்வாறு அவன் அமைத்துக் கொண்டதால் பெருமானார் அவர்களுக்கு சுயமான செயல் உண்டு என்றோ, ஷெய்தானுக்கு சுயமான செயல் உண்டு என்றோ எவரும் நம்பிவிடலாகாது. இந்த நம்பிக்கை “ஷிர்க்” இணை வைத்தலாகிவிடும். இதுவே எதார்த்தம்.
العطاس من الرحمن
தும்மல் றஹ்மானில் நின்றுமுள்ளதென்றும், اَلتَّثَاؤُبُ கொட்டாவி ஷெய்தானில் நின்றுமுள்ளதென்றும் நபீகள் நாயகம் சொல்லியுள்ளதால் நல்ல செயல் நபீகளாருக்கு உண்டு என்றோ, தீய செயல் ஷெய்தானுக்கு உண்டு என்றோ விளங்கிக் கொள்ளுதல் கூடாது. எச் செயல் எவர் மூலம் வெளியானாலும் அச் செயலின் உரிமையாளன் அல்லாஹ் மட்டுமேயாவான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.
لَا فَاعِلَ إِلَّا اللهُ
சுயமான செயலுக்குரியவன் அல்லாஹ் மட்டுமே ஆவான்.
 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments